தமிழ் விக்கி, தூரன் விருது -கடிதம்

அன்புள்ள ஜெ,

ஈரோட்டுக்கு வர வேண்டும் என முடிவு செய்தது முதல் அங்கிருந்து மனமில்லாமல் புறப்பட்டது வரையிலான மூன்று நாட்கள் மிக மகிழ்ச்சியான தருணங்களால் நிரம்பின என்றே சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை சென்னையில் புறப்படும் போது மிகுந்த களைப்போடு கிளம்பினேன். மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்றால் சென்னையே பாதி காலியாகிவிடும் போல. கோயம்பேட்டில் அத்தனை கூட்டம். ஆறு மணிநேரம் ஈரோட்டுக்கு பயணம் என்றால் சென்னையைத் தாண்டுவதற்கே ஆறு மணிநேரம் ஆனது.

சனிக்கிழமை காலையே ஈரோட்டுக்கு வந்து சேர்ந்த போதும் இரவு தான் நிகழ்வு தொடக்கம் என்பதால் ஈரோட்டில் பாயும் பொன்னி நதியையும் புத்தகக் காட்சியையும் பார்த்துவிட்டு இரவு கவுண்டச்சிபாளையம் வந்து சேர்ந்தேன். நான் வரும்போதே சுவாமி பிரமானந்தா நிகழ்வு பாதி கடந்திருந்தது. அதன் பிறகான அறிவிப்பற்ற உங்களின் அமர்வு தமிழ்விக்கியின் ஆழத்தை புரிந்துக்கொள்ள உதவியது. தமிழ்விக்கிக்காக நீங்களும் நண்பர்களும் அயராது உழைத்து வருவதையும் அதன் பலன் கண்கூடாகத் தெரிவதையும் உணர முடிந்தது. தமிழுக்கான கொடை இது. நீங்கள் சொல்வது போல நம்மால் மட்டுமே இதை செய்ய முடியும் என்கிற துணிபு தான் இன்னும் என்னைப் போல ஆயிரம் இளைஞர்களை உங்கள் வழியில் கூட்டி வருவதாக நம்புகிறேன்.

ஆய்வாளர் அ.கா.பெருமாள், பேராசிரியர் லோகமகாதேவி, மகுடீஸ்வரன் அமர்வுகள் ஆழமும் நுட்பமும் வாய்ந்தனவாக அமைந்தன. ஞாயிற்றுக்கிழமையின் பொழுது கண நேரத்தில் முடிந்தது போல இருந்தது. விருது மேடையில் உங்களின் உரை கச்சிதமாக நெய்யப்பட்டிருந்தது. ஏன் இந்த விருது கரசூர் பத்மபாரதிக்கு என அவரது ஆய்வுகளை முன்வைத்து பேசிய அ.கா.பெருமாள் அவர்களின் உரை குறிப்பிடத்தக்க ஒன்று. இன்றைக்கு பல்கலைக்கழகங்களில் அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் ஆய்வுகளின் தரம் நம்மால் யோசித்து பார்க்கக் கூடியது தான். ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்விக்கி, விக்கிப்பீடியாவுக்கு எதிர்ச்செயல் மட்டுமில்லை, நேர் முன்மாதிரியான செயல் என நீங்கள் குறிப்பிட்டது போல இந்த விருதும் ஆய்வுகளுக்கான முன்மாதிரி எனச் சொல்ல முடியும்.

நிகழ்வு முடிந்தபோது மனமும் நிறைந்திருந்தது. அன்றைக்கு எனக்கான தொடர்வண்டி பயணம் உறுதியாகவில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லது என்று நினைக்கிறேன். அடுத்த நாள் மாலை வரை உங்களுடன் இருக்க முடிந்தது. ஏராளமான விஷயங்கள் குறித்து உரையாடினீர்கள். தத்துவத்தைக் கற்று கொள்வது குறித்து நீங்கள் சொன்னது இப்போதும் வார்த்தைகள் மாறாமல் நினைவுக்கு வருகிறது. நன்றி ஜெ. இந்த அமர்வுகளுக்கு. இந்த நிகழ்வுக்கு. இந்தப் பணிக்கு.

குறள் பிரபாகரன்

முந்தைய கட்டுரைஅமலை, கடிதம்
அடுத்த கட்டுரைகே.வி.கிருஷ்ணன் சிவன், காசியின் தமிழ்முகம்