பிரம்மானந்தர், வேதாந்தம் -கடிதம்

அறிவருடன் அமர்தல்

அன்பு ஜெ,

நன்றிகளுடன் ஆரம்பிக்கிறேன்.

மலையின் அப்பால் வீடுகள் சிறு பொம்மைகள் என தெரிந்து கொண்டிருந்தன தூரத்தில். மாடுகளின் வால் சுழட்டல்கள், சிறு குருவிகள், துரத்தியும் தனியேயும் ’விருக்’கென தடம் மாற்றியபடி சிறு நடனம் என தனக்கென ஒரு மாறிக்கொண்டேயிருக்கும் பாதையில் பல வகை பட்டாம்பூச்சிகள், மயில்கள், வெகு விரைவாய் எதற்கோ சென்று கொண்டு இருக்கும் கருப்பு, செம்பு வண்ணத்தில் எறும்புகள், கால் படும் கண் தொடும் இடம் எங்கும் தொட்டாற் சினுங்கி பூக்கள், கண் தொடா இடங்களில் பல்லாயிரம் பூச்சிகள் என பெரிய ப்ரபஞ்சம் இயங்கியபடி கிடந்தது. அடர் மழையும், இறங்கிய மின்னல்களும் அந்த இரவை தனக்கென எடுத்து கொண்டன. இயற்கை தன்னோடு இயைந்து அழகு என காணித்து முழுமையுடன் இருந்து கொண்டிருந்தது.

ஆசிரியர் மெதுவாக மாணவர்களை வரையறை செய்து கொண்டார். எதுவரை செல்வது என்பதை பற்றியும், என்ன தொடுத்தாலும் தான் செல்லும் வட்ட எல்லை எது என வகுத்து விட்டார் என தோன்றியது.

நேதி எனும் வகையில் சுருங்கி செல்லுதல். மற்றது வேதாந்தம் எனும் விரிதல் –அனைத்திலும் இருப்பதும் என்னுள்ளே என்பதான விரிவு.

நான் ஒரு பெரும் இயக்கத்தின் – இருப்பின் ஒரு துளி, என்னுள் வந்து – இருந்து – செல்லும் ஒரு லீலை என்பதான முதல் காலடி. அதன் “நான்” என்பதின் புள்ளியிலிருந்து. இருப்பு, விரிய வேண்டியதின் தேவையான பிரக்ஞை என்பதான தன்னகங்காரம், அது இருக்கும் காலமில்லா முடிவில்லா வகை.

சத், சித், அன்ந்தம். இந்த புள்ளியுடன் முடிந்தது. மொத்தமாக இரண்டு நாளை இப்படி சுருக்கி தொகுத்து கொள்ளலாம்.

முதல் தொடக்கம் அவரைப் பற்றி. பின்னர் ஆன்மீகம் ஏன், எங்கு வருகிறது என. வேதாந்தம் என்பது பற்றிய வரைவு பின்னர். செயல் செய்தல் என்பதை முழுதும் சொல்லும் கீதை பற்றிய நீண்ட விவரணை. செய்ய வேண்டிய ஐந்து யக்ஞம் என்பதின் விரிவு. செயலின் ஆற்றல் மட்டும் என் கை விளக்கின் வெளிச்சத்தில் இருக்க, விளைவு நான்கு வகையில் நடக்கும் என்பதால், அதை பற்றிக்கொள்ள வேண்டாம் என்பதான விளைவை பற்றி சொல்லாடல், வேதாந்த வாழ்வு என்றும் ஒரு நிறைவு, பண்படுதல் என்று இருந்தாலும் தேடல்களின் முட்டல்களும் கொந்தளிப்பும் கொண்டதான இயல்பு பற்றி என பல கேள்விகளை தொட்டு தொட்டு விரிந்து சென்றார்.

கேள்விகள் என்றும் இருப்பது போல ஒவ்வொருவரின் “தெரிந்த” இருந்தவைகள், அடைந்த சிறு வெளிச்ச சிதறல்களின், தன்முனைப்பின் வகைகள், தின வாழ்வின் எல்லையின்மை தாண்டி கிடைக்கும் புது அனுபவ வகைகள் என இருந்தாலும், சற்று ஊறியவர்கள் சரியான தருனத்தில் சொல்பவனின் விஷய ஞானத்தை எடுத்து தரும்படியாகவும் இருந்த வகைகள் கூட. உண்டு

ஆனால் எந்த கேள்விகளில் வந்தாலும், அவைகளில் இருந்து, எவை எல்லாம் வேதாந்த வாழ்வில் அமைந்தவர்க்கு அவசியமில்லை, தேவையில்லை என்று கோர்த்து கொடுத்தார். த்யானத்தின் விளைவில் வரும் வெளிச்ச பரவசங்கள், எனும் வகை அனுபவங்கள், பிறவாமை அழுகைகள், உபாசனை தந்த பலங்களை ஒரு கட்டத்தில் உதறி செல்ல வேண்டிய தேவைகள், ஆரம்ப பக்தி நிலை பின்னர் இருந்தாலும் இல்லை என்றாலும் ஒன்றே எனும் நிலைகள், ஞான விளைவுகள், ஞானம் அடைந்தாலும் அவரின் கர்மா பாதிப்புகள் பற்றி கவலை கொள்ளாதிருத்தல் என வேதாந்தம் தன் வாழ்வில் அமைய பெற்றவர்க்கு வேதாந்த வாழ்வின் குணங்கள் அல்லது இயல்புகள் போல ஒரு வரைபடம் கொடுத்தார்.

அவர் பேச்சை உள்வாங்குதலின் இடர் என்பது மிக கழித்து தான் புரிந்தது. என் கேள்விகென்ன பதில் என்பதாக அம்பு போல அல்ல அவரின் பேசும் போக்கு. கோடுகள் தன் போக்கில் என சென்று ஆனால் பேசப்படும் மையத்திலிருந்து விலகாமல் முடியும் வகையாக எப்போதும் அவரின் பேச்சு புதிய அறியாத கோலம் என முடியும். இது புதிதாக இருந்ததால், எதுவுமே ”பயனாக” “தெளிவாக” உரையாடல்கள் நிகழவில்லை எனும்படியாக மனம் மயக்கி கொண்டு இருந்தது. அந்தியூர் மணி சட்டென சாட்டை எடுத்து தொகுத்து கொள்ளுங்கள் ஜனங்களே என்ற போது ஓவ்வொரு மலரும் மனதில் வந்து அமர ஆரம்பித்தது.

இந்த தங்கலில் ஒரு பெரும் இனிய நினைவு என்பது சீனுவின் பேச்சு[தனிப்பட்ட முறையில்]. அத்வைதம் எனும் அறிதல் எப்படி ஒரு அனுபவமாக நடந்து, பின் அதன் வாழ்வு வழி சோதித்தபடி செல்லுதல் என்பதான உரையாடல். அதுவரை நீங்கள் அல்லது இந்த மார்க்கம் சார்ந்த அனைவரும், அத்வைதம் என்பதை ஒரு கருத்து தரப்பாக, தன் அறிவின் தரப்பாக மட்டுமே தன் படித்தலுக்கேற்ப வைத்து கொண்டுள்ளனர் என தொகுத்து கொண்டு இருந்தேன். ஆனால் இந்த அறிதல் நிகழ்ந்த பின் தான் ஒருவன் தான் அத்வைத வேதாந்தி என ஆரம்பிக்கிறான். ஆன்மீக தவிப்பும் அதன் ஞானமும் அமைதல் பற்றி, என்னுள் இருந்த பார்வைகளை அவர் தொகுத்தபடி சென்றார். உங்களின் நிழல் மகன் அவர்.

என் பயணத்தின் முதல் தூண்டுதல் கேள்வி – இங்கு மலர்ந்து. முழுமையில் அமைந்த வாழ்வு எனும் ஒரு ஆசிர்வாதம் நிகழ்ந்தாலும் இல்லாவிடினும், அந்த வேதாந்த அறிவை – சாரத்தை தின வாழ்வின் நிகழ்வில் செல்லுபடியாகுமா என தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்… அது. ராக துவேஷ என்பதோ புலன் வழி செல்லாதிருத்தல் என்பதோ மற்றும் அறிய போகும் பெரும்பான்மையான வேதாந்த விஷயங்கள் எப்படி என் வாழ்வின் தின உண்ர்வுகளில், நிகழ்வுகளில் என்  செய்கை அல்லது எதிர்வினை ஆற்றுதலில் ஒளி ஏற்றுகிறது என்பது தான் அது. சுவாமிஜி தான் அப்படி தான் இருக்கிறார் என்று சொன்ன போது, எந்த அறிவும் வெறும் அறிவு – கருத்து தரப்பு அல்ல என்பதும் அது வாழும் முறை என்பதின் புரிதலின் தொடக்கம் உருவாகியது. முழுதும் இயைந்த, ஒன்றிய வாழ்வு.

அந்த கர்நாடக சைவ மடம் ஒரு பயம் என மனதில் தொட்டது. உள்ளே இருந்த பழைய வாத்திய கருவிகள், சிவப்பு வர்ண தூண்கள், தரை மட்டமாக இருந்த ஒரு ஆட்டும் குழி, சந்திலிருந்து வந்த குதிரை, அது சென்று அருந்திய கல் நீர் தொட்டி என ஒரு கால உறைதல். சமாதிகள் நிறைய அங்கு. ஆனால் புது கோவில்கள், கட்டிடங்கள் வந்து கொண்டு இருந்தன. அந்த விரிந்த அரச மரம், வழுவழுப்பான பல அரசர்கள் அமர்ந்து சென்றுவிட்ட அப்பாறை என ஒரு காலை அமைந்தது. பச்சையின் முழு வகைகளும் மலைகளில் தெறித்து கிடந்தன. மாடுகள் அன்றைக்கும் மேய்ந்தபடியும், மூன்று நாய்கள் தன் எஜமானன் பின்னால் தோட்டத்தில் உலவியபடி இருந்தன.

மலை இறங்கி வர, வேதாந்தம் பின்னால் செல்லும் மலை என பிரிய ஆரம்பித்தது.

அன்புடன்,

லிங்கராஜ் – தாராபுரம்

முந்தைய கட்டுரைசாரு, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅக்காலக் கவிஞர்களும் இக்காலக் கவிஞர்களும்