அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
கடந்த 17.07.2022 (ஞாயிறு) அன்று நாமக்கலில் நடைபெற்ற கட்டண உரை “விடுதலை என்பது என்ன” என்ற தலைப்பின் கீழ் தாங்கள் ஆற்றிய உரையின் கூட்ட நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களின் வாயிலாக பெற்றேன்.
தங்களின் மேடை பேச்சுகளை காணொளியில் மட்டுமே கண்டு வந்தவன் என்ற வகையில், நேரில் பார்க்கவும் பேராவல் கொண்டிருந்தேன். தங்களை நேரில் சந்தித்த வகையில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
நேற்றைய நிகழ்வில் விடுதலை என்பது என்ன என்பதை மிகவும் அறிவுப்பூர்வமாகும் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் தெரிவித்து, ஒரு விதையை தூவுவது போல உள் மனதில் ஊன்றி விட்டீர்கள்.
மேலும், தத்துவம், இந்திய பண்பாடு, ஆன்மீகம் போன்றவை குறித்து அதிகம் வாசிக்காத வாசகன் என்ற வகையில், எனக்கு நேற்றைய தங்களின் உரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
மேலும், தங்களது உரையில் ஓரிடத்தில் Frame என்ற ஒன்றை சுட்டிக் காட்டியதை போல, மேற்படி தத்துவம், இந்திய ஞானம், ஆன்மீகம் போன்றவற்றை வாசித்து உணர்வதற்கும் ஒரு Frame அதாவது ஒரு முழுமை பெற்றச் சட்டகமாவும், வாசித்து உணர்வதற்கான நுழைவாயில் போலவும் நேற்றைய தங்களின் உரையானது அமைந்தது.
மேலும், தங்களது உரையின் ஆரம்பத்தில் ஆன்மீகம், தத்துவம் அதாவது இலக்கியம் சார்ந்து அல்லாத முதல் மேடை பேச்சு என்று தாங்கள் சொல்லிய வகையில், எனக்கும் நேரில் தங்களின் முதல் மேடைப்பேச்சு என்ற வகையிலும் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன்.
மேற்படி தத்துவம், இந்திய ஞானம், ஆன்மீகம் போன்றவற்றிற்கும், விடுதலை என்பது என்ன என்ற வினாவிற்கும் நேற்றைய தங்களின் உரையானது என்னுள் தெளிவான பாதையை வகுத்தது. இதே உணர்வு நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எழுந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.
வணக்கம் நன்றி
–
கலை கார்ல்மார்க்ஸ்