யுவபுரஸ்கார் விருது
அன்புள்ள ஜெ,
ஓர் இளம் படைப்பாளி விருது பெறும் போது கடுமையான சொற்கள் அவரை தளர்த்திவிடும் அல்லவா? குறிப்பாக பாராட்டுக்களை எதிர்பார்த்து எழுதும் இளமைப்பருவத்தில் சீனியர் ஒருவரின் கண்டனம் மிகக்கடுமையான வலியை உருவாக்கும் என நினைக்கிறேன். யுவபுரஸ்கார் பற்றி நீங்கள் எழுதியது சரிதான். ஆனால் கண்டனம் தேவையா?
ஸ்ரீராம் கணேஷ்
அன்புள்ள ஸ்ரீராம்,
நான் நேர்மாறாக எண்ணுகிறேன். எந்த இளம் படைப்பாளிக்கும் முதன்முதலில் தேவையாக இருப்பது இலக்கியம் ஒன்றும் அத்தனை எளிதல்ல என்னும் தன்னுணர்வே. எதையும் வாசிக்காமல், எதையாவது எழுதி, எப்படியோ எவரையோ பிடித்து விருதுகள் பெற்றுவிட்டால் இலக்கிய இடம் அமைந்துவிடாது என்னும் யதார்த்தம்தான். உண்மையில் யதார்த்தங்கள் கொஞ்சம் வலியுடன் வந்து சேர்ந்தாலொழிய உறைப்பதில்லை.
அந்தத் தொகுதியை நீங்கள் மின்நூலாகவே படிக்கலாம். அதை எழுதும் ஒருவர் பொதுவெளியில் அதை வைக்கவே கொஞ்சம்கூசுவார், அத்தனை முதிர்ச்சியற்ற எழுத்து. அது அப்படியே நடுவர்களின் நெஞ்சை உலுக்கி விருதை அடைந்தது என்று நம்ப அதீதகற்பனை வேண்டும். அதைப்போன்ற ஒரு நூல் விருதுபெற ஒரே வழிதான் இங்கே.
அப்படி ஒரு விருதினால் ஆவதென்ன? அதைப்போல முன்பு இங்கே விருதுபெற்ற பலர் உண்டு, அவர்களெல்லாம் எங்கே? அவர்களுக்கு என்ன இடம் உருவாகியிருக்கிறது? அவர்கள் அடைந்தவை எல்லாம் சில விருதுதொகைகள். சில மேடைகளில் இடங்கள். கல்வித்துறையாளர் என்றால் சிற்சில லாபங்கள். அதைத்தான் இலக்காக்குகிறார் இந்த இளம் கவிஞர் என்றால் அவர்மேல் நமக்கு என்ன கருணை?
எந்த விருதும் அவ்விருது பெறுபவரின் தகுதி ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கையிலேயே பெருமைக்குரியதாகிறது. விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுகள் இதுவரை பல இளையோருக்கு வழங்கப்பட்டுள்ளன. எவருடைய இலக்கியத் தகுதியும் ஐயத்திற்குள்ளானதில்லை.
ஓர் எழுத்தாளர் தன் தகுதியை நிரூபித்தபின் பெறும் விருதே அவருக்கு மெய்யான புகழை அளிக்கும். அவ்வண்ணம் தகுதி கொண்டபின் அவர் விருது பெறுகையில் அது சிலரால் காழ்ப்புடனோ, அறியாமையாலோ விமர்சிக்கப்பட்டால்கூட அதை அந்த எழுத்தாளர் பொருட்படுத்த மாட்டார். அவருக்கு தானிருக்கும் இடம் தெரியும்.
அவ்வண்ணம் இல்லாமல் பெறப்படும் விருது இழிவைவே அளிக்கும். விருது பெறுபவர் சட்டென்று பலர் பார்வைக்கு வருகிறார். அவர்மேல் விழும் அக்கவனம் அவர் தகுதியற்றவர் என்றால் உடனடியாக கேலியாக மாறும். முழுநிராகரிப்பாக ஆகும். மெல்லிய அளவில் மதிப்புடன் இருந்தவர்கள்கூட தகுதியற்ற விருதை பெற்றபின் அவமதிப்படைந்து எவராலும் வாசிக்கப்படாதவர்கள் ஆவதை காணலாம்.
இந்த இளைஞர் இவ்விருதால் ஓர் அவமதிப்பையே அடைந்துள்ளார். இதை அவருக்கு அளித்தவர்கள் அவரை சிறுமைசெய்கிறார்கள். அவர் தன் எழுத்து பற்றிய போலியான நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள். அவர் இலக்கியம் கற்று, தன்னை உணர்ந்து, எழுதுவதை நிரந்தரமாக தடை செய்கிறார்கள். தங்களுடைய ஏதோ சுயநலத்தின்பொருட்டு அவரை பலியிடுகிறார்கள்.
அந்த இளைஞர் இன்னும் ஐந்தாண்டுகளில் ஒருவேளை இலக்கிய அறிமுகம் அடையக்கூடும். நல்ல கவிதைகளும் எழுதக்கூடும். ஆனால் இனி அவர் மேல் அவநம்பிக்கையே சூழலில் நிலவும். அவரை வாசிக்க மாட்டார்கள். கூர்ந்து வாசிக்கப்படவில்லை என்றால் கவிதை தொடர்புறுத்துதலை இழக்கும் என்பதனால் அவருக்கு முழுமையான புறக்கணிப்பே எஞ்சும்.
அவருக்கு உண்மை உறைக்கும்படிச் சொல்லப்படவேண்டும். பொய்யான பாராட்டுக்கள் அவரை அழித்துவிடும். கவிதை என்பது அவர் எழுதுவது அல்ல. அத்தகைய வரிகளை எவரும் எங்கும் எழுதலாம். பல்லாயிரம்பேர் இங்கே அதைப்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை எழுதினால் அவர் அந்த பல்லாயிரவரில் ஒருவராகவே எஞ்சுவார்.
கவிதை என்பது வேறு. அதன் முதல் தகுதி தனித்தன்மை. பிறிதொன்றிலாத தன்மை. இதுவரையிலான தமிழ்க்கவிதையை கொங்குதேர் வாழ்க்கை (தமிழினி) போன்ற தொகுதிகள் வழியாக அவர் வாசிக்கலாம். அவர் நிற்குமிடமென்ன என்று அவருக்கே தெரியும்.
அதன்பின் அவருக்கு மட்டும் உரிய வரிகளை அவர் எழுதலாம். அவை அவருக்கு இலக்கிய இடத்தை அளிக்கக்கூடும். இந்த அசட்டுத்தனமான விருதால் அவர் அடையும் சிறுமை அதன்வழியாக அழியக்கூடும்.
அவரிடம் சொல்லவிரும்புவது இதையே.கவிதை, இலக்கியம் என்பதெல்லாம் எளிமையான விளையாட்டுக்கள் அல்ல. மேதைகள் எழுதிய மொழி இது. அவர்களின் தொடர்ச்சியாக அமைய, அவர்கள் எழுதியவற்றுக்கு அப்பால் ஒரு வரியேனும் எழுத, ஆழ்ந்த அர்ப்பணிப்பு தேவை. நீடித்த கவனம் தேவை. எவர் என்ன சொன்னாலும் இலக்கியம் ஒரு தவமேதான்.
அந்த இளைஞர் இலக்கியவாதிக்குரிய அடிப்படையான நுண்ணுணர்வும் தன்மானமும் கொண்டவராக இருந்தால் இச்சொற்கள் அவரைச் சீண்டும். இதை ஓர் அறைகூவலாகவே எடுத்துக்கொள்வார். வாசிக்கவும் முன்னகரவும் முயல்வார். என்றேனும் ஒரு நல்ல கவிதையுடன் அவர் என் முன் வந்து நின்றாரென்றால் அவரை நான் தழுவிக்கொள்வேன்.
மாறாக, இதை ஒரு வசைபாடலாக எடுத்துக்கொண்டு தன்னுடைய முதிரா எழுத்தை பாதுகாக்க முயன்றார் என்றால், எந்நிலையிலும் முன்னகர மறுத்தார் என்றால் அவர் முழுமையான புறக்கணிப்புக்கே உரியவர். இதேபோல ஏதேனும் விருதுகளை வென்றாரென்றால் அவ்விருதுக்குரிய நடுவர்கள் மட்டுமே கண்டனத்துக்குரியவர்கள்.
இன்று அவர் இலக்கியம் என ஏதுமறியாமல் வந்து வாழ்த்தும் கும்பலை, இக்கண்டனத்தைச் சொல்லி துக்கம் விசாரிக்கும் கும்பலை தவிர்க்கும் நுண்ணுணர்வையாவது காட்டுவாரா என்று பார்ப்போம்.
இது அவருக்கான குறிப்பு அல்ல. இந்நிலைமை எந்த இளம் படைப்பாளிக்கும் வரலாம். அனைவருக்குமாகவே இதை எழுதுகிறேன். எழுத்தாளன் ஈட்டிக்கொள்ளவேண்டியது தன்னிமிர்வு. இப்படி ஒரு விருதுக்காக அதை இழப்பதைப்போல இழப்புவணிகம் வேறில்லை.
விருது என்பது ஒருவருக்கு ’லக்கிபிரைஸ்’ அடிப்பது அல்ல. அது அரசு அல்லது ஓர் அமைப்பு அளிக்கும் ஓர் இலக்கிய ஏற்பு. அதன்பின் ஓர் அளவுகோல் உள்ளது. அந்த அளவுகோலை ஏற்காதவர்கள் அதை விமர்சிக்கவேண்டும். அதுவே இலக்கிய நெறி. சுந்தர ராமசாமி ஆணித்தரமாக இதை எழுதி நாற்பதாண்டுகளாகின்றது.
வீட்டு விசேஷத்துக்கு மொய்வைப்பதுபோல வாழ்த்துரைப்பவர்கள் செய்யலாம். அது இலக்கியவாதி செய்யும் செயல் அல்ல. பாமரராக இருப்பது உங்கள் சௌகரியம். பிறரையும் உங்கள் தளத்துக்கு இழுக்க முனையவேண்டாம்
ஜெ