பிரமோ உஷார்!
ஜெ
தமிழ் விக்கி பிரமோ பற்றி எழுதியிருந்தீர்கள். உங்களைப் போன்ற ஒருவர் ஏன் அதைச் செய்யவேண்டும் என்று திகைப்பாக இருக்கிறது. புனைவுகள் எழுதவேண்டிய உங்கள் நேரம் இதில் வீணாகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
எஸ்.ராஜ்குமார்
***
அன்புள்ள ராஜ்,
தமிழ் விக்கி நான் எடுத்துக்கொண்ட பணி. அதை வெற்றிகரமாக நிகழ்த்தவேண்டும். எடுத்ததை முடிப்பது என் வழக்கம். பெரியதை எடுத்துக்கொள்வதும்தான்.
தமிழ்விக்கி ஓர் அறிவுச்செயல்பாடு. அத்தகைய செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் ஆதரவு மிகக்குறைவு. அது எனக்கு முன்னரே தெரியுமென்றாலும் அதை அருகிருந்து காண்கையில் இன்னும் அறைகிறது அந்த நடைமுறை உண்மை. விஷ்ணுபுரம் உட்பட என் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களிலேயே மிகமிகச் சிலருக்குத்தான் தமிழ் விக்கியில் ஆர்வமுள்ளது.
உதாரணமாக, தமிழ்விக்கிக்கு ஒரு வாசகர் செய்யக்கூடிய மிகக்குறைந்தபட்ச உதவி என்பது அதைப் பற்றி என் தளத்தில் வரும் கட்டுரைகளுக்குள் சென்று தமிழ் விக்கி இணைப்பை ஒரே ஒருமுறையேனும் சொடுக்குவது. அந்த கிளிக்குகள் தமிழ்விக்கி பதிவை கூகிளில் மேலே கொண்டுவரும். ஆனால் என் தளத்திற்கு வந்து வாசிப்பவர்களில் இருபதில் ஒருவரே அந்த இணைப்பைச் சொடுக்குகிறார்கள். பலரிடம் அதை பற்றி கேட்டிருக்கிறேன். அசட்டுப்புன்னகையுடன் ‘இல்லை, பாக்கிறதில்லை’ என்பார்கள்.
தமிழ்விக்கி இணைப்புகளை கட்டுரைகளில், முகநூலில் பகிர்வது அடுத்தபடியாகச் செய்யப்படலாம். அதை அனேகமாக எவருமே செய்வதில்லை.
ஆனால் இத்தகைய அக்கறையின்மையைக் கண்டு சலிப்போ சோர்வோ அடைவது என் இயல்பல்ல. இந்த அக்கறையின்மை, மேலோட்டமான பார்வையுடன்தான் சென்ற முப்பதாண்டுகளாகப் போராடி வருகிறேன். வெறும் வம்புகளை மட்டுமே கவனிப்பவர்களிடம் அவ்வப்போது சிறு எரிச்சல் உருவாவதுண்டு என்றாலும் எதிர்நிலை பெரும்பாலும் என்னிடமில்லை. நான் செய்யக்கூடுவதை எல்லாம் முழுமூச்சாகச் செய்துகொண்டே இருப்பது மட்டுமே என் இயல்பு. பிறர் செயலில் பின் தங்கும்போது என் செயலில் விசை கூட்டுவதே எப்போதும் நான் செய்வது.
ஜெ