தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன் -கடிதம்

தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

இங்கே ஆங்கில பத்தி எழுத்தாளர் ஒருவர் நீங்கள் எழுதியதை வாசித்ததில்லை என்று சொன்னதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் எழுதியவை புனைவுகள் மட்டுமல்ல. நீங்கள் எழுதிய ஒவ்வொன்றும் இணையத்தில் கிடைக்கிறது. ஆனாலும் அவர் வாசித்ததில்லை என்பது ஆச்சரியமில்லை. ஆங்கில இதழாளர்கள் பெரும்பாலும் அப்படித்தான். நானே பலரை பார்த்திருக்கிறேன். எந்த எழுத்தாளர் பெயரைச் சொன்னாலும் ‘ஹூ இஸ் தட் கை?’தான்

ஆனால் நானும் ஊடகத்துறையில் இருக்கிறேன் என்றவகையில் நீங்கள் பணியாற்றும் சினிமாக்களுடன் சம்பந்தப்பட்ட நடிகர்கள் கூட உங்கள் பெயரை அறிந்ததில்லை என்பது திகைப்பளிக்கிறது. ஒரு தொழில் என்றவகையிலாவது தெரிந்துவைத்திருக்கவேண்டும் அல்லவா?

தேவ்

***

அன்புள்ள தேவ்,

தேவையில்லை. நான் கடவுள் காலம் முதல் எனக்கு ஆரியா மிக நெருக்கம். அவருக்கு நான் எழுத்தாளர் என்று தெரியாது, தெரிய வாய்ப்பும் இல்லை. அவர் ஆங்கில ஊடகம் வழியாக படித்தவர். அவர் வாழும் சூழல் அப்படி. பெரும்பாலான நடிகர்கள், தொழிநுட்பவியலாளர்கள் ஆங்கிலச்சூழலில் இருந்து வந்தவர்கள்.

நாடகம், மாற்று ஊடகம் போன்றவற்றில் இருந்து வந்தவர்கள் முந்தைய தலைமுறை நடிகர்கள். இன்று அப்படி எவரும் வருவதில்லை.

திரும்பவும் சொல்லவேண்டியது இதுதான். இங்கே இலக்கியவாதி என்பவன் தலைமறைவாக வாழ்பவனே. எத்தனை எழுதி, எத்தனைபேசி, எத்தனை செயல்பட்டாலும். என் நிலைமை இப்படி என்றால் மற்றவர்களின் நிலை என்ன என்று சொல்லவேண்டியதில்லை.

இலக்கியவாதிக்கு இலக்கிய அரங்கும் இல்லாமலாகவேண்டும் என்றுதான் இங்கே பலர் அல்லும் பகலும் உழைக்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைவெள்ளையானை பற்றி…
அடுத்த கட்டுரைஅறிவருடன் அமர்தல்