அன்புள்ள ஜெ,
அசடன் நூலுக்குத் தங்களின் முன்னுரை பல சிந்தனைகளை கிளறிவிட்டது. ’புனித அசட்டுத்தனம்’ என்ற கருதுகோள்,நம் மரபிலும் நீங்கள் சொன்னது போலவே ஆழமாக ஊடுருவியுள்ளது. ஆனால் இது சற்று சிக்கலான கருத்து அல்லவா? விவேகானந்தர் தனது கீதை பற்றிய சொற்பொழிவில் பரமஹம்சனும் அறிவிலியும் ஒன்று போலவே தென்பட்டாலும் அவர்களிடயே கடலளவு வேறுபாடுண்டு என்று கூறிய கருத்து இதோடு பொருந்திப் போகிறது என நினைக்கிறேன்.
shankaran e r
அன்புள்ள சங்கரன்
உண்மை.
அறிவழிதல்,அறிவிலாமலிருத்தல் இரண்டும் மிக நெருக்கமான ஆனால் முற்றிலும் வேறுபட்ட நிலைகள். அசட்டுத்தனம் புனிதமல்ல. ஆனால் அதனூடே போகச்சாத்தியமான உச்சம் புனிதமானது
ஜெ
*******
அன்புள்ள ஜெ,
சுமார் 10 பத்து வருடம் முன்பு தி ஹிந்துவில் யானை டாக்டர் கே பற்றிய விரிவான ஒரு நல்ல கட்டுரை வந்துள்ளது. உங்கள் பார்வைக்கு..
Tryst with tuskers
http://www.hindu.com/thehindu/mp/2002/07/22/stories/2002072200010100.htm
இரண்டாவது கட்டுரையை நீங்கள் ஏற்கனவே தளத்தில் கொடுத்திருந்தீர்கள்.
An ardent conservationist
http://www.hinduonnet.com/mag/2003/07/20/stories/2003072000260400.htm
செந்தில்
*******
யானை டாக்டர்வரலாறு தழுவிய புனைவா
புனைவின் விளிம்பில் யதார்த்த நிகழ்வுகளா..
இயல்பிலேயே இயற்கை கொண்டாடியான எனது வாழ்க்கை இணை த் தோழர் ராஜேஸ்வரி வாசித்ததும் அசந்து போனார்….
இரண்டு பிரதிகளை எனது இல்லம் தேடிவந்து கொடுத்துப் போன டாக்டர் ராமானுஜம் முதல் நாள் உங்களை நேரில் சந்தித்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
பூச்சிகள், புழுக்கள் பேசத் தெரிந்த உலகில் மனிதர்கள் குறித்த மரியாதை அவற்றுக்கு (இப்படி அது, அவை என்று
அஃறிணையில் குறிப்பிட இலக்கணம் வகுத்துக் கொண்டதும் மனிதர்கள் தாமே.) கிஞ்சிற்றும், லவலேசமும், சிறிதளவாயினும் மரியாதை இராது என்பதே எனக்கு இப்போதைக்குத் தோன்றுவது.
அப்படியானால் யானை டாக்டர் டாக்டர் கே எப்படி வெறும் மனிதராக இருந்திருக்க முடியும்
என்பதும் இந்தப் புத்தகம் எழுப்பும் கேள்வி. எனவே தான், பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட வேண்டாம் என்று சுயநல ஆட்சியாளர்கள் முடிவெடுத்ததும் சரி என்றாகிறது. யானை டாக்டர், இயற்கை குறித்த ஆதாரமான பல கேள்விகளை மட்டும் எழுப்பவில்லை ,நாமே தயாரித்து வாசித்துப் பட்டங்களும் குவித்துக் கொண்டிருக்கும் அறிவு, ஞானம், தர்க்கம்
ஆகியவற்றின் மீதே கேள்விகள் வைக்கிறது. அதனாலேயே மனித சிந்தனை மகத்துவம் பெறுகிறதாகிறது. …
எவ்வளவு நுட்பமான விஷயம்…
வாழ்த்துக்கள் ஜெயமோகன்..
விரிவாக எழுதுகிறேன், பின்னர்
எஸ் வி வேணுகோபாலன்