சுஜாதா அறிமுகம்
ஜெ,
வெ.சா. இப்படி எழுதியதை வாசித்தேன். இது உண்மையா?
தமிழ் இலக்கிய உலகம் இவ்வகையில் அவரை உணர்ந்ததில்லை. இனங்கண்டு கொண்டதில்லை. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் ஒரு காலத்திய (அறுபதுக்கும் முந்திய) ஸ்வாரஸ்யமாக காதல் கதைகள் எழுதும் தொடர்கதை எழுத்தாளர்.
இது உண்மை என்றால் இன்றைக்கு இலக்கியவாதிகளால் மதிக்கப்படாத எழுத்தாளர்களைப் பற்றியும் இதையெல்லாம் ஏன் சொல்லக் கூடாது? இலக்கிய உலகத்திலே இப்படி நிராகரிக்கப்படக் கூடிய படைப்பாளிகளை வாசகர்கள் புரிந்து கொண்டிருக்கலாம் இல்லையா?
ஏனென்றால் சுஜாதாவை நீங்கள் நிராகரிக்கிறீர்கள். நாளைக்கே அவரை ஒரு பெரிய கலைமேதை என்று ஒரு விமர்சகர் சொல்லலாம் இல்லையா?
சிவா அருண்
[வெங்கட் சாமிநாதன்]
அன்புள்ள சிவா
சுஜாதாவைப் பற்றிய பேச்சுக்களில் மட்டும் புதுப்புதுப் பெயர்களாக வருகின்றன. ஆச்சரியம்தான். அவர்கள் நான் எழுதிய எதையுமே படித்திருப்பதாகவும் தெரியவில்லை. நூறு முறை எழுதிய விஷயத்தைப் பற்றி புதிய கேள்வியை மீண்டும் கேட்கிறார்கள்.
முதல் விஷயம், வெ.சா சொல்லும் விஷயத்தை “அப்படியே” எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் எப்போதுமே உணர்ச்சிவசப் பட்ட இலக்கியப் போராளி போன்றவர். ஒரு காலகட்டத்தின் அச்சமற்ற எதிர்ப்புக் குரல் அவர் என்பதே அவரது சாதனை. அவரது கட்டுரைகளை வாசித்தாலே இதைக் காணலாம்.
உலக அளவில் முக்கியமான விமர்சகர்கள் நுண்ணுணர்வால் அடைந்ததை, சிந்தனையின் மொழியில் வெளியிடுபவர்கள். வெ.சா உணர்ச்சியின் மொழியில் வெளியிடுபவர். பெரும்பாலும் மிகையுணர்ச்சி. ஆகவே ஒருவரைத் தாக்கும்போது முடிந்தவரை ஆக்ரோஷமாகத் தாக்குவதும், தூக்கும்போது கண்ணீர் மல்கத் தூக்குவதும் அவரது இயல்பு. இவ்வியல்பால் அவரது கட்டுரைகளில் மொழியும், கூறுமுறையும் ஒழுங்குக்குள் இல்லாமல் கட்டற்ற தனிப் பேச்சாக மாறி அலைபாய்கின்றன. அவ்வப்போது அந்தந்த உணர்ச்சியால் அடித்துச் செல்லப் பட்டு அவர் எதிர் வினையாற்றுகிறார்.
அரை நூற்றாண்டுக்கு முன்னால் பண்பாட்டுப் பொதுப்போக்கால் முற்றாக உதாசீனம் செய்யப் பட்டு எதிர்ப்பு மூலமே தாக்குப் பிடித்த சிற்றிதழ்ச் சூழலில் அந்த கோபத்துக்கும், மிகையுணர்ச்சிக்கும் முக்கியத்துவம் இருந்தது. சாமிநாதனின் பங்களிப்பு என்பது,அவர் தமிழின் பண்பாட்டு -இலக்கியச் சூழலில் கலைக்கும், இலக்கியத்துக்கும், அறவியலுக்குமான சில அடிப்படைவினாக்களை எழுப்பினார், அன்றிருந்த சில ஆதாரமான நம்பிக்கைகளை புரட்டிப்போட்டார் என்பதனாலேயே.
ஜானகிராமனைப் பற்றிய அஞ்சலி கட்டுரையில் வெ.சா சற்று மிகையாகவே சொல்கிறார். தி.ஜானகிராமன் அவரது மோகமுள் சுதேசமித்திரனில் வெளி வந்த நாள் முதலே தமிழின் இலக்கியச் சூழலில் ஓரு நட்சத்திரமாகவே இருந்தார். கடைசிவரை அந்த இடம் அழியவும் இல்லை. எப்போதும் அவரைப் பற்றி விவாதிக்கப் பட்டு, போற்றப் பட்டுக் கட்டுரைகள் வந்தபடியே இருந்தன. ஐயமிருந்தால் அக்கால சிற்றிதழ்களைப் பாருங்கள்.
ஆனால் தமிழின் தீவிர இலக்கியச் சூழலில் அன்றைய வாசகர்கள் இரண்டாயிரம் பேர்தான். அவர்களுக்குத்தான் அவர் ஒரு முதன்மையான படைப்பாளியாக இருந்தார். அவரது தீவிரமான பாதிப்பு வண்ணதாசன், வண்ணநிலவன் என அடுத்த தலைமுறையிலும் தொடர்ந்தது. அவருக்குப்பின் வந்த பலருக்கும் அவரே ஆதர்சம்.
பிற இலக்கியவாதிகளைப் போலன்றி தி.ஜானகிராமனுக்கு வெகுஜன தளத்திலும் வாசகர்கள் இருந்தார்கள்.அவரது முக்கியத்துவத்தைக் கவனித்தே விகடன் போன்ற இதழ்கள் அவரை எழுத அழைத்தன. அவ்விதழ்களில் அவர் ஓரளவு சமரசம் செய்து கொண்டே எழுதினார். செம்பருத்தி, மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே போன்ற நாவல்களை அவ்வாறு எழுதப் பட்டவை என்றுதான் சொல்வேன்.
எனது இன்றைய வாசிப்பில் அவை பெரும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. அவரது மேதமைக்கான தடயங்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை அடிப்படையில் அவரது நிரந்தரமான வாய்ப்பாடை ஆதாரமாகக் கொண்டு அந்தந்த வாரம் மனதுக்குத் தோன்றுவது போல நீட்டி, நீட்டி எழுதப் பட்டவை. நடுத்தர வர்க்க வாசகர்களை அதிகம் சீண்டாமல், ஒழுக்கவியல் சார்ந்த கலவரம் அடையச் செய்து கவனம் பெறுவதற்கான முயற்சிகள் மட்டுமே அவை.
[தி.ஜானகிராமன்]
மகத்தான வங்க, கன்னட, இந்தி, உருது நாவலாசிரியர்களுடன் ஜானகிராமனை ஒப்பிடவே முடியாது. ஒரு நாவல் உருவாக்கியாக வேண்டிய ஆழமான அக நெருக்கடியை உருவாக்காமல் எளிய கிளர்ச்சியையும், சரளமான வாசக ருசியையும் மட்டுமே ஜானகிராமனின் நாவல்கள் அளிக்கின்றன. நாவல் என்ற சவாலை அவர் சந்திக்கவே இல்லை. அதை அவர் அறிந்திருந்தாரா என்பதே தெரியவில்லை. ஜானகிராமனின் சாதனை,அவரது சிறுகதைகளில்தான். பல கதைகள் இந்திய இலக்கியத்திலேயே சிறந்தவை என்று சொல்லத் தக்கவை.
ஒருவர் இறக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அவரை மொத்த தமிழ்ச் சூழலே புறக்கணித்து விட்டது என்று சொல்வது அக்காலத்தில் இருந்த ஒரு சிற்றிதழ் வழக்கம். அது அன்றைய சூழலுக்கு எதிரான ஒரு எதிர்ப்புக் குரல் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஜானகிராமன் அப்படி எப்போதுமே புறக்கணிக்கப் பட்டவரல்ல. அவர்தான் சிற்றிதழ்ச் சூழலை முழுமையாக புறக்கணித்தார். விகடனின் நட்சத்திரமாக ஆக முயன்றார். அவ்வாசகர்கள் சிலர் அவரைக் ’காதல் கதாசிரியர்’ என நினைத்திருந்தால் அவர்கள் அளவில் அது பிழையும் அல்ல.
தமிழில் சிலர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் ப.சிங்காரம். அவரது எழுது முறையில் இருந்த தாவிச் செல்லும் போக்கும், எள்ளலும் அன்றைய வாசிப்புச் சூழலுக்கு உவக்கவில்லை. அது எப்போதுமே நிகழும். ஒரு கலைஞன் காலத்தில் முன்னால் செல்லக் கூடும். ஒரு சூழலில் உடனடி அங்கீகாரம் பெற்றால்தான் அவர் முக்கியமான படைப்பாளி என எந்த விதியும் இல்லை.
[சுஜாதா]
அதை இலக்கியத்தை மதிப்பிடவே கூடாது என்று நிறுவ எடுத்துக் கொண்டு வருகிறீர்கள். ஓட்டல்களை, துணியை, பக்கத்து வீட்டுக்காரனை எல்லாவற்றையும் மதிப்பிடலாம். இலக்கியத்தை மதிப்பிட்டால் ’இலக்கியத்தை மதிப்பிட நாம் யார்?’ ’எல்லாம் காலம் பார்த்துக்கொள்ளும்’ ’எல்லாமே இலக்கியம்தான்’ ‘நாளைக்கு நல்லதா ஆயிட்டா?’ என்றெல்லாம் எத்தனை சொத்தை வாதங்கள்.
ஐயா, இலக்கியவிமர்சனம் என்ற ஓர் அறிவுத்துறை இருநூறு ஆண்டுகளாக இருந்து வருவதை அறிவீர்களா? படைப்புகளை நுணுகி ஆராய்ந்து ஒப்பிட்டு, மதிப்பிட்டு,த் தரம் பிரித்து எழுதப்பட்ட பல லட்சம் பக்கங்களை எங்காவது கண்ணாலாவது பார்த்திருக்கிறீர்களா?
இல்லை, தமிழிலேயே ஈராயிரம் வருடங்களாகப் படைப்புக்களை மதிப்பிட்டுத் தேர்வு செய்து தொகுத்து வைக்கும் மரபிருந்ததும்,அதற்காக சங்கங்களே இருந்ததும் தெரியுமா? அந்த மரபு எத்தனையோ ஆக்கங்களை நிராகரித்தே சிலவற்றைப் பொறுக்கியிருக்கும் என்று ஊகிக்க முடியுமா?
என்ன அபத்தமான கேள்விகள் மீண்டும், மீண்டும்! கடவுளே!
ஜெ
கேளிக்கை எழுத்தாளர் – சீரிய எழுத்தாளர்