ரப்பர் நினைவுகள்

என் முதல் நாவலான ரப்பர் அக்டோபர் 1990ல் வெளிவந்தது. தமிழ்ப்புத்தகாலயம் அகிலன் கண்ணன் நடத்திவந்த தாகம் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அப்போது அவர் தந்தை அகிலனின் பெயரால் ஒரு நாவல்போட்டி நடத்திவந்தார். அதில் ரப்பர் பரிசு பெற்றது. 2000 ரூபாய். ரப்பர் இன்னும்  மேலும் நான்கு வருடம் முன்பு 1986இல் இன்னும் கொஞ்சம் பெரிதாக எழுதப்பட்டது. போட்டியின் பக்க நிபந்தனைக்காக சற்று சுருக்கப்பட்டது.  காசர்கோட்டில் இருக்கையிலேயே அதை எழுதி முடித்து வைத்திருந்தேன். 200 பக்கம் மிகக்கூடாது என்பதற்காக அதை சுருக்கினேன். மேலும் சுருக்கமுடியாமல் சுந்தர ராமசாமிக்கு அனுப்பி ஒரு தட்டச்சுநிலையத்தில் கொடுத்துத் தட்டச்சிட்டேன். அப்போது 290 பக்கம் 200 பக்கமாக ஆகியது

 

ரப்பர் என் முதல் புத்தகம்.  அது எழுதப்படும்போது 24 வயது. வெளிவரும்போது  28 வயது.  அந்நாவலுக்கு முன்னால் கவனத்தைக்கவர்ந்த சில கதைகள் எழுதியிருந்தேன். அவை நிகழ் இதழில் வெளிவந்த படுகை, போதி  மற்றும் புதியநம்பிக்கை இதழில் வெளிவந்த மாடன் மோட்சம். ஓர் எழுத்தாளனாக எனக்கு நல்ல அறிமுகத்தை அன்று பரவலாக விவாதிக்கப்பட்ட அக்கதைகள் உருவாக்கியிருந்தன என்றாலும் அகிலன் பரிசுதான் சட்டென்று ஒரு முக்கியத்துவத்தை அளித்தது. விஷ்ணுபுரம் வரும்வரை ரப்பர் ஜெயமோகன் என்றுதான் சொல்லப்பட்டேன்.

அன்றெல்லாம் ஒரு புத்தகம் வெளியிடுவது சாமானிய விஷயமல்ல. பலநூல்களை எழுதி விருது பெற்ற படைப்பாளிகள் கூடப் பதிப்பகங்கள் பின்னால் அலைவார்கள். பதிப்பாளர்கள் அவர்களைக் கழற்சிக்காய் மாதிரி சுற்றி விளையாடுவார்கள். நீல பத்மநாபனின் ‘தேரோடும் வீதி’ என்ற ஆயிரம்பக்க நாவலே அவர் பிரசுரகர்த்தர்களிடம் பட்ட அனுபவங்களின் பதிவு என்றால் மிகையல்ல. ஆகவே முதல் புத்தகம் கைக்காசு செலவில்லாமல், எளிதாக வெளிவர அந்நாவல்போட்டி காரணமாகியது.

போட்டியின் நடுவர்களாக கி.ராஜநாராயணன், தா.வே.வீராச்சாமி, இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் இருந்தார்கள் . அந்நாவலுக்கு ஒரு விழா நடந்ததும் அதில் நாவலின் வடிவத்தைப்பற்றி நான் பேசிய பேச்சு ஒரு விவாதமாக ஆனதும் தெரிந்திருக்கலாம். பின்னர் அக்கருத்துக்களை ‘நாவல்’ என்ற பேரில் வெளியிட்டேன். அதன் மறுபதிப்பைக் கிழக்கு வெளியிட்டிருக்கிறது. அந்நாவலின் விழாவில் இந்திரா பார்த்தசாரதியின் துணைவியார் இந்திராவைப் பார்த்த நினைவிருக்கிறது. கொட்டும் மழையில் , அண்ணாசாலையில் செத்த பூனைகள் மிதந்துசெல்லும்படி பெருக்கெடுத்த வெள்ளத்தினூடே நடந்த விழாவில் சா. கந்தசாமி, ஞானக்கூத்தன் போன்றோர் வந்திருந்தார்கள்.

நாவல் அச்சான நாட்கள் கொந்தளிப்பானவை.  நான் பலமுறை மெய்ப்புப் பார்த்தும் அச்சுப்பிழைகள். என்னால் நாவலைப் படிக்கவே முடியவில்லை, பரவசம். முதல் புத்தகம் எந்த ஆசிரியருக்கும் அப்படித்தானே. என் சுயசரிதைக் குறிப்பு ஒன்று அனுப்பவேண்டும் எனக் கண்ணன் கேட்டார். நான் அலுவலக பாணியில் சுயவிவரப்பட்டியலாக அனுப்பி வைத்தேன். அது அப்படியே அச்சாகி வெளிவந்தது. முன் அட்டையிலும் எனக்கு ஆச்சரியம். ரப்பர் என்றால் பால்மரம் எனப் புரிந்துகொண்ட ஓவியர்,ரப்பரை ஒருவகைக் கள்ளிமரம் போல உருவகம் செய்து வரைந்துவிட்டிருந்தார்.

அதில் நான் எழுதிய முன்னுரை ஒரு நல்ல சுயபிரகடனம் என்றே நினைக்கிறேன். இருபத்திரண்டு வருடம் கழித்து வாசிக்கும்போது ’சரிதான், இப்போதும் அப்படியே’ என்று சொல்லத்தோன்றுவதை வாழ்க்கையின் வெற்றி என நினைக்கிறேன்.

ரப்பர் நாவலுக்கு விஜயா வேலாயுதம் ஒரு பாராட்டுக்கூட்டம் ஏற்பாடுசெய்தார், கோவையில். ஓர் இளம் ஆசிரியருக்கு அப்படி ஒரு கூட்டம் நடப்பதென்பது அன்றெல்லாம் தமிழகத்தில் நினைத்தே பார்க்கமுடியாதது. அன்றைய இலக்கிய நட்சதிரங்களான நாஞ்சில்நாடன் போன்ற பலருக்கு மேலும் பத்து வருடங்கள் வரைகூட ஒரு கூட்டம் நடந்ததில்லை என்பதை நினைவுகொள்ளவேண்டும். ஒரு வகையில் தமிழில் எனக்கு எல்லாமே இயல்பாக சரியாக நடந்தது. எழுதிய ஒரு வரிகூட கவனிக்கப்படாமல் போனதில்லை. ஒரு வாசலில் கூட வரவேற்பு இல்லாமல் இருந்ததில்லை. அதை அதிருஷ்டம் என்றே சொல்லவேண்டும்.

அந்த விழாவில் ஒரு பேராசிரியர் பேசும்போது பின்னட்டைக் குறிப்பு மணமகள் தேவை விளம்பரம் போல் இருக்கிறது என்றார். ஆச்சரியமென்னவென்றால் மேலும் நாலுமாதம் கழித்து அருண்மொழிநங்கை அந்நாவலைப் படித்துவிட்டுக் கடிதம் எழுதினாள். நாவல் வெளிவந்த ஒருவருடத்தில் 1991 ஆகஸ்ட் 8 அன்று திருமணம் நடந்தது. ஆம், ரப்பர் மிகவும் ராசியான புத்தகம்.

ரப்பர் முன்னுரை

வேறு எவ்வகையிலும் என் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள இயலாது என்று தோன்றியபோதுதான் நான் எழுத ஆரம்பித்தேன். அந்தரங்கமாய், என் எழுத்தின் நோக்கம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலிமையுடன் ‘இருக்க’ விழையும் என் அகங்காரம்தான் என அறிகிறேன். ஆனால், பிற்பாடு இது வளர்ந்து பலமுகங்களைப் பெற்றுவிட்டது.

வாசக லட்சங்களைப் பித்து கொள்ளச் செய்யும் நாயகனாக ஆகிவிடவேண்டும் என்ற கனவு இன்று என்னில் இல்லை என்பதில் பெருமிதமடைகிறேன். அந்தரங்க சுத்தியுடன் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் வார்த்தைகளின் அளவுக்குத் தூய்மையுடன், சத்தியத்தின் ஒளியுடன் எழுதவேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.
சிறந்த எழுத்துக்கு இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கும் சமூகப் பொறுப்புணர்வு, தார்மீக எழுச்சி, சுதந்திரம், ஆழம் என சகல மேன்மைகளும் இந்த அந்தரங்க நிலை ஒன்றினாலேயே கைகூடிவிடும் என்று உணர்கிறேன்.

‘ரப்பர்’ என் முதல் நாவல். வெளியிடப்படும் முதல் புத்தகமும்கூட. இது வெற்றி பெற்ற கலைப்படைப்பா என்று கூறத் தெரியவில்லை. ஆனால் இதை எழுதும்போது பல இடங்களில் எனக்கும் இதற்குமான இடைவெளி இல்லாமல் ஆகிவிடும் அனுபவம் கிடைத்திருக்கிறது. வாசகர்கள்முன் துணிவுடன் இதை வைக்க இந்த ஒரு காரணமே போதுமானதாகும்.

 

முந்தைய கட்டுரைசிந்துசமவெளி எழுத்துக்கள்
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்