இலியட்டும் நாமும் 4

[தொடர்ச்சி]

அக்கிலிஸ் ஹெக்டரைக் கொல்லுதல்

 

நாடகத்தருணம்

‘நாடகாந்தம் கவித்வம்’ என்ற ஒரு சொல்லாட்சி உண்டு. நாடகீயத்தன்மையின் உச்சமே சிறந்த கவிதை. கம்பராமாயணத்தில் நாம் காண்பதெல்லாம் உயர்தர நாடகீயத் தருணங்களை. இலியட்டிலும் பல உச்சகட்ட நாடகத் தருணங்கள் உள்ளன. அக்கிலிஸுக்கும் அகமெம்னானுக்கும் உருவாகும் மோதல், அக்கிலிஸை அவன் தாய் உட்பட உள்ள தேவதைகள் சமாதானப்படுத்துவது, நண்பன் கொலைசெய்யப்படும்போது அக்கிலிஸ் கொள்ளும் கோபாவேசவெறி எல்லாமே நாடகத்தன்மை மிக்க இடங்கள்.

ஆனால் கடைசியில் ஹெக்டரைக் கொன்று அந்தச் சடலத்தை அக்கிலிஸ் அவமதிப்பதே நாடகத்தன்மையின் உச்சம். இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் பிற்காலக் காவியங்களில் கதைநாயகன் அறத்தைக் காக்கவே வீரத்தை கைக்கொண்டிருப்பான். அறமும் வீரமும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். அறத்தின் செயல்பாடே வீரமாக அறத்தின் ஆயுதமே வீரமாக இருக்கும். அர்ஜுனனும் ராமனும் எல்லாம் அறநாயகர்கள். ஆனால் அக்கிலிஸ் அப்படி அல்ல. அவன் வீரன், அவ்வளவுதான். அவன் போரிடுவது அவனுடைய சொந்த ஆணவத்திற்காக, புகழுக்காக, பழிக்காக மட்டுமே.

அவ்வாறு போரிட்டு வெல்லும்போது ஹெக்டரின் பிணத்துடன் அவன் நடந்துகொள்வதை இன்று கற்பனைசெய்வதே கடினமாக இருக்கிறது. ஹெக்டரைக் கொன்றபின் தொடர்ச்சியாகப் பதினோரு நாட்கள் அந்தச்சடலத்தைத் தன்னுடன் வைத்திருக்கிறான் அக்கிலிஸ். நமது புராணங்களில் உள்ளது போல அந்தியானதும் போர் முடிவுற்று இருசாராரும் சேர்ந்து இறந்தவர்களை எரிப்பதோ புதைப்பதோ இல்லை. இருசாராரும் சேர்ந்து ஈமக்கடன்கள்செய்வதில்லை. விரோதம் சடலத்திடமும் தொடர்கிறது.

கிரேக்கப்படைகள் நடுவே தனியாக மாட்டிக்கொள்கிறான் ஹெக்டர். சளைக்காமல் போர் புரிகிறான். கடைசியில் ஆயுதமில்லாமல் அக்கிலிஸின் முன் வீழ்கிறான். அவன் உடம்பெங்கும் வெண்கலக் கவசம். கழுத்து மட்டும் மூடாமலிருக்கிறது. அந்தக்கழுத்தில் தன் ஈட்டியைச்செலுத்தி அவனைக் கொல்கிறான் அக்கிலீஸ்.    ‘பெட்ரோகுலஸை நீ நிர்வாணப்படுத்தியபோது நீமட்டும் பாதுகாப்பாக இருக்கப்போவதாக நினைத்தாய் அல்லவா? அப்போது நீ என்னை நினைக்கவில்லை…அவனைவிடச் சிறந்த வீரன் ஒருவன் அவனுக்காக பழிதீர்க்கக் காத்திருக்கிறான் என நீ உணரவில்லை…..இப்போது உன்னை நாய்களும் பிணந்தின்னிகளும் சிதைக்கப்போகின்றன. அதன்பின்னரே நாங்கள் பெட்ரோகுலஸை அடக்கம்செய்வோம்’ என்று கொக்கரிக்கிறான். எந்த அறவிவாதமும் இல்லை. வெறும் வீரக்கொப்பளிப்பு.

ஹெக்டர் மன்றாடுகிறான். ‘உன்னை நான் வேண்டிக்கேட்கிறேன். உன் பெற்றோரின்மேல் ஆணையிட்டுக் கெஞ்சுகிறேன். என் உடலை கிரேக்க கப்பல்களின் அருகே நாய்களுக்கு உணவாக விட்டுவிடாதே. என் பிணைத்தொகையைப் பெற்றுக்கொண்டு என் உடலை என் பெற்றோருக்குக் கொடுத்துவிடு…என் பெற்றோர் நீ கேட்டதைத் தருவார்கள். டிரோஜன் வீரர்கள் என்னை முறைப்படி எரிக்க விடு’

ஆனால் ஹெக்டரை நோக்கிக் காறித் துப்பி அக்கிலிஸ் சொல்கிறான், ‘நாயே, என் காலைப்பிடித்து மன்றாடாதே. பெற்றோரைப்பற்றிச் சொல்லி என் மனதைக் கரைக்க முயலாதே. உன்னை வெட்டி வெட்டித் தின்னவே என் மனம் கூறுகிறது. நாய்களை உன்னிடமிருந்து நான் விரட்டப்போவதில்லை…உன் எடையைவிடப் பத்துமடங்கு பிணைகொடுத்தாலும் உன் உடலைக் கொடுத்துவிடமாட்டேன். நீ நாய்களால் உண்ணப்படுவாய். கழுகுகளால் கிழிக்கப்படுவாய்.’

ஹெக்டர் சொன்னான் ‘உன் இதயம் இரும்பாலானது..உன்னிடம் பேசி என் மூச்சு வீணானது. நீ செய்தவைக்காகக் கடவுள்கள் கோபம் கொண்டால் உன் மரணம் என் தம்பி கையால் நடக்கும்’ அந்தசாபம் நடந்தது. அக்கிலிஸைக் கொல்ல அப்பல்லோ பாரிஸுக்கு உதவிசெய்தார். ஹெக்டர் இறந்தான்.

கிரேக்கர்கள் ஓடிவந்தார்கள். ஹெக்டரின் அற்புதமான உடல்கட்டைப் புகழ்ந்தபடி எக்காளமிட்டுச் சிரித்தபடி அவன் உடலை அவர்கள் ஈட்டியால் குத்திக் குத்திச் சிதைத்தார்கள். ‘நம் கப்பல்களை எரித்தபோது இருந்ததை விட இவன் மென்மையாக இருக்கிறான்’ என்று கூச்சலிட்டார்கள்.

அக்கிலிஸ் ஹெக்டரின் பாதங்களின் பின்னால் குதிகாலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் இருந்த சதையை நார்நாராக வெட்டினான். அதற்குள் மிருகத்தோலால் செய்யப்பட்ட பட்டைகளை விட்டு ஹெக்டரின் கால்களைத் தன் தேரோடு இணைத்தான். தலை மண்ணில் தொங்கிக் கிடந்தது. பின்னர் தன் தேரில் ஏறிக் குதிரைகளைச் சாட்டையால் சொடுக்கி முடுக்கி சுற்றி ஓட்டினான். பின்னால் வந்துகொண்டிருந்த உடலில் இருந்து மண்ணும் புழுதியும் பறந்தது.ஹெக்டரின் அழகிய கரிய முடி இருபுறமும் பிரிந்து பறந்தது. அவன் தலை,புழுதிக்கூளமாக ஆகியது.

அதைக் கோட்டைமேல் இருந்து டிரோஜன்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தன் மைந்தனின் உடம்பு அப்படி இழுபடுவதைக் கண்டு ஹெக்டரின் அம்மா கதறி அழுதாள். அவன் அப்பா மனவேதனையுடன் முனகிக் கண்ணீர்விட்டான். நகரமே திகைத்து அழுதது.இலியம் கோட்டையே வெந்துருகியதுபோல் ஆனது. வெறிகொண்ட ஹெக்டரின் தந்தை ப்ரியம் நேராக ஓடி லாயத்திற்குச்சென்று குதிரைச் சாணத்தை அள்ளித் தன் உடலெங்கும் பூசிக்கொண்டு கதறி அழுதான்.

பத்துநாள் அப்படி சடலத்தை சீரழித்தான் அக்கிலிஸ். பெட்ரோக்குலஸை அடக்கம்செய்தார்கள். அவனுக்காக விளையாடுப்போட்டிகள் வைத்தார்கள். ஆனால் அதன்பின்னரும் அக்கிலிஸின் கோபம் அணையவில்லை. அவன் பெட்ரோக்குலஸின் புதைகுழியைச் சுற்றி ஹெக்டரின் சடலத்தை இழுத்துச் சென்றான். இரவும் பகலும் நண்பனை எண்ணி அழுதான். கண்ணீருடன் தூக்கமில்லாமல் புரண்டான்.

பன்னிரண்டாம் நாள் அப்போலோ சக கடவுள்களிடம் கோபமாகச் சொன்னார். ‘இன்னுமா உங்கள் மனம் இரங்கவில்லை? உங்களுக்கு அற உணர்ச்சியே இல்லையா? ப்ரியமும் அவன் மகனும் அளித்த வெள்ளாட்டுப்பலியையும் மதுவையும் மறந்துவிட்டீர்களா? அந்தச்சடலத்தை அவன் தந்தையிடம் கொண்டுசேர்க்க என்ன செய்யப்போகிறீர்கள்?’ அதன்பின் கடவுள்கள் கூடி அக்கிலிஸின் அன்னை தீட்டிஸை அழைத்து அக்கிலிஸிடம் தூதுபோகச் சொன்னார்கள்.

தீட்டிஸ் மகனிடம் சமாதானம் பேசுகிறாள். தனக்கு நிறைவூட்டு பிணைப்பொருட்களை கொடுத்துவிட்டு ஹெக்டரின் சடலத்தைக் கொண்டுபோகலாம் என அக்கிலிஸ் சம்மதிக்கிறான். ப்ரியம் பரிசுப்பொருட்களுடன் அக்கிலிஸைப் பார்க்கவரும் காட்சி எந்த ஒரு நவீன நாவலை விடவும் உக்கிரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அக்கிலிஸ் தன் வழக்கமான குடிசைக்குள் இருக்கிறான். அக்கிலீஸ்,சாப்பிட்டு முடித்து ஏதோ குடித்துக்கொண்டிருக்கிறான். அவனது சாப்பாட்டு மேஜையை இன்னும் எடுத்துச்செல்லவில்லை. அக்கிலிஸ் கவனிக்காமல் தன் தோழனை நினைத்துத் துயரில் ஆழ்ந்திருந்தபோது மாமன்னராகிய ப்ரியம் மெல்லக் குடிசைக்குள் நுழைந்து அக்கிலிஸின் முழங்காலருகே அமர்ந்து,தன் பிள்ளைகளைக் கொன்ற அவன் கையை எடுத்து மென்மையாக முத்தமிட்டான்

அக்கிலிஸ் ப்ரியமைக்கண்டு மிரள்கிறான். ஊரில் கொலைசெய்துவிட்டு வேற்றூரில் ஒளிந்திருப்பாவன்,அங்கிருப்போரால் விசித்திரமாகப் பார்க்கப்படும் போது அடையும் மருட்சியைப்போன்றது அது என்கிறார் ஹோமர். குற்றவுணர்ச்சியின் திகைப்பு அது. ஹெக்டரின் சாயலை அவன் ப்ரியம் முகத்தில் கண்டிருக்கலாம். ப்ரியம் சொன்னான். ‘கடவுளுக்கு நிகரான அக்கிலிஸ், உன் அப்பாவை நினைத்துக்கொள். அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.அவரும் பரிதாபமாக முதுமையின் வாசலில் நிற்கிறார். அவருக்கும் அங்கே ஆயிரம் துயரங்கள் இருக்கும். ஆனாலும் நீ உயிருடன் இருக்கிறாய் என்று அவர் மகிழ்வார். நீ திரும்புவாய் என அவர் காத்திருப்பார்’

‘ஆனால் என் வாழ்க்கையை விதி சீரழித்துவிட்டது. இந்த தேசத்தின் மிகச்சிறந்த பிள்ளைகளை நான் பெற்றேன். ஆனால் அவர்களில் ஒருவர்கூட இப்போது இல்லை. அந்தக்கோட்டைக்குள் என் மக்கள் ஐம்பதுபேர் இருந்தார்கள். அவர்களில் பத்தொன்பதுபேர் ஒருதாய்வயிற்றுப்பிள்ளைகள். அத்தனைபேரும் இறந்துவிட்டார்கள். அவர்களில் ஒரே ஒருவனை நான் நம்பியிருந்தேன். அவன் என் மகன் ஹெக்டர்…அவனை நீ கொன்றுவிட்டாய். அக்கிலிஸ்!கடவுள்களுக்கு மரியாதைகொடு. என் மேல் கருணை காட்டு. ஏனென்றால் எந்தத் தந்தையும் செய்யாததை நான் செய்திருக்கிறேன். மகனைக்கொன்ற கைகளை முத்தமிட்டிருக்கிறேன்’ என்று சொல்லி ப்ரியம் ஓசையிட்டுக் கதறி அழுதான்.

அக்கிலிஸ் மனமுருகிவிட்டான். ’இங்கே எப்படி வந்தீர்கள்? அதிலும் உங்கள் மக்களைக்கொன்றவனைக் காண? உங்கள் இதயம் இரும்பாலானதுதான்…நானும் உங்களைப்போன்றே துயரம் கொண்டவன்தான். அழுதழுது களைத்துவிட்டேன், அழுகையினால் ஆகப்போவது ஏதுமில்லை. ஜீயுஸ் கடவுள் தன் அரண்மனையில் இரு ஜாடிகளை வைத்திருக்கிறார்.. ஒன்றில் அமுதம் ஒன்றில் விஷம். இரண்டையும் கலந்தே அவர் மனிதர்களுக்குப் பரிசுகளை அளிக்கிறார். ஆனால் சிலசமயம் அவர் விஷ ஜாடியில் இருந்து மட்டும் எடுத்துக் கொடுத்துவிடுகிறார்’ என்று அக்கிலிஸ் சொன்னான்

‘பொறுத்துக் கொள்ளுங்கள். முடிவின்றித் துயரப்படாதீர்கள். உங்கள் மகனுக்காக அழுவதனால் அவனுக்கேதும் நன்மை இல்லை. அவனை இனி உயிருடன் மீட்க முடியாது. அதற்குள் நீங்களும் இறப்பீர்கள்’ எனக் கொன்றவன் செத்தவனின் தந்தைக்கு ஆறுதல் சொன்னான். ப்ரியம்,தன் பரிசுப்பொருட்களை அள்ளி முன்னால் வைத்து ‘என் மகனைக் கொடுத்துவிடு…அவன் சடலம் நாறிக்கிடக்கையில் என்னால் இளைப்பாற முடியாது‘ என்று கேட்டான்.

ப்ரியம் அக்கிலிஸின் கைகளை முத்தமிடுகிறான்

 

அக்கிலிஸ் கோபம் கொண்டான். ’நானே அந்தச் சடலத்தை உங்களுக்குத் திருப்பி அளிப்பதாக இருந்தேன். உங்கள் பரிசுகள் எனக்கு முக்கியமில்லை…நான் அந்த உடலைத் திருப்பி அளிப்பது என் மனச்சாட்சிக்காக’ என்றான் . குடிலைவிட்டுச் சென்று பணிப்பெண்களை அழைத்து ஹெக்டரின் உடலை நறுமணநீரில் கழுவி வெண்பட்டில் பொதியும்படி ஆணையிட்டான். அந்த உடலைப் பளபளக்கும் சவப்பெட்டியில் வைத்தபின் திரும்பிவந்து ப்ரியத்திடம் ‘உங்கள் மகனின் சடலத்தை எடுத்துச்செல்லலாம். அது நல்ல வண்டியில் வைக்கப்பட்டுள்ளது’ என்றான்.

அதன்பின் ப்ரியத்தை அக்கிலிஸ் சாப்பிட அழைத்தான். ப்ரியம் அதை மறுக்கவில்லை. அக்கிலிஸ் ஒரு வெள்ளைச்செம்மறியாட்டை அறுத்தான். அதைத் துண்டுகளாக வெட்டிச் சமைத்து ரொட்டிகளுடனும் மதுவுடனும் கொண்டுவந்து ப்ரியம் முன் வைத்தார்கள். ப்ரியம் அவற்றை உண்டான். பசியாறிய பின் அவன் அக்கிலிஸை முழுமையாகப் பார்த்தான். எவ்வளவு அழகன், எவ்வளவு வலிமையானவன் என நினைத்துக்கொண்டான். அதேபோல ப்ரியத்தின் உயரத்தையும் கம்பீரத்தையும் பார்த்து அக்கிலிஸ் வியந்தான்.

ப்ரியம் கிளம்பினான் ‘என்னை விடைகொடுத்து அனுப்பு. நான் என் மகன் கொல்லப்பட்ட பின் இதுவரை தூங்கவில்லை. எதுவும் உண்ணவில்லை. என் உடலெல்லாம் குதிரைச்சாணத்துடன் பித்தனாகக் கூச்சலிட்டுக்கொண்டிருந்தேன். இனி நான் என் கோட்டைக்குச் செல்லவேண்டும். இந்த நல்ல மதுவின் போதையில் கொஞ்சம் இளைப்பாறவேண்டும்’ ’இல்லை…நீங்கள் இப்போது இப்படியே செல்ல முடியாது. இங்கேயே குடிலுக்கு வெளியே உறங்குங்கள். நாளைக்குச் செல்லலாம்’ என்றான் அக்கிலிஸ். அதை ப்ரியம் ஏற்றான்.

அக்கிலிஸ் ப்ரியத்துக்குக் குளிருக்குப் போர்த்திக் கொள்ளக் கம்பளியும் உயர்தர மெத்தையும் அளித்தான். ‘பெரியவரே ஹெக்டருக்காக எத்தனை நாள் துக்கம் அனுஷ்டிக்கப்போகிறீர்கள்? அந்நாட்களில் நாங்கள் போர் புரியாமலிருப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்’ என்றான்.  ‘பன்னிரண்டு நாட்கள் நாங்கள் துக்கம் அனுஷ்டிப்போம்,அப்போது கோட்டை விட்டு இறங்கி மலைகளுக்குச் செல்வோம். அதற்கு அனுமதி தேவை’ என்றான் ப்ரியம். அக்கிலிஸ் ‘ஆம், அப்படி செய்வோம்’ என உறுதி அளித்தான்.

கொன்றவனும் இழந்தவனும் சேர்ந்து அருந்தும் இந்த விருந்துதான் இலியட்டின் உச்சம். உலகின் மிகச்சிறந்த நாடகத்தருணங்களில் ஒன்று. ஒரு எளிய வீரகதையைப் பெருங்காப்பியமாக்கும் இடம் இதுவே.

 

[நிறைவு]

 

[ஊட்டி காவிய அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை]

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் – சுனில் கிருஷ்ணன் -2
அடுத்த கட்டுரைகணிதம்