வெள்ளை யானை, கடிதம்

அன்புள்ள ஆசிரியர்க்கு,

வெள்ளை யானை சித்தரிப்பது இந்திய வரலாற்றின் மறந்து போன  மிக இருண்ட  ஒரு பக்கத்தை. இதை பற்றி அறிந்த சிலருக்கும் அது வரலாற்றின் ஒரு பக்கமாகத்தான் இருந்திருக்கும். இதன் வரலாறு பரவலாக்கப் பட்டாலும் ஓரளவு தட்டையாகவே சென்று சேரும் – பிரிட்டன் தனது ராஜ்ஜியத்தின் பரவலாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்திற்கு இந்தியாவிலிருந்து பிடுங்கி  தானியங்கள் வழங்கியதால் ஏற்பட்ட பஞ்சம் என்று. ஆனால் புனைவு ஒன்றே நம்மை அந்த காலகட்டத்திற்கு கொண்டு போய் வைத்து அந்த கொந்தளிப்பை நமக்குள் கடத்துவதாய்  உள்ளது.

வெள்ளை யானை மெட்ராஸ் பஞ்சத்தின் வரலாற்றை சொல்வதால் மட்டும் முக்கியமான ஆக்கம் இல்லை. அதன் பின்னணியில் உள்ள ஏகாதிபத்திய சுரண்டல்,  சாதி அடுக்குமுறை, சாதி உளவியல் என அதை நிகழ்த்திய சக்திகள் குறித்து  ஒரு ஆழ்ந்தகன்ற வரலாற்று சித்திரத்தை அளிப்பதனாலும், சுரண்டும் இந்த பெரும் இயந்திரங்களில்  அதிகாரம் மிக்க ஒரு பாகமாக இருந்தும் அது ஏற்படுத்தும் அழிவுகளை கண்ணீருடன் பார்ப்பதை தவிர எதுவும் செய்ய முடியாமல் திணறும் ஒரு மனசாட்சியை சித்தரிப்பதாலும், பசியை பஞ்சத்தை எழுத்தில் மறுபடியும் நிகழ்த்தி நடுங்க வைத்ததாலும் தான் இது மிக முக்கிய படைப்பாகிறது.

பஞ்சத்தில் மாட்டியிருக்கும் ஒருவனின் பார்வையில்  காட்டுவதை  விட அதை காணும் ஒரு மேல்தட்டு மனிதனின் பார்வையில்  இந்த நாவல் நிகழ்கிறது. நான் இதுவரை உங்கள் படைப்புகளை  வாசித்த வரையில், தான் நன்றாக இருந்தும் பிறர் துன்பத்தை தாளாமல் அவதியுறும் எய்டன் பைர்ன்தான் மிகவும் ட்ராஜிக் கதாபாத்திரம். எய்டனுடன் இந்த நாவல் உலகெங்கும் செல்லவேண்டும் என தோன்றியது.

அன்புடன்

சஃபீர் ஜாஸிம்

முந்தைய கட்டுரைஅர்ஜுனனும் கர்ணனும்,கடிதங்கள்
அடுத்த கட்டுரைசங்கு சுப்ரமணியம், லட்டு மிட்டாய் வேணுமா?