மகா கவி ஹோமரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலியட் காவியத்தை ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படைகளைத் தீர்மானித்த பெருங்காப்பியங்களில் ஒன்றாகச் சொல்லலாம். கலைக்களஞ்சியங்களில் பெரும்பாலும் ஹோமரைப்பற்றி அதிகமாக ஏதுமிருப்பதில்லை. உதாரணமாக மெரியம் வெப்ஸ்டரின் இலக்கியக்கலைக்களஞ்சியம் ஹோமரைப்பறி அனேகமாக ஏதும் தெரியாது , தெரிந்த செய்திகளும் ஊகங்களே என்றுதான் சொல்கிறது. கிரேக்கத்தின் ஹெலெனிய காலகட்டத்தில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட நான்கு குலங்களில் ஒன்றாகிய அயோனிய குலத்தைச் சேர்ந்தவராக அவர் இருக்கலாம். அவரது தாய்மொழி அயோனியம்.
கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடடஸ் தனக்கு நானூறுவருடம் முன்பு வாழ்ந்தவர் என ஹோமரைச் சொல்கிறார். ஆகவே கிமு ஒன்பதாம் நூற்றாண்டில் ஹோமர் வாழ்ந்திருக்கலாமென்பது ஓர் ஊகம். ஹோமரின் பாடுபொருளான டிரோஜன் போர் கிமு பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம். ஹோமர், கண் தெரியாதவர் என்ற வாய்மொழி மரபுக்கூற்று இருக்கிறது. புராதன கிரேக்க சலவைக்கல் சிலைகள் சிலவற்றில் கண் தெரியாதவராக அவரைச்சித்தரித்துள்ள வடிவங்கள் கிடைத்துள்ளன.
ஹோமரின் பிறப்பு, வாழ்க்கை பற்றிப் பல்வேறு தகவல்கள் கிடைத்தாலும்கூட அவர் ஆசியா மைனர் பகுதியில் பிறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்நிலப்பகுதி இன்று துருக்கிய எல்லைக்குள் இருக்கிறது. அவரைப்பற்றிய ஆய்வுகள் ஏராளமாக நடந்தபடியே இருக்கின்றன. ஹோமர் எழுதிய மொழி,கிரேக்கமொழியின் ஒரு துணைமொழியாக இருந்த அயோனிய மொழியில். இலியட் , ஒடிஸி என்ற இரு காவியங்களை அவர் எழுதியதாக மரபு சொல்கிறது. இவற்றில் இலியட் காலத்தால் முந்தையது. அது அவரது ஆக்கம். ஒடிஸி அவரது பாதிப்பால் உருவானதாகக்கூட இருக்கலாம் என வெப்ஸ்டர் கலைக்களஞ்சியம் சொல்கிறது.
அரிஸ்டாடிலால் அவரது காவிய இயல் நூலில் காவிய கட்டுமானத்தை உருவாக்கிய முன்னோடியாகவும் முதன்மைக்கவிஞராகவும் முன்வைக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை ஐரோப்பிய மொழிக்குலத்தின் முதன்மைக் காவியகர்த்தராகவே அவர் கருதப்படுகிறார்.
வீர கதைப்பாடகர்கள்
ஹோமர் ஒரு தொழில்முறை வீர கதைப்பாடகர் [Bard] என்று சொல்லப்படுகிறது. வீரர்களின் கதைகளை ஊர் ஊராகப் பாடிப் பரிசில்பெற்று வாழ்ந்துவந்தவர் அவர். அந்த மரபு வீரயுகம் முடிவுக்கு வந்தபின்னரும் நெடுங்காலம் நீடித்தது. வீரயுகத்தில் இந்தப் பாடகர்கள் சமூகப்படிநிலையில் இரண்டாமிடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சமூக மரியாதையும் இருந்தது. அவர்கள் பொய்யாகப் பாடமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் ஆகவே அவர்களால் பாடப்படுவதே வீரனின் வெற்றி என்ற எண்ணமும் இருந்திருக்கிறது. ஹோமர் அவரது காவியத்தை எழுதிவைக்கவில்லை, அவர் வாய்மொழிப்பாடகர் என்றும் நெடுங்காலம் அவரது காவியம் வாய்மொழிமரபில் குரு- சீட முறைப்படி பாடப்பட்டு பின்னர் எப்போதோ எழுதப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
சமஸ்கிருத காவியமரபில் இதற்கிணையாகச் சொல்லப்படவேண்டியவர்கள் சூதர்கள். இவர்கள் தொழில்முறை வீரகதைப்பாடகர்கள் என்று சொல்லலாம்.மகாபாரதத்தில் இவர்கள் குதிரையைப் பார்த்துக்கொள்பவர்களாகவும், தேரோட்டிகளாகவும் இருந்திருக்கிறார்கள். பிறப்பால் சூத்திர ஜாதியைச்சேர்ந்தவர்கள். வீரர்களின் நினைவைப் பாடி சமூகஞாபகத்தில் நிலைநிறுத்துவது இவர்களின் வழக்கம். மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் ராமன் அர்ஜுனன் போன்ற வீரர்கள் தங்களுக்கு வரும் மிகக்கீழ்நிலையாக ‘என்னைச் சூதர்கள் பாடாமல் ஒழிவார்களாக’ என்று சொல்வதைக் காணலாம். கர்ணன் சூதனாகிய தேரோட்டியின் மகன் என்பதனால் அவனுக்கு ஆயுதமேந்தும் உரிமை இல்லை என்று மறுக்கப்பட்டதைப்பற்றிய குறிப்பு வருகிறது. சூதர்களுக்கு என ஒரு நாடு கிடையாது. எல்லா நாடுகளிலும் இவர்கள் செல்லலாம். அதன்மூலமே செய்தி பரவுகிறது
அதே சமயம் மகாபாரதத்திலேயே சூதர்கள் ரிஷிகளாக இருந்த தகவலும் வருகிறது.நைமிசாரண்யத்தில் வியாசமகரிஷியிடமிருந்து பெற்ற புராணங்களைப் பிற ரிஷிகளுக்குச் சொன்ன சூத ரிஷி ஓர் உதாரணம். இவர் வியாசரின் சீடர் என்றும் லோமஹர்ஷன் என்ற இன்னொரு ரிஷியின் மகன் என்றும் தேவிபாகவதக் குறிப்பு இருக்கிறது. அதாவது ஒரு சூதன் தன் கல்வியின் பெருமையால் அடுத்தகட்டத்தை, ரிஷி என்ற கௌரவத்தை அடைந்திருக்கிறார் என்று சொல்லலாம்.
தமிழில் இதற்கிணையானவர்கள் பாணர்கள். சங்க இலக்கியத்தில் பாணர்கள் பற்றி வரும் குறிப்புகளைக் கொண்டு இவ்வாறு அடையாளப்படுத்தலாம். இவர்கள் ஒரு தனி சாதி. தொழில் ஊர்கள் தோறும் சென்று வீரர்களையும் மன்னர்களையும் புகழ்ந்து பாடுவது. இவர்களின் துணைவி விறலி அல்லது பாடினி. அவள் நடனமும் ஆடக்கூடியவள். நாடு என்ற எல்லைகள் இல்லாத சுதந்திரமான கலைஞர்களாக இவர்கள் இருந்தார்கள். பொதுவான சமூக ஒழுக்கநெறிகளை இவர்கள் பேணவில்லை. பெண்களும் மது அருந்துவது போன்றவற்றை இயல்பாகச் செய்திருக்கிறார்கள். ’என்னைப் பாணர்கள் பாடாதொழிக’ என்ற வரியையே இங்குள்ள வீரர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
இவர்களின் சமூகஇடம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. நற்றிணை போன்ற ஆரம்பகால நூல்களில் இவர்கள் மரியாதையுடன் சொல்லப்படுகிறார்கள். மன்னர்கள் இவர்களை மரியாதையுடன் வரவேற்கிறார்கள். கலித்தொகை காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு காமதூதனாக இவர்கள் இருந்திருக்கிறார்கள். மருதத்திணையில் தலைவி இவர்களை அப்படி வசைபாடுகிறாள். சங்கம் மருவிய காலகட்டத்தில், அனேகமாகக் களப்பிரர் காலகட்டத்தில், இவர்கள் கீழ்நிலைச் சாதிகளாக ஆனார்கள். பக்திகாலகட்டத்தில் இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்ததை நீலகண்ட யாழ்ப்பாணர் கதைமூலம் அறிகிறோம்.
அபிதானசிந்தாமணியில் பாணர்களைப்பற்றிய தகவல் இவ்வாறு உள்ளது. இவர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூன்றுவகை [ அதாவது பாடகர், யாழ் வாசிப்பவர், பறை வாசிப்பவர் என மூன்றும் மூன்று உபசாதிகளாக ஆகிவிட்டிருக்கின்றன!] திருநெல்வேலி முதலிய பகுதிகளில் இவர்கள் தையல் தைத்து வாழ்கிறார்கள். பழங்காலத்தில் இவர்கள் அரசர்களைப் பாடிப் பரிசில்பெற்று வாழ்ந்தார்கள். தற்காலத்திலும்கூட இவர்களில் சிலர் கூத்து ஆடி வாழ்கிறார்கள். இவர்களில் சிறந்த சிவனடியார்களும் இருந்தார்கள். அவர்கள் பாணபத்திரர், நீலகண்டயாழ்ப்பாணர்.
ஹோமரை நமது சூதர்களின், பாணர்களின் மரபில் வைத்துப் பார்க்கலாம். அவர் விழியிழந்தவராக இருந்தமையால் வீரனாகவோ அடிமையாகவோ ஆகாமல் கவிஞராக ஆனார் என்றுகூடக் கொள்ளலாம். வீரயுகத்துக்கு வீரம் என்ற விழுமியத்தை நிலைநாட்டக் கவிஞர்கள் தேவை. ஏனென்றால் வீரத்தின் பரிசு மரணம். மரணத்திற்கும் பிறகு நீடிக்கும் புகழே வீரர்களைக் களத்தை நோக்கிக் கொண்டுசெல்லமுடியும். ஆகவேதான் உலகமெங்கும் வீரயுகம் வீரகதைப்பாடல்களால் ஆனதாக இருக்கிறது.
நாடோடிகளான வீரகதைப்பாடகர்களால் முந்நூறாண்டுகளுக்கும் மேலாகப் பாடப்பட்டு வந்த கதைகளைத் தொகுத்து ஹோமர் தன்னுடைய பெருங்காவியங்களை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ராமாயணம் மகாபாரதம் ஆகியவையும் அவ்வாறு உருவாக்கப்பட்டவை என்ற கருத்தை ஆய்வாளர்கள் சொல்வதுண்டு.
தமிழில் பாணர்கள் இருந்ததையும் அவர்கள் வீரர்களைப்பாடியதையும் மட்டும் ஆதாரமாகக் கொண்டு கைலாசபதி சங்க இலக்கிய காலகட்டத்தை வீரயுகம் என்று வகுக்கிறார். சங்கப்பாடல்கள் காட்டும் அந்தக்காலகட்டத்தை அப்படி வகுப்பது ஓரளவு சரிதான். ஆனால் சங்கப்பாடல்களை வீரகதைப்பாடல்கள் என்று சொல்லமுடியாது. அவற்றில் வீரகதை பெரும்பாலும் இல்லை. நேரடியான வீர வரலாறு குறைவாகவே உள்ளது. வெட்சி , வஞ்சி, உழிஞை, தும்பை ,. வாகை , காஞ்சி போன்ற திணைகள் பொதுவாக உருவகக் கதாபாத்திரங்கள் மூலம் வீரம் என்ற விழுமியத்தைப் பேசுபவையாக உள்ளன. பாடாண் திணை மட்டுமே வீரகதைப்பாடலுக்கு ஒத்துவருகிறது
வீரகதைப்பாடல்களின் யுகம் முடிந்தபின் வந்த அந்தப்பாடல்களின் அடுத்தகட்டப் பரிணாமமே நமது புறப்பாடல்கள் என்று நான் நினைக்கிறேன். நேரடியாக வீரனைப் புகழ்ந்து வரலாற்றில் அவன் கதையை நிலைநாட்டுவதில் இருந்து முன்னகர்ந்து, வீரத்தை ஒரு விழுமியமாக ஆக்கி அந்த விழுமியத்தை ஒட்டிப் பொதுவான உருவகக் கதாபாத்திரங்கள் மூலம் நாடகக் கணங்களை உருவாக்கி அவற்றைப் பாணர்கள் நடித்துக்காட்ட ஆரம்பித்திருக்கலாம். அதற்காக உருவாக்கப்பட்டவை இப்பாடல்கள்.
ஆனால் இந்த வீரகதைப்பாடல்களின் முன் வடிவம் நம்முடைய காப்பியங்களில் இருந்துகொண்டேதான் இருந்திருக்கும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியை ஒருவகையில் ஒரு பெரும் வீரகதைப்பாடல் என்று சொல்லலாம். ஆனால் அதன் நாயகன் வெறும் வீரன் அல்ல. அவன் தத்துவத்தேடலும் கொண்டவனாக, முக்தி நோக்கிச் செல்பவனாக இருக்கிறான்.
குலக்கதையும் வீரகதையும்
தொழில்முறைப்பாடகர்களின் ஆதிவடிவம் குலக்கதைப்பாடகர்களே. அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ் நாவலில் நாம் ஆப்பிரிக்காவில் இருந்த பிரம்மாண்டமான குலக்கதைப்பாடகர்களின் வரிசையைக் காணலாம். அடிமையாகப்பிடிக்கப்பட்டு அமெரிக்கா சென்ற ஒருவனின் நாலாம்தலைமுறை வாரிசு அவர்களின் குலநினைவில் இருந்த சில சொற்கள் வழியாக அந்தப் பூர்வீக நிலத்துக்கு வந்து சேர்ந்தபோது அங்கே குலக்கதைப்பாடகர்களின் பாடலில் கடையாக அந்த மண்ணை விட்டுச்சென்ற அவரது மூதாதையின் பெயர் வரை குலவரிசை தெளிவாகவே அவருக்கு கிடைத்தது.
தொல்சமூகங்களில் இவ்வாறு குலக்கதைப்பாட்டுகள் மூலமே குலமரபு நீண்டகாலமாக நினைவில் நிறுத்தப்பட்டது. அதற்காகவே தொழில்முறைப் பாடகர்கள் உருவானார்கள். அவர்களே பின்னர் வீரகதைப்பாடகர்களாக ஆனார்கள். ஆகவே வீரகதைகள் குலக்கதைகளாகவும் இருந்தன. இந்த அம்சத்தை நாம் மகாபாரதத்தில் காணலாம். ஒவ்வொருவரும் மிக விரிவான பலதலைமுறைக்காலம் நீளும் குலமுறை வரிசையைச்சொல்லியே நமக்குச் சொல்லப்படுகிறார்கள். ஹோமரிலும் இவ்வியல்பு உள்ளது. பெரும்பாலும் வீரர்களின் தலைமுறைச்சங்கிலி கூறப்படுகிறது. இது அவரது மரபு என்ன என்பதை காட்டுகிறது.
மகாபாரதத்தில் இந்தக் குலமுறைச் சங்கிலியில் கடவுள்களும் இணைந்துவிடுகிறார்கள். அர்ஜுனன் இந்திரபுத்திரன். கர்ணன் சூரியபுத்திரன். அதையே நாம் ஹோமரிலும் காண்கிறோம். மாவீரனான அக்கிஸில் பீலியூஸ் என்ற அரசனுக்கும் தீட்டிஸ் என்ற கடல்தேவதைக்கும் பிறந்தவன். அதாவது அவன் அலைகடலின் மைந்தன். வீரனுக்குப்பின்னால் ஒரு அமானுஷ்ய வட்டத்தைச்சேர்ப்பது அக்கால பொதுமரபாக இருந்திருக்கலாம்.
அக்கிலிஸ் காலடியில் ப்ரியம்
வீரகதைப்பாடலின் வடிவம்
பொதுவாக கதைப்பாடல்களைக் [Ballad] காவியங்களின் முன்னோடி வடிவம் என்று சொல்வதுண்டு. கதைப்பாடல்கள் குலக்கதைப்பாடல்களாக முதலில் இருந்து,பின்னர் வீரகதைப்பாடல்களாக உருமாறுகின்றன. அவை காவியத்தன்மை கொள்ளும்போது ஒட்டுமொத்தமான நோக்கு தேவையாகிறது. அந்நிலையில் அடிப்படை மானுடக் கேள்விகள் எழுந்து வருகின்றன. அவற்றை அவை கையாள ஆரம்பிக்கும்போது அவை அறத்தைப் பாடுபொருளாகக் கொள்கின்றன.
அறம்,மையமான பாடுபொருளாக ஆவதே காவியம் என்ற வடிவத்தின் முதிர்ந்த கனிந்த நிலை என்று சொல்லலாம். காவியங்கள் காலத்தால் முன்னால்செல்லும்தோறும் அவை வெறும் வீரகதைப்பாடல்களாக மட்டுமே உள்ளன. காலத்தால் பிந்தப்பிந்த அறத்தைப் பாடுபவையாக ஆகின்றன. இலியட்டும் ஒடிஸியும் வெறும் வீரகதைக் காவியங்கள் மட்டுமே. அவை அறத்தை அதிகமாகப் பேசவில்லை. பிந்தைய காவியங்கள் அற விவாதம் நோக்கிச் செல்கின்றன
ஐரோப்பிய மரபிலேயே அந்தப் பரிணாமப்பாதையை மூன்று பெருங்காவியங்கள் வழியாகத் தெளிவாகப்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஹோமரின் ஒடிஸ்ஸி ஒடிஸஸ் என்ற மாவீரன் ட்ரோஜன் போர் முடிந்ததும் நாடுதிரும்பும் சாகசப்பயணத்தை மட்டுமே விவரிக்கிறது. அதே சாயலில் அமைந்த விர்ஜிலின் இனியட்,தொள்ளாயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்டது. இதில் இனியாஸ் என்ற நாயகன் டிரோஜன் போர் முடிந்து வீடு திரும்பும் சாகஸங்கள் தத்துவார்த்தமான உருவகத்தன்மை அடைந்துள்ளன.
ஆனால் மேலும் ஆயிரத்து இருநூறு வருடங்கள் கழித்து தாந்தே எழுதிய பெருங்காவியமான டிவைன் காமெடி அதே சாகஸப்பயணத்தை முழுக்க முழுக்க ஆன்மீகமான அகவயப்பயணமாக ஆக்கிக் காட்டுகிறது.நரகத்தில் இருந்து துறக்கம் வழியாக சொர்க்கம் செல்லும் பாதையின் சித்தரிப்பு அது. விர்ஜிலே அங்கே வந்து தாந்தேயை அழைத்துச்செல்கிறார்.
இந்தியக் காவியங்களை எடுத்துக்கொண்டால் ஆதிகாவியங்களான மகாபாரதமும் ராமாயணமும் அறம் மையப்பொருளாக ஆன பின்னர் உருவானவை. அவற்றில் வீரகதைப்பாடல்களின் அம்சங்கள் நிறைய இருந்தாலும் எப்போதுமே அவை அறம் சார்ந்த சிக்கல்களையே விரித்துப்பேசுகின்றன. கம்பராமாயணம் அவை உருவாகி ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னர் உருவானது. ஆகவே அது முழுக்கமுழுக்க அறத்தைப்பற்றியே பேசுகிறது. போர்க்களத்தின் பிரம்மாண்டமான சித்தரிப்பாகிய யுத்த காண்டத்தில் கூட வீரத்தை விட அறமே பேசுபொருளாகிறது. வீரநாயகனாகிய ராமனை அறத்தின் மூர்த்தியான் என்று சொல்லும்போது அந்த இணைப்பு மிக வெற்றிகரமாகப் பொருந்திவிடுகிறது.
தமிழில், அல்லது சம்ஸ்கிருத இலக்கியத்தில் வீரகதைப்பாடல்கள் உண்டா? இல்லை என்றே நினைக்கிறேன். காரணம் இவ்விருமொழிகளும் செவ்வியல் மொழியாக ஆகிவிட்டவை. நமக்குக் கிடைப்பவை செவ்வியல் ஆக்கங்கள் மட்டுமே. ஆகவே நாட்டாரிலக்கியம் நோக்கிச் செல்லவேண்டியிருக்கிறது. அதிலும் தமிழில் பெரிய வீரகதைப்பாடல்கள் இல்லை. ஆகவே கேரளம் நோக்கி செல்கிறேன்.
சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் செவ்வியல் காலகட்டம் உருவானதுமே வீரகதைக்காலகட்டம் மறைந்தது. கேரளத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை அந்தக் காலகட்டம் நீண்டது. இரு வகை வீரகதைப்பாட்டுகள் உள்ளன. தெக்கன்பாட்டுக்கள், வடக்கன் பாட்டுகள். தெக்கன்பாட்டுக்கள் எங்கள் ஊரான குமரிமாவட்டத்தை, அதாவது தென்திருவிதாங்கூரைச் சேர்ந்தவை. வடக்கன் பாட்டுகள் வடகேரளத்தில் தலைச்சேரி வடகரைப் பகுதியைச்சேர்ந்தவை.
இந்தப்பாடல்கள் போரில் உயிர்துறந்த மாவீரர்களைப் புகழ்ந்து பாடுபவை. ஒரு வீரனின் குலம், அவனது கல்வி, தனிப்பட்ட குணச்சிறப்புகள் புகழ்ந்துரைக்கப்படுகின்றன. அவனுடைய காதல், சகோதர பாசம், நட்பு போன்றவை உணர்ச்சிகரமான கதையாகச் சொல்லப்படுகின்றன. அவன் வென்ற போர்கள் ஆவேசமாக வர்ணிக்கப்படுகின்றன. அதன்பின்னர் அவனுடைய வீரமரணம் வர்ணிக்கப்படுகிறது. அவன் வீரசொர்க்கம் சென்றது சிலசமயம் சொல்லப்படுகிறது. அவனுடைய மரணத்துக்கு அவனைச்சார்ந்தவர்கள் எடுத்த வஞ்சினமும் பழிக்குப்பழி வாங்கியமையும் கூறப்படுகிறது.
வடக்கன்பாட்டுகளில் மன்னர்களை விட தசோளி ஒதேனக்குறுப்பு, ஆரோமல் சேகவர் , கண்ணப்பனுண்ணி போன்ற தனிவீரர்களே பாடப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் இப்பகுதியில் பெரிய அரசுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கூட அமையவில்லை. நாடுவாழிகள் என்னும் சின்னஞ்சிறு அரசர்களே இருந்தார்கள். அதாவது புறநானூற்றுக்கு முந்தைய காலகட்ட தமிழகம்போன்ற சூழல். புறநானூற்றுக்காலம் என்பது வேளிர்கள் போன்ற சிறுமன்னர்களை மூவேந்தர்கள் வென்று அடக்கிய காலகட்டம். அந்தச் சிறு மன்னர்கள் அழிக்கப்பட்டதும் வீரயுகமும் முடிவுக்கு வந்தது. அக்காலத்தில் அந்தச் சிறுமன்னர்களைப்பற்றி நிறைய வடக்கன் பாட்டுக்கள் போல வீரகதைப்பாடல்கள் இருந்திருக்கலாம்.
வடக்கன்பாட்டுக்கள் புள்ளுவர் பெருவண்ணான், மலையன் என்ற சாதிகளைச் சேர்ந்த குலமுறைப்பாடகர்களால் பாடப்பட்டிருக்கின்றன. மறைந்த வீரர்களுக்காக அமைக்கப்பட்ட சமாதிக்கோயில்களில், அல்லது அவர்களின் நினைவுநாளில், அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் இவை பாடப்பட்டன. குடம்,தும்புரு போன்ற வாத்தியங்களை வாசித்து இவற்றைப் பாடினார்கள். அதற்காகத் தனிப்பரிசுகள் அளிக்கப்பட்டன. அத்துடன் அறுவடையின்போதும் பங்கு அளிக்கப்பட்டது. சாதிப்படிநிலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சற்றே மேலே, அதாவது தீண்டாமை அற்றவர்களாக, இருந்தார்கள்.
தெக்கன்பாட்டுக்களில் தனிவீரர்களை விட அரசர்களே அதிகம் பாடப்பட்டிருக்கிறார்கள் – பப்புத்தம்பி, ராமன் தம்பி போல. அல்லது அரசருக்காக போர் புரிந்தவர்கள் பாடப்பட்டிருக்கிறார்கள். இரவிக்குட்டிப்பிள்ளை போல. தெக்கன்பாட்டுகள் வள்ளுவர், பாணர் போன்ற தொழில்முறைப் பாடகர் சாதிகளால் பாடப்பட்டன. வில்லை அடித்துப்பாடுவதும் மகுடம் என்ற சிறிய இசைக்கருவியைத் தாளமாக அடித்துப்பாடுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. இப்பாடகர்கள் நிலக்கிழார்களாலும் வீரர்குடிகளாலும் பேணப்பட்டார்கள். புலவர், கம்பர் போன்ற அடைமொழிகள் இவர்களுக்கு இருந்தன. சாதியால் கிட்டத்தட்டத் தாழ்த்தப்பட்ட மக்களாக இவர்கள் இருந்தார்கள்.
ஆக, தெளிவாகவே சங்ககால சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. பிற இடங்களில் அந்தக்காலகட்டம் மறைந்தபோது இங்கே அது அப்படியே நீடித்தது என்று கொள்ளலாம். வீரத்தால் மட்டுமே எல்லாம் தீர்மானிக்கப்பட்ட ஒரு காலகட்டம். வீரர்களை நினைவில் நிறுத்தும் வீரகதைப்பாடல்களும் அவற்றைப்பாடும் தொழில்முறைப்பாடகர்களும். இந்த வீரகதைப்பாடல்களை நாம் நாட்டார் இலக்கியம் என்கிறோம். இந்த மரபின் செவ்வியலக்கிய வளார்ச்சியே நம்முடைய காவியங்கள்.
இதேதான் கிரேக்கத்திலும் மூவாயிரம் வருடம் முன்புள்ள சூழ்நிலையாக இருந்திருக்கும். நாட்டார்பாடல்களாக இருந்த வீரயுகப்பாடல்களில் இருந்து செவ்வியலாக்கம் செய்யப்பட்ட ஒரு வடிவமே ஹோமரின் இலியட், ஒடிஸி ஆகிய காவியங்கள். அவை பெரும்பாலும் நாட்டார் மரபின் அழகியலையே கொண்டிருக்கின்றன. செவ்வியலாக்கம் சிறிதளவே நிகழ்ந்துள்ளது. முழுக்க முழுக்க செவ்விலக்கியமான கம்பராமாயணத்துடன் அதை ஒப்பிடும்போது வேறுபாடு திகைப்பூட்டும்படி தெரிகிறது.
ஹோமரின் காவியத்துக்கும் மலையாள வீரகதைப்பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை வியக்கச்செய்வது. வீரனின் குலத்தில் தொடங்கி அவனுடைய ஆளுமையை,போரை, வீழ்ச்சியை வர்ணிக்கும் அமைப்பு மட்டும் அல்ல, அதை நீளமாகப்பாடிச்செல்லும் போக்கு, உணாச்சிகரமான விவரணைகள், தத்துவ கனமில்லாத யதார்த்த உரையாடல்கள், மிகையற்ற யதார்த்தமான உவமைகள் மற்றும் வர்ணனைகள் எல்லாமே அப்படியே உள்ளன. அவற்றைப் பின்னர் காணலாம்.
ஆக, ஹோமரின் இலியட்டை நாம் வான்மீகி ராமாயணத்துக்கும் முற்பட்ட அழகியல் காலகட்டத்தைச் சேர்ந்த நூல் என்று புரிந்துகொள்ளவேண்டும். நாட்டார் மரபில் இருந்து உருவான அழகியல் செவ்வியலைச் சந்திக்கும் ஒரு ஆரம்பப் புள்ளி இந்தக் காவியம். ஓர் ஒப்பீடாகச் சொல்வதாக இருந்தால் விர்ஜிலின் அழகியல்காலகட்டத்தைச் சேர்ந்தவை ராமாயணமும் மகாபாரதமும். கம்பராமாயணம், ரகுவம்சம் ஆகியவை அடுத்த கட்டம், அதாவது தாந்தேயின் காலகட்டம். கிட்டத்தட்டக் கால அளவும் இதற்குச் சமானமாகவே வருமென நினைக்கிறேன்.
இங்கே ஒன்றைச்சுட்ட விரும்புகிறேன், ஹோமரில் இருந்து விர்ஜிலுக்கும் அங்கிருந்து தாந்தேக்கும் வர ஏறத்தாழ ஆயிரம் வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. வான்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பனுக்கும் காளிதாசனுக்கும் வரவும் அதேயளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது. காவியத்தன்மையில் ஒரு தெளிவான மாற்றத்தை அடையாளம் காண ஆயிரம் வருடம் தேவையா என்ன?