தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன்
அன்புள்ள ஜெ
ஸ்ரீதர் சுப்ரமணியம் பற்றிய உங்கள் குறிப்பில் அவர் நேரு யுகத்து மதிப்பீடுகளை முன்வைப்பவர் என்று எழுதியிருந்தீர்கள். அதை ஒரு விமர்சனமாக முன்வைத்தீர்கள், அது ஒரு கேலி என்று என் நண்பர்கள் (இடதுசாரிகள்) சொன்னார்கள். உங்களிடமே விளக்கம் கேட்கலாமென நினைத்து எழுதுகிறேன்.
ஜெயராஜ்
***
அன்புள்ள ஜெயராஜ்
இடதுசாரிகளெல்லாம் இப்போதும் இருக்கிறார்களா என்ன? திமுகவில் சேர்ந்துவிட்டார்கள் என்றார்கள்.
பல கட்டுரைகளில் நான் சொல்வதுதான் அந்த வரி. நேரு யுகத்துவிழுமியங்கள் என மூன்று வரிகளில் சுருக்கமாகச் சொல்லலாம்.
அ.அனைத்துத் தரப்பினருக்கும் நிகரான இடமளிக்கும் அதிகாரம் பற்றிய தாராளவாதப் பார்வை
ஆ. மதம், மரபு சார்ந்த நெகிழ்வான அறிவியல் பார்வை
இ. ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அடிப்படைக் கட்டுமானங்கள் மேல் மதிப்பு
இன்று இம்மூன்றையும் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டும்.
ஜெ