தமிழ் விக்கி, ஈரோடு விழா -கடிதம்

வணக்கம்

இருநாட்கள் நடந்து முடிந்த தமிழ் விக்கியின் பெரியசாமி தூரன் விருது விழா  விஷ்ணுபுர விழாவின் மற்றொரு வடிவமே தான். விருதின் பெயரும், விருது பெற்றவரின் ஏற்புரையும் மட்டும்தான் வேறுபட்டிருந்தது.வழக்கமான முன் திட்டமிடல்கள், முன்னேற்பாடுகள், ஒரு சிறு பிழை கூட இல்லாத   அனைவருக்குமான வசதிகள், நல்ல உணவு, வசதியான தங்குமிடம்,  கச்சிதமான நேர ஒழுங்குடன் நிகழ்ந்த  மிகச்சிறப்பான அமர்வுகள் என எல்லாமே விஷ்ணுபுர விருது விழாவை போலவே தான் இருந்தது.

சுவாமி பிரம்மானந்தா, எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும்  ஆனைமலை ஆசிரமமொன்றில் தங்கி இருந்ததால் நான் ஆகஸ்ட் 13  சனியன்று காலை மரியாதை நிமித்தம் மகனுடன் சென்று அவரை சந்தித்து பேசினேன். அவரை கண்டதும் பிரகாசமானவர் என்று தான் முதல் எண்ணம் எழுந்தது.  அப்படி ஒருவரையும் இதற்கு முன்னர் நினைத்ததில்லை. கனிவே வடிவானவரும் கூட.

அவரிடம் விடைபெற்றுக்கொண்டு  மகனும் நானும் ஈரோடில் விழா நடக்கும் இடத்திற்கு  வந்தோம். மதியமே பலர் வந்திருந்தனர். வழக்கம்போல தோழமையின் திளைப்பு.   கூடிக்கூடி பேசியும் வெகுதூரம் நடந்துபோய் தேநீர் அருந்தியும் களித்திருந்தோம்

மிகச்சரியாக குறிப்பிட்ட நேரத்தில் மாலை அமர்வு சுவாமி பிரம்மானந்தாவின் உரையுடன் தொடங்கியது. இலக்கியமும் ஆன்மிகமும் கலந்த அந்த உரை எனக்கு மிகப் புதியது. சுவாமிகள் சொன்ன ’’எதுவும் தற்செயலல்ல’’ என்பதை பிறகு வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் கேட்கப்பட்ட தனித்துவமான கேள்விகளுக்கு மிக தண்மையாக நிதானமாக பதிலளித்தார்.

தன்னறம்  அமைப்பினர் காகிதப் பறவைகளை மண்டபம் முழுக்க ஆங்காங்கே அமைத்துகொண்டிருந்தனர்.எடையற்ற அப்பறவைகள் காற்றில் அசைந்து பறப்பது போலவே தோன்றிக் கொண்டிருந்தன.

விசாலமான கூடங்களும் மூன்று தளங்களும் ஏராளம் அறைகளுமாக நல்ல வசதியான அந்த  மண்டபம் நிகழ்வுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது.

மறுநாளும் வழக்கம் போல் குறிப்பிட்ட நேரத்துக்கு அமர்வுகள் துவங்கி சிறப்பாக நடந்தது. அ.க பெருமாள் அவர்கள் தனது அமர்வுக்கு மிகுந்த சிரத்தையுடன் தன்னை தயார் படுத்திக்கொண்டது அவர்மீதான மதிப்பை மேலும் கூட்டியது  நாட்டார் கலைகளில் மிகப்பெரிய ஆய்வாளர். அத்துறையில்  மிகப்பெரியவர் இருப்பினும் அந்த அரங்கிற்காக அத்தனை கவனம் எடுத்துக்கொண்டார்.

அப்படியே  திரு. மகுடீஸ்வரன் அவர்களும்.அவர் தூரன் அவர்களை குறித்து பகிர்ந்துகொண்ட பல விஷயங்கள் வியப்பளித்தன.

எனக்கும் ஒரு அமர்வு அளிக்கப்பட்டிருந்தது. தாவரவியல் துறை மெல்ல அழிந்து கொண்டிருப்பதில் எனக்கிருந்த நெடுங்கால மனக்குறை அன்று வெகுவாக குறைந்துவிட்டது..மிக சுவாரஸ்யமான கேள்விகள் எழுந்தன. அரங்கு முடிந்தபின்னரும் பல கேள்விகள், சந்தேகங்கள் கேட்கப்பட்டுக்கொண்டே இருந்தன.பலர் தாவரவியல் படித்திருக்கலாமென்று  எண்ணுவதாக சொன்னார்கள்

இரு  சிறார் பள்ளிகளில் இருந்து தாவரவியல் குறித்து உரையாற்ற அழைப்பு விடுத்தார்கள். தாவரக்குருடு என்பதை சரி செய்ய ஒரே வழி சிறுவர்களின் உலகில் தாவரங்கள் இடம்பெறச் செய்வது தான் எனவே மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். இன்றுவரையிலும் கேள்விகள் தொடர்கின்றன மின்னஞ்சலிலும் அலைபேசியிலும்

நான் தாவரங்களிடமிருந்து நிறைய  கற்றுக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே உருவாக்கிக்கொள்வது,தன்னுடன் உணவுக்கும் காற்றுக்கும் நீருக்கும் போட்டியிடும் களைகளை பொருட்படுத்தாமல், தன்னை உண்ண வரும் சாகபட்சிணிகளையும் கவனிக்காமல்  எப்போதும் சூரியனை பார்த்து வளர்வது, தங்கள் இருப்பினாலே மனிதர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது இப்படி பல வகைகளில் அவை எனக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன அவற்றில் மிக முக்கியமான பாடமாக நான் கற்றுக்கொண்டது  you can bloom only when you are in a right place  என்பதை

அன்று அந்த இடம் அத்தனை சரியான பொருத்தமான இடமாக எனக்கு தாவரவியல் குறித்து பேச அமைந்திருந்தது.

பல்துறை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அந்த அமர்வில் தாவரவியல் குறித்த  விழிப்புணர்வை உண்டாக்க முடிந்ததில் நான் உளம் மகிழ்ந்திருக்கிறேன்

இரு நாட்களின் பல புகைப்படங்களில்  நான் வாய்நிறைய சிரித்துக்கொண்டிருக்கிறேன் அப்படியான சந்தர்ப்பங்கள் எனக்கு அரிதினுமரிதாகவே அமையும்.  அந்த மலர்ச்சி என் உள்ளத்திலிருந்து வெளிவந்தது

சென்ற மாதம் நான்  உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இத்துறையில் சேர மாணவர்கள் விருப்பப் படவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டிருந்தேன். நான் செவ்வாய்கிழமை கல்லூரி சென்றபோது அலுவலகத்திலிருந்து என்னை அழைத்து முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அந்த வார இறுதியில் முழுக்க முடிந்துவிட்டதாகவும் இனி மாணவர்களை சேர்க்கவேண்டாம் என்றும் கூறினார்கள்..  சுவாமி பிரம்மானந்தா சொன்னதுபோல’’ எதுவும் தற்செயலில்லைதான்’’

மாலை விருதுவிழாவில் விருந்தினர்களின் உரைகள் சிறப்பாக இருந்தன. கரசூர் பத்மபாரதியின் ஏற்புரை அந்த மேடைக்கான முதிர்ச்சி கொண்டிருக்கவில்லை எனினும் அவர் தன் இதயத்திலிருந்து நேரடியாக தான் உணர்ந்தவற்றை எந்த ஒப்பனையுமின்றி வெளிப்படுத்தினார்.. எனவே அந்த ஏற்புரை அசலான எளிய அழகுடன் இருந்தது.

அனைவரிடமும் விடைபெற்று புறப்படுகையில் குக்கூ ஸ்டாலின்  கடற்பாசி கலந்து தயாரிக்கப்படும் கடலைமிட்டாய்கள்  இரண்டை பரிசளித்து என் உரை மிகவும் சிறப்பானதாக இருந்ததென்று  பாராட்டினார்.

மனோ என்னும் தமிழ் முதுகலை படிக்கும் மாணவன் எனக்கொரு காகித மலரை பரிசளித்து  என்னை முன்பே சந்தித்திருந்தால் தாவரவியல் தான் படித்திருப்பேன் என்றான். மனம்பொங்கிய படியே இருந்தது. வீடுதிரும்ப நள்ளிரவானது எனினும் களைப்போ உறக்கமோயின்றி மனம் உற்சாகமாக பரவசமாக நிறைவாக இருந்தது.

19 வருடங்கள் முடிந்து 20 வருடங்கள் ஆகின்றன நான் கல்லூரி ஆசிரியப்யபணியில் இணைந்து.  நேற்று நான் சென்றதுபோல் அத்தனை மகிழ்வுடன் அத்தனை நிறைவுடன் முன்னெப்போதும் கல்லூரிக்குச் சென்றதில்லை.

உங்களுக்கு சொல்லிக்கொள்ள வழக்கம் போல நன்றிகள் மட்டும்.

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைஅறிவியல் என்றால் என்ன?
அடுத்த கட்டுரைஇந்தியா இதழ்