சுவாமி பிரம்மானந்தருடனான உடன்தங்கல் மிகச் சிறப்பாக நிறைவுற்றது. வெள்ளியன்று காலை முதல் ஞாயிறு மதியம் வரை சுவாமிகளுடன் உரையாடவும் அவரது உரையை கேட்கவும் இயன்றது. உண்மையில் இந்த உடன்தங்கல் நிகழ்வு கிடைத்தற்கரிய வாய்ப்பு. ஒரு மதிப்பிற்குரிய துறவியிடம் இவ்வளவு நெருக்கமாக பழக வாய்ப்பு கிடைப்பது மிக அரிதானது. நான் இயன்ற அளவு இவ்வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன்.
கடலூர் சீனு அவர்களும் சுவாமிகளும் முதலிலேயே இது வெறுமனே வேதாந்தம் குறித்த அறிமுகம் மற்றும் அது குறித்த பொதுவான கலந்துரையாடல் என அறிவித்துவிட்டனர். சுவாமிகள் ஒவ்வொரு தலைப்பிலும் பல தளங்களை தொட்டு மிக விரிவாக ஒரு அறிமுகத்தினை அளித்தார். மேலும் ஆன்மிகம் சார்ந்த எந்த விதமான கேள்விகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆகவே என்னால் அன்றாட நடைமுறைத் தளத்தில் உள்ள விஷயங்களை அத்வைத நோக்கில் எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதனை சந்தேகமாக கேட்டு பதில் பெறவும் முடிந்தது. இம்மூன்று நாட்களும் கற்பிக்கப்பட்ட – விவாதிக்கப்பட்ட விஷயங்களை குறித்து தனி கட்டுரையாக எழுத வேண்டும்.ஒரே ஒரு மனக்குறை தங்களை சந்திக்க இயலாமல் போனது மட்டுமே.
உடன்தங்கல் ஏற்பாடுகளை அந்தியூர் மணி சிறப்பாக கவனித்துக் கொண்டார். மணி சார் காட்டிற்குள் ஒரு சிறிய பயணத்திற்கு ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றார். ஞாயிறன்று சுவாமிகளுடன் வீரசைவ மடத்திற்கு சென்று வந்தோம். உடன் வந்த புதிய நண்பர்களுடனும் மூன்று நாட்கள் உரையாட முடிந்தது – குறிப்பாக கடலூர் சீனு அவர்களுடனும் லிங்கராஜ் அவர்களுடனும். குக்கூ ஸ்டாலின் அவர்களையும் சந்திக்க இயன்றது. இவ்வளவு மென்மையாக சிறிதும் கசப்போ வெறுப்போ போலி தன்முனைப்போ இல்லாமல் இருக்கும் ஒருவரை நான் இதுவரை சந்தித்ததில்லை.
இந்த உடன்தங்கல் வாய்ப்பிற்காக மனமார்ந்த நன்றிகள் பல ஜெ.
சங்கரன் இ.ஆர்
அன்புள்ள சங்கரன்,
நான் வராமலிருப்பதே நன்று என்று தோன்றியது. சினிமா வேலைகள் தலைக்குமேல் என்பது முக்கியமான காரணமாக இருந்தாலும்.
வகுப்புகள் இரண்டுவகை. ஒரு துறவி , வேதாந்த சாதகர் எடுக்கும் அதே வேதாந்த வகுப்பை ஒரு நல்ல பேராசிரியர் ஒரு வேளை மேலும் சிறப்பாக எடுத்துவிடக்கூடும். ஆனால் அவரிடமிருந்து நாம் பெறுவது வெறும் கருத்துக்களையும் தர்க்கததையும்தான். அது நம் தர்க்க புத்தியை மட்டுமே வலுவாக்குகிறது. ஒருவேளை அதனால் நம் ஆணவம் கெட்டிப்பட்டு, நம்மால் மெய்யான உணர்தல் இயலாமலும் ஆகலாம். தத்துவக்கல்வி இரண்டு வகை. அறிதல், அறிந்ததை அகத்தே உணர்தல். இரண்டாம் நிலை நிகழவில்லை என்றால் முதல்நிலை ஒரு சுமை.
மெய்யறிதலின் பயணத்தில் இருப்பவர்கள் கற்றதைச் சொல்வதில்லை, கண்டடைந்ததைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வனவற்றின் கண்முன் தோற்றமென அவர்களே நிலைகொள்கிறார்கள்.
ஆகவேதான் மெய்யறிவரின் உடனுறைதலை மரபு வலியுறுத்துகிறது. இவ்வகுப்பில் அவர் என்ன சொன்னார் என்பதல்ல, அவருடைய எதிர்நிலைப்பண்பே இல்லாத ஆளுமையும் சமநிலையுமே முதன்மையாக நாம் அருகிருந்து உணரவேண்டியவை. அது நண்பர்களுக்கு முழுமையாக நிகழவேண்டும் என எண்ணினேன். மெய்யான ஆன்மசாதகர்கள், தத்துவ மாணவர்களுக்கு எந்நூலைவிடவும் ஓர் ஆளுமையின் அருகமைவு அளிக்கும் கல்வி மிக அதிகம்.
அதற்கு கொஞ்சம் அகம் திறந்திருக்கவேண்டும். கொஞ்சம் மூளையை ரத்துசெய்யவேண்டும். கொஞ்சம் ஆணவம் அடங்கியிருக்கவேண்டும்
ஜெ