அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
நலம். எனக்கு தெரிந்த வரையில் தமிழ் புனைவுலகு சூழலில் கவிதைகளை கவிஞர்களை அதிகம் கொண்டாடக்கூடியவர் நீங்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருதுகள் மூலம் கவிஞர்களை முன்னிறுத்தி வருகிறது. இவ்விருதுகள் மூலமும் தங்களது வலைதளத்தின் மூலமும் நான் சில கவிஞர்களை கண்டுகொள்ளமுடிந்தது. ஆனால் எனக்கொரு மனவருத்தம்.
என்னால் கவிதைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. எந்த அளவிற்கெனில் ஆனந்த குமாரின் ‘ராணி‘ என்றொரு கவிதை. அதன் உள்ளுறை புரியவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அதன் வெளிப்படையான பொருள் கூட புரியவில்லை. புரியவில்லை என்பதை விட அதை கண்டுகொள்ள முடியவில்லை. அது சதுரங்க ஆட்டத்தை படிமமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கவிதை. அச்சதுரங்க ஆட்ட சித்தரிப்பையே பிறிதொருவர் சொன்ன பிறகே நான் கண்டுகொண்டேன்.
இது எல்லா கவிதைகளிலும் எனக்கு நிகழ்கிறது. கவிதையை முழுக்க வாசித்த பிறகு அழகாக அடுக்கப்பட்ட சொற்றொடர்கள் என்ற அளவிலேயே என்னால் அதை எடுத்துக் கொள்ள முடிகிறது. ஒரு நாவலை வாசித்த பிறகு அதை நான் எனக்குள்ளேயே பல முறை பல வடிவங்களில் சொல்லிப் பார்த்துகொள்வேன். அது எனது வழக்கம். ஒவ்வொரு முறை நினைவிலிருந்து மீட்டு எடுக்கும் போதும் ஒரு புதிய விஷயம் அத்துடன் சேரும். ஆனால் ஒரு கவிதையில் என்ன இருக்கிறது என்பதை என்னால் ஒருமுறைகூட சொல்லிப்பார்க்க முடிந்ததில்லை. ஏனெனில் அதை என்னால் உணரவே முடியவில்லை. இதை மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியுமா என்றும் தெரியவில்லை.
கடிதத்தை வாசித்துப்பார்க்கையில் மருத்துவரிடம் தன் நலமின்மையை சொல்வது போன்ற சாயல் தெரிகிறது, இருப்பினும் தங்களிடம் தக்க வழி இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன்,
சீரா
In the Poetry Writing Workshop’ and Other Poetry by William Ruleman
அன்புள்ள சீரா,
எந்த வகையான கலையை ரசிப்பதற்கும் இரண்டு அடிப்படைகள் தேவை. ஒன்று அதை ரசிப்பவருக்கு இயல்பாக அமைந்திருக்கும் ரசனைக்குணம். அவ்வியல்புன் ஊற்றுமுகங்கள் என்ன என்பது இன்றும் அறிஞர்களிடையே விவாதத்துக்கு உரியதாக உள்ளது. இயல்பிலேயே மூளையின் தகவமைப்பில் அவ்வாறான சில பண்புக்கூறுகள் உள்ளன என்று கூறுபவர்கள் உள்ளனர். வளர்ப்புச்சூழல் ஒருவரை அவ்வாறு வடிவமைக்கிறது என்று வாதிடுபவர்களும் உள்ளனர். நாம் சோம்ஸ்கி பியாஜெட் விவாதம் என 1975 இல் தொடங்கிய இந்த விவாதத்திற்கு இன்றும் அறுதியான தீர்வுகள் இல்லை. (சாம்ஸ்கி பியாஜெட் விவாதம்)
இயல்பிலேயே அமையும் திறன் என்பது ஒன்று கற்பனைத்திறன். இன்னொன்று மொழி சார்ந்த நுண்ணுணர்வு. கலை சார்ந்த நுண்ணுணர்வுகளே பொதுவாக மூன்று வகை. கலைரசனை அனைத்தையுமே கற்பனை என்று சொல்லலாம் என்றாலும் கூட, சிலருக்கு காட்சி சார்ந்த கற்பனைகளே எளிதில் விரியும். அவர்கள் ஓவியம் நோக்கி ஈர்க்கப்படுவார்கள். சிலருக்கு ஒலி சார்ந்து கற்பனைகள் விரியும். அவர்களே இசை ரசிகர்களாக அமைகிறார்கள். சிலருக்கு மொழி சார்ந்து கற்பனை விரியும். அவர்களே இலக்கிய வாசகர்கள்.
சொல் எனும் அடையாளத்திலிருந்து அர்த்தங்களையும், அதிலிருந்து உணர்வுகளையும் அவற்றைக்கடந்த ஆழ்உணர்வெழுச்சிகளையும் அடைபவர்கள் இலக்கியத்திற்கு வருகிறார்கள். சிறுவயதிலேயே அவர்களுக்கு மொழிசார்ந்த ஒரு கூடுதல் நுண்ணுணர்வு இருக்கும். சொற்களைக் கவனிப்பார்கள். புதிய சொல்லாட்சிகளைச் சொல்வார்கள். சொற்களை வைத்து பகடிகளை உருவாக்குவார்கள். சிறுகுழந்தைகளிலேயே இதைக் காணலாம். வெறும் சொற்களாகவே கதைகளைச் சொல்கையில் சில குழந்தைகள் கண்கள் விரிய, கனவுகளுக்குள் சென்றுவிடுகின்றன. அக்காட்சியை மனக்கண்ணில் காண ஆரம்பிக்கின்றன. அவையே இலக்கிய வாசகர்களாக எழுகின்றன.
ஆனால் எத்தனை திறனுடையவராக இருந்தாலும் அதன்பொருட்டு அவர் ஒரு முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை எனில் எந்தக்கலைக்குள்ளும் நுழைய முடியாது. இயல்பிலேயே செவிசார் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்ட ஒருவர்கூட உடனடியாக செவ்வியல் இசைக்குள் நுழைய முடியாது. காட்சிசார் நுண்ணுணர்வுடையவர் உடனே சென்று ஒரு நவீன ஓவியத்தை பார்த்து ரசித்துவிட முடியாது. அதைப்போலத்தான் மொழிசார் நுண்ணுணர்வு கொண்டவர் அதைமட்டுமே கொண்டு இலக்கியத்துக்குள் நுழைந்துவிட முடியாது. இயல்பிலேயே கவிதையை, கலையை ரசிக்கும் திறன் ஒருவருக்கு அமையும் என்றாலும் மேலதிகமாக பயிற்சிகள் தேவை.
ஏனெனில் மொழி மேலதிகமாக ஓர் அறிவுத்தகுதியைக் கோருகிறது. அதை மொழிப்பயிற்சி என்று சொல்லலாம். மொழியில் ஒரு பண்பாடு பல்லாயிரம் அடையாளங்களாக, குறியீடுகளாக, படிமங்களாக பொறிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒருவர் அறிந்திருக்கிறாரா என்பது இலக்கியத்தை அவர் அறிந்துகொள்வதற்கான அடிப்படையான ஒரு கேள்வி. ஆகவே ஒரு மொழியில் பயிற்சி என்பது மொழிக்கு அடியில் மொழியெனத் தன்னை வெளிக்காட்டும் மாபெரும் பண்பாட்டு வெளியுடனான தொடர்பே ஆகும். அந்தப்பண்பாட்டு வெளிக்குள், அதன் ஒரு பகுதியாக உறைபவரே அந்த மொழி உருவாக்கும் இலக்கியத்தை முழுமையாக அடையமுடியும். ஆகவே மொழிப்பயிற்சி இன்றியமையாததாகிறது.
மொழிப்பயிற்சிக்கு மேலதிகமாக அந்தக் குறிப்பிட்ட இலக்கிய வடிவம் சார்ந்த பயிற்சி தேவைப்படுகிறது. நாவல், சிறுகதை, கவிதை மூன்றுக்குமே தனித்தனியான பயிற்சிகள் தேவை. ஒரு நாவல் அதனுடைய ஒட்டுமொத்த கட்டமைப்பால், அதனுடைய அடிப்படைக்கூறுகளுக்கிடையே இருக்கும் இடைவெளிகளை வாசகன் நிரப்பிக்கொள்ள வழிவகுப்பது வழியாக தன்னைத் தொடர்புறுத்துகிறது. ஒரு சிறுகதை அக்கதை முடிவிற்கு பிறகு விடும் இடைவெளியை வாசகன் நிரப்ப அறைகூவுகிறது. அதை நிரப்பும் வாசகனிடம் அது தன் விரிவான வடிவைக்காட்டுகிறது. கவிதை அதன் சொல்லிணைவுகள் உருவாக்கும் சாத்தியங்கள், சொல்லின் இடைவெளிகள் உருவாக்கும் சாத்தியங்கள் வழியாக கவிதை வாசகனுடன் தொடர்பு கொள்கிறான். அந்த நிரப்புதலுக்கான பயிற்சியை ஒரு வாசகன் அடைந்தாகவேண்டும்.
அது இயல்பாக வருவதல்ல. கவிதையெனும் அந்தக்கலைக்கு சற்றுப் பழகவேண்டும்.ஒரு நுண்ணுணர்வுள்ள வாசகர் மேலதிகமாக படிமம் என்றால் என்ன, உருவகம் என்றால் என்ன, கவிதையின் பிறிதுமொழிதல் உத்தி என்றால் என்ன, குறைத்துச்சொல்லல் என்றால் என்ன, கவிதை விடும் இடைவெளி என்பது என்ன என்பதை அறிந்துகொள்ளும்போதே சட்டென்று கவிதைக்குள் நுழைந்துவிடுவதை கண்டிருக்கிறேன்.
நீங்கள் நல்ல கவிதை வாசகர்களை அணுகி கேட்டுப்பார்த்தால் அவர்கள் அவ்வாறு ஒரு பயிற்சியை அடைந்திருப்பதை பார்க்கலாம். தமிழ்ச் சூழலில் அந்தப்பயிற்சி பெரும்பாலும் இலக்கிய நண்பர்களின் கூடுகைகளில் கவிதைகளை விவாதிப்பதன் வழியாக வருகிறது. மூத்த கவிஞர்களுடன் அமர்ந்து வெவ்வேறு கவிதைகளை ஏற்றும் மறுத்தும் பேசுவதனூடாக மெல்ல மெல்ல புலப்படுகிறது. தமிழ்ச் சூழலில் இன்றுவரைக்கும் இருக்கும் கவிதையைக் கற்பதற்கான வாய்ப்பு என்பது இதுதான்.
ஆனால் உலகெங்கும் முறையான பயிற்சியுடன் கவிதையை கற்பதற்கான அரங்குகள் உள்ளன. அந்த அரங்குகளில் ஒரு கவிதையின் படிமம் ,பண்பாட்டுக்கூறுகள், அதன் வடிவவேறுபாடுகள் ஆகியவற்றை வாசகனாகத் தொட்டெடுப்பது எப்படி என்ற பொதுப்பயிற்சியை அளிக்க முடியும். அப்பயிற்சியிலிருந்து நுண்ணுணர்வுடைய ஒருவர் மேலே செல்ல முடியும். கவிதை விவாதங்களை உலகெங்கும் பல்கலைக்கழகங்களும் இலக்கிய அமைப்புகளும் ஒருங்கிணைத்துக்கொண்டே இருப்பது இதற்காகத்தான்.
தமிழ்ச்சூழலில் பொதுவாகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் வாசிப்பையும் எழுத்தையும் ’மர்மப்படுத்த’ முயல்கிறார்கள். ஆகவே அவர்கள் பொதுவான, புகைமூட்டமான சொற்களைச் சொல்கிறார்கள். பலர் கவிதைகளை எழுதும், வாசிக்கும் பயிற்சியை பழக்கம் வழியாக அடைந்திருந்தாலும் அதைப்பற்றி புறவயமாக யோசித்திருப்பதில்லை, ஆகவே எதையும் அவர்களால் சொல்ல முடிவதில்லை. ஆகவே இங்கே பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை, பயிற்சி வகுப்புகளிலும் பயனற்ற தனிப்பட்ட அனுபவப் பகிர்வுகளோ, பொதுவான பேச்சுகளோ தான் நிகழ்கின்றன. கவிதையில் மட்டுமல்ல எக்கலையிலும் ஒரு முடிவில்லாத மர்மம், பகிரமுடியாத ஓர் அம்சம் உள்ளது. ஆனால் முடிந்தவரை வரையறை செய்து, கூடுமானவரை பகிர்ந்தபின் எஞ்சுவதாகவே அது இருக்கமுடியும்.
கவிதைப்பயிற்சியை ஒருவன் தன்னிச்சையாக அடையமுடியும். நல்ல நண்பர் குழு வழியாக அடையமுடியும். அல்லது தொடர்ச்சியாக ஒருவர் விடாப்பிடியாக பல ஆண்டுகள் கவிதைகளை படிக்கும்போது இயல்பாகவே அத்திறன் அவருக்கு அமையும். ஆனால் பல கோணங்களில் முயன்று முட்டி தோற்று வென்று அடையும் அவர் அடையும் அந்தப்பயிற்சியை ஓரிரு அமர்வுகளினூடாக முறையாக கற்பித்துவிட முடியும். ஒரு பயிலரங்குக்கு வரக்கூடிய அனைவருக்கும் அந்தக்கவிதை சென்றடைய முடியுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அவ்வாறு கவிதைக்குள் செல்ல இயல்பாக வாய்ப்புள்ள ஒருவர் புறவயமான சில சிறு தடைகளால் தயங்கி நிற்பாரென்றால் அவரால் மிக இயல்பாக கவிதைக்குள் செல்ல முடியும். கவிதை வாசிப்பில் கற்பிக்கத்தக்க ஒரு தளம் உண்டு, அதைக் கற்பித்துவிட முடியும்.
ஊட்டியில் தொடர்ச்சியாக நாங்கள் கவிதை அரங்குகளை நிகழ்த்திவருகிறோம். கவிதை எழுதுவதற்கான பயிற்சி அல்ல அது. கவிதை வாசிப்பதற்கான பயிற்சி. அம்முகாம்களில் கவிதையுடன் எளிமையான அறிமுகம் கூட இல்லாத பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இன்று தமிழகத்தின் தலைசிறந்த கவிதை வாசகர்களாக அவர்களே தேறுகிறார்கள். எங்கே எவர் கவிதை எழுதினாலும் அந்த வாசகர்களிடமிருந்து ஓர் அங்கீகாரத்தை கவிஞர்கள் எதிர்பார்ப்பதை இன்று பார்க்கிறேன்.
வாசகர்கள் என்பதே ஒரு தகுதி, குறிப்பாக கவிதையைப் பொறுத்தவரை. ஏனெனில் கவிஞன் என்பவன் இருக்குமிடத்திற்கு நிகரான ஒரு இடத்தில் கவிதை வாசகன் இருக்கிறான். கவிஞன் தொட்ட கற்பனையை அச்சொற்ளினூடாக தானும் சென்று தொடுபவன் கவிஞனுக்கு நிகரான கற்பனை கொண்டவனே.
அத்தகைய சிறந்த வாசகர்களை உருவாக்கும் பயிற்சி வகுப்புகள் மிகக்குறைவாகவே இங்கு நடக்கின்றன. அதற்குத் தடையாக அமைவது ஒன்று ஒரு பயிற்சி அரங்குக்கு தேவையான ஒழுங்கு பொறுப்பு இல்லாதது. அதற்கு கவிஞர்களே காரணமாக அமைகிறார்கள், பல போலிக்கவிஞர்கள் மிகப்பெரும் தடையாக அமைகிறார்கள். நல்ல கவிஞர்கள் கவிதை வாசகனுடன் உரையாடும் நிகழ்வு வாசகனை கவிதையைப்பற்றிய ஒரு தெளிவை அடைய வைக்கும் சிறந்த கவிதைகள் ஓர் அரங்கில் தொடர்ந்து படிக்கப்பட்டாலே போதும் கவிதையை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.
ஓர் இரண்டு நாள் அரங்கில் ஆறேழு அமர்வுகளில் நூறு கவிதைகள் படிக்கப்படுமென்றால் அதன்பிறகு அந்த வாசகனுடைய தரம் பல மடங்கு மேம்பட்டிருக்கும். கவிதையினுடைய அடிப்படை என்பது அவனுக்கு எளிதில் கைவந்திருக்கும் அத்தகைய அமர்வுகள் தொடர்ந்து பல இடங்களில் நிகழவேண்டும். அதை வெறும் அரட்டையாக அன்றி பூசலாக அன்றி குடிக்கேளிக்கையாக அன்றி மெய்யாகவே கவிதை விவாதமாக நடக்குமெனில் அவற்றுடைய விளைவுகள் மிக வலுவானதாக இருக்கும்.
ஜெ