இலியட்டும் நாமும் 2

[தொடர்ச்சி]

 

 

பாரீஸும் ஹெலெனும்

 

இலியட்டின் நாட்டார் அழகியல்

 

 

இலியட் காவியத்தின் நாட்டார் அம்சம் எதில் உள்ளது? செறிவை விட அது சரளத்தையே முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில்தான். அது நாட்டார் அழகியலின் முக்கியமான அம்சம். அதாவது இது கல்வி கற்ற, காவியப்பயிற்சி உடைய வாசகர்களுக்கானது அல்ல. ஒரு போர்க்களத்தில் போர்முடிந்தபின் இரவில் கணப்பருகே கூடும் வீரர்களிடமோ அல்லது நாட்டுப்புற விழாவிலோ அல்லது அறுவடைக்களத்தில் கூடும் விவசாயிகளிடமோ அல்லது பயணிகள் சத்திரத்திலோ பாடப்படும் பாடல் இது. ஆகவே இதன் முதல் இயல்பென்பது அசாதாரணமான எளிமையே.

 

 

காவியகாலகட்டத்தின் ஆரம்பத்தில் காவியகர்த்தன் ஒரு பெரும் தொகுப்பாளனாகவே இருக்கிறான். அசாதாரணமான நினைவாற்றலே அவனுடைய முதன்மைத்தகுதியாக இருக்கிறது. ஹோமர் பார்வையிழந்தவர் என்பதனால் இந்த நினைவாற்றல் அவருக்கிருந்திருக்கலாம். காவியகாலத்தின் இரண்டாம் கட்டத்திலேயே காவியகர்த்தன் பேரறிஞனாக ஆகிறான். அறிஞர்களுக்காக எழுத ஆரம்பிக்கிறான். கம்பராமாயணமும் ரகுவம்சமும் கவிதையை சுவைக்கும் தகுதி கொண்டவர்களுக்கானவை. அவற்றின் அடிப்படை இயல்பென்பது செறிவே.

 

 

தேவதையே பாடு

பீலியூஸின் மகன் அக்கிலிஸின் சினத்தைப்பாடு

கிரேக்கர்களுக்க்கு அளவிலா துயர்களை கொண்டுவந்த

வெறியைப்பற்றிப்பாடு

 

ஹேட்ஸுக்கு வீரர்களின் உயிர்களை அனுப்பிய தீரத்தை பாடு

உடல்களை நாய்நரிகளுக்கு இரையாக்கிய வீரத்தை பாடு

மன்னரான ஆட்ரியஸும் மாவீரன் அக்கிலிஸும்

முரண்பட்டுக்கொண்டபோது

ஜோவ்வின் நோக்கம் நிறைவேறியதென்று பாடு

 

அவர்களை மோதவைத்த தெய்வம் எது?

ஜோவுக்கும் லீட்டோவுக்கும் மைந்தன் அவன்.

அவன் மன்னன் மேல் கோபம்கொண்டிருந்தான்

அதற்காக மக்களை அழிக்க விரும்பினான்

காரணம் தன் பூசகன் க்ரைஸஸை

மன்னன் அவமதித்ததுதான்.

 

இவ்வாறு சரளமாக செல்லும் இந்தக்கதைகூறல்முறை உண்மையில் கவிதை என்பதைவிட ஓசையிசைவுள்ள உரைநடை என்பதே சரியானது. இதை மொழியாக்கம் செய்தவர்களும் பெரும்பாலும் உரைநடையாகவே செய்திருக்கிறார்கள். இணையத்தில் கிடைக்கும் மொழியாக்கங்களில் சாமுவேல் பட்லரின் [Samuel Butler ] மொழியாக்கம் சிறந்தது. தமிழில் நாகூர் ரூமி மொழியாக்கம்செய்திருக்கிறார். சரளத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தமையால் ஒருசில இடங்களில் கவித்துவம் இல்லாமலாகிவிட்டிருந்தாலும் இந்த மொழியாக்கம் தமிழுக்கு ஒரு கொடை என்றே நினைக்கிறேன் [ கிழக்கு பிரசுரம்]

 

நாட்டார்த்தன்மையின் இரண்டாவது சிறப்புக்கூறு என்பது எளிமையான நம்பகமான வர்ணனைகள் மற்றும் உவமைகள். நாட்டார் இலக்கியங்கள் யதார்த்தமாக வாழ்க்கையை நோக்கும் மக்களுக்குரியவை. அவர்கள் கவிதையை ஒரு தனி கலைவடிவமாகக் கண்டு கற்பனையை விரிக்க பயிற்சியற்றவர்கள். ஆகவே கற்பனை யதார்த்த தளத்தை விட்டு மேலெழ முடியாது. கண்ணால் கண்ட, காதால் கேட்ட உண்மையான அனுபவ தளத்தை சார்ந்தே எல்லா வர்ணனைகளும் உவமைகளும் இருக்கமுடியும்.

 

உதாரணமாக தச்சோளி உதயனின் பொன்னிறத்தை வர்ணிக்கும்போது வடக்கன் பாட்டு

 

குன்றின்மேல் கொன்றை மலர்ந்ததுபோல்

வயநாட்டு மஞ்சள் நறுக்கியதுபோல்

 

என்று சொல்கிறது. அதில் எந்த அசாதாரணமான கற்பனைக்கும் இடமில்லை.

 

ஆனால் காளிதாசனின் ரகுவம்சம் இப்படிச் சொல்கிறது

 

 

 

எதிரிகளை எண்ணி வருந்திய

அவள் முகம் சட்டென்று மீண்டு

மூச்சுக்காற்று பட்டு தெளிந்த

கண்ணாடி போலானது

 

 

இங்கே வர்ணனை ஓரளவே யதார்த்தமாக இருக்கிறது. மூச்சுக்காற்றுபட்ட கண்ணாடி மங்கி தெளிவதைப்போல மனம் மயங்கி தெளிந்தாள் என்பது ஒரு நாட்டார் பாடலில் வரமுடியாது. இது அருவமான ஓரு மன உணர்வை வர்ணிக்கும் முயற்சி. அதற்காக இங்கே கற்பனை ஒரு கருவியாக ஆகியிருக்கிறது. செவ்வியலாக்கத்தின் முதல்படி இதுவே. ஒருநாட்டார் பாடகன் ஒருபோதும் அருவமானவற்றை வர்ணிக்க பிரக்ஞையுடன் முயலமாட்டான்.காவியகர்த்தனுக்கு கற்பனை முதன்மையான கருவி.

 

அடுத்தபடி மேலும் ஐந்து நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த கம்பனின் காவியம். கம்ப ராமாயணம் இவ்வாறு வர்ணிக்கிறது

 

 

திடர் உடை குங்குமச் சேறும் சாந்தமும்

இடையிடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன

மிடை முலை குவடு ஒரீ மேகலை தடங்

கடலிடை புகுந்த கண் கழுழி ஆறு அரோ

 

 

 

பெண்களின் கண்கள் நிறைந்து வழிந்த ஆறு அவர்கள் மார்பிலணிந்த குங்குமத்தையும் சந்தனத்தையும் வண்டலாக ஆக்கி அவர்கள் கழுத்திலணிந்த ஆரத்தை சுழற்றியடித்துக்கொண்டு மார்பகங்களாகிய மலைகளைச் சுற்றிக்கொண்டு மேகலையாகிய கடலில் சென்று கலந்தது.

 

இந்த அழகியல் முற்றாக வேறானது. இங்கே கற்பனை கற்பனையின் அழகுக்காகவே ரசிக்கப்படுகிறது. செவ்வியலாக்கத்தின் உச்சம் என இதைச் சொல்வார்கள். உயர்தர செவ்வியல் கலைகளில் அந்தக்கலையின் நுட்பம் மட்டுமே ரசிக்கப்படும். அந்த நுட்பத்தை மேலும் மேலும் நுண்மையாக்கிக்கொண்டே செல்வதே அங்கே கலைத்திறன் என்று கொள்ளப்படும்.

 

இந்த மூன்று படிநிலைகளில் எங்கே நிற்கிறது ஹோமரின் இலியட்? கண்டிப்பாக முதல்நிலையில்தான். அதாவது நாட்டார் அழகியலில். அதுவே அதன் முதல்சிறப்பாகும்.

 

 

நான் என் கையிலிருக்கும் இந்த கோலின்மேல் ஆணையிடுகிறேன்

குன்றுகள்மேல் மரமாக இருந்த இந்தக்கோல்

அடிமரத்தைப்பிரிந்த பின் இனிமேல்

மீண்டும் தளிர் விடாது இலைவிரியாது

வெண்கலக்கோடரி அதன் பட்டையை உரித்துவிட்டது

இலைகளைக் கொய்துவிட்டது

ஜீயஸின் பெயரால் நம் மூதாதையர் நீதி வழங்கும்போது

இந்தக்கோலைத்தான் பிடித்துக்கொள்கிறார்கள்.

 

 

இந்தவரிகளில் உள்ள எளிமை இதை ஒரு நாட்டார் பாடலாகவே நிறுத்துகிறது. ஆனால் ஒரு அம்சம் தாண்டிச்செல்கிறது, இதை ஒரு காவியத்தின் வரியாக ஆக்குகிறது. அது இதில் உள்ள நுட்பமான குறிப்புதான். உயிரற்றதாக ஆக்கப்பட்ட, பட்டை உரிக்கப்பட்டு இலை கொய்யப்பட்ட, ஒன்றாகவே இது மாற்றமற்ற குலநீதியை சொல்கிறது!

 

அந்த டிரோஜன் முதியவர்கள் நல்ல பேச்சாளர்கள்.

காட்டுமரக்கிளைகளில் அமர்ந்து

நடுங்கும் குரலெழுப்பும் சில்வண்டுகள்!

 

அருகே ஹெலென் வருவதைக் கண்டதும் அவர்கள்

சிறகுகள் கொண்ட சொற்களை பரிமாறிக்கொண்டார்கள்.

 

இதுவும் எளிய அழகிய நாட்டாரியல்பையே கொண்டிருக்கிறது. இதிலுள்ள அங்கதம் பேரறிஞனுடையதல்ல,  எளிய மனிதர்களும் பேச்சுக்களில் சாதாரணமாகச் சொல்லத்தக்கதே. ஹோமரின் காவியத்தின் ஆதார இயல்பு இதுவே.

 

இந்திய காவியங்களில் வான்மீகி ராமாயணத்தில்தான் நாம் இத்தகைய எளிமையான நாட்டார்பண்புள்ள பாடல்களைக் காணமுடியும். ஆனால் வான்மீகி ராமாயணம்கூட பல பகுதிகளில் உயர்தரச்செவ்வியல்தன்மையையே வெளிப்படுத்துகிறது.

 

ஹெலென்

 

 

 

இலியட்டின் செவ்வியல்தன்மை

 

 

இலியட்டின் செவ்வியல்தன்மை எங்கே உள்ளது? என் நோக்கில் அதிலுள்ள புராணத்தன்மையே செவ்வியலம்சத்தை உருவாக்குகிறது. அந்தப்புராணத்தன்மை இந்தியப்புராணிகங்களுடன் பலவகைகளில் ஒத்துப்போவதை ஒரு பேராச்சரியமென்றே சொல்லவேண்டும். இலியட்டின் கதையில் சர்வசாதாரணமாக கடவுள்கள் ஊடாடுகிறார்கள். கடவுள்களின் பங்களிபால்தான் இந்த போர்ச்சித்தரிப்புக்கு அன்றாட தளத்தை விட்டு மேலெழும் இயல்பு கைகூடுகிறது.

 

இலியட் முன்வைக்கும் கடவுள்கள் நம்முடைய இன்றைய கணிப்பில் உள்ள கடவுள்தன்மை கொண்டவர்கள் அல்ல. சாகாத தன்மை, அமானுட ஆற்றல் போன்ற இயல்புகளால் அவர்கள் கடவுள்கள். மற்றபடி எல்லாவகையான மனித உணர்வுகளும் உடையவர்கள். போட்டி பொறாமை துரோகம் நட்பு காதல் எல்லாமே கொண்டவர்கள். அதாவது அவர்கள் தேவர்கள் மட்டுமே. இவர்களை கடவுள்கள் என்பதை விட மனித உணர்வுகளின் உச்சநிலையை பிரதிபலிக்கும் உருவகவடிவங்கள் என்றே சொல்லலாம்.

 

இவ்வாறு உச்சநிலை உருவகங்கள் கதைக்குள் ஊடாடும்போது காவியம் எளிய வீரகதைப்பாடல் என்ற நிலையில் இருந்து பறந்து மேலெழுகிறது. அதுவே இதன் செவ்வியல்தன்மையை தீர்மானிப்பதாகிறது. உதாரணமாக இதன் கதைநாயகனாகிய அக்கிலிஸின் பிறப்பு. ஜீயுஸ் என்ற தலைமைத் தெய்வம் [ கிட்டத்தட்ட இந்திரன்] பொஸைடன் என்ற கடல்தெய்வம் [வருணன்] ஆகியோர் தீட்டிஸ் என்ற கடல்தெய்வம் மேல் காதலுறுகிறார்கள். ஆனால் அவளுக்குப்பிறக்கும் குழந்தை தந்தையை விட வல்லமைகொண்டவனாக ஆவான் என புரமைத்யூஸ் என்ற தேவனின் குறிச்சொல் இருக்கிறது

 

ஆகவே தீட்டிஸை பீலியூஸ் என்ற மன்னனுக்கு மணம்செய்விக்கிறார்கள் அந்த தெய்வங்கள். அவளுக்குப்பிறக்கும் மகனே அக்கிலிஸ். அவன் மாவீரன். ஆனால் மனிதனுக்கு பிறந்தவனாதலால் மரணம் உடையவன். இதனால் அவன் அன்னை அவனை ஹயடிஸ் என்ற பாதாளத்துக்கு கொண்டுசென்று அங்கே ஓடு ஸ்டிக்ஸ் என்ற கரிய நதியின் நீரில் முக்கி எடுக்கிறாள். அது சத்தியத்தின் நதி. அந்த நதியில் மூழ்கியவர்கள் இறப்பதில்லை. ஆனால் தீட்டிஸ் அக்கிலிஸின் குதிகாலை பிடித்து நீரில் முக்கினாள். ஆகவே அவன் குதிகால் மட்டும் மரணமுள்ளதாக ஆயிற்று. அதன் வழியாகவே அவன் கொல்லப்பட்டான்

 

இலியட்டின் நாயகனைப்பற்றிய இந்தக்கதை நம்முடைய பல புராணங்களை நினைவூட்டுகிறது. மகாபாரத நாயகனாகிய பீமனை துரியோதனன் கைகால்களைக் கட்டி கங்கையில் போடுகிறான். கங்கையின் ஆழத்தில் இருக்கும் ஒரு பிலம் வழியாக பீமன் பாதாளத்துக்குச் சென்றுவிடுகிறான். அங்கே மாபெரும் வலிமைகொண்ட பெரும் நாகங்கள் வாழ்கின்றன. அவர்களின் தலைவனாகிய வாசுகிக்கு பீமனின் அஞ்சமை பிடித்திருக்கிறது. பீமனுக்கு அவன் ஒரு நாகவிஷக்கலயத்தை அளிக்கிறான். அதை அருந்திய பீமன் ஆயிரம் யானைபலம் பெறுகிறான்.

 

இதற்கு நேர்மாறாக பாதாளச் சக்கரவர்த்தியின் மகனாகிய ராவணன் மேலுலகம் செல்கிறான். கைலாயமலையை அசைத்தான். அந்த வல்லமையைக் கண்டு சிவபெருமான் அவனுக்கு சந்திரஹாசம் என்ற வில்லை வழங்கினார். அக்கிலிஸின் குதிகால் துரியோதனனின் தொடையை நினைவூட்டுகிறது.

 

இந்தபாதாள நதி சட்டென்று சிலப்பதிகாரத்தில் வரும் இட்டசித்தி பவதாரிணி என்ற இரு பொய்கைகளை நினைவூட்டுகிறது. அவையும் பாதாளத்தில் உள்ளன. முற்பிறப்பு நினைவை ஊட்ட வல்லவையும் நினைத்த காரியம் கைகூடச்செய்பவையும் ஆகும் அவை.

 

இந்த புராண அம்சங்கள் இலியட்டுக்கு ஓரு குறியீட்டமைதியை அளிக்கின்றன. இவையே அதை காவியமாக்குகின்றன

 

[மேலும்]

 

முந்தைய கட்டுரைஇயற்கை உணவு, கடிதம்
அடுத்த கட்டுரைபீர்புட்டிகள்-கடிதம்