அசடனும் ஞானியும்- கடிதங்கள்

அன்பின் ஜெமோ, நலமா? நீண்ட நாட்களின்பின் எழுத முடிகிறது.உங்கள் கனடா பயணம் நல்லவிதமாக இருந்தும் பயணச் சீட்டு மேலதிக செலவாகியதைச் சொன்னீர்கள்.அதை அப்படியே விட்டு விட்டீர்களா? தண்டமாக விடாமல் எடுத்துத் தானமாகக் கொடுக்கலாம்.

அசடனும் ஞானியும் வாசித்தேன் தேர்வு செய்யப்பட்ட சிலர் வாசித்து நொந்த மனதுக்கு ஒத்தடம் தந்ததுபோல் உணர்வு.நான் போஸ்ட்மேன் வேலை செய்தபோது ஒரு வீட்டில் மொங்கொலோய் குறைபாடுள்ள ஒருவர் கடந்து போகும்போது கை அசைப்பார், புன்சிரிப்பை இருவரும் பரிமாறுவோம்.ஒருமுறை தெருவில் அவரைக் கண்டேன் எதிர்பாராமல்.கண்டவுடன் மிகமலர்ந்து எனைக் கட்டியணைத்துக் கன்னத்தில் கன்னமிழைத்துக் கண்கள் முழுதும் புன்னகையுடன் கையசைத்து வார்த்தையின்றிப் பிரிந்துசென்றார்.அவ்வளவு அன்பை ஒரு அணைப்பில் தர என்னால் எப்போதுமுடியுமோ தெரியவில்லை.அப்போது நானடைந்த மனவெழுச்சி விவரிக்க முடியாதது.எவளவு நேரம் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தேன் என எனக்கு இப்போதும் தெரியாது.

அன்புடன்
வே.பாலா

***

அன்பு ஜெ!

தங்கள் ‘அசடனும் ஞானியும் ‘ கட்டுரை மிகுந்த தீவிரத்துடன் எழுதப்பட்டிருக்கிறது.ஏற்கனவே ‘சராசரி’என்று தாங்கள் எழுதியது நினைவுக்கு வருகிறது. மேதைத்தனமும் பேதைத்தனமும் ஒரே முளையில் காணப்படுவது பற்றிய தங்களது பார்வையை விளக்குகிறது. உளவியலில் இது, ‘IDIOT-SAVANT SYNDROME’ (மேதை பேதை ) என்று அழைக்கப்படுகிறது. மூளையில் ஒருசில இடங்கள் அபார வளர்ச்சியும். இணைப்புத்திறனும் பெறுகிறது.மற்ற இடங்கள் வளராமல் நின்றுவிடுகிறது.
‘பரவ முடியாத காரணத்தால் குவிந்த மூளைகள்’ அற்புதமான பிரயோகம். விஞ்ஞானம் கோடிட்ட இடங்களை மெய்ஞ்ஞானம் நிரப்புகிறது .
மேதை,பேதை இருவருக்குமே சராசரிகளுக்கு இருக்கும் மனத்தடைகள் கிடையாது.
அன்புடன்
Dr. ராமானுஜம்
முந்தைய கட்டுரைஹூசெய்ன், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரையானைடாக்டர் இலவச நூல்