அனலெழுகை

(முதற்கனல், விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வழியாக செம்பதிப்பாக மறுபதிப்பு வெளிவந்துள்ளது. அதற்கான முன்னுரை)

வெண்முரசு நாவல் தொடரின் நூல்கள் அச்சுவடிவில் வரத்தொடங்கி எட்டாண்டுகள் ஆகவிருக்கின்றன. ஒருவகையில் தமிழ் இலக்கிய மரபிலேயே மிகப்பெரிய பதிப்பு முயற்சி என்று வெண்முரசைத் தான் சொல்ல வேண்டும். தமிழில் வெளிவந்த கலைக்களஞ்சியத் தொடர்களை விடவும் அளவில் பெரியது இந்த நூல் வரிசை.

2014-ல் என் இணையதளத்தில் வெண்முரசு தொடராக வெளிவரத்தொடங்கியது. அவ்வாண்டே முதல் நூலாகிய முதற்கனல் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. ஷண்முகவேல் வரைந்த ஓவியங்களுடன் கூடிய செம்பதிப்பும் ஓவியங்களற்ற பதிப்பும் வெளியாயின. முன்பதிவுத்திட்டத்தில் ஐநூறு பேர் முதற்கனலை செம்பதிப்பாக வாங்கினர். ஓவியங்களற்ற பதிப்பு அதற்குப்பின் பலமுறை மறுஅச்சாக வந்துள்ளது. கிழக்குப் பதிப்பகம் அவற்றை வெளியிட்டது. இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் முதற்கனலை மீண்டும் வெளியிடுகிறது.

வெண்முரசு நாவல் தொடரை எழுதி முடித்து உணர்வுரீதியாக அதிலிருந்து வெளியேறி, நூற்றைம்பது கதைகளையும் நான்கு சிறுநாவல்களையும் எழுதி, முற்றிலும் விடுபட்டபின் இப்பெருமுயற்சியை திரும்பிப்பார்க்கையில் அது நான் கடந்து வந்த பாதை என எனக்குப் பின்னால் வளைந்து செல்வதை காண்கிறேன். இன்று ஓர் அயலவனாக நின்றே முதற்கனலைப்பற்றி ஏதேனும் சொல்லவேண்டியிருக்கிறது.

இத்தலைப்பு சுட்டுவதைப்போல மகாபாரதத்தை ஆக்கிய வஞ்சங்கள், விழைவுகள் கருக்கொள்ளும் களம் இது. மகாபாரதத்தின் இயங்கு விசையான ஊழ் தன்முகத்தை காட்டும் முதற்புள்ளி. ஊழென்று இங்கு சொல்வது ஒவ்வொருவரையும் ஒற்றைப் பெருஞ்செயற்பெருக்கு ஒன்றில் இணைக்கும் அந்த நிகழ்வுத்தொடர்வலையை. அல்லது இங்குள்ள அனைத்திற்கும் பின்னாலிருக்கும் அறியமுடியாத செயல்திட்டத்தை. அல்லது ஒன்றென்றிலங்கி பலவென்று காட்டி என்றென்றுமிருக்கும் ஏதோ ஒன்றை.

இந்நாவலை எழுதத்தொடங்குகையில் என்னுள் இருந்தது அம்பையின் வஞ்சம் எனும் முதற்கனல் சார்ந்த ஓர் உருவகம் மட்டுமே. எழுதி கண்டடைந்து, நிறைவுற்று, கடந்து வந்து இங்கிருக்கையில் இப்போது மகாபாரதம் மொத்தமும் ஒரு பெருவேள்வி என்று தோன்றுகிறது. வெண்முரசு அவ்வேள்வியின் பெருஞ்சித்திரம். முதற்கனல் அவ்வேள்வியின் தொடக்கமாக அரணிக்கட்டைகளை உரசி வெப்பமூட்டி எழுப்பிய முதல்பொறி. பின் அது நெய்யில், அவியில் எரிந்தேறி இறுதியில் வேள்விச்சாலையையே உண்டு சாம்பலை மட்டும் எஞ்சவிட்டு விண்ணேகியது.

வேள்விச்சாம்பலே இறைவனின் அருட்பொருள்களில் தூயதென்பர் வைதிகர். நெற்றியில் விபூதியென அதை அணிவார்கள். எரிந்தடங்கல் என்பது இப்புவியில் நாம் காணும் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்று, எரிவது எதுவானாலும். இருப்பதொன்று இல்லாமலாவது அது. பருவடிவொன்று கருவடிவுக்குத் திரும்புவது.

மகாபாரதம் எனும் வேள்வியின் முதற்பொறி கிளம்பும் இந்நாவலில் அந்த விழைவின் விசை உள்ளது. அரணிக்கட்டை கடையப்படுவதை அருகிருந்தே பார்த்திருக்கிறேன். சிறுதுளைக்குள் அந்தக் கழி சுழன்று சுழன்று புறா குறுகுவது போல் ஒலி எழுப்புகிறது. எங்கிருந்து எழுகிறது தீ என்று அப்போது சொல்லமுடியாது. எண்ணமுடியாத ஒரு கணத்தில் அக்குழிக்கருகே இருக்கும் பஞ்சு பற்றிக்கொள்கிறது. அந்த நெருப்பிருப்பது கடைபவனின் தோள் வலிமையில் என்று தோன்றும். அவன் தசைகளின் இறுக்கத்தில், அல்லது அவன் உள்ளத்தின் கூர்கையில், அல்லது அவன் கொண்ட விழைவில், அல்லது அவ்விழைவை அவனுள் நிறைக்கும் அச்செயலின் நோக்கத்தில்.

இந்நாவலில் வெண்முரசு உருவாக்கத்தின் பல தொடக்கங்களை காண்கிறேன். வெண்முரசு முற்றிலும் தூய தமிழில் எழுதப்பட்டது. ஆனால் இந்நாவலில் தொடக்கத்தில் பல சம்ஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. அவை மெல்ல மெல்ல களையப்பட்டு தூய தமிழ் நோக்கிச் செல்கின்றது இதன் வளர்ச்சிப் போக்கு. வெண்முரசு நாவல் முழுக்க அதன் மொழிநடைக்கு ஒரு மெல்லிய ஓசை ஒழுங்கு உண்டு. அந்த அகஒலியிசைவு இந்நாவலில் முதல் வரியிலேயே தொடங்கிவிட்டிருக்கிறது.

வெண்முரசு நாவல்கள் இரண்டு வகையில் தங்கள் புனைவை மெய்மை நோக்கி கூராக்கி கொண்டு செல்கின்றன. வெவ்வேறு தொல்புராணங்களை ஒன்றுடன் ஒன்று அடுக்கித் தொடர்புபடுத்துதல் வழியாகவும், புராணச் செய்திகளுக்கு படிமமென விரித்துப் பொருள் கொள்வதனூடகவும். அதற்கான முதல் முயற்சிகள் இந்நாவலில் உள்ளன. அத்துடன் மகாபாரத கதாபாத்திரங்களை மானுடம் இன்றைய கணம் வரை வந்து சேர்ந்திருக்கும் வாழ்வின் அலைகளைக்கொண்டும், அடிப்படை உணர்வுகளைக்கொண்டும், அவற்றின்மேலான அறிதல்களைக் கொண்டும் புரிந்துகொள்ள இந்நாவல் முயல்கிறது. இந்த முதல் நாவலில் பீஷ்மரின் உள்ளத்தினூடாக அது ஆசிரியனுக்கு நிறைவூட்டும் படி நிகழ்ந்திருக்கிறது.

இந்நாவலின் உருவாக்கத்தில் இணையாசிரியர்களென உடனிருந்த ஸ்ரீனிவாசன் சுதா இணையருக்கு என் அன்பு. இதன் முதற்பதிப்பை வெளியிட்ட நற்றிணை யுகன், பிந்தைய பதிப்புகளை வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் ஆகியோருக்கு நன்றி. இதை அற்புதமான ஓவியங்கள் வழியாக காட்சிநிகழ்வாகவே ஆக்கிய ஷண்முகவேலுக்கு என் வணக்கம்.

இந்நாவல் ஒரு விதை. இதைத்தொடர்ந்து வரும் பிற நாவல்கள் பெருமரங்கள். எட்டாண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரம் பேர் வெண்முரசை படித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு பெரும்படைப்பு இத்தனை பேரால் படிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் முடிவு செய்வதாக ஆவதும் எந்த இலக்கியச்சூழலிலும் மிகமிக அரிதாக நிகழ்வது. அத்தருணத்தை இயல்வதாக்கிய என் ஆசிரிய நிரைக்கு அடிபணிந்து வணக்கம்.

ஜெ

19.08.2022

முதற்கனல் செம்பதிப்பு வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைதி.க.சி- உரையாடலில் வாழ்ந்தவர்
அடுத்த கட்டுரைஇரு வாழ்த்துக்கள்