சில நண்பர்கள் இதழாளர் ஸ்ரீதர் சுப்ரமணியன் என்னை படித்ததே இல்லை என்று சொன்னதைப் பற்றி குமுறி எனக்கு எழுதியிருந்தார்கள். ஏற்கனவே என் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்று இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சொன்னதை இதேபோல சுட்டிக்காட்டி கோபமாக எழுதியிருந்தனர் சிலர்.
ஸ்ரீதர் சுப்ரமணியன் ஒரு குறிப்பிடத்தக்க ஆங்கிலப் பத்தி எழுத்தாளர் என்றும் அவருடைய பொருளியல், அரசியல் கட்டுரைகள் முக்கியமானவை என்றும் என் நண்பர்கள் பலர் கருதுகிறார்கள். நான் ஓரிரு கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். எனக்கும் அவ்வெண்ணம்தான். நேரு யுகத்து மதிப்பீடுகளைச் சலிக்காமல் முன்வைக்க அவரைப் போன்றவர்கள் நிறையவே எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.
அவர் என்னைப் படித்ததே இல்லை என்று சொன்னதில் வியப்படையவோ, சீற்றம் அடையவோ ஏதுமில்லை. சென்னை சார்ந்த, ஆங்கிலத்தை முதன்மைமொழியாகக் கொண்ட, ஒரு வட்டத்தில் தமிழில் எதுவும் படிப்பதில்லை என்றும் தமிழே தெரியாது என்றும் சொல்வதே உயர்வானது என கருதப்படுகிறது. அதை முடிந்த இடம் எல்லாம் சொல்லவும் செய்வார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு எந்த தமிழ் அறிமுகமும் இருக்காது.
நான் புழங்கும் சினிமாத்துறையிலேயே நானறிந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் மட்டுமே நான் நாவல்களும் எழுதும் இலக்கிய எழுத்தாளன் என்று அறிந்த நடிகர்கள். (இயக்குநர்கள் பெரும்பாலும் அனைவருக்குமே ஓரளவேனும் இலக்கியம் தெரியும்). கமல் என் நல்ல வாசகர். ஆனால் சென்னை தொழில் -வணிக உயர்வட்டத்தில் நான் ஒருநாளில் சந்திக்கும் பத்துபேரில் எட்டுபேருக்கு தமிழ் உச்சரிப்பே வராது. தமிழ் இலக்கியம் மட்டுமல்ல, தமிழ்ப்பண்பாடு சார்ந்தேகூட எதுவுமே தெரியாது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், சென்ற ஆண்டு நான் சந்தித்த ஒரு தமிழ் வி.வி.ஐ.பிக்கு ஜெயகாந்தன் பெயரே தெரியாது. பலர் மேடைகளில் என்னை ஜெயகாந்தன் என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். மேடைக்கு வரும்போது விக்கிபீடியாவில் தோராயமாக தட்டிப்பார்த்திருப்பார்கள். நான் அதை மறுப்பதில்லை என்பதையும் பார்த்திருப்பீர்கள். நான் ஜெயகாந்தனும்தானே?
இவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்மட்ட ஊடகவியலாளர்கள், ஊடகநிறுவனத் தலைவர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், உயரதிகாரிகள். அவ்வாறு தமிழ் தெரியாமலிருப்பது அவர்களின் தனித்தன்மை, சிறப்புச் சமூக அடையாளம் என்றும் நம்புகிறார்கள். ஆகவே என்னைச் சந்தித்ததும் உடனே சொல்லிவிடுவார்கள். நான் எவரிடமும் மேற்கொண்டு என்னை எழுத்தாளன் என அறிமுகம் ஏதும் செய்துகொள்வதுமில்லை. அது பண்பாடு அல்ல. அவர்கள் என்னை அறிந்திருக்கவேண்டுமென நான் சொல்லமுடியாது.
உயர்வட்டத்தில் ஒருவர் தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் எவரையும் தெரியாது, தமிழே வாசிப்பதில்லை என்று சொல்வதில் ஓர் உட்குறிப்பு உள்ளது. அதைச் சொல்லும்போது அதைச் சொல்பவர் தமிழ் இரண்டாம் மொழியாக இல்லாத செலவேறிய உயர்தர ’போர்டிங்’ பள்ளியில் பயின்றவர் என்று பொருள் வருகிறது. பிரெஞ்சு அல்லது சம்ஸ்கிருதம் இரண்டாம் மொழியாகக் கற்றிருப்பார். தமிழ் தெரியும் என்றும் , தமிழில் வாசிப்பவர் என்றும் சொன்னால் உயர்தரப் பள்ளியில் படிக்கவில்லை என்று பொருள் அமைகிறது.
இது ஆங்கிலம் புழங்கும் உயர்வட்டச் சூழலில் மிகமிகமிக முக்கியமான ஓர் அடையாளச் சிக்கல். தமிழ் நன்றாகத் தெரியும், வாசிப்பதுமுண்டு என்று சொல்லிவிட்டால் ஒரே கணத்தில் ஒருவரின் சமூக அந்தஸ்து கீழே போய்விடும். பரம்பரைச் சீமான்கள் நடுவே அவர் புதுப்பணக்காரர் ஆகிவிடுவார். நாகரீகங்களை இன்னமும் முழுமையாகக் கற்காதவர் ஆகிவிடுவார். அவருக்கு ‘கருணையுடன்’ ‘பெருந்தன்மையுடன்’ நாகரீகங்களைக் கற்பிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மிக நாசூக்காக, மிகமிகப் பூடகமாக அது நிகழும்.
அதே சமயம் சாதாரண தமிழ் சினிமாக்களைப் பார்ப்பதும், அப்பாடல்களுக்கு நடனமாடுவதும் அந்த வட்டத்தில் உயர்குடித்தன்மைதான். அதற்கு என்ன பொருள் என்றால், அவர் மிகமிக நாகரீகமானவர் என்றாலும் பெரும்பொறுப்புகள் மற்றும் கடுமையான பணிச்சூழல் நடுவே ‘இளைப்பாறலுக்காக’ வெகுஜனக் கலாச்சாரம் நோக்கி இறங்கி வருபவர் என்று. கீழ்ரசனை ஆயினும் அதையெல்லாம் பெரிதுபடுத்தாத பெருந்தன்மையானவர், அவ்வப்போது ரொம்பச் சாதாரணமாகவும் இருக்கக்கூடிய அசாதாரண மனிதர் என்று.
‘எனக்கு விஜய் படங்கள் பிடிக்கும். இன் ஃபேக்ட், நான் ஆலுமா டோலுமா பாட்டுக்கு பாத்ரூமிலே டான்ஸ் ஆடுவேன்’ என்று சொன்னால் சொல்பவர் ஒரு பல தலைமுறைச் சீமான் என்று பொருள். அண்மையில் ஒருவர் ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட நக்சலைட் போல கொதித்தார். (ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு தொழில் செய்பவர்) உடன் சக நக்சலைட்டுகள் கூடி கொதித்தனர். அதெல்லாம் உயர்குடித்தன்மைதான்.
கமல்ஹாசன் இந்த அடையாளச் சிக்கலை, இதை பலவகை நுண்நடிப்புகள் வழியாக பார்ட்டிகளில் முன்வைப்பவர்களை அற்புதமாக நடித்தே காட்டுவார். “ஓ, நீங்கள் தமிழ் படிப்பீர்களா? வாவ்! கிரேட்! நானெல்லாம் தமிழிலே எழுத்துக்கூட்டுதான்…ஸோ நைஸ்!” கமல்ஹாசன் அச்சூழலில் வேண்டுமென்றே தமிழ் ஆசிரியர்களைப் பற்றி மட்டுமே பேசுவார். கோணங்கி பற்றியோ சோ.தர்மன் பற்றியோ என்னைப்பற்றியோ. ஆழ்வார் பாசுரங்களையோ ஞானக்கூத்தன் கவிதைகளையோ பாடுவார்.
இந்தச் சிக்கலுக்கு தனிமனிதர்களை குறைசொல்வதில் பொருளில்லை. இது சென்னை நெடுங்காலம் ஆங்கிலேய அரசின் தலைமையகமாக இருந்தமையால் உருவாகிவந்த நிலைமை. தமிழே இல்லாத உயர்தர கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் ஆங்கிலேயர் காலம் முதல் உருவாகி இன்றும் முதன்மையாக நீடிக்கின்றன. நம்மை ஆள்பவர்கள், நம் சமூகத்தில் முதன்மையானவர்களின் பிள்ளைகளெல்லாம் அங்கேதான் பயில்கின்றனர்.
கலாக்ஷேத்ரா, தியோசஃபிகல் சொசைட்டி போன்ற மாபெரும் கலாச்சார நிறுவனங்கள் சென்னையிலுள்ளன. அவற்றுக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லை. நவீன இலக்கியவாதிகள் எவராவது ஒருமுறையாவது அவற்றுக்குள் சென்றிருக்கிறோமா? அவற்றைச் சார்ந்து ஓர் உயர்மட்டப் பண்பாட்டுவட்டம் உருவாகி நீடிக்கிறது. அவர்கள் இந்து ஆங்கில இதழில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எவருக்காவது நவீன இலக்கியம் தெரியுமா? இது நம் கண்ணெதிரேதானே நிகழ்கிறது?
அந்த வட்டம் எளிமையானது அல்ல. அவர்களில் பலர் கலையறிவு, இசையறிவு ஆகியவற்றில் மிக முக்கியமானவர்கள். பொருளியல் அறிஞர்களும், ராஜதந்திரிகளும், சட்ட அறிஞர்களும் பலர் அவர்களிலுண்டு. அவர்களுக்கு தமிழ் தெரியாதென்பதனால் அவர்கள் தமிழகத்துக்கு அளிக்கும் பங்களிப்பு குறைந்துவிடுவதில்லை. அதை எண்ணி சீற்றம் கொள்ளவும் நாம் உரிமை கொண்டவர்கள் அல்ல. நம் பிள்ளைகளை அவர்களைப்போல ஆக்கத்தானே முயற்சி செய்கிறோம். நம் பிள்ளைகளில் தமிழ் தெரிந்தவர்கள் எத்தனைபேர்? தமிழில் வாசிப்பவர்கள் எத்தனை பேர்?
அந்த வட்டத்தில் இருப்பவர்கள்தான் அதிகமும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்பதனால்தான் தமிழிலக்கியம் ஆங்கிலத்தில் முறையாக அறிமுகமாவதில்லை. நவீன இலக்கியம் பற்றி இந்தியச் சூழலில் பேச நமக்கு இலக்கியப்புரவலர்களே இல்லை. லா.ச.ராமாமிருதம் இறந்த செய்தியுடன் லா.சு.ரங்கராஜன் என்பவரின் படத்தை ஹிந்து ஆங்கில நாளிதழ் போட்டது என்றால் அதற்குக் காரணம் இதுவே. அடிப்படைத் தமிழிலக்கிய அறிமுகமே இல்லை. நாளை நான் இறந்த செய்தியுடன் ஜெயகாந்தன் அல்லது ஜெயமாலினி படத்தை போட்டுவிடுவார்கள். அவர்கள் ஓர் அமெரிக்க, பிரிட்டிஷ் எழுத்தாளர் சார்ந்து இப்பிழையைச் செய்ய மாட்டார்கள்.
இவர்கள் அரிதாக தமிழ்ச்சூழல் பற்றி எழுதினாலும் பிழையாகவே எழுதுகிறார்கள். பெரும்பாலும் மிகப்பொதுவான புரிதல்கள். நான் பேசும்போது இவ்வட்டத்தினர் தமிழகம் பற்றிக் கொண்டிருக்கும் சித்திரத்தை எண்ணி திகைத்தது உண்டு. ஆனால் திருத்த முயலமாட்டேன். எனக்கும் பெரிதாக ஒன்றும் தெரியாது என்ற பாவனையையே எடுப்பேன். ஏனென்றால் நான் இச்சூழலில் பழகுவது என் தொழிலுக்காக. அங்கிருந்து நான் கொண்டுவரவேண்டியது பணத்தை. நான் அவர்களுக்கு கொடுக்க ஒன்றுமே இல்லை.
இவர்கள் தமிழிலக்கியம் பற்றி, தமிழ்நூல்கள் பற்றி ஆங்கிலம் வழியாக தெரிந்துகொண்டு எழுதும் குறிப்புகள் பெரும்பாலும் இரண்டு மனநிலைகள் கொண்டவை. ஒன்று, ‘இறங்கி வந்து’ அனுதாபத்துடன் எழுதப்படும் ‘தட்டிக்கொடுக்கும்’ குறிப்புகள். அல்லது கேலி கலந்த மட்டம்தட்டல்கள்.
மிக எளிமையான அன்றாட அரசியல்நிலைபாடுகள் சார்ந்து, அரசியல்சரிநிலைகள் சார்ந்து மட்டுமே இவர்களால் இலக்கியத்தை வாசிக்க முடியும். ’தமிழிலிருந்து அப்படி என்ன எழுதியிருக்கப் போகிறார்கள், அவர்களின் பரிதாப வாழ்க்கையைப் பற்றிய ஓர் அறிக்கையை அவர்கள் எழுதினால் போதும், நான் கருணையுடன் இறங்கிவந்து அதைப் பாராட்டுவேன், என் நீதியுணர்ச்சியை முன்வைக்கும் விதமாக சீற்றம் கொள்வேன், மற்றபடி அவர்கள் என்ன அப்படி ஆங்கிலத்தில் இல்லாத அழகியலோ தத்துவமோ ஆன்மிகமோ எழுதிவிடமுடியும்?’ – இதுவே இவர்களின் பொதுமனநிலை.
இந்தச் சூழல் வங்கம், கன்னடம், மலையாளத்தில் இல்லை. ஏனென்றால் அங்கே இதைப்போன்ற ஒரு தனிப் பண்பாட்டு வட்டம் இல்லை. அவர்களின் மொழியிலுள்ள எழுத்தை மிக ஆழமாக அறிந்திருக்கிறோம் என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் காட்டிக்கொள்ளவே அவர்கள் முயல்வார்கள். சொல்லப்போனால் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிக்கொள்வார்கள். அதிநுட்பங்களைப் பேசுவார்கள். பெருந்தொழிலதிபர்களும் சூப்பர் ஸ்டார் நடிகர்களும்கூட அதைத்தான் செய்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்.
திருவனந்தபுரம் மிகஉயர்வட்டத்தில்கூட முழுக்க முழுக்க மலையாளத்திலேயே பேசலாம். ஆச்சரியமென்னவென்றால் வட இந்தியாவில் இருந்து வந்த உயர்மட்ட அதிகாரிகளும் மலையாளத்திலேயே பேசுவார்கள். சிலநாட்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் அரசகுடியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். மலையாளத்தில், அண்மையில் வெளிவந்த ஒரு நாவலின் பெயரைச் சொன்னார்.
சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை ஒரு சினிமாவுக்காகச் சந்தித்தேன். விக்கிப்பீடியாவில் நான் வெண்முரசு எழுதுபவன் என்று வாசித்திருந்தார். நான் அமர்ந்ததுமே அவர் பேசிய முதல் பேச்சு ‘எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா வாசித்திருக்கிறீர்களா?’ என்பதுதான். ‘இந்தியாவில் மிகச்சிறந்த மகாபாரத ஆக்கம் அதுதான். ஏனென்றால் தென்கனரா பகுதியில் யக்ஷகானம் வழியாக அவர்கள் மகாபாரதத்திலேயே வாழ்கிறார்கள்.இந்தியாவில் அப்படி ஒரு மகாபாரதக் கலாச்சாரம் வேறெங்கும் இல்லை…” என்றார்.
அதில் ‘நீ என்ன எழுதினாலும் எங்காள்தான் பெஸ்ட்’ என்னும் தொனி இருந்தது. ஆனால் ஓர் உச்சநிலை நடிகர் அதை ஓர் அன்னியரைச் சந்தித்ததும் முதலில் சொல்கிறாரே என நான் மகிழ்ந்தேன். அந்தப்பெருமிதம் அல்லவா அம்மொழியை இந்தியச் சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது!
சென்னைக்கு வெளியே இருந்து, முற்றிலும் வேறு சூழல்களில் இருந்து, இளைய தலைமுறை போதிய ஆங்கில ஞானத்துடன் எழுந்துவந்து, இந்திய ஊடகங்களை கைப்பற்றி எழுதும்வரை இதுவே நீடிக்கும். அமெரிக்காவிலேயே அப்படி ஓர் இளைய தலைமுறை உருவாகவேண்டும். கனவுதான். சரிதான், கனவாவது கண்டு வைப்போமே.
நான் மீண்டும் சொல்வதுதான். நமக்கு இன்று கமல்ஹாசன் ஒரே ஒருவர்தான் இருக்கிறார். தமிழ் தெரியும் என்று எங்கும் நிமிர்ந்து சொல்ல, தமிழிலக்கியத்தை பெருமிதத்துடன் இந்தியச் சூழலில் எடுத்துச் செல்ல. இக்கணம் அவர்மேல் உருவாகும் பெரும் பிரியத்தை பதிவுசெய்ய விரும்புகிறேன்.