சேலை, கடிதம்

சேலை சகதேவ முதலியார்

அன்புள்ள ஜெ

சேலை சகதேவ முதலியார் பதிவு பார்த்தேன். சேலை ஒன்றும் திருடு போய்விடவில்லை. பதட்டப்பட வேண்டாம்:) சேலை என்ற ஊர் பெயர் இன்றும் மாறாமல் அவ்வாறே உள்ளது. கணிசமான அளவில் முதலியார்கள் அங்கே உள்ளார்கள். அப்புறம் தமிழ் விக்கி பதிவில் ஈக்காட்டில் இருந்து வரும் பாதிரியார்களுக்கு சகதேவ முதலியார் தமிழ் கற்பித்திருக்கிறார் என உள்ளது. சேலை என்றவுடன் சேலைக்கட்டி கொண்ட ஆள் ஞாபகம் வந்தது போல, பாதிரியார்கள் ஈ காக்கா ஓட்டி கொண்டிருந்ததால் ஈக்காடு என பெயர் வந்ததா? இல்லை ஒரு. ஈ கூட இல்லாத பொட்டல் என்பதால் அப்பெயரா? என்ற மாதிரி விபரீத சிந்தனைகளில் மூழ்கி ரத்த கொதிப்படைய வேண்டாம்:) மாறாக ஒரு எட்டு போய் பார்த்துவிடுங்கள். ஊரு பேரு எல்லாம் பத்திரமாக இருக்கிறது. ஐயம் தேவையில்லை. இந்நேரத்திற்கு என்ன இந்த பயலுக்கு இன்னிக்கு துடி ஜாஸ்தியா இருக்கே… மரை கழண்டு போச்சோ என்றவாறு சிந்தனை தேனீக்கள் மண்டைக்குள் ரீங்காரமிட்டு கொண்டிருக்கலாம். கவலை வேண்டாம், இன்று கொஞ்சம் டோஸ் கூடிவிட்டது அவ்வளவு தான்.

சிரித்தது போதும் கொஞ்சம் சீரியஸ் ஆவோம். மேற்படி சேலை என்ற ஊர் என் அத்தை வீட்டு உறவுக்காரர்கள் நிறைந்த ஒன்று. அதான் எல்லாம் ஒரே முதலியார் ஜாதியே. அவ்வப்போது வீட்டில் ஊர் வம்புகள் ஓடும்போதோ, பெண் பார்க்கும் படலங்களின் கதைகள் கிளுகிளுக்கும் போதோ காதில் அடிபட்டு கொண்டிருக்கும் ஊர் பெயர் சேலை. அதே போல இந்த ஈக்காட்டில் முதலியார்கள் முட்டை போட்டு கோட்டை கட்டியுள்ளனர் என்பது காலையில் வீட்டில் விசாரித்ததில் கிடைத்த துண்டு செய்தி.

ஆனால் கொடுமை என்னவென்றால் வழக்கம் போல இந்த ஊர்களில் இப்படிப்பட்ட ஒரு அறிஞர் வாழ்ந்தார் என்பதற்கு எந்த தடையமும் இருக்காது. ஆர்வமிருந்தால் தேடி சென்று பார்க்கலாம். கிடைத்தவரை லாபம்.

இப்போது நான் வசிக்கும் திருமணம் என்ற இந்த ஊரில் செல்வகேசவராய முதலியார் பிறந்து வளர்ந்திருக்கிறார். அவரது பெயரே திருமணம் செல்வகேசவராய முதலியார் என்று தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவர் குறித்து இங்கு ஒரு அடையாளம் கிடையாது. அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்த விடுதலைக்கு முந்தைய தமிழ் சிறுகதைகள் மூலம் தான் செல்வகேசவர் அறிமுகம். நானறிந்த எங்கள் குலக்கதை மரபில் அவர் இல்லை என்பது உறுதி. இதே ஊரில் எங்கள் வம்சத்திற்கு மாற்றாக இன்னொரு சைவ முதலியார் வம்சத்தாரும் உள்ளனர். அவர்களின் குலவழி கதைகளில் அவர் இடம் பெற்றிருக்க வேண்டும். சொல்லப்போனால் மூன்று தலைமுறைக்கு முன்வரைக்கும் அவர்கள் தான் இந்த ஊர் நாட்டாமைகளாக இருந்திருக்கின்றனர். இவர்கள், அதாவது என் பாட்டானார் வழி வலிமை குன்றிய குடும்பமாக இருந்துள்ளனர். பிற்பாடு நிலம் இல்லாவிட்டாலும் என் பாட்டானார்கள் தோள் பெருத்த தடியன்களாக உருமாறியதால் அந்த கோஷ்டி இந்த கோஷ்டி வேலைக்கு வைத்து கொண்டதுடன் கையும் கோர்த்து கொண்டது.

இப்போது பிரச்சினை என்னவென்றால், செல்வகேசவரை பற்றி அவர்களிடம் விசாரிக்க ஆசை தான். ஆனால் அதற்கு நானே தனியாக செல்ல வேண்டும். அது சாத்தியமில்லை. என்னை போன்ற இன்னொரு ஜீவனை இதுவரை இவ்வூரில் கண்ட பாடில்லை. இருந்திருந்தால் எனக்கு பதில் அவனை அனுப்பியிருக்கலாம்.

கடைசியாக நீங்கள் சரிபார்த்து கொள்வதற்காக இரண்டு ஊர் கூகுள் மேப் படங்களையும் இணைத்துள்ளேன். பார்த்து கொள்ளுங்கள்.

Selai

https://maps.app.goo.gl/stgqRR4HjXJkZrM9A

Ikkadu

https://maps.app.goo.gl/74dS5qfe3f86W1g67

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைசியமந்தகம், கடிதம்
அடுத்த கட்டுரைதி.க.சி- உரையாடலில் வாழ்ந்தவர்