பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

அன்பின் ஜெயன்,

மூன்று வாரமாகத் தொடர்ந்து படித்து இப்பொழுதுதான் பின் தொடரும் நிழலின் குரலை முடித்தேன். மூன்று வாரம் ஆகக் காரணம் ஆங்காங்கே புத்தகத்தை மூடி வைத்து விட்டு என்னை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

பல வருடங்களாகவே எனக்கு ஒரு கேள்வி உண்டு. ஜோஸஃப் ஸ்டாலினுக்கும் பின்லேடனுக்கும் என்ன வித்தியாசம்? தாலிபான்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் என்ன வேறுபாடு? முதல் கேள்விக்கு விடை உண்டு. ஸ்டாலினுக்கு தாடி இல்லை, பின் லேடனுக்கு இருந்தது. மற்றபடி இருவரும் ஒரே விதமே. ஸ்டாலின் மண்ணாகி அழுகிப் போன பின் வந்த அவதாரமே பின்லேடன். ஸ்டாலின் கொன்று குவித்த அளவு பின்லேடன் குவிக்க முடியாததன் காரணம் பலரும் விழித்துக் கொண்டதே.

இரண்டாவது கேள்விக்கு எந்த வேற்றுமையும் இல்லை என்பதே என் புரிதல். இரண்டுக்கும் அடிப்படை அதிகார வெறி, பேரழிவின் மூலம் அதை அடைவது வழி. மக்களுக்காகப் போராடுவதாகச் சொல்லிய லெனின் ஸ்டாலின் கும்பல் அதே மக்களில் பத்துக் கோடிப் பேரை அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த  மண்ணிலயே கொன்று புதைத்தார்கள் என்றால் இஸ்லாமின் ஆட்சியை நிறுவியதாகச் சொல்லும் தலிபான் கும்பல் ஆஃப்கனைச் சீரழித்துப் பிச்சைக்கார தேசமாக்கியது.

இந்த இரண்டு கும்பல்களையும் எப்பொழுது நினைத்தாலும் மிக அசிங்கமான கெட்ட வார்த்தைகளே வந்து கொட்டுகிறது என்றாலும் அடக்கிக் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். இந்தக் கும்பல்கள் சித்தாந்தங்களுக்காகவா போராடுகின்றன? எந்த சித்தாந்தத்தை நிலை நிறுத்த ஸ்டாலின் குழந்தைகளைக் கூடக் கொன்று புதைத்தான்? அவன் செய்தது முழுக்க முழுக்கக் கொலை வெறி பிடித்த சைக்கோத்தனம். நீங்கள்  மற்றொரு கட்டுரையில் சொல்லியிருப்பது போல அவன் ஸ்டாலின் ஆக விரும்பிய மற்றவர்களைக் கொன்றது உண்மை தான். லெனின் காலத்தில் பொலிட் பீரோவில் இருந்த எல்லோரையுமே கொன்று அழித்து விட்டான். ஆனால், அவன் அதோடு நிறுத்தவில்லை. கண்ணில் படும் எல்லாரையும் பார்த்துத் தொடை நடுங்கிய அந்த கோழை, மற்றவர்களுக்குத் தன் மீது பயம் இருக்க வேண்டும் என்பதற்காகவே கும்பல் கும்பலாகக் கொன்றழித்தான். அவன் எந்த சித்தாந்தத்தையும் நிலைநிறுத்த இதையெல்லாம் செய்ததாகத் தெரியவில்லை.

கம்யூனிஸத்திலும் சரி, பின்லேடன் கும்பலின் பயங்கரவாதத்திலும் சரி, தன் பார்வையைத் திணிப்பதும், எதிர் கருத்து உடையவர்களை அவதூறு சொல்லி ஒழிப்பதும் முடிந்தால் குடும்பத்துடன் கொன்று புதைப்பதும் என்று அதன் அடிப்படையே தவறாக இருக்கிறது. தவறான அடிப்படைக் கொள்கையில் இருந்து ஸ்டாலின் பின்லேடன் போன்ற பயங்கரவாதிகள் மட்டுமே வர முடியும்.

இதை விட அதிகம் வெறுக்கத்தக்கவர்கள் கெ.கெ.எம் போன்றவர்கள். உண்மையில் ஸ்டாலினை விடக் கேவலமான உணர்ச்சியை எனக்கு கெ.கெ.எம் தான் உருவாக்குகிறார்.கெ.கெ. எம் போலவே இன்றைக்குப் பலர்  ஈழ இனப்படுகொலைகளுக்குச் சப்பைக் கட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஞாபகம் வருகிறது.  அறவுணர்வு, மனித நேயம், அறச்சீற்றம் என்றெல்லாம் கெ கெ எம் போன்றவர்கள் நாடகமாடுகிறார்கள் என்றே எனக்குப் புரிகிறது. குறைந்த பட்சம் மனிதனாக இருப்பவன் கூட ஸ்டாலின் போன்றவர்களை(எழுத்துப்பிழை இல்லை) ஆதரிக்க மாட்டான். எத்தனை செய்தாலும் ஸ்டாலினுக்கு சப்பைக்கட்டு கட்டுவதன் மூலம் கெ.கெ.எம் ஸ்டாலினிலும் கீழே போகிறார். இறுதியில் பக்தி மார்க்கத்தில் அவர் திரும்புவதாக வருகிறது. ஊரில் எல்லா அயோக்கியனும் செய்வது தானே இது? சில கல்வித் தந்தைகள் போல. கெ.கெ. எம் ஏதேனும் ஸைபீரிய பனிப் பாலையில் செத்துப் போய் இருந்தால் எனக்கு சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால் நீதி எல்லா நேரங்களிலும் செயல்படுவதில்லை. மாவோ இன்னுமே மதிப்புக்குரிய தலைவராகத்தானே இருக்கிறார்?

கெ.கெ.எம்முக்கும் ஸ்டாலினுக்கும் இன்னும் பல கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இது  பற்றி எந்த உணர்ச்சியும் இல்லை என்பது தான் உண்மை. அத்தனை விஷயத்தையும் அவதூறுப் பிரச்சாரம் என்ற ஒற்றை வரியில் ஒதுக்கி விட்டு மக்களுக்கான போராட்டம் பற்றி பாவனைப் பேச்சை ஆரம்பித்து விடுவார்கள்.

நாவலின் இறுதியில் தோன்றியது இது தான். வீரபத்ர பிள்ளை, அருணாசலம், நிக்கலாய் புகாரின் என்று மிகச்சிலரையே நிழல் பின் தொடர்கிறது. கெ.கெ. எம் போன்றவர்களை அவர்களின் நிழல் கூட வெறுத்து ஒதுக்கும்.

நாவலைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தனியாகத்தான் சொல்ல வேண்டும். எழுநூறு பக்கங்களுக்கு மேலே இருந்தாலும் விடாது படிக்க வைக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளா இன்றைக்கு திமுக கூட்டணி நாளைக்கு அதிமுக கூட்டணி என்பதைத் தவிர வேறு எதுவுமின்றி. அடிப்படை கம்யூனிஸ இயக்கம் பற்றித் தமிழில் வேறு எங்கேனும் இத்தகைய கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. மனித இனத்தின் சம காலப் பேரழிவு, அதற்குக் காரணமாயிருந்த சித்தாந்தம் பற்றி அழுத்தமான கேள்விகளை எழுப்புவதே நாவலின் பெரிய வெற்றி.

அன்புடன்,
நிதின்

அன்புள்ள நிதின்,

நான் எல்லாக் கருத்தியலையும்  பொதுவாகவே எடுத்துக்கொள்வேன். எல்லாமே அதனுள், அதன் தர்க்கத்தின் சுழலில், அந்த நம்பிக்கையின் வட்டத்துக்குள், நாம் சிக்கிக்கொண்டதும் நம்மைப் பிறவற்றைப் பார்க்கமுடியாதவர்களாக ஆக்கிவிடுகின்றன. அது எதுவானாலும். மதம், அரசியல் கோட்பாடுகள்…

 

ஜெ

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

 

 

 

 

 

முந்தைய கட்டுரைரப்பர் நினைவுகள்
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் – வீரராகவன்