அறம்செய விரும்பு

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்! நலம், நலமறிய அவா.

என் பெயர் நாராயணன். நாம் முன்பு நியூ யார்க் நகரில் சந்தித்துள்ளோம். அந்த சந்திப்பின்போது தமிழில் “சொற்களுக்கு ஒரு களஞ்சியம்” அமைய வேண்டிய விதத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் உரையாடினோம். அந்தக்  கலந்துரையாடலின் பாதிப்பால், அதைப்பற்றித் தொடர்ந்து சிந்திக்கையில், அத்தகைய ஒரு களஞ்சியம் தமிழில் உருவாக்குவதற்கு மிகுதியான முன் அனுபவமும் படிப்பினையும் தேவை என்பதை உணர்ந்தேன். அதைப் பெறுவதற்கான வழிகாட்டியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆத்திச்சூடி. இந்தப் பயணத்திற்குத் துணையாக ஆர்வத்துடன் இணைந்தனர் என் நண்பர்கள் – ராமச்சந்திரன் மற்றும் சிவகுமார். எங்களின் முதல் முயற்சியாக உருவெடுத்ததுதான் இந்த இணைய தளம் – www.aramseyavirumbu.com

இந்த தளத்தை சிவகுமார் அறிமுகப்படுத்தி எழுதியதில் இருந்து …
“இந்தத் தளத்தின் வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மேன்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.
ஆத்திச்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றிப் பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும்.”

ஒரு நல்ல களஞ்சியம் உருவாகுவதற்கு தளப் பொறுப்பாளர்கள் மிகவும் அவசியம். ஆகவே, தமிழ்ப் புலமை மற்றும் இலக்கிய ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் தளப் பொறுப்பாளர்கள் ஆகும் பட்சத்தில் இந்த முயற்சி அதன் நோக்கத்தை எளிதே அடைய வழிவகை செய்யும் என்று நம்புகிறோம். ஆரம்பத்தில் மூன்று தளப் பொறுப்பாளர்களுடன் தொடங்க விரும்பிகிறோம். எங்களின் இந்த முயற்சியைத் தாங்கள் தங்கள் தமிழ் ஆர்வலர்கள் வட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டுகிறோம். ஆர்வலர்கள் இந்த முயற்சியில் பங்குகொள்ள இந்த ([email protected])  முகவரியில் தொடர்புகொள்ளவும்.

தங்களின் இடைவிடாது தொடர்ந்து வரும் கலை இலக்கியப் பணி பளுவிற்கு மத்தியில் தாங்களே ஒரு தளப் பொறுப்பாளர் ஆகும் பட்சத்தில், அது எங்கள் முயற்சிக்குப் பெரும் மதிப்பும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

ஆரோக்கியமான மேம்பாட்டினை எதிர்நோக்கித் திட்டமிட்டு வருகின்றோம். தாங்களும் இந்த முயற்சியின் வாயிலாக இணையப் போகும் தமிழ் ஆர்வலர்களும் தளத்திற்கு வந்து பார்வையிட்டுத் தங்கள் பரிந்துரைகளைத் தர வேண்டுகிறோம்!

நன்றி!

நாராயணன் மெ.

 

அன்புள்ள நாராயணன்

இப்போது என் வேலைப்பளு நடுவில் நான் இதில் பங்கேற்க முடியாது என நினைக்கிறேன். ஆனால் மிக முக்கியமான பணி. இது வெற்றிபெற வாழ்த்துகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஎன் கவிதைகள்
அடுத்த கட்டுரைஆசிரியர், கடிதம்