தாகம் தீர்த்த நீர் 

(சுதந்திரத்தின் நிறம் நூல் பற்றிய கட்டுரை – வாசிப்பு அனுபவம், நூலாசிரியர்: லாரா கோப்பா ; தமிழில் – B.R.மகாதேவன்)

காந்தியின் மீதும் காந்தியத்தின் மீதும் கடந்த சில மாதங்களாகவே இருந்த இருப்பு காந்தியை பற்றிய புத்தகங்களில் என்னை இட்டுச்சென்றது. அப்படியாக எஸ்.ராமகிருஷ்ணன் ‘காந்தியோடு பேசுவேன்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் காந்தியின் மேற்கொண்ட பற்றின் வெளிப்பாடாய் ஒருவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை பற்றிய கதையை படித்த பொழுது, இது உண்மையா இப்படி எதுவும் நடக்குமா ஒருவருக்கு காந்தியை பார்த்தவுடன் ஈர்ப்பு உருவாகுமா என்ன? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழத் தொடங்கியது.

பின்பு ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’, ‘உரையாடும் காந்தி’; எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காந்தியின் நிழலில்’ போன்ற புத்தகங்களை வாசிக்க எத்தனித்து கொண்டிருந்த வேளையில், சுனில் கிருஷ்ணனின் ‘ஆயிரம் காந்திகள்’ கட்டுரைத் தொகுப்பு வாசிக்க நேர்ந்தது. அதில் காந்தியுடன் பழகியவர்கள், காந்தியத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் என பல்வேறு நபர்கள் குறித்து விவரிக்கப் பட்டிருந்தது. அந்த தொகுப்பின் முன்னுரையில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள் பற்றி குறிப்பிட்டிருந்த சுனில் கிருஷ்ணன், அவர்களை சந்திக்க வேண்டும் என விரும்பியும் எழுதியிருந்தார். அதனை வாசித்த தருணத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை காண வேண்டும் என்ற ஆவல் எனக்குள்ளும் தொற்றிக் கொண்டது.

காந்தியத்தை நூலில் வாசிப்பதை விடவும் காந்தியவாதிகளை நேரில் காண்கையில் எண்ணற்ற கருத்துகள், அனுபவங்கள் கிடைத்திட வாய்ப்புகள் இருக்கும் என்ற எண்ணத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை காண முயன்றேன்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பரிட்சயமான நபர்தான். எனினும் அவர்களோடு நேரடி தொடர்பு எதுவும் எனக்கு இல்லை. அவர்களை காண முயன்ற தருணம் ஒன்றில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப், காணச் செல்லும் முன்னர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து விட்டு செல்ல அறிவுறுத்தி, லாரா கோப்பா எழுதிய (தமிழில்: B.R.மகாதேவன்) சுதந்திரத்தின் நிறம் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தார்.

‘சுதந்திரத்தின் நிறம்’ இந்த புத்தகம், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆகியோர்களிடம் லாரா கோப்பா செய்த நேர்காணல்கள், அதனைத் தொடர்ந்து அவர்களால் எடுத்துக் கூறப்பட்ட நிகழ்வுகள் என கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆகியோரின் வாழ்க்கை முழுதாய் விவரிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களின் இளமை, பள்ளி வாழ்க்கை, காந்தியை பின் தொடர்தல், காந்தியத்தின் மீதான பற்று, திருமணம், மக்களுக்கான போராட்டங்கள், சிறைச்சாலை, பூமிதான இயக்கம் என அவர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் அத்தனையும் கூறப்பட்டுள்ளது.

தன் பெற்றோருக்கு 12-வது குழந்தையாக பிறந்த கிருஷ்ணம்மாள், குடிகார தந்தை இறந்த பின்பு மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தை தன் தாயார் எப்படி தனி ஒருத்தியாக அல்லல்பட்டு போராடி குடும்பத்தை நடத்தினார் என்பதை நித்தம் கண்ட கிருஷ்ணம்மாள், தன் தாயிடம் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டு, மன உறுதியும் இரக்கமும் கொண்ட பெண்ணாக உருவாக்கியுள்ளார்.

கிருஷ்ணம்மாள் தனது 13-வது வயதில் காந்தியின் புகைப்படத்தை ஏந்தியபடி கிராமங்கள் தோறும் ஊர்வலம் சென்றுள்ளார். துப்பாக்கிகளின் இரும்பு பேனட்களில் அடியும் வாங்கியுள்ளார். இவையெல்லாம் எப்படி சாத்தியம்? விளையாடும் பருவத்தில் போராட்ட குணம் எவ்வாறு உருவாகின்றது? காந்தி இவர்களை எவ்வாறு தனக்குள் ஈர்த்தார்? காந்தியத்திற்கு அப்படி என்ன ஈர்ப்பு உள்ளது? யோசிக்க யோசிக்க ஆச்சரியங்களே விரிகின்றது.

கிருஷ்ணம்மாள் போராட்டத்திற்கு என இறங்கும் பொழுதுகளில், எந்த பொருளாதார ஆதாரமும் இன்றியே சென்றுள்ளார். ‘போராட்டத்திற்கு என சென்றால் அந்தப் போராட்டம் நல்ல காரியத்திற்கு என இருந்தால் காசு எல்லாம் தானாகவே வரும்’ என்று சொல்லி நம்பிக்கையும் துணிச்சலும் கொண்டவராக இருந்துள்ளார்.

ஜெகந்நாதன் பற்றி கூற வேடும் என்ற அவரது பள்ளி கல்லூரி காலங்களில் மிடுக்காகவும் ஆடம்பரமாகவும் இருந்துள்ளார். காந்தி, விவேகானந்தர், பரமஹம்சர் ஆகியோர் பற்றிப் படித்த பின்பு காந்தியத்தின் மீது ஈடுபாடு கொண்டு போராட்டங்களில் இறங்கியுள்ளார். இதன் பொருட்டு தனது கல்லூரி படிப்பை விட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி ஆசிரமம் ஒன்றில் இணைந்துள்ளார்.

திருமண வாழ்க்கை போராட்டக்காரர்களுக்கு தேவையற்றது என கருதி இருந்த ஜெகந்நாதன், சில நிகழ்வுகளை கண்ணுற்றதன் விளைவாக மணவாழ்க்கை உடன் கூடிய அறப்போராட்டங்களே தனது பயணத்திற்கு சரியாக இருக்கும் என கருதி, போராட்டக்களத்தில் தன்னை வெகுவாக ஈர்த்த கிருஷ்ணம்மாளை காதல் திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ணம்மாளை மணக்க அவரது எளிமையும் போராட்ட குணமே முக்கிய காரணமாய் அவருக்கு அமைந்தது. அவர்கள் திருமணம் மிகவும் எளிமையாக வெறும் நான்கு நபர்கள் கொண்டே நடந்துள்ளது.மணமக்களையும் சேர்த்தே.

திருமணமான அன்றே தனது காதல் மனைவியாகிய கிருஷ்ணம்மாளிடம், ‘தன்னிடம் இருந்து எந்த சொத்தையும், சுகத்தையும் எதிர்பார்க்கக் கூடாது எனவும், நாம் உபயோகிக்கும் பாத்திரங்கள் எல்லாம் மண்ணால் தான் இருக்க வேண்டும் எனவும், எந்த இடத்திற்கு போவது என்றாலும் பாத்திரங்களை உடைத்தெறிந்து விட்டு சென்று கொண்டே இருக்க வேண்டும் எனவும், எதையும் நான் சுமக்க விரும்பவில்லை’ எனவும் கூறியுள்ளார். இதனை கொண்டே ஜெகநாதனின் போராட்ட குணம் மற்றும் அவரது காந்தியக் கொள்கைகள் மீதான புரிதல் ஆகியவற்றை நாம் வெகுவாக அறிய முடிகின்றது.

சுந்தர்லால் பகுகுணா, வினோபா ஆகியோருடன் தொடர் போராட்ட களங்களில் நின்ற கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், இந்தியாவின் எல்லா கிராமங்களுக்கும் நடந்தே பயணம் செய்துள்ளார்கள்.

வினோபாவேயின் பூமிதான இயக்கத்தில் வெகுவாய் பங்கேற்ற கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், எண்ணற்ற நபர்களை நேரில் சந்தித்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பெற்றுத் தந்துள்ளார்கள். தானம் பெறும் நிலங்கள் அனைத்தும் நில உரிமையாளர்களிடம் இருந்து அகிம்சா வழியில் பேச்சுவார்த்தைகள் மூலம் பூமி தானத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி நில உரிமையாளர்களின் முழு சம்மதத்துடன் பெறப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

பூமி தானத்தின் அடுத்தகட்ட நிகழ்வாக ‘லாப்டி’ நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தி நிலங்கள் பெற்றுத் தந்து பல்வேறுபட்ட உதவிகளை இன்றும் வெகுவாக செய்து வருகின்றனர்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருவரும் இராமநாதபுரம் கலவரம், கீழ வெண்மணி படுகொலை, வலிவலம் சத்தியாகிரகம், இறால் பண்ணை மூடும் போராட்டம் என பலதரப்பட்ட பிரச்சினைகளை தனி நபர்களாக களம் கண்டு காந்திய வழியில் அனைத்து கலவரங்களையும் அடக்கி அமைதியை ஏற்படுத்தி உள்ளனர்.

இவர்கள் தனது வாழ்நாளில் காந்தியத்தை கடைபிடித்து வந்தது மட்டுமல்லாமல், தங்கள் மகள் சத்யா, மகன் பூமிகுமார் ஆகியோரையும் காந்தியத்தின் பால் ஈடுபாடு கொள்ளச் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவம் படித்து மக்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்த நூலில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நேர்காணல்கள், லாரா கோப்பாவின் அனுபவங்கள் மற்றும் அவர்களது மகள் சத்யா மற்றும் மகன் பூமிகுமார் ஆகியோரின் நினைவுகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நூலின் ஆசிரியர் லாரா கோப்பா, ‘நாம் எதனையும் புதிதாக ஆரம்பிக்க வேண்டாம். ஏற்கனவே வாழ்ந்த சென்றவர்களின் வழி தடத்தை பின்பற்றி சென்றால் போதும், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்றவர்களின் வாழ்க்கையானது நமக்கான வழிகாட்டியாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

ஒரு முறை ஜெகந்நாதன் ஆசிரமத்தில் அனைவரையும் அழைத்து சொற்பொழிவு செய்ததாகவும், அதில் காந்தி, இந்து-முஸ்லிம் ஒற்றுமையை மட்டுமே முதன்மையாக கொண்டதாகவும், சுதந்திரத்தை விடவும் சகோதரத்துவத்தை அவர் அதிகமாக விரும்பியதாகவும் தெரிவித்ததாக நூலாசிரியர் கூறியுள்ளார்.

காந்தி பற்றி புத்தகங்கள் படிப்பதை விடவும், காந்தியவாதிகள் பற்றி படித்திடும் பொழுது காந்தியத்தின் வீரியம் தெரிகின்றது. காந்தி தன்னகத்தே அப்படி என்ன மந்திரகோல் வைத்திருந்தார் கைத்தடியை தவிர என்று ஒன்றும் புரியவில்லை.

காந்தியவாதிகள் அனைவரும் காந்தியின் சொல்லுக்கு மறுமொழி கூறாமல் அவர் சொன்னதை அப்படியே செய்தோம் என்று சொல்வதை கேட்கும் பொழுது, காந்தியிடம் அப்படி என்ன ஈர்ப்புவிசை இருந்தது என்றும் விளங்கவில்லை.

காந்தியத்தை உணர காந்தியவாதிகளை பின் தொடர்ந்தால், காந்தியம் என்பது எளிமையாக விளங்கும் போலும்.

காந்தியமானது இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னும் பல மாய வித்தைகள் செய்து கொண்டும், நித்தம் பல காந்தியவாதிகளை உருவாக்கிக்கொண்டும் உள்ளது என்று மட்டும் நன்கு விளங்குகின்றது.

காந்தியை வாழைக்கு ஒப்பிட்டுக் கூறலாம். முழுதாய் பயன்பட்டு போன வாழை, அதன் வேரிலிருந்து இன்னும் பல வாழை குருத்துகளை உருவாக்கி, வெடித்து கிளைத்திட செய்கின்றது. காந்திக்கு பின்பு காந்தியமும் காந்தியவாதிகளும் எங்கும் கிளைத்து எழுகிறார்கள்.

கானல்நீர் ஒருபோதும் தாகம் தீர்த்திடாது. கானல் நீர் போல கனவுகளை தன்னில் கொண்ட தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் கொண்ட கனவுகளை நனவாக்கி பொருளாதாரத்தில் முன்னோக்கி பயணித்திட, கனவு தாகங்களை நனவுகளாக்கி தாகம் தீர்த்துக்கொள்ள, காந்தியும் காந்தியவாதிகளும் பல்வேறு வழிகளில் அடிகோலியுள்ளார்கள் என்பதே நிஜம். (((அதற்கு எடுத்துக்காட்டாக கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை பயண வழித்தடம்.)))

கலை கார்ல்மார்க்ஸ்

திருவாரூர்

சுதந்திரத்தின் நிறம் வாங்க

முந்தைய கட்டுரைஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை
அடுத்த கட்டுரைஇசைரசனை அறிமுகம் – கடிதம்