தூரன் விருது, நினைவுகள்

அன்பு ஆசிரியருக்கு,

தமிழ்விக்கி தூரன் விருது முழு நாளும் இனிய நினைவாக மனதில் பதித்து வைத்துக் கொள்ளக்கூடிய அறிதலான நாளாக அமைந்தது. அ.கா. பெருமாள், கரசூர் பத்மபாரதி, லோகமாதேவி, கு. மகுடீஸ்வரன் ஆகியோரின் அமர்வுகள் காலை பத்து மணி தொடங்கி ஐந்து மணி வரை நிகழ்ந்தது. நிகழ்வுக்கு வரும் முன்னரே அவர்களைப் பற்றிய தமிழ்விக்கி பக்கத்தின் வழி முழுமையாக அறிந்து கொண்டு அதிலிருந்து உருவான கேள்விகளுக்கான தயாரிப்போடு தான் வந்தேன்.

முதலில் நாட்டாரியல் ஆய்வாளரான அ.கா. பெருமாள் ஐயாவின் அமர்வு. அவருடைய தமிழறிஞர்கள் புத்தகம் வழியாக நீங்கள் தான் அவரை அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். தூரனும், ஆண்டியும் பிற அறிஞர்களும் அதன் வழி தான் எனக்கு அறிமுகமானார்கள். என் வாழ்நாள் முழுக்க உத்வேகம் தரக்கூடிய பதிவுகளாக தழிழறிஞர்கள் பற்றிய தமிழ் விக்கி பதிவுகள் இன்று அமைந்துள்ளன. அவற்றின் அடித்தளம் அ.கா. பெருமாளின் தமிழறிஞர்கள் புத்தகம் தான்.

பின்னும் ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் பதிவுகள் வழியாக அவரின் நாட்டார் கலைகள், கூத்துக்கள் பற்றிய ஆய்வுகள் அறிமுகமாயின. வட்டார நுண்வரலாற்றாய்வு பற்றி அ.கா.பெருமாள் ஐயா கூறும்போது ’வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்படும் பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும்’ என்கிறார். இந்த சிந்தனை எனக்கு முக்கியமானதாகப்பட்டது.

உலகம் முழுவதும் “Localisation is new Globalaisation”, “More ethnicity means More International.” என்ற கருத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாட்டாரியலை வரலாற்று மீட்டுறுவாக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று சொன்ன அந்த கருத்து மிக முக்கியமானது. அ.கா. பெருமாள் ஐயாவின் அமர்வை எவ்வளவு நீட்டியிருந்தாலும் தகும் எனுமளவு நிறைய தகவல்களை அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். முகமூடி ஆட்டங்கள், தோல்பாவைக்கூத்து, பொன்னர் சங்கர் கூத்து, தளவாய்மாடன் கூத்து, பிற நிகழ்த்துக்கலைகள் பற்றியும் கூத்துகளில் நிகழ்த்தப்படும் சடங்குகள் பற்றியும் பகிர்ந்தார்.

கவிமணியை பற்றிச் சொல்லும் போது “அவர் முதன்மையாக கல்வெட்டாய்வாளர். கவிதையும் எழுதினார்” என்று அவரை நிறுத்தியது புதிய கோணமாக இருந்தது. நாட்டுப்புற இலக்கியம், கலைகள் சார்ந்து ஒன்பது நாட்டுப்புற  மண்டலங்களாக பிரித்திருப்பதாகச் சொன்னார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருவாரியான நாட்டாரியல் ஆய்வுகளை ஐயா செய்துவிட்டார். பிற மண்டலங்களுக்கு இவை ஒரு வழிகாட்டியாக அமையும். எந்தெந்த கூறுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற உங்களின் கேள்வி வழி அவர் சொன்ன பதில்கள் அறிதலாக இருந்தது. அந்தக் கேள்வியை நான் வேறுவிதமாக எழுதி வைத்திருந்தேன்.

”வட்டார நுண்வரலாற்றின் வழி நாட்டாரியலை அடிப்படையாகக் கொண்டு மீட்டுறுவாக்கம் செய்யப்படும் வரலாற்றில் முதன்மையாக கொள்ள வேண்டிய கூறுகளை பட்டியலாகத் தர இயலுமா? மேலும் இவை பண்பாட்டின் மீது ஓரளவேனும் ஆர்வமிருக்கும் நபர்களால் மட்டுமே செய்யப்படுகிறது எனில் அவர்களுக்கான வழிகாட்டுதலாக இந்த நாட்டாரியல் கூறுகள் பட்டியல் துணை புரியும்” என்ற கேள்வியாக எழுதியிருந்தேன். அதற்கான பதிலாக “ஊரிலுள்ள சிறு தெய்வங்கள், விளையாட்டுகள், ஆட்டங்கள், கூத்துக்கள், பெருந்தெய்வங்கள், குல தெய்வக் கோயில்கள், ஊர் திருவிழா சடங்குகள், அந்தந்த தெய்வங்களுக்கான கதைகள், சுற்றியுள்ள கல்வெட்டுக்கள், நடுகற்கல்” என பட்டியல்களை விரித்துக் கொடுத்தார். உண்மையில் பண்பாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் வாழ் நாளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வை / ஆவணப்படுத்தலைச் செய்யலாம்.

கு. மகுடீஸ்வரன் அவர்கள் இலக்கியம் வழியாக வட்டார ஆய்வியலைச் செய்திருந்தார். கொங்குச் செல்வங்கள், கொங்கு மலர்கள், கொங்கு மணிகள் என கொங்கு வட்டாரத்தைச் சார்ந்து இலக்கியத்தின் வழி ஆய்ந்திருந்தார். இவையாவும் இணையும் புள்ளி என் கண் முன்னே விரிந்து கொண்டு சென்றது. அது “வரலாறு” எனும் மையம்.

எந்த ஒரு உரையிலும், தகவல் சார்ந்து பேசும்போதும் நீங்கள் வரலாற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். நாட்டாரியல், இலக்கியம், மானுடவியல் என பலவும் இணைந்து உருவாக்கவிருக்கும் வரலாற்று மீட்டுறுவாக்கத்தை கற்பனை செய்து கொண்டிருந்தேன். அது சார்ந்து என் கேள்விகளை விசாலப்படுத்திக் கொண்டேன்.

நான் மாநிலப்பாடத்திட்டத்தில் பள்ளியில் படிக்கும் போது வரலாறு என்பது ஒற்றைப்படை தான். கல்வியலாளர்கள் தொகுத்து அளித்த நிறை. அதில் உணர்ச்சி பொங்கல்கள் அடைந்திருக்கிறோம். சிலர் மேல் இனம்புரியா வெறுப்புகள். ஆனால் போட்டித்தேர்வு காலகட்டத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் வாசிக்கும் போது தான் வரலாற்றின் பல பரிமாணங்கள் புரிந்தது. ஒன்று பிரிடிஷார் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் வழியான சித்திரம், இரண்டு நம்மவர்கள் எழுதிய வரலாறு, மூன்று மக்கள் வழி அறியும் வரலாறு. இதில் மூன்றாவாது வரலாற்றின் போதாமையைச் சொல்லியிருப்பார்கள். ஏனெனில் அது வாய்மொழியானது. அ.கா. பெருமாள் அவர்கள் சொல்லும் நாட்டாரியல் ஆய்வுகள் இங்கு தான் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் படுகிறது.

நாட்டாரியல்சார் வரலாற்றை ஆராய்வதற்கு ஒதுக்கப்படும் நிதியைப் பற்றிய கேள்விக்கு அ.கா. பெருமாள் ஐயா ”ஃபோர்ட் நிதி” பற்றி சொன்னார். ஒன்று மொழியியல் சார்ந்தும், இரண்டு நாட்டாரியல் சார்ந்தும் நிதி ஒதுக்கப்பட்டது என்றும் பெரும்பாலும் மொழியியல் சார் ஆய்வுகளுக்கே இங்கு அதிக நிதி செலவிடும் போக்கைப் பற்றியும் சொன்னார். நாட்டாரியல் சார்ந்த நிதி தென் மாவட்டங்களுக்கு அதிகம் கிடைத்தது / அங்கு ஆய்வு சார்ந்து ஆர்வமிக்கவர்கள் இருந்தார்கள் எனவே தென் மாவட்டங்களில் அதிக நாட்டாரியல் ஆய்வுகள் நடந்ததாகச் சொன்னார்.

காளிபிரசாத், நாட்டாரியல் சார்ந்த புத்தகங்கள் குமரி மாவட்டத்திற்கு இருப்பது போல பிற மாவட்டங்களுக்கு இருக்கிறதா என்றும் அப்படியான ஆய்வாளர்கள் யாரும் இருந்தால், புத்தகங்கள் இருந்தால் அறிமுகப்படுத்துமாறு கேட்டார். ஒரு எழுத்தாளரின் மனக்குமுறலாக நண்பர்கள் அதை பகடி செய்து கொண்டிருந்தார்கள். குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாடன் ஐயா தொடங்கி சுஷில், வைரவன் வரை எழுத்தாளர் நிரை ஒன்று உள்ளது. அவர்களுக்கெல்லாம் அ.கா. பெருமாளின் நாட்டாரியல் ஆய்வுகள் பொக்கிஷமானவை. அது போல தஞ்சாவூர், வேலூருக்கு இருந்தால் அங்கிருக்கும் எழுத்தாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே என்ற தொனி என அவரை பகடி செய்தோம்.

உண்மையில் இது போன்ற பண்பாட்டு ஆய்வுகள் நிதி உதவியாலோ, யாருடைய முன்னெடுப்பினாலும் அல்ல, அந்தந்தப் பகுதியில் பண்பாட்டின் மீது சிறிதளாவேனும் அக்கறை இருப்பதனால் தான் நிகழ்கிறது என்றார். பிற இடங்களில் எழுத்தாளர்களின் புனைவுகள் வழி இந்த தகவல்களை எடுக்குமளவு பதிவுகளும் உள்ளன என்றார். கு. மகுடீஸ்வரன் அவர்களும் இலக்கியம் சார்ந்த நுண் ஆய்வுகளைச் செய்வதற்கும் இத்தகைய ஆர்வமுள்ளவர்களே தேவை என்றார். ”தெய்வசிகாமணிக் கவுண்டரின்” புத்தகங்களை அவர்கள் குடும்பத்தார் விலைக்குப் போடுவதாகச் சொன்னபோது ஒரு டெம்போ வைத்து உரிய தொகை கொடுத்து அதை மீட்டெடுத்து வந்தோம். அதிலிருந்து சிலவற்றை மட்டுமே எங்களால் தொகுத்து பதிப்பிக்க முடிந்தது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கி அதை பதிப்பிக்கத்தயாராக இருந்தால் தருவதாகச் சொன்னார். எனக்கு செல்வகேசவராய முதலியாரின் வரிகள் நினைவுக்கு வந்தது.

“பண்டைத் தமிழ்ப் பனுவல்களைப் பதிப்பிப்பதென்றால் கையிலுள்ள பொருளைக் கொண்டுபோய் நட்டாற்றில் வலிய எறிந்துவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு வீடுபோய் சேர்வதே முடிவான பொருள் என்பதுணர்ந்து எச்சரிக்கையாய் இருப்பார்க்கு இன்னலொன்றும் இல்லை…”  என்ற வரிகள். இதை தமிழறிஞர்கள் புத்தகத்தில் படித்த அன்று அழிசி ஸ்ரீநி யிடம் பகிர்ந்து கொண்டேன். தான் சோர்ந்து போகும்போது எப்போதும் எடுத்துப் பார்த்துக் கொள்ளும் வரிகள் அவை என்று சொன்னார். இத்தகைய ஆர்வலாளர்களால் மட்டுமே இந்தப்பணிகள் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை கண்ணோக்கும் வாய்ப்பாக தமிழ்விக்கி பணியைப் பார்க்கிறேன்.

அறிவியல், மொழியியல் என அனைத்து துறை சார்ந்தும் ”ஆர்வமுள்ளவர்கள்” மட்டுமே இக்காலத்தில் தேவையாக இருக்கிறார்கள். இந்த ஆய்வுப் பணிகளோ, தொகுத்தல் பணிகளோ புகழையும், பெயரையும் வாங்கிக் கொடுக்காத துறை. இன்று வாழும் “z” தலைமுறை அவற்றின் மீதே பிரதான மோகம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். குறைந்த உழைப்பு, அதிக பணம், அதிக புகழ், பெரும்பான்மை கேளிக்கை வாழ்க்கை என ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. அவர்களுக்கான தூண்டுதலை அளிக்க இதுபோன்ற பணிகளைச் செய்த, செய்து கொண்டிருப்பவர்களின் அறிமுகம் அவசியம். அப்படி ஒன்றாக தமிழ்விக்கி தூரன் விருது விழா அமையும்.

மெளனகுரு ஐயா எழுதிய “பழையதும் புதியதும்” என்ற புத்தகத்தை தமிழ் விக்கி பதிவுக்காக எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தீர்கள்.  கூத்து, நாடக்கலை பற்றிய விரிவான அறிமுகத்தோடு எட்டு முக்கியமான அண்ணாவியார்களைப் பற்றியும் தொகுத்திருந்தார். வெறுமே தகவல்கள் மட்டுமில்லாமல் அவரின் அனுபவத்தை, கலைஞர்களின் வாழ்க்கையை, அர்ப்பணிப்பை, அவர்களின் துயரத்தை, அவர்களின் திறமையை அதில் பதிவு செய்திருந்தார். ஒவ்வொரு பதிவுக்கும் அவரின் பயணம் அர்ப்பணிப்பு உணர்வுடையது. ஒவ்வொரு அண்ணாவியாரின் கதையிலும் உளம் பொங்கியிருந்தேன். அண்ணாவியார்களின் அர்ப்பணிப்புக்கு நிகராகவே மெளனகுருவின் பயணத்தை இலங்கையில் கற்பனையில் தொடர்ந்திருந்தேன். அந்தப் பதிவுகளுக்கான தேடலில் செல்லையா மெட்ராஸ்மெயில் அவர்கள் தொகுத்த நாடகக் கலைஞர்கள் புத்தகம் கிடைத்தது. மிக அருமையான தொகுப்பு. ஏறக்குறைய அறுபது அண்ணாவியார்களை தொகுத்திருப்போம். இலங்கையில் தமிழகத்தை விடவும் மிகச் சிறப்பாக புத்தகங்களை, அறிஞர்களை, படைப்புகளை ஒரு தளத்தில் தொகுத்து வைத்திருக்கிறார்கள். நூலகம், ஆரையம்பதி போன்றவை முக்கியமான தளங்கள். இருப்பினும் பல புத்தகங்களிலிருந்தும், இணையத்திலுள்ள பிற தகவல்களையும் இணைத்து ஒரு தமிழ் விக்கி பக்கம் உருவாகும் போது தான் அது நிறைவாகிறது.

இலங்கை அண்ணாவியார்கள் பதிவுகளின் வழி தமிழகத்திலிருந்து கூத்து நடிக்கவந்தவர்கள், புகழ்பெற்றவர்கள் பற்றி அறிய முடிந்தது. ஏறக்குறைய அறுபது அண்ணாவியார்களில் ஒரு பெண் நாடகக் கலைஞரை மட்டும் தான் இலங்கையில் கண்டடைந்தேன். அவரும் கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இங்கு கூத்து நடிக்க வந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர்களின் வழி தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் இருந்த கூத்துக் கலைஞர்களுக்கான தேடல் எனக்கிருந்தது. நம்முடைய நாடகக் கலை இங்கு சங்கரதாஸ் ஸ்வாமிகள், டி.கே.எஸ். சகோதாரர்கள், பம்மல் சம்பந்தனாரிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது.

டி.கே.எஸ் சகோதரர்களின் பதிவை முடித்த அன்று நம் நாடக வரலாற்றுக் கலையை நினைத்து பெருமிதமாக இருந்தது. அவரின் புத்தகள் tamilvu பக்கத்தில் கோர்வையாக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து தான் பல தகவல்கள் புகைப்படங்கள் எடுத்தேன். அது போல அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் அவரின் நண்பர்கள் தொகுக்கும் தென்றல் வலைதளம் முக்கியமானது. ஆனால் மெளனகுரு ஐயாவின் பணி, சு.வித்தியானந்தனின் நாடகக் கலை மீட்டுறுவாக்கம் ஆகியவற்றிற்கும், நம்  நாடக முன்னோடிகளான நால்வரின் நாடக மறுமலர்ச்சிக்குமான வித்தியாசத்தை உணர்ந்தேன். இலங்கையில் வித்தியானந்தனும், மெளனகுருவும் நாடகக் கலையை அண்ணாவியார்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் நிகழ்த்துக் கலைகளில் மாற்றத்தை உட்புகுத்தி படித்தவர்கள் மத்தியில் மேலும் பிரபலமடையச் செய்தனர். அண்ணாவியார்கள் யாழ் போன்ற பலகலைக்கழகங்களில் அரங்காற்றுகை செய்து பரிசு வென்றனர். மாணவர்களுக்கு கூத்து பழக்கினர். படித்தவர்கள் மத்தியில் கூத்து பிரபலமானது. ஆனால் கூத்துக் கலையோடு சேர்த்து அவர்கள் கூத்துக் கலைஞர்களையும் மீட்டுறுவாக்கம் செய்தனர். அவர்களுக்கான உதவித்தொகைகளை, அங்கீகாரத்தை முடிந்த அளவு சொந்த முயற்சியில் மெளனகுரு ஐயா பெற்றுத்தந்துள்ளார். தமிழகத்தில் அப்படியொரு மெளனகுருவும், சு.வித்தியானந்தனும் இல்லை என்ற கவலை தொற்றிக் கொண்டது.

தமிழகத்தில் நாடகம், பேசும் படம் நோக்கியும் சினிமாவை நோக்கியும் நகர்ந்தபின் அந்தக் கலைஞர்கள் என்ன ஆனார்கள் என்பதைதே அறியமுடியவில்லை. இன்றும் கூத்தும், நாட்டார்கலைகளும், நாடகமும் கிராமங்களில் ஆங்காங்கே நடக்கிறது. திரிந்த நிலையில், சினிமாத்தனமையோடு. எங்காவது கலையாக நிகழ்ந்து கொண்டிருக்கலாம். நாடக முன்னோடிகள் தொடங்கி வைத்த நாடகங்கள் சென்னையில் குளிரூட்டப்பட்ட இடங்களில், படித்தவர்கள், உயர் குடிகள் கலைஞர்களாக இருந்து படித்தவர்களை பார்வையாளர்களாகக் கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கோரும் ஒன்றாக அல்லது அங்கிருந்து விலகியவர்கள் தங்கும் கூடாக, மிகச் சில பட்டறைகளில் கலையாக என அது ஒரு தனிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கூத்துக் கலைஞர்கள் பற்றிய ஆவணப்படுத்தலைப் பற்றி அ.கா. பெருமாள் ஐயாவிடம் கேள்வி எழுப்பியபோது அப்படி ஆவணப்படுத்தப்படவில்லை என்றார். உதவித்தொகைகளுக்கே முயற்சி நடந்து அங்கொன்றும் இங்கொன்றும் நடந்ததாகச் சொன்னார். இலங்கையைப் போல தமிழகத்திலும் இத்தகைய ஆவணப்படுத்தல் நிகழ இப்போது இருக்கும் கூத்துக் கலைஞர்கள் வழி அந்த பணியைத் தொடங்கலாம் என்றார். நம் அண்ணாவியார்கள்/கட்டியங்காரன்/ ஆசான்கள் யார் என்பதை அறியவும் கூட அதே அர்வமிக்க தொகுத்தல் பணி செய்யக்கூடியவர்கள் தான் தேவைப்படுகிறார்கள். அ.கா. பெருமாள் ஐயாவின் அமர்வின் முடிவில் ஏதோ எச்சமாகவே தோன்றியது. அவரின் அனைத்து பரிமாணங்களிலும் இன்னும் கேள்விகள் அமைந்திருக்கலாம் என்று தோன்றியது. கூத்துக்கலை பற்றி மட்டுமே நீண்ட நேரம் உரையாடல் சென்றுவிட்டது.

லோகமாதேவி அவர்களின் அமர்வு மிகவும் சுவாரசியமானது.  அறிவியல் துறையைப் பொருத்தவரை ஆய்வுகள் வெளி நாட்டு ஆய்வாளர்கள் செய்வதை போலிமை செய்வதை நோக்கியே செல்லும். ஆனால் லோகமாதேவி அவர்களின் கீழ் செயல்படும் முனைவர்பட்ட மாணவர்களுக்கு அவர் எடுத்து தரும் தலைப்பு அந்தந்த பிராந்தியம் சார்ந்ததவை. வெள்ளிமலையிலுள்ள தாவரங்களை ஆவணப்படுத்தும் முயற்சி, தாவரக் கலைக்களஞ்சியம் கொண்டுவரும் முயற்சி என தன் துறைசார் செயல்பாடுகளில் தீவிரமாக இருப்பவர். இலக்கியமும்-தாவரவியலும் இணையும் ஒரு புள்ளியில் அவர் எழுதும் கட்டுரைகள் முக்கியமானவை. டீச்சர் சமீபமாக மிகவும் சிலாகிப்பது “அதழ்” பற்றி. ஆங்கிலத்திலுள்ள tepal (petal+sepal) அதாவது இதழ் எனப்படும் petal, புல்லிவட்டம் எனப்படும் sepal ஒன்றாக இணைந்து ஒரு பகுதி இருக்கும். அல்லி, தாமரை போன்றவைகளில் உள்ளதை நாம் இதழ் என்று சொல்லமாட்டோம் அது டெபல் என்றே சொல்லுவோம். அந்த டெபல் என்பதற்கான தமிழ்ச்சொல்லை அவர் சங்க இலக்கியத்திலிருந்து கண்டடையும்போது கிடைத்த வியப்பை அரங்கத்தில் பகிர்ந்தபோது,

சென்றவாரம் ஒரு வித்தியாசமான முயற்சியாக மது, சந்தோஷ் தமிழ்விக்கி பதிவுகளுக்கான வரைபடத்தை உருவாக்கி பார்த்ததாகச் சொல்லி ஒரு படத்தை அனுப்பியிருந்தார்கள். அதை பார்த்த போது வலைபின்னல் என்று சொன்ன வார்த்தையின் உண்மைத்தனமையைப் பார்த்த பிரமிப்பு ஏற்பட்டது. டீச்சர் அதழ் பற்றி சொல்லும் போது மிகப்பிரம்மாண்ட வலைபின்னலின் முன் அவர்கள் ஒரு கண்ணியைக் கண்டடையும்போது கிடைக்கும் ஆனந்தமாக கற்பனை செய்து பார்த்தேன்.

மேலும் அவர் சங்க கால சோமபானம் என்பது எந்த தாவரம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் Hallucinating plants பற்றியும், பழங்குடியினரின் சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் தாவரங்கள் பற்றியும் ஆவணப்படுத்தும் முயற்சியில் இருப்பதாகவும் சொன்னார். தன் நாவல்களில் சூழலியல் சார்ந்து, தாவரம் சார்ந்து ஆவணப்படுத்தும் சோ. தர்மன் ஐயா பல சந்தேகங்களை கேள்விகளாக டீச்சரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒரு நாவல் மரம் பூ பூப்பதோடு நின்று விடுகிறது அதை எப்ப்அடி புரிந்து கொள்வது என்ற கேள்விக்கு. சில மரங்களில் இந்த mutation issues, environmental induced mutation பிரச்சனைகளாக இருக்கும் என்றார். தன் வீட்டில் ஒரு எலுமிச்சை மரம் ஒரு நாள் பெய்த மழையில் இடி விழுந்து அதன் பின் அறுவடை செய்த எழுமிச்சை பழங்கள் யாவும் விதையில்லாமல் பெரிய பழங்களாக வந்தது என்றார். ஏதோ புனைவுக்கதையை வாசிப்பது போன்ற உணர்வை அது தந்தது அந்த உரையாடலகள். மணிவிழுங்கி மரம் முதற்கொண்டு அமேசான் காடுகளில் பழங்குடியினர் மட்டுமே அறிந்த ஆன்மாவை பிரித்துக் காணும் தாவரம் வரை mystery plants பற்றி சொல்லி முன்னோர்களின் இயறகியோடு இயந்த வாழ்வில் கிடைத்த அறிவையும் தொக்குக்க வேண்டுவதன் முக்கியத்துவத்தைச் சொன்னார். தமிழகத்தில் அவ்வாறான இனக்குழுக்கள், ஹாட்ஸ்பாட்ஸ் ஆகியவற்றில் ஆய்வுகள் நடத்தி ஆவணப்படுத்த வேண்டுமென்றும் கூறினார். ஒவ்வொரு நிலப்பரப்பு சார்ந்தும் தாவர ஆர்வலர்கள் அந்தப் பகுதியைச் சார்ந்த கணக்கெடுத்தல் மற்றும் நான்கு வருடங்கள் கழித்து அதை மீண்டும் கணக்கெடுப்பு செய்து அதன் மாற்றங்களை ஆவணப்படுத்துவதன் அவசியத்தைப் பகிர்ந்தார்.

புதிய மற்றும் உள்ளூர் தாவரங்களை கண்டறியும் போது அவற்றிற்கு பெயரிடுதல் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். சில தாவரங்களுக்கான அதைக் எளிதில் கண்டெறியும் வகையில் அதன் பயன்பாட்டுடன்/பண்புடன் இணைந்த பெயர்களை அவர் பரிந்துரைகளும் செய்திருக்கிறார். ”அதழ்” போல தாவரவியல் சார்ந்த பெயர்களுக்கான கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியைப் பற்றியும் பகிர்ந்தார். வெண்ணிலா தாவரம், ஆர்டிசோகா தாவரம் பற்றிய புனைவுக்கதைகள், அசையாமல் இருப்பவற்றை காலப்போக்கில் மறக்கும் தன்மையை “தாவரக்குருடு” என்று அழைத்தது, கருவேலம் யூக்கலிப்டஸ் என களைச்செடிகளைப் பற்றிச் சொல்லும்போது “They are also plants but in wrong place” என கரிசனத்துடன் சொன்னது என மிகவும் உயிர்ப்பான அமர்வாக அமைந்தது. கேள்வி கேட்டு முடித்த ஒவ்வொருவரையும் “please sit down” என்று சொல்லி அமரவைத்துவிட்டு, உட்கார்ந்திருப்பவர்கள் அனைவரையும் மாணவர்கள் போல பாவித்து பதில் சொல்லிக் கொண்டிருந்தது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் உணர்வைத்தந்தது. மிக உற்சாகமாக அமைந்த அந்த அமர்வை கவிஞர் ஆனந்த்குமார் அவரின் அனைத்துப் பரிமாணங்களையும் வெளிப்படுத்துமளவு நகர்த்திச் சென்றார்.

கரசூர் பத்மபாரதி அரங்கு கேள்விகளால் அல்லாமல் முதலில் அவரின் ஆய்வுப்பணி அனுபவத்தோடு ஆரம்பித்தது. அதுவரை எங்களுக்கு பத்மபாரதி பற்றிய பிம்பம் அவர் சற்றே பயந்த சுபாவம், தயக்கமுடையவர் என்பது. நீலி மின்னிதழுக்காக அவரை நேர்காணல் செய்ய நானும், ஜி,எஸ்,எஸ்,வி நவீனும் பலவகை முயற்சிகளில் ஈடுபட்டோம். அதில் தோல்வியடைந்த பின் அவரை நேரில் சந்திக்க முடிந்த கடலூர் சீனுவின் உதவியை நாடினோம். இதற்கிடையில் ஆங்கில நாளிதழில் நேர்காணல் செய்வதற்காக சுசித்ராவும் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின் யாவற்றையும் விழாவிற்குப் பின் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்து அவரின் ஆக்கங்களைப் பற்றிய கட்டுரைகளை மட்டும் கொணரும் பணியில் இறங்கினோம். ஆனால் நாங்கள் அரங்கிலும் விழா மேடையிலும் பார்த்த பத்மபாரதி வேறொருவர்.

அரங்கில் பத்மபாரதி தன் மாணவப் பருவத்துக்கே சென்று விட்டார் என்று தோன்றுமளவு ஒவ்வொரு காட்சியாக எங்களுக்கு விளக்கினார். திருநங்கையர், நரிக்குறவர் பற்றிய ஆய்வுத் தலைப்பை தேர்ந்தெடுக்கும்போதே ஒரு பெண்ணாக ஏன் இவ்வளவு உழைப்பு கேட்கும் பணியை எடுக்க வேண்டும் என்ற தடைச் சொற்களுக்கு மத்தியில் தான் நித்தமும் செல்லும் வழியில் இருக்கும் நரிக்குரவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்தத் தலைப்பை எடுத்ததாகச் சொன்னார். ஒவ்வொரு நாளும் அவர்களை சந்திக்கச் செல்லும் போதும், ஒவ்வொருவரிடமிருந்தும் தகவலகளைப் பெற அவர்களை அணுக்கமாக்கிக் கொள்ளும் பொருட்டு அவர்களில் ஒருவராக அவர் மாறிப் போனபின் தான் ஆய்வுக்களம் தனக்கானதாக மாறியது என்று சொன்னபோது அவரின் உழைப்பு புரிந்தது. உழைப்பும் ஆர்வமும் இருக்கும் ஒருவருக்கு பொருளாதார ரீதியான செலவு என்பது அங்குள்ள மக்களுக்கு செய்யும் மிகச்சிறிய உதவிகள் மட்டுமே என்பதைச் சொன்னார். மொத்தமாகவே ஈடு வைக்க முடியாத உழைப்பும், இருபது முதல் இருபத்தியைந்தாயிரம் செலவுமே ஆனதாகச் சொன்னார். இத்தகைய ஆய்வு புத்தகத்தை எந்த பணமும் பெற்றுக் கொள்ளாமல் பதிப்பித்த தமிழினி வசந்தகுமார் ஐயாவின் மீது மிகுந்த மரியாதை வந்தது.

இங்கிருந்து நீங்கள் சுந்தரராமசாமி பற்றிய முனைவர் பட்ட ஆய்விற்கு வந்தவர் அவர் முன் உட்கார்ந்து கொண்டு “நீங்கள் ஆணா அல்லது பெண்ணா” என்ற டெம்பிளேட் கேள்வியைக் கேட்டதை நகைச்சுவையாக பகிர்ந்ததை ஒப்பு நோக்கிக் கொண்டேன்.

ப்ளாக்யாரிசம் என்று சொல்லப்படக்கூடிய ஏற்கனவே உள்ளவைகளை போலிமை செய்வது தான் பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கல்வித்துறை ஆய்வுகளுக்கு மத்தியில் அத்தனை துடிப்போடும், ஆர்வத்தோடும் நரிக்குறவர்களைப் பற்றியும், அத்துடன் ஆர்வத்தின் பெயரில் திருநங்கைகளைப் பற்றிய ஆய்வையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருந்தவரின் பித்தை தன் மாணவர் பருவத்திற்கே சென்று பகிர்ந்ததை பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தோம். மேலும் நரிக்குறவர்கள், திரு நங்கைகள் பற்றிய ஆய்வை அவரிலிருந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல் அதையே போலிமை செய்து கொண்டிருப்பதைப் பற்றியும் வேதனையுடன் சொன்னார்.

அவருடைய அரங்கு கள ஆய்வைச் செய்யும்போது இருந்த கள்ளமில்லாத, துடிப்பான பத்மபாரதியை கண்முன் நிறுத்தியது. அந்த அரங்கிலிருந்து அவரின் ஏற்புரையில் பாலைவனத்தில் திடீரென பெய்யும் மழையாக தூரன் விருதைச் சொன்னபோது உண்மையில் கண்களில் நீர் நிறைந்திருந்தது. இரண்டு லட்சம் தன் ஆய்வுப்பணிகளுக்கு உதவும் என்பது எந்த அளவுக்கு ஆய்வுப்பணி மேற்கொள்வதற்கான பொருளாதாரச் சுதந்திரம் அவசியம் என்பதையே சுட்டியது. அவர் மேலும் மேலும் தன் பணியை செய்வதற்கான சிறு ஊக்கியாக இந்த விழா அவருக்கும் அமையும் என்றே தோன்றியது.

இறுதியில் உங்கள் உரை முழுவதும் ஏனோ உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருந்தேன். நீங்கள் இடையறாது செய்யும் தமிழ் விக்கி பணி வாயிலாகவும், நீங்கள் அதன் வழி எங்களுக்கு அறிமுகப்படுத்தும் நூல்களும், ஆவணப்படுத்த வேண்டியவர்களும், வேண்டியவைகளும் மிகப்பெரிய ஊக்கத்தை எங்களுக்கு அளிக்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் பயனுள்ள ஏதோ ஒன்று செய்யவில்லையானால் குற்றவுணர்வு வந்துவிடுகிறது. ”பயனுற வாழ்தல்” தரும் நிறைவை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறேன். ஒரு கருவியாக பயனுற வேண்டும் என்ற எண்ணம் இளமை முதலே இருந்துள்ளது எனக்கு. அதன் வடிகாலாக இலக்கியத்தையும், இலக்கியப் பணியையும் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்காக நன்றி ஜெ. “நாம் தொடங்குவது முடிப்பதற்காகத்தான். மரணம் தவிர வேறு எதுவும் அதை நிறுத்தமுடியாது. நாம் இருந்தாலும், மறைந்தாலும் இப்பணி மேலும் தொடர வேண்டும்” என்று நீங்கள் சொன்னபோது கண்களில் நீர் ததும்பியிருந்தது. பெருமிதம் கலந்த அழுகை ஒன்று உங்கள் உரை முழுவதுமாக இருந்தது எனக்கு.

இறுதியாக கரசூர் பத்மபாரதி ஆற்றிய உரை வரலாற்றை கண்ணுறுதல் தான். வெடிச்சிரிப்புகளும், கைத்தட்டல்களும், உணர்வுகளும், மகிழ்வும் நிரம்பிய அரங்கை பத்மபாரதி முதல் தூரன் விருது விழாவுக்கு பரிசளித்திருக்கிறார்கள். இனி தூரன் விருது வாங்கப்போகும் ஆய்வாளர்களுக்கு இந்த நிகழ்வு இன்னொரு மகுடமாகவே அமையும். “நான் இறந்தால் ரேடியோவில் கூட செய்தி அறிவிக்கமாட்டார்களே ராமசாமி” என்று வருத்தப்பட்டு ஒவ்வொரு நாளும் பயனுற வாழ்ந்து மடிந்த ஐயா பெரியசாமித்தூரனின் ஆசி பத்மபாரதிக்கு இனி வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று எண்ணிக் கொண்டேன். பொருட்படுத்தும்படியான ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற கரசூர் அவர்களின் குறுகிய கால தேக்க நிலைக்கு இந்த விருது ஒரு ஊக்கியாக அமையும். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்குள் எப்போதும் துளிர்விடும் ஒரு ஆசிரியருக்கான மரியாதையை அரசு கவனத்தில் கொண்டு அதற்கான வழிவகை செய்ய வேண்டும். அது அவர்களுக்கு மட்டுமல்ல வருங்கால மாணவர்களுக்கு செய்யும் நன்மையும் கூட.

எப்போதும்போல விழா நேர்த்தியாக நடைபெற்றது என்று சொல்லி முடித்துவிட முடியாது. ஏனெனில் இது முதல்முறையாக ஈரோட்டு நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட விழா. அரங்கு ஒவ்வொன்றும் குறித்த நேரத்தில் முடிந்தது. உணவு மிகச்சிறப்பாக இருந்தது. விழா அமைவிடம், தங்கும் வசதி என யாவற்றையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தார்கள். சமையல் கேட்டரிங் முதல் ப்ளக்ஸ், விளம்பரம், விழாவுக்கான சிலை வடிவமைப்பு வரை ஈரோடு பிரபுவின் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து ஈரோடு சிவா, சந்திரசேகர், பாரி, மணவாளன், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன், தாமரைக்கண்ணன், கடலூர் சீனு, ஈரோடு கிருஷ்ணன், செந்தில் என பலரும் அயராது உழைப்பைச் செலுத்தி இந்நிகழ்வை நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக தமிழ்விக்கி பணியும், அதன் வழியில் பிறந்த தமிழ்விக்கி தூரன் விருது விழாவும் புறநானூற்று பாடலொன்றை நினைவில் மீட்டச் செய்தது.

“கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,

அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,

பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,

இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்

புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து

உரனுடை யாளர் கேண்மையொடு

இயைந்த வைகல் உளவா கியரோ!”

அப்படியாக இடப்பக்கம் தான் கவ்விய காட்டுப்பன்றி விழுந்ததென்ற காரணத்தினால் உண்ணாதாகி மேலும் பசித்து தன் வலப்பக்கத்தில் பெருங்களிறை வீழ்த்தி உண்ட புலியைப் போன்றோரின் கேண்மையையே நம் சான்றோர்கள் விரும்பியுள்ளார்கள். அத்தகைய வினையையும், மனிதர்களையும் என் வாழ் நாளில் நான் காண்பதற்கும் அதை நோக்கிய பயணத்தில் என்னைச் செலுத்தும் உங்கள் செயல்களுக்கும் மிக்க நன்றி ஜெ.

ரம்யா.

முந்தைய கட்டுரைஅறுபடா பொன்னிழை -சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைகே.என்.சிவராஜ பிள்ளை – போலீஸ் தமிழறிஞர்