தமிழ்ப் பண்பாட்டு அழிப்பு

தமிழ் பற்றி, தமிழ் வரலாறு பற்றி எது சொன்னாலும் உடனே ஒரு கூட்டம் ‘தமிழரை இழிவு செய்கிறார்கள்’ ‘தமிழ் வரலாற்றைக் கொச்சைப்படுத்துகிறார்கள்’  ‘தமிழ்ப்பெருமைக்கு இழுக்கு’ என்று கூச்சலிடுகிறது. தமிழ்ப்பண்பாட்டைப் பற்றி உயர்வாகச் சொன்னாலே அவர்கள் அப்படித்தான் புரிந்துகொள்கிறார்கள்.

தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலை, தமிழ் வரலாறு எதைப்பற்றியும் இவர்களுக்கு ஆர்வமில்லை. அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு புனைவான வரலாறு, அதைச்சார்ந்த மிகையான பெருமிதக்கொந்தளிப்பு மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அதை அப்படியே ஏற்காத எவரும் தமிழ் விரோதிகள். ஆகவே எல்லா தமிழ் ஆய்வாளர்களும், வரலாற்றாய்வாளர்களும் அவர்கள் பார்வையில் தமிழ்த்துரோகிகள்தான்.

அவர்கள் ஓர் எல்லை என்றால் இன்னொரு எல்லை இந்துமதக் காப்பாளர்கள். அவர்கள் இரண்டே வகை. ஒருவகையினர் எல்லாவற்றையுமே இந்துத்துவ அரசியலாக மட்டுமே பார்ப்பவர்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்து அல்லாதவர்கள் இடித்தாலோ அழித்தாலோ மட்டுமே இந்து ஆலயங்கள், சிற்பங்கள் மேல் ஆர்வம். இல்லையென்றால் மண்ணோடு மண்ணாகப்போனாலும் கவலை இல்லை. அவர்களே அதை மண்ணோடு மண்ணாக்கவும் தயக்கமில்லை.

இன்னொருபக்கம் மத அடிப்படைவாதிகள். அவர்களுக்கு தங்கள் உட்பிரிவு, உட்பிரிவுக்குள் உட்பிரிவு (அது எப்போதுமே ஒரு சாதிதான்) மட்டுமே மெய்யானது, உயர்வானது, மற்ற எல்லாமே தவறானது கீழானது. அதற்கு எதிரான ஓயாத சண்டையே அவர்களின் அறிவுச்செயல்பாடு. எது எங்கே அழிந்தாலும் கவலை இல்லை.

இதன்நடுவே தமிழகக் கலைச்செல்வங்கள் அறிவின்மையால் மூர்க்கமாக அழிக்கப்படுவதைப் பற்றி ஓயாமல் இந்தத் தளத்தில் நான் எழுதிவருவதை மிகமிகச்சிலர் தவிர எவருமே கவனிப்பதில்லை. ’அதற்கென்ன’ என்னும் பாவனை ஒருபக்கம். இன்னொருபக்கம் ‘கோயில் இருப்பது பயன்படுத்துவதற்காகத்தான். இடிந்தால் வேறு கட்டிக்கொள்வோம்’ என்று ஒரு நிலைபாடு. முன்பு ஓர் இந்துத்துவ அறிவுஜீவி அதைச் சொல்லி என் தளத்தில் பதிவாகியிருக்கிறது.

தமிழகம் முழுக்க இருக்கும் ஓர் அபத்தம், ஒரு மோசடி ‘இசைக்கல்’ என்னும் கருத்து. இது எப்போது எவரால் உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. தமிழகத்தின் மாபெரும் கலைவெற்றிகள் இருநூறாண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்டு கிடந்த காலத்தில் உருவாகியிருக்கலாம். சிற்பக்கலை, புராணம், தொன்மங்கள், சடங்குகள் பற்றிய முழுமையான அறியாமையில் இருந்து உருவானது இது.

எங்கோ எவரோ சில்லறை தேற்றுவதற்காக இதை உருவாக்கி பரப்பியிருக்கலாம். இன்று தமிழகத்தின் எல்லா கோயில்களிலும் இசைத்தூண்கள், இசைச்சிற்பங்கள் என்று ஒரு வழிகாட்டி முட்டாள் கையில் கல்லுடன் நின்று பக்தப்பயணிகளை அழைக்கிறான். நினைத்தற்கரிய கலைமதிப்பு கொண்ட சிற்பங்களை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் முறை கல்லால் அடிக்கிறான். மிக அரிய பல சிற்பங்கள் இதற்குள் மூளியாகிவிட்டன.

எந்தக் கல்லும் மணி போன்ற ஓசை கொண்டதே. குறிப்பாக கிரானைட் எனப்படும் கருங்கற்களில் தெளிவான மணியோசை கேட்கும். வெவ்வேறு பருமனும் செறிவும் கொண்ட கற்கள் வெவ்வேறு ஓசை எழுப்பும். மிகச்சன்னமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்களும் கற்தூண்களும் நல்ல ஓசையை எழுப்புபவை. அவை இசைத்தூண்களோ, இசைச்சிற்பங்களோ அல்ல.

முன்பு வெவ்வேறு பருமன்களில் படைக்கப்பட்டிருக்கும் தூண்களை சப்தசுவர தூண்கள் என்று சொல்லி தட்டிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். பலசமயம் ஒன்பது தூண் இருக்கும். நவரச தூண் என்று மாற்றிவிடுவார்கள். ஒரே கல்லில் உள்ளுக்குள் பல அடுக்குகளாக தூண்கள் செதுக்கப்பட்டிருப்பதே அவற்றின் முதன்மையான சிற்ப அற்புதம். நீளமான உளியால் அவற்றைச் செதுக்கியிருப்பது கைத்திறன். அவற்றின் அழகியலென்பது மலர்களின் புல்லிவட்டத்தை ஒட்டி அவற்றின் வடிவம்  அமைந்திருப்பது.

நெல்லையில் ஒருவர் தூண்களை தட்டித்தட்டி உடைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் பலமுறை நானே சினம்கொண்டு சொல்லியிருக்கிறேன். அது அவருடைய பிழைப்பு. அதற்காக அவர் சிவன்கோயிலை இடிக்கவும் தயாராவார்.அண்மையில் சிற்பங்களையும் ‘இசைச்சிற்பங்கள்’ என்று சொல்லி தட்டிக்காட்ட ஆரம்பித்துவிட்டனர். சில ஊர்களில் மூலச்சிலைகளையே கல்லால் தட்டிக்காட்டி காசு கேட்கிறார்கள்.

அடிப்படையான ஒரு அறிவாவது கோயிலுக்குச் செல்பவர்களுக்கு இருக்கவேண்டும். அந்த தூண்களும் சிலைகளும் அப்படி ஓசைக்காக படைக்கப்பட்டிருந்தால் எதற்கு சிலையாகவும் தூணாகவும் செதுக்கவேண்டும்? அந்த சிலைகளில் உங்களுக்கு பார்க்கவும் ரசிக்கவும் ஒன்றுமே இல்லையா?

உண்மையில் கலை, பண்பாடு, மதம் பற்றி எதுவுமே தெரியாத மழுமட்டைத்தனமே இப்படி நம்மவரில் வெளிப்படுகிறது. அந்த மழுங்கல் இருப்பது பார்வையாளர்களிடம். அதைத்தான் அயோக்கியர்கள் காசாக்கிக் கொள்கிறார்கள். இப்படி ஒரு தலைமுறைக்காலம் தட்டினால் நம் வருந்தலைமுறையினருக்கு மழுங்கிய கற்களையே சிற்பங்களென காட்டவேண்டியிருக்கும்.

நான் பல ஊர்களில் கண்டிருக்கிறேன். ஓர் உள்ளூர்க்கும்பல் இப்படி சிலைகளை தட்டி உடைப்பதை வேடிக்கைபார்த்து ‘என்னமா சவுண்டு பாரேன்!’ என்பார்கள். வெள்ளையர்கள்தான் பதறிப்போவார்கள். ஒரு வெள்ளையர் கண்ணீர்மல்க என்னிடம் ‘ப்ளீஸ் டூ சம்திங்’ என கோரியிருக்கிறார். நான் வெட்கி அப்பால் நகர்ந்துவிட்டேன்.

இந்தப் பதிவை இணையத்திலேற்றிய குழுவைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுகு கோயில், சிற்பக்கலை பற்றிய ஏதோ ஓர் ஆர்வமிருக்கிறது. ஆனால் எந்த அடிப்படை அறிவும் இல்லை. அவர்கள் எதையும் அறிந்துகொள்ள முயலவுமில்லை. ஏனென்றால் அவர்களின் அறிவு யுடியூப் காணொளிகள் சார்ந்தது. அவற்றைப் பார்ப்பவர்களின் அறிவும் காணொளிஞானம் மட்டுமே. அதாவது சுத்தமான அறிவின்மை.

ஏதேனும் ஒரு வரலாற்று நூலை, ஒரு சிற்ப அறிமுக கையேட்டையாவது படித்தவர்கள் இந்தக் காணொளிகளை எடுத்தவர்களிலோ பார்ப்பவர்களிலோ இருக்க மாட்டார்கள். இந்தக்கூட்டம்தான் கோயிலை, சிற்பங்களை தட்டித்தட்டி இடிப்பதை ரசிக்கிறது. அதை ஆவணப்படுத்தி மேலும் கூட்டம் அங்கே செல்லவைக்கிறது.

ஆனால் பண்பாடு பேசுபவர்கள், மதப்பற்றாளர்கள் எவருக்கும் அக்கறை இல்லை. ஒரு சமூகமே ஒட்டுமொத்தமாகத் திரண்டு தன் பண்பாட்டை மூர்க்கமாக உடைத்து அழிப்பது உலகில் வேறெங்கேனும் உண்டா? நான் சென்ற உலகநாடுகளில் கலைச்செல்வங்களை தொடுவதே தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் இங்கேதான் பண்பாடு என்றாலே முகநூலிலும் யூடியூபிலும் தீப்பிடித்து எரியும் ஆவேசங்களையும் காணக்கிடைக்கின்றது. உண்மையில் நம்முடைய உளச்சிக்கல்தான் என்ன?

ஜெ

பிகு

கீழக்கடம்பூர் உத்தராபதி ஆலயம் இது. இந்த ஆள்மேல் தொல்லியல்துறைக்கும் காவல்துறைக்கும் புகார் கொடுக்க காட்டுமன்னார்குடியில் கலையிலோ, பண்பாட்டிலோ, மதத்திலோ குறைந்தபட்ச ஆர்வம் கொண்டவர்கள் முன்வரவேண்டும். இவர் செய்வது சட்டபூர்வமான குற்றம்.

சிற்ப அழிப்பு முகநூல் குழு

முந்தைய கட்டுரைஎதேஷ்டம் -செல்வேந்திரன்
அடுத்த கட்டுரைஆகஸ்ட் 15, அலைகள் நடுவே- கடிதங்கள்