அன்பின் ஜெ.எம்.,
வணக்கம்.
தேவதேவன் பற்றிய தங்கள் ‘நிழலில்லாத மனிதன்’பதிவில் ,கீழ்க்காணும் வரிகளில் பெரிதும் லயிக்க முடிந்தது.
இதைப் படித்துச் சற்று நேரம் தன்வசமிழந்து உறைந்து போய் அமர்ந்திருந்தேன்.
//தன் கலையால் தன்னை நிறைத்துக்கொண்டவன் பிறிது எதற்கும் இடமில்லாதவன், சுயம்பிரகாசமானவன். அவனுக்குள் துயர் நுழைவதிலை. அவனுக்குக் குறையென இப்பூமியில் ஏதுமில்லை.//
ஆம்..கலையால் மட்டுமே நிரம்பியவனுக்குப் புறக் கவலைகளின் தீண்டல் அற்பமானதுதான்..
பொருட்படுத்தத் தகுதியற்றதுதுதான்.குறையொன்றுமில்லாத பூரணமானவன் அவன்தான்..
சோற்றுக் கவலையிலும் ‘’எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’’என்று பாடி நெகிழ அவன் வாழ்வின் பக்கங்களைக் கலையே நிரப்பிக் கொண்டிருக்கிறது.
அன்புடன்…
எம்.ஏ.சுசீலா,
புது தில்லி
அன்புமிக்க ஜெ. வணக்கம். ஆழி சூழ் உலகம் குறித்த தங்கள் கருத்து உற்சாகம் வழங்கியது.
http://www.vallinam.com.my/issue31/navin.html
இது இமையத் தியாகம் குறித்த பதிவு.
அன்புடன்
நவீன்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு
நன்றி. காலையிலேயே உங்கள் தளத்தில் என்னுடைய கவிதை பற்றிய பதிவினைப் படித்து விட்டேன். ஆனந்த அதிர்ச்சியில் அதிர்ச்சி இப்போது அடங்கிவிட்டது. ஆனந்தம் எளிதில் அடங்கமாட்டேனென்கிறது. என்னுடைய கவிதையை நீங்கள் எடுத்துக்கொண்ட கோணம் நான் எதிர்பாராதது. அதனால்தானோ என்னவோ இம்முறை உங்களுடைய பதிவைப் புரிந்துகொள்வதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. பல்முனை சாத்தியங்களை நான் எதிர்பார்த்துப் பொருத்திப்பார்த்திருந்தும், நீங்கள் சொல்லியிருப்பது எனக்குப் புதிது.அந்தவகையில் அந்தக் கவிதை அமைந்துவிட்டதில் பெருமிதம். ஆமாம். அமைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். நான் சிறிய வாசகனாக இருந்து, என்னையும் மீறி ஒரு நல்ல கவிதையை எழுதிவிட்டேன் போலும்.
நான் இன்னும் பல கவிஞர்களின் பெரும்பாலான கவிதைகளைப் புரிந்துகொள்ளும் பயிற்சியும் பக்குவமும் கூடிவராத நிலையில்தான் நகர்ந்துகொண்டிருக்கிறேன். தேவதேவன் அவர்களின் பெரும்பாலான கவிதைகளும் இதில் அடக்கம். இப்போது எனக்கிருக்கும் இலக்கிய அறிவேகூடஉங்களதளத்திலிருந்தும்,புத்தகங்களிலிருந்தும்தான்.நிறையக் கற்றேன், கற்றுவருகிறேன் என்பதை நான் முன்னமேகூட சொல்லியிருக்கிறேன். அந்தவகையில் குருவிடமிருந்தே இந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. என்னைக் கவிஞன் என்று நினைத்துக்கொள்வதுகூட இல்லை. அவ்வப்போது கவிதைகள் எழுதுபவன். அவ்வளவுதான். யாராவது என்னைக் கவிஞர் என்று விளிக்கும்போதும், குறிப்பிடும்போதும் கூச்சப்படுவேன். இது நிச்சயம் தாழ்வுமனப்பான்மை அல்ல என்று நம்புகிறேன்.
மீண்டும் நன்றிகளுடன்
ச.முத்துவேல்