நீர்ப்பூச்சியும் சிப்பியும்

அன்புள்ள ஜெ

புத்தகங்களை வாசிப்பதில் எழும் சவால்கள் என்ன? குறிப்பாக கருத்தை உள்வாங்கிக்கொள்வதிலும், புத்தகங்களை வாசிக்கையில் எழும் சிந்தனைகளைத் தொகுத்து எழுதும் திறனிலும் எழும் சிக்கல்கள் என்ன?.

அண்மையில் மதுரையில் உங்களைச் சந்திக்கையில் ஒரு வாசகனாக குருதி கொதிக்க கனல் தேடும் ஒரு கரிக்கட்டையாக  தங்கள் அருகில் தனல்விட்டு  தகித்துக்கொண்டிருந்தேன் என்பதே உண்மை. ஒரு வேளை அதனாலோ இக்கேள்விகள் எழுந்தும் கேட்காமல் நின்றுவிட்டேன்.  .

நன்றி.

பிரியத்துடன்

அ.பிரசாத்

மதுரை.

அன்புள்ள பிரசாத்,

புத்தகவாசிப்பைப் பற்றி எப்போதும் நான் வலியுறுத்தியே பேசிவந்திருக்கிறேன். அது இங்கே மிக அரிதாக உள்ளது என்பதனால். நம் கல்விமுறை இன்று புத்தக வாசிப்புக்கு மிக எதிரானதாக, புத்தகவாசிப்பை தடுப்பதாக அமைந்துள்ளது. புத்தகவாசிப்பு கொண்டவர்கள் நம் கல்வியமைப்பில் தோல்வியடையவே வாய்ப்பு என்பதனால். நம் சமூகச்சூழல் வாசிப்பை அவமதிக்கிறது என்பதனால். நம்  அறிவுச்சூழலேகூட இன்று திரைப்படங்களையும் காணொளிகளையும் சார்ந்ததாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதனால்.

இன்று புத்தகவாசிப்பின் சிக்கல்கள் என்ன, எல்லைகள் என்ன என்ற கேள்வி எதிர்மறையானதாக ஆகிவிடக்கூடும். ஆனாலும் அதை விவாதிக்கலாம்.

புத்தகங்களை வாசித்து குவிப்பவர்கள், அவற்றிருந்து முழுமையான அறிதலைப் பெற்றுவிடுவார்கள் என்று கூறமுடியாது. அதற்கான உதாரணங்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். புத்தகங்களை வாசிக்கும்போது அவர்களில் சிலர் முழுமையாக ஈடுபட்டு படிக்கிறார்கள். சிலர் புத்தகங்களின் மீது தொட்டு தொட்டுத்தாவிச் செல்கிறார்கள். தொட்டுத்தாவிச் செல்லும் இரண்டாம் வகையினரே மிக அதிகமாக படிப்பவர்கள். தாங்கள் ஏராளமான நூல்களை மிக விரைவில் படிக்கிறோம் என்ற பெருமிதமும் அவர்களுக்கு இருக்கும். அவர்களே தங்களை பெரிய வாசகர்கள் என எங்கும் முன்வைப்பவர்கள். ஆனால் அவர்களுடைய வாசிப்பு எந்த வகையிலும் உகந்தது அல்ல.

ஆற்றூர் ரவிவர்மா ஆழ்ந்து வாசிப்பதை சிப்பிவாசிப்பு என்றும் தாவிச்செல்லும் வாசிப்பை நீர்ப்பூச்சி வாசிப்பு என்றும் சொல்வார். சிப்பி ஒரு பாறையில் ஒட்டிக்கொண்டு எந்த அலைக்கும் அசையாமல் அங்கேயே அமர்ந்திருக்கும். நீர்ப்பூச்சி நீரை தொடாமல் நீரிலேயே வாழும். அத்தனை அலைகளுக்கும் மேலே எதையும் அறியாமல் இயல்பாக நின்றிருக்கும்.

நீர்ப்பூச்சி வாசிப்பு பெரும்பாலும் வாசிப்பவருக்கு ஏற்கனவே என்ன நிலைபாடு உள்ளதோ, என்ன ஆர்வம் இருக்கிறதோ அதைச் சார்ந்த உதிரிச் செய்திகளையும் தனிக்கருத்துகளையும் மட்டுமே அவருக்கு அளிப்பதாக அமையும். நூல்களையே கூட அவருடைய வாசிப்பு தனிச்செய்திகளாகவே அடையும். அதாவது எந்தச் சிற்பத்தையும் நொறுக்கி ஜல்லிகளையே அவர் அடையமுடியும்.  நூலில் இருந்து அவர் ஒரு முழுமைச் சித்திரத்தை உருவாக்கிக்கொண்டிருக்க மாட்டார். ஆனால் ஏற்கனவே அவரிடமிருக்கும் கருத்துநிலை வெவ்வேறு இடைவெளிகள் தகவல்களால் நிரப்பப்பட்டு ஒருவகையான முழுமைத் தோற்றத்தை அவருக்கு அளித்துக்கொண்டே இருக்கும். ஆகவே அவர்கள் தங்களை தெளிவானவர்களாக எண்ணிக்கொள்வார்கள். இத்தகையவர்களே பெரும் வாசிப்பாளர்கள் என்று அதிகமும் அறியப்படுகிறார்கள். பலசமயம் வாசிக்கும்தோறும் அறியாமை மிகுவது இதனால் தான்.

இத்தகைய வாசிப்புக்குறை கொண்ட ஒருவர் அவர் ஏற்கனவே கொண்டுள்ள நிலைபாட்டையே தான் வாசித்த அத்தனை நூல்களும் ஆதரிக்கின்றன எனுமிடத்திற்கு சென்று சேர்வார். அவரிடம் நாம் எதையுமே சொல்லிவிடமுடியாது. அவர் வாசித்த அத்தனை நூல்களின் பட்டியலும் சேர்ந்து வந்து அதை எதிர்க்கும். அவரிடம் புதிய ஒரு கருத்து சென்று சேரமுடியாது. அதுவரைக்கும் அவர் அறிந்த புத்தகங்களே சுவரென ஆகி நின்றிருக்கும். அவரிடம் மானுட ஞானமே தோற்று விலகிச்செல்லும்.

கற்கும் தோறும் அறியாமை பெருகும் இந்த வாசிப்பு ஒரு பரிதாபகரமான நிகழ்வு ஓர் எந்திரம் இரவு பகலாக ஓடுகிறது. ஆனால் அதிலிருந்து ஓசையும் தேய்மானமும் தவிர எதுவும் உருவாவதில்லை என்பது போல. வாசிப்பு ஒரு நோய்க்கூறாக ஆவது இப்போதுதான். இந்த வகையான வாசிப்பு கொண்டவர்கள் தங்கள் வாசிப்பு குறித்த பெருமிதம் மற்றும் ஆணவத்தால் அனைத்து இடங்களிலும் வந்து தங்களை முன் நிறுத்துவார்கள். பெரும்பாலும் தாங்களாகவே எக்கருத்தையும் உருவாக்கவோ முன்வைக்கவோ முடியாதவர்களாக இருப்பார்கள். ஓர் எளிய நிலைபாட்டை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்வார்கள். ஆனால் பிறர் கூறும் கருத்துகளில் எளிமையான தகவல் பிழைகள் அல்லது தங்களுக்குத் தோன்றும் அபத்தமான முரண்பாடுகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பார்கள். அதன்வழியாக கருத்துரைக்கும் அனைத்துக்கும் மேலாக தங்களை நிறுத்திக்கொள்வார்கள்.

அந்த இடம் இயல்பாகவே அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அவ்வண்ணம் அளிக்கப்படாதபோது அவர்கள் சீற்றம் அடைவார்கள். இத்தகையோரில் பலர் மிக எளிய இலக்கணப்பிழைகளை, சொற்பிழைகளைச் சுட்டிக்காட்டி மகிழ்வதைக் கண்டிருக்கிறேன். இசைநிகழ்வுகளில் தாளப்பிழை நிகழ்வதற்காக காத்து செவிகூர்ந்து அமர்ந்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது வாசிப்பு அளிக்கும் பேதமை. இது இவர்களை காலப்போக்கில் கசப்பு கொண்டவர்கள் ஆக்குகிறது. எதையும் நேர்நிலையில் சுட்ட முடியாதவர்களாக, ஏளனமும் வசையும் மட்டுமே நிறைந்தவர்களாக, ஒவ்வாமையை அளிப்பவர்களாக மாற்றுகிறது.

முதல் வகையான சிப்பி வாசிப்பில் உள்ள குறைபாடு வேறுவகையானது. இதை நாம் யோசித்திருக்க மாட்டோம். மிக ஆழ்ந்து வாசிக்கையிலுமே ஒரு பிழை உருவாகக்கூடும். ஆழமென்பது உச்சம். உச்சமென்பது ஒரு முனை. மிகக்குறுகிய இடம் அது. மிக ஆழ்ந்து வாசிப்பவர்கள் பலர் அகன்ற வாசிப்பற்றவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். ஒருபுள்ளியில் அவர்கள் வாசிப்பு குவிந்திருப்பதனால் அத்தளம் சார்ந்து மிக அரிய மிக தீவிரமான கருத்துக்களை முன்வைக்க முடியும். அவற்றுக்கு கருத்துத் தளத்தில் பெருமதிப்பு உண்டு. ஆனால் அக்கருத்துகள் அனைத்துமே மிகையானதாக, மிகையின் கோணல் கொண்டதாகவும் இருக்கும். அவற்றுக்கு முழுமையின் மதிப்பிருக்காது.

இத்தகைய வாசகர்கள் துறைநிபுணர்கள் என்றால், தங்களுடைய எல்லையைத் தாங்களே உணர்ந்து தங்கள் தளத்திற்குள் நின்று பேசும்போது பிழையற்றவர்களாக இருப்பார்கள். அன்றி ஒருதுறையில் அடைந்த தேர்ச்சியினால் அனைத்து துறைகளிலும் கருத்து சொல்ல முற்படும்போது பொதுவான கருத்துச் சூழலுக்குத் தடையாக ஆகிறார்கள்.மிக அரிதாக இவர்களில் பலர் சூழலால் சீண்டப்பட்டு, தங்கள் துறையிலேயே அதீத நிலைபாடு எடுத்துவிடுவதுண்டு. அந்நிலையில் மிக அபத்தமான கருத்துக்களை இவர்கள் முன்வைப்பதும் உண்டு. சமூகவியல், வரலாறு போன்ற துறைகளில் அசட்டுத்தனமான உச்சநிலைபாடுகளை முன்வைக்கும் பேரறிஞர்களை நாம் காணலாம்.

வாசிப்பின் எல்லை என்பது இதுவே. இந்த இரு எல்லைகளுக்கும் நடுவே நல்ல வாசிப்பு நிகழவேண்டும். அதன் பொதுவான இலக்கண வரைபடம் ஒன்றை இவ்வண்ணம் சொல்லலாம். ஒரு மையவட்டத்தில் இருந்து விரிந்து விரிந்து பரவும் வெளிவட்டங்கள் போல் வாசிப்பு இருக்கவேண்டும். மையவட்டமே அவ்வாசகரின் தனித்தேடலும், ரசனையும், தேர்ச்சியும் கொண்ட களம். அங்கே அவர் மிக ஆழ்ந்து வாசிக்கவேண்டும். தொடர்புடைய அடுத்தகட்ட வட்டத்தில் எல்லைக்குட்பட்ட வாசிப்பு தேவை. அதற்கு அடுத்த வட்டத்தில்  மேலும் எல்லைக்குட்பட்ட வாசிப்பு தேவை.

உதாரணமாக, ஓர் இலக்கியவாசகனின் மையம் இலக்கியம். அவன் பேரிலக்கியங்களையும் சமகால இலக்கியங்களையும் அவை சார்ந்த இலக்கிய விமர்சனங்களையும் அங்கே ஆழ்ந்து வாசிக்கவேண்டும்.  அதற்கு அடுத்த வட்டம் பண்பாடு மற்றும் சமூகவியல் செய்திகள். அவை இலக்கியத்துடன் நேரடித் தொடர்பு கொண்டவை. ஆகவே அவன் சற்று ஆழ்ந்து வாசிக்கவேண்டும். அதற்கு அடுத்த வட்டம் அரசியல், அழகியல் மற்றும் மொழியியல் கோட்பாடுகள். அவற்றை அவனே ஓர் எல்லையை அமைத்துக்கொண்டு அடிப்படைகளை மட்டும் தெரிந்துகொள்ளவேண்டும். அவற்றில் அதிதீவிரமாகச் செல்பவர் இலக்கியவாசிப்பை இழப்பார்.

இப்படியே வட்டங்கள் விரியலாம் வரலாறு அடுத்த வட்டம். தத்துவம் அதற்கு அடுத்த வட்டம். அவற்றில் அவன் இலக்கியவாசகனுக்கு தேவையான அளவு மட்டுமே வாசிக்கவேண்டும். மிக ஆழ்ந்து சென்று அங்கே நிகழும் விவாதங்களில் தரப்பு எடுத்தான் என்றால் தன் அறிவுச்செயல்பாட்டைச் சிதறடிக்கிறான். ஆனால் ஓர் இலக்கியவாசகன் இயற்பியல், வேதியியலுட்பட அறிவியலில்கூட பொதுவாசகனுக்குரிய அறிமுகம் பெற்றவனாகவும் இருக்கவேண்டும். அதுவே இலட்சியவாசிப்பு.

ஜெ

முந்தைய கட்டுரைமதுமிதா
அடுத்த கட்டுரைமழைப்பாடல் – ராதாகிருஷ்ணன்