அர்ஜுனனும் கர்ணனும்

அன்புள்ள ஜெ,

உங்களிடம் கிறுக்குத்தனமான ஒரு கேள்வி, மன்னிக்கவும்.

தன் தம்பிகளை எதிர்த்தும், நண்பனை (துரியோதனனும் அவன் சகோதரனே) கைவிட முடியாத நிலையில் அதிக தத்தளிப்பும் மனஉளைச்சலும், தர்மசங்கடமும் கொண்ட ஒருவனாக பாரதத்தில் கர்ணன் தானே இருக்க முடியும். அவனுக்கு ஏன் கீதை உபதேசிக்கப்படவில்லை?

அன்புடன்,

கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ண மூர்த்தி,

இத்தகைய கேள்விகள் நல்லது. ஆனால் இவற்றை இப்படிக் கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக நீங்களே விடைகளை தேடவேண்டும். அத்தகைய எந்த தேடலும் உங்களுக்கான நூல்களை நோக்கிக் கொண்டுசெல்லும்.

உங்கள் கேள்விக்கு ஒரு சிறு பதில், தூண்டுகோலாக மட்டும் அமைவது. மகாபாரதத்தில் கர்ணன் மெய்ஞானம் தேடி எந்தப் பயணத்தையாவது செய்திருக்கிறானா? எங்காவது அலைந்திருக்கிறானா?

மாறாக அர்ஜுனன் திசைப்பயணம் செய்துகொண்டே இருந்தவன். சிவனையே சந்தித்து பாசுபதம் பெற்றவன். தேடுபவனுக்கே சொல்லப்படும் இல்லையா?

கர்ணன் இளமையிலேயே அகம் புண்பட்டவன். ஆகவே அதற்கு எதிர்நிலையாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன். அத்தகையோருக்கு ஞானத்தேடல் இருப்பதில்லை. அவர்கள் எதையும் அடைவதுமில்லை.

அவமதிப்பு, இழப்புகள் வழியாக எவரும் மெய்ஞானம் நோக்கி வரமுடியாது. அவை புண்கள். அப்புண்களின் வலியும் அதிலிருந்து உருவாகும் உணர்வுநிலைகளும் மட்டுமே அவர்களிடமிருக்கும். அவர்களின் வாழ்க்கையே அதனால் முடிவாகியிருக்கும்.

புண்களை குணப்படுத்திக்கொண்டு, அவற்றில் இருந்து வினாக்களை உருவாக்கிக்கொண்டு, அவ்வினாக்களுக்கான விடைதேடுபவர்களுக்குரியது மெய்ஞானம். உலகியல் சார்ந்த பெரும்பற்று இருந்தாலும் தீவிரவெறுப்பு இருந்தாலும் கல்வி நிகழாது.

அத்துடன் ஒரு ஆர்வமூட்டும் அம்சம் உண்டு. விந்தையான ஓர் உண்மை. ஒருவகை அகச்சலிப்புதான்  நம்மை ஞானம் நோக்கிக் கொண்டுசெல்கிறது.  இங்கிருக்கும் அனைத்திலும் கொள்ளும் சலிப்பு அது. ஏற்கனவே அடையப்பட்ட அனைத்திலும் நாம் உணரும் சலிப்பு.

ஆனால் உளச்சோர்வில் இருந்து வரும் சலிப்பு அல்ல அது. சோர்விலிருந்து வரும் சலிப்பு எல்லாவற்றையும் விலக்கச் சொல்கிறது. சோம்பலை அளிக்கிறது. செயலின்மையில் நிறுத்துகிறது. இது நிறைவின் சலிப்பு. இது செயலூக்கத்தை அளிக்கிறது. அலையச் செய்கிறது. ஒவ்வொன்றிலும் நுழைந்து அறிந்து கடக்கவைக்கிறது. நிரந்தரமான தேடலில் ஆழ்த்துகிறது.

அச்சலிப்பு ஒருவனை புதிய எதையும் பேரார்வத்துடன் எதிர்கொள்ளச் செய்கிறது. அவர்களே மெய்ஞானம் நோக்கிச் செல்பவர்கள். அவர்களே மிகச்சிறந்த மாணவர்கள். அர்ஜுனன் மகாபாரதம் முழுக்க அப்படித்தான் சித்தரிக்கப்படுகிறான். கீதைக்குப் பின்னர் மேலும் மேலும் பயணம் செய்து அவன் கீதையை புரிந்துகொள்கிறான்.

இன்று இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு உலகியல் ஆசைகள், உலகியல் இலக்குகள் உள்ளூர நிறைந்துள்ளன. அரிதாகச் சிலர் உலகியலில் புண்பட்டு விலகி அதன் உளச்சிக்கல்களை நோய் என கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மெய்யியலிலும் தத்துவத்திலும் பெரிதாக எதையும் கற்க முடியாது. கர்ணன்கள் அவர்கள். அவர்களின் அகம் கொந்தளிக்கலாம். ஆனால் அது எவ்வகையிலும் அறிதலுக்குரிய ஆர்வமாக ஆவதில்லை. அவர்களுக்குத் தேவை ஆறுதல் மட்டுமே.

கர்ணன்கள் எவரையும் கவனிப்பதில்லை. அவர்கள் ஒன்று வெளியுலகில் மூழ்கி அதை வெல்லும் வெறியில் இருப்பார்கள். அல்லது, தங்களுக்குள் ஆழ்ந்து, தங்கள் உள்ளச் சொற்களில் உழல்வார்கள். அவர்களுக்கு எதுவும் உரைக்கப்பட முடியாது.

பொதுவாக, வழிதவறியோ தேடியோ வந்துசேரும் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே அர்ஜுனன்களாக இருக்கிறார்கள். அவர்கள் அலைபவர்கள், நிலைகொள்ளாதவர்கள், சலிப்புற்றவர்கள். ஆனால் கற்பதற்குத் திறந்த உள்ளம் கொண்டவர்கள். கற்றவற்றை வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளும் துணிவு கொண்டவர்கள்.

இந்திய மெய்யறிவர்கள் வெள்ளையின மாணவர்களைப் பெரிதும் விரும்புவது இதனால்தான். ‘அவர்களில் பதர் குறைவு’ என்று நித்யா ஒருமுறை சொன்னார். வருபவர்கள் பத்துபேர் என்றால் ஏழுபேர் ஒவ்வொரு சொல்லும் விதையென முளைக்கும் வளம் மிக்க உள்ளம் கொண்டவர்கள். எஞ்சிய மூன்றுபேர் நிலையில்லாமல் அடுத்த இடம் நோக்கிச் சென்றுவிடுவார்கள்.

மாறாக இந்தியர்கள் தினம் நூறுபேர் தேடி வருவார்கள். ஒரு மெய்யாசிரியர் தன் வாழ்நாளில் சில ஆயிரம் பேரைச் சந்திக்க நேரும். கடைசியில் சலித்துச் சலித்து எடுத்தால் ஐந்துபேர் தேறுவார்கள். இதை நான் கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.

அர்ஜுனர்களுக்கே கீதை சொல்லப்படமுடியும். ஒரு போரில் எதையும் அடையும் நோக்கம் இல்லாமல், எதற்கும் எதிராக இல்லாமல், கடமையின்பொருட்டே வில்லெடுப்பவர்கள் அர்ஜுனர்கள்தான். அவர்கள் வில்லை தாழ்த்துவது சொல்லைப் பெறுவதற்காகவே.

ஜெ

முந்தைய கட்டுரைவண்டிமலைச்சி
அடுத்த கட்டுரைஎம் கே தியாகராஜ பாகவதர்- கடிதம்