மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் ‘கொற்றவை’ நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன்.அருமையாக இருந்தது.சமீபத்திய விகடனில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தங்களின் ஆழ்ந்த தத்துவ ஈடுபாட்டை அவருக்குப் பிடித்த விஷயமாகச் சொல்லியிருந்தார்.அதை நான் அறிந்து கொள்ளும் விதமாகத் தங்களின் ‘கொற்றவை’ நாவல் எனக்கு வாசிக்கக் கிடைத்தது.அதில் ‘பழம்பாடல் சொன்னது’ மற்றும் ‘பாணர் பாடியது’ ஆகிய பகுதிகள் மட்டும் எனக்கு சற்றுப் புரிந்துகொள்ளக் கடினமாக இருந்தது.அந்தப் பகுதிகளைத் திரும்பவும் ஒருமுறை படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.மற்றபடி,நீங்கள் எனக்கு அளித்தது குறைவில்லாத தத்துவ அமுதம்.
நான் பெருங்காப்பியமான ‘சிலப்பதிகாரத்தை’ப் படித்தது கிடையாது.ஆனால்,அதைப் பற்றிப் பாடப்புத்தகங்கள் மூலம் கொஞ்சம் அறிந்து கொண்டதுண்டு.’நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்’ என அதன் சிறப்பைப் பற்றி அறிந்தோர் கூறியதைக் கேட்டிருக்கிறேன்.அதன் முழு அர்த்தமும் ‘கொற்றவை’ நாவல் மூலம் தெரிந்து கொண்டேன்.இந்த நாவலைப் படிக்கும் போது சிற்சில நெருடல்கள் என்னை ஆட்கொண்டன.அவையாவன,
1.இது சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் என்பது தெளிவு.ஆனால்,நீங்கள் ‘காப்பியம் கூறியது’ என்ற பகுதிக்கு முன்பு வரை எடுத்துரைத்தது அனைத்தும் ‘சிலப்பதிகாரத்தில்’ கூறப்பட்டவைதானா……? இந்த விஷயம் எனக்குப் புரியவில்லை.
2.//அன்னையே அழியாப் பெருவல்லமையென அறிக.விண்ணகங்களின் கோள்களைச் சுழலவிடுபவள்.சேற்றுப்புழுவில் நின்று துடிப்பவள்.கனிகளில் சிவந்து இனிப்பவள்.சூரியன்களில் எரிந்து வெடிப்பவள்.அவளே சத்தி.அவள் புகழ் வாழ்க!// – இந்த வரிகள் இசுலாமியத் தத்துவத்தை எனக்கு நினைவுபடுத்துகின்றன.
3.’கபாடபுரம்’ புதுமைப்பித்தன் எழுதியது என்று இறுதிப்பக்கங்களில் வருகிறது.ஆனால்,அது தீபம் ‘நா.பார்த்தசாரதி’ எழுதியது என்பதைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
மற்றபடி,இந்த நாவல் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்பல.தங்களுக்கு நன்றி.தொடரட்டும் உங்கள் பணி.
ஷெய்கு ராஜா
அன்புள்ள ஷெய்குராஜா
கொற்றவை,சிலப்பதிகாரத்தை மூலமாக கொண்டு மிகமிக விரித்து எழுதப்பட்டது. பல பகுதிகள் சுதந்திரமாகக் கற்பனைசெய்து எழுதப்பட்டவை. தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றைப்பற்றிய ஒரு நவீனத்தொன்மத்தை உருவாக்கும் முயற்சி இது . காப்பியம் கூறியது உட்படப் பலபகுதிகளில் உள்ளவை,சிலம்பில் உள்ளவை அல்ல.
அன்னையை ஆதிப்பெரும்சக்தியாக உணர்வதென்பது ரிக் வேதம் முதல் உள்ளது. தேவிபாகவதம் அதன் உச்சநிலை. அந்த அருவமான அன்னையைக் கண்ணுக்குத் தெரியும் ஒரு வடிவமாக வழிபாட்டின் பொருட்டு உருவகம் செய்கிறார்கள்.
ஆனால் அருவமான இறைச்சக்தியை எங்கும் எதிலும் காணும் உச்சநிலை,இஸ்லாம் உட்பட எல்லா மத தரிசனங்களிலும் உள்ளதே
கபாடபுரம் என்ற பேரில் புதுமைப்பித்தன் புகழ்பெற்ற சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். நா.பாவின் நாவல் பிற்பாடு வந்தது
தங்கள் வாசிப்புக்கு நன்றி. மேலும் ஒருமுறை வாசித்தபின் இன்னும் தெளிவு வரக்கூடும்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்.நலமாக இருக்கிறீர்களா?
கொற்றவையை எடுத்திருக்கிறேன்.அந்தப் புத்தகம் என்னுடனேயே எப்போதும் இருக்கிறது.ஆனால் படிக்கவே முடியவில்லை.என் இளைய மகள் அந்த புத்தகத்தை ‘burning book’ என்று சொன்னாள் .அதன் அட்டைப் படத்தைப் பார்த்து அப்படிச் சொன்னாள்.ஆனால் அது உண்மை.எரியும் அதன் எழுத்தின் வீரியம் என்னால் தாங்க இயலுமா என்ற அச்சம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது.உள் இறங்கி வெந்து சாம்பல் ஆவேனோ?இல்லை,புடம் இட்ட பொன்னாய் வெளிவருவேனோ?என் சிற்றறிவுக்குக் ‘கொற்றவை’பெரும் சவாலாக தெரிகிறது.பெரும் ஆர்வத்தையும்,இயலாமையையும்,ஆதங்கத்தையும் அது எனக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.தணலில் விரல் நீட்டி வெளி இழுக்கும் நொடிப்பொழுது வெம்மை அனுபவம் போல்
கைக்கு வந்த ஒரு பக்கத்தைத் திறந்து படித்தேன்.நீலியுடனான கண்ணகியின் உரையாடல்.கண்ணகி சொல்கிறாள்’நோவற்ற,சாவற்ற,முடிவற்ற பயணம் ‘பற்றி அவள் கனவு கண்டதாகவும்,பின் தான் ஒரு பெண் என்று அறிந்ததாக,இற்செறிக்கவும்,இல்சமைக்கவும் அன்னையாக அடங்கி அழியவுமே அவள் ஆக்கப்பட்டதாகவும் சொல்கிறாள்.ஆனால் எனக்குள் நான் அலைகளை எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தேன் என்கிறாள்.பின்பு ‘நான் பெண்,எனக்குக் கரைகளே வழிகாட்ட முடியும்.அவற்றை மீறுகையில் மெல்ல நான் பெண்ணல்லாமலாகிறேன் என்கிறாள்.
இந்த வரிகள் போதாதா ஒரு நாளெல்லாம் என் மனதை உருட்ட? பெண்ணியம் பேசினால் உங்களுக்கு சலிப்பு வரும்.ஆனால் கண்ணகியின் இந்த மன ஓட்டம் அத்துணை பெண்களுக்கும் பொருந்தும்.முழு சுதந்திரம் என்பது என்றுமே எங்களுக்கு சாத்தியப்படாது.கரை உடைத்துப் பாய நினைக்கும் வெள்ளம் அத்தனையும் அழித்துவிட்டு தன்னையும் சேறாக ஆக்கிக்கொள்ளும் என்பது நிதர்சனம்.ஆதலால் நாங்கள் கரைக்குள் ஒடுங்கியே ஓடுகிறோம்.சந்தோசமாக.ஆனால் கனவுகளுக்கு எப்போதும் கரைகள்
இருப்பதில்லை.
கொற்றவை என்னை ஒரு படி முன்னகர்த்தும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.இனி அச்சமில்லை.உங்களுக்குத் தெரியும் நான் என் பாதையில் முதல் படியில் இருக்கிறேன்.அறிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே இருக்கிறது.விமர்சனம் செய்யும் தகுதி எனக்கில்லை.என் மனதிற்குத் தோன்றியதை உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.அதில் எந்தத் தயக்கமும் எனக்கில்லை.என் கருத்துக்களில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.மறுக்காமல் என் தவறுகளைத் தெளிவிக்கவும்.ஒரு ஆசானாக அது உங்கள் கடமை.என் வாசிப்பும்,என் பார்வையும் சரியான பாதையில் இருக்கிறதா?உங்கள் எழுத்துக்களின் மையத்தை நான் சரியாகச் சென்றடைகிறேனா?இந்த சந்தேகம் இப்போதெல்லாம் என் கூடவே வருகிறது.கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள ஆட்கள் அற்ற நிலையில் உங்களையே தொந்தரவு செய்யும்படி ஆகிறது.
உடல்,மன நலனைப் பேணவும்.நன்றி
சுஜாதா செல்வராஜ்
அன்புள்ள சுஜாதா
கொற்றவையை நீங்கள் வாசிக்கலாம். அது ஆண்களைவிடப் பெண்களை எளிதில் உள்ளிழுக்கும் நூல். என் நூல்களிலேயே பெண்களுக்கானது என ஒன்றைச் சொல்லமுடியுமென்றால் அதைத்தான் சொல்வேன். அதில் உள்ளது பெண்ணியமல்ல, அதற்கும் அப்பால் செல்லக்கூடிய ஒரு பிரபஞ்சப் பெண்நோக்கு. அது என்னுடையதல்ல , என் பாட்டிகளின் நீண்ட வரிசையால் உருவாக்கி நிலைநிறுத்தப்பட்டது. இந்த மண்ணைப் பெண் மலையாளமாக ஆக்கி நிலைநாட்டியவர்கள் அவர்கள்.
நீங்கள் வேகமாக வாசித்து முன்னகர்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். இத்தனை சீக்கிரமாக என் ஆக்கங்களுக்குள் அதிகம்பேர் வந்ததில்லை. தாராளமாக எழுதலாம்.
ஜெ
தமிழின் நல்லூழ்:இரா.சோமசுந்தரம்..
கொற்றவை ஒரு பச்சோந்திப் பார்வை-ராமபிரசாத்..
இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா
ஜெயமோகனின் கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து”:அ.ராமசாமி
கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை. ராமபிரசாத்
கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் : அரவிந்தன் நீலகண்டன்
தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்