அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம், புனைவுகள் தேவை கடிதம் கண்டேன். நண்பர்கள் தளத்தில் இலக்கிய இடம் குறைகின்றது என சொல்லியிருந்தார்கள். தமிழ் விக்கி தளத்தில் வரும் ஆளுமைகளை பற்றி நீங்கள் தினமும் அளிக்கும் குறிப்பு ஓவ்வொன்றும் பெரும் தரிசனம் ஒன்றினை நோக்கி திறக்கப்படும் சாளரங்கள் போல உள்ளன.
தமிழ் இலக்கிய மரபில் தொண்டாற்றிய ஆளுமைகளை பற்றிய சிறந்த இலக்கியம் ஒன்று அன்றாடம் வாசகர்களுக்கு அளிக்கப்படுகின்றது எனவே நான் நினைக்கின்றேன்.
அன்புடன்
நிர்மல்
***
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி கட்டுரைகள் ஒவ்வொன்றையும் வாசித்து வருகிறேன். நான் என் நண்பர்களிடம் சொல்வது அவை வெறும் கலைக்களஞ்சிய செய்தித்தொகுப்புகள் அல்ல என்றுதான். அவை அனைத்துமே ஆழமான, சுவாரசியமான கட்டுரைகள். சுருக்கமானவை. ஆனால் முழுமையானவை.அவற்றை வாசிக்கும் வாசகர்கள் ஆழ்ந்து படிக்கலாம். ஆர்வம் தரும் வாசக அனுபவமும் உண்டு. பலர் அவற்றை வெறும் செய்திகள் என்று கடந்துசெல்கிறார்கள். தமிழ் விக்கி என்ற மகத்தான முயற்சிக்கு நம் குறைந்தபட்ச ஆதரவு என்பது அவற்றை படிப்பதுதான் (குறைந்தபட்சம் கிளிக் ஆவது அளிப்பது)
பல கட்டுரைகள் மிகச்சிறந்த புனைவுகளுக்குச் சமானமானவை. அவற்றில் இருந்து நல்ல புனைவுகள் வருமென்றால் தமிழிலக்கியம் வாழும். செயற்கையான, அன்னியமான கருப்பொருட்களை எடுத்து பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எழுத ஆரம்பிக்கமுடியும்.
மாதவராஜ்