அறிவியல் என்றால் என்ன?

அன்பின் ஜெ.

அண்மையில் வெளிவந்த ஒரு நூலைக் குறித்து தங்களின் (தளம்) வழியாக வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

மதம், குடும்பம், சமூகம், அரசு – ஏன் கடவுளையே ஆளாளுக்கு விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றன. சாரு நிவேதிதா அண்மையில் எழுதிய “ஔரங்கசீப்” நாவல் bynge app-யில் கிடைக்கிறது. அதில் ஒரு சாதாரண அரண்மனை ஊழியன் (அன்றிருந்த அரசர்) ஔரங்கசீபை ஓரக்கண்ணில் பார்த்துவிடுவான், அதையே அசௌகரியக் குறைவாக ராஜசபை கருதியது, பேரரசரின் கண்ணை நேருக்கு நேர் பார்த்து வெறும் 250 / 300 ஆண்டுகளுக்கு முன்பு பேச யாருக்கும் தைரியம் இருந்ததில்லை.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஊர்க் கட்டுபாட்டை எல்லோராலும் மீறிவிட  முடிந்ததில்லை? 50 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் மூத்தோர், தாத்தா பாட்டியின் பேச்சை கடந்து சென்றுவிட முடிந்ததா? என பார்க்கும்போது இங்கு அனைத்து அதிகார நிறுவனங்கள் நிலைகுலைந்து போயிருப்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

ஆனால் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்கிற விதியின்படி இன்று அறிவியல் – இவை அனைத்து விஷயங்களின் அதிகாரத்தையும் எவ்வித கேள்வியுமின்றி எடுத்துக் கொண்டிருக்கிறதோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது.

அந்த தகிப்பை தணிக்கும்விதமாக ஒரு நூல் தட்டுப்பட்டது. அமெரிக்காவின் Purdue பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்பெற்ற சுந்தர் சருக்கை “What is science” என்கிற நூலை 2012-ஆம் ஆண்டு எழுதினார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழிந்த நிலையில் அது “அறிவியல் என்றால் என்ன?” என்று சீனிவாச ராமநுஜம் மொழிபெயர்ப்பில் சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நாடு விடுதலை அடைந்த போது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டபோது நேரு ஆற்றிய உரையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், நான் அதன் ஒலி நகலை அவ்வப்போது ஒலிக்கவிட்டு கேட்ப்பது வாடிக்கை.

“Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom.”

கம்பீரமாக பேசிய நேருவுக்கும், உடனிருந்த காமராஜர், கக்கன், ஜே.சி.குமரப்பா போன்ற இலட்சியவாதிகள் பலருக்கும் தோராயமாக ஐம்பது வயது இருந்திருக்கும், அதில் பெரும்பாலோர் வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் குறைந்தபட்சம் கால் நூற்றாண்டுகாலம் சிறையிலும், போராட்டத்திலும் கஷ்டப்பட்டவர்கள். எவ்வளவு பெரிய கனவு அது, என்ன பெரிய நம்பிக்கை பிரகடனம் அது.

“பல வருடங்களுக்கு முன்னர் நாம் விதியைக் குறித்த நேரத்தில் சந்திப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த நேரம் வந்து விட்டது. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில், இந்தியா சுதந்திரத்துடன் விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த நொடிப்பொழுது வரலாற்றில் மிக அரிதாகவே வரும். ஒரு வரலாறு முடிவுக்கு வந்து மற்றொரு புதிய வரலாறு உருவாகும் காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா இன்று மௌனம் கலைக்கிறது. இப்புனிதமான நேரத்தில், இந்திய மக்களாகிய நாம் மனித குலத்துக்குச் சேவை செய்ய நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்” என்பதாக நாடு விடுதலை அடைந்தபோது துவங்கியது  நேருவின் உரை. அதுமட்டுமல்ல,

… to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform; (i) to safeguard public property and to abjure violence; (j) to strive towards excellence in all spheres of individual and collective activity so that the nation constantly rises to higher levels of endeavour and achievement. அதாவது

“அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல் (ஒவ்வொரு) இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமை” என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (h) பிரிவு.

‘அறிவியலார்ந்த உளப்பாங்கை வளர்த்துக் கொள்வது’ இந்தியக் குடிமக்களின் கடமைகளில் ஒன்றாகவே முன்வைக்கப்படுகிறது. அறிவியலார்ந்த உளப்பாங்கைக் கொண்டிருப்பது உலகின் வேறு எந்த நாட்டிலும் அரசமைப்புக் கடமையாக முன்வைக்கப்படவில்லை. மிகவும் முன்னேறிய அறிவியல் சமூகங்கள்கூட அதன் குடிமக்களிடமிருந்து இப்படி எதிர்ப்பார்க்கவில்லை!

சுதந்திர இந்தியா பிறப்புக் கொண்ட அந்தத் தருணத்தில் அறிவியல் மீதான இந்த மோகத்தைத் தொழிற்சாலைகளோ தொழில்நுட்பங்களோ கொண்டிருக்கவில்லை என்று நம்புவதும் சாத்தியம். அறிவியல் மீதான இந்த நம்பிக்கை அப்பழுக்கற்றதாகவும் கபடமற்றதாகவும் இருந்தது. பிற நாடுகளில், பொதுமக்களின் விமர்சனப் பார்வைக்கு உட்பட்டவையாக அறிவியல் அமைப்புகள் இருக்கின்றன என்றால், இந்தியாவில் கொஞ்சமும் சமூகத் தணிக்கைகளுக்கு உட்படாமல் தனித்த தீவுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அறிவியல் என்றால் என்னவென்று பல தவறான புரிதல்கள் காணப்படுகின்றன. சமூகத்தில் அறிவியல் பெரும் செல்வாக்கு கொண்டிருக்கிறது, தாக்கம் செலுத்தி வருகிறது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் கொண்டிருக்கும் செல்வாக்கை நாம் கவனத்தில் கொள்வோம் என்றால் – அதுவும், அதில் எல்லாமும் மக்களுக்கும் சமூகத்துக்கும் நன்மை பயப்பதாக இருப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்வோம் என்றால், அறிவியலின் இயல்பை முன்பு எப்போதும்விட இப்போது புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

பொதுவாக, அறிவியல் என்பது பிரத்யேகமான அறிவு முறைமையாகவும், நாம் வாசிக்கும் ஒரு ‘வகை’ துறையாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால், அறிவியல் இதைவிடக் கூடுதலான ஒன்றாகிறது. அறிவியல் தான் படைக்கும் தொழில்நுட்பங்கள் ஊடாக நம்முடைய அன்றாட வாழ்வில் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படும் மிக முக்கிய பாடமாக இருக்கிறது. இப்படி, கற்றல் என்றால் என்ன என்பதிலும் செல்வாக்கு செலுத்துகிறது. இயற்கை உலகின் ரகசியங்களைக் கண்டறியும் ஒன்றாக முந்தைய அறிவியல் இருந்தது என்றாலும், இன்று அறிவியலார்ந்த அறிவு என்பது மருந்து தயாரித்தல், வேதியியல் தொழிற்சாலைகள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல், ராணுவ தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்ததாக இருக்கிறது.

ஆனால், இப்படியான தொழில்நுட்பங்கள்  குறித்தெல்லாம் யார் தீர்மானிக்கிறார்கள்? நம் சமூகங்களுக்கும் கைப்பேசிகள் மிக அவசியம் என்று முடிவெடுத்தவர்கள் யார்? இப்படியான அறிவைப் படைப்பதில் வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள் மட்டுமே முடிவெடுக்கிறார்களா அல்லது அறிவியலாளர்களும் பொறுப்பேற்க வேண்டியுள்ளதா? தொழில்நுட்பங்களின் தாக்கத்தால், எப்படிப்பட்ட கணிணிகளைக் காட்டிலும் மானுடர்களுக்கு மிக அவசியமான இயற்கை நீர் ஆதாரங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு, பருவநிலை நெருக்கடிகளைக் கண்டு, சூழலியல் பாதிப்புகளைக் கண்டு நாம் உண்மையிலேயே கவலைப்பட வேண்டும். கைப்பேசிகள் உட்பட டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தை – அதாவது, அவர்களுடைய படிக்கும் எழுதும் ஆற்றலில், கணிதவியல், கலை போன்றவற்றைச் செய்யும் ஆற்றலில் என்று மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் கொள்ளும் சமூக உறவில் ஏற்படுத்தும் பாதிப்பையும் நாம் கவனத்தில் கொள்வோம் என்றால் நாம் உண்மையிலேயே கவலைப்பட்டாக வேண்டும்.

அறிவியல் அதுவாகவே மானுட அக்கறைகளுக்கு முகம்கொடுக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமா அல்லது சாதாரண மக்களால் அது ஒழுங்கமைக்கப்ப்ட்ட ஒன்றாக இருக்க வேண்டுமா போன்ற கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அறிவியலாளர்கள் அவர்களுக்கென்று சொந்த சடங்குகளை, விதிகளை, அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தனித்த சாதிக் குழுமம் போலாகிறார்கள்.

இன்று மிகப் பெரும் அதிகாரத்தை அறிவியல் கொண்டிருக்கிறது. அதனால் உண்மை குறித்து அறிவியலிடமே பேச வேண்டியிருக்கிறது. இதைச் செய்வதற்கு நாம் அறிவியலை, அதன் நடைமுறைகளைத் தத்துவம், வரலாறு, சமூகவியல், பிற சமூக அறிவியல் துறைகளில் உள்ள அணுகுமுறைகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இன்று எவர் ஒருவர் அறிவியலை உண்மையாக ஆய்வுசெய்ய முயன்றாலும், இந்தியாவில் உள்ள இடது, வலது என்று இரு பக்கத்திலும் உள்ள சித்தாந்தவாதிகளால் எதிர்க்கப்படுகிறார்.

ஆனால், நாம் அறிவியலை விமர்சனபூர்வமாக ஆய்வு செய்யவில்லை என்றால், மதத் தலைவர்கள் சொல்வது குறித்துக் கேள்விகள் கேட்பதை மிகவும் கடினமாக்கும் ஒரு மதமாக அறிவியலை சுருக்குகிறோம் என்றே அர்த்தமாகிறது. நாம் இன்னும் பொறுப்புள்ள, இன்னும் மனிதத்தன்மையிலான அறிவியலைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகிறது. இது சாத்தியப்பட வேண்டுமானால் நாம் அறிவியலைத் திறந்த மனதோடு அணுக வேண்டியுள்ளது; அறிவியல் கோருவதை விமர்சனபூர்வமாகப் பார்க்க வேண்டியுள்ளது; வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அறிவியலை அறிவியலார்ந்த மனப்பாங்கு கொண்டு நாம் விமர்சனபூர்வமாக ஆராய வேண்டியுள்ளது.

அறிவியலின், அதன் நடைமுறையின் சிக்கலான, செழிப்பான இயல்பைப் புரிந்துகொள்வதற்கான சிறிய முயற்சியே இந்தப் புத்தகம்.  அறிவியல் என்ன செய்கிறது, எப்படியான கருத்தாக்கங்களில் அது நிலைத்துநிற்கிறது, எப்படியான உறவை அது மானுடர்களோடு கொண்டிருக்கிறது போன்றவற்றை இந்தப் புத்தகம் விளக்க முயல்கிறது. சொல்லப்போனால், அறிவியலார்ந்த படைப்பாக்கம், கலைகளில் காணப்படும் படைப்பூக்கத்தோடு பல அம்சங்களைப் பகிர்ந்துகொள்கிறது. மிகக் கவனமாகச் சிந்திப்பதன் ஊடாகவே அறிவியல் அறிவு சாத்தியப்படுகிறது. என்றாலும்கூட, திடீரென ஆழ்ந்த பார்வை ஒன்று கிடைப்பது, தவறுகள் செய்வதன் ஊடாகக் கிடைப்பது, ஏதோ ஒன்றைத் தவறாக அர்த்தப்படுத்துவதன் வழியாகக் கிடைப்பது போன்றவற்றின் ஊடாகவும் அறிவியல் அறிவு சாத்தியப்படுகிறது. அறிவியலின் பலம் அதன் கற்பனாசக்தியில் உள்ளது; இந்த உலகம் எப்படியாக இருக்கிறது, இந்த அண்டம் எப்படியாக இருக்க வேண்டும் என்பன குறித்தெல்லாம் எண்ணிலடங்கா கதையாடல்களை உற்பத்தி செய்ய முயல்வதில் அதன் பலம் உள்ளது. ஆனால், அறிவியலின் இந்தப் பலத்தை நாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியுள்ளது – இதை அறிவியலாளர்கள் செய்தால் மட்டுமே போதாது; குடிநபர்களும் செய்தாக வேண்டும். அறிவியல் என்பது ஏதோ மேற்கத்தியச் சிந்தனையின் விளைவானது மட்டும் அல்ல என்றும் இந்தப் புத்தகம் முன்வைக்க முயல்கிறது. இப்படி முன்வைப்பதன் அடிப்படை நோக்கம், அறிவியலை ஜனநாயகப்படுத்துவதே – அதாவது, நம் பிள்ளைகள் அறிவியலை ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒன்றாகப் பார்க்காமல் இருப்பதற்கும், அந்நியர்களால், வெள்ளையர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒன்றாகப் பார்க்காமல் இருப்பதற்கும் இது அவசியமாகிறது.

இந்தப் புத்தகத்தை 2012-ல் நேஷனல் புக் டிரஸ்ட் ஆங்கிலத்தில் வெளியிட்டது. அனேகமாக இந்த நூலுக்கு பிற இந்திய மொழிகளில் – தமிழில்தான் முதன்முறையாக  ஒரு மொழிபெயர்ப்பு வருகிறது, அதுவும் ஆங்கிலப் பதிப்பைவிடச் சற்றே விரிவாக்கம் என்றும் சொல்லலாம். இந்த மொழியாக்கத்தின் வழியாகத் தமிழ் மாணவர்கள், செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் புலத்தில் இது விவாதங்களை, உரையாடல்களைக் கொண்டு வருவதற்கான முதலடி எடுத்துவைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் காணப்படும் மேலான சமத்துவவாதம், பொதுத்தளத்தில் காணப்படும் அதன் துடிப்புமிக்க உரையாடல்களையும் கவனத்தில் கொண்டு சொல்வதென்றால் இதுபோன்ற நூல்கள் பலவும் தமிழில் வருவது மிக முக்கியமாகிறது.இது போன்ற புத்தகங்களை மொழியாக்கம் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. மொழியாக்கம் என்பதும் ஒரு கலையே. இதுபோன்ற புத்தகங்களை மொழிபெயர்ப்பவர்கள் தனித்துவமிக்க கலைஞராகிறார்கள். சீனிவாச ராமாநுஜம் போன்ற ஒரு மொழிபெயர்ப்பாளர், இந்த (நூலின்) தமிழ் வடிவத்தின் ஆசிரியராகவும் ஆகிறார். இந்த நூலிலுள்ள சிக்கலான பல விஷயங்கள் குறித்து அவர் கொண்டிருக்கும் மிக ஆழ்ந்த புரிதலை மொழியாக்கத்திற்குள் கொண்டு வருகிறார்.

இந்தியத் தத்துவார்த்த மரபுகள் உட்பட, மேற்கல்லாத பிற தத்துவ மரபுகள் எல்லாமும் அறிவறிதல் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொண்டன என்று பார்ப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்தியத் தத்துவ மரபுகளில் புறவயத்தன்மை – அகவயத்தன்மை, புலன்சாரா – புலன்சார் இருமைகள் ஏன் சாத்தியப்படவில்லை என்றும், மேற்கத்திய தத்துவத்தில் ஏன் இவை சாத்தியப்பட்டன என்றும் சுந்தர் இந்த நூலில் விவாதிக்கிறார்.

இந்தியத் தத்துவ மரபுகளைப் பொறுத்தமட்டில் புறவுலகம் இல்லாமல் மொழியும் இல்லை, பிரக்ஞையும் இல்லை. மொழியும் பிரக்ஞையும் இல்லாமல் புறவுலகம் எப்படியான அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. சங்க இலக்கிய அகம்-புறம் கோட்பாடு இப்படியான பார்வைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகிறது. அகப்பாடல்கள் புறத்தை விவரித்து அகத்தை வெளிப்படுத்துகின்றன என்றால், புறப்பாடல்கள் அகத்தை விவரித்துப் புறத்தை வெளிப்படுத்துகின்றன. ஏ.கே.ராமானுஜனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், சங்க இலக்கியத்தில் அகமும் புறமும் கண்ணாடியைக் கண்ணாடி பிரதிபலிப்பதுபோல் ஒன்றையொன்று பிரதிபலிக்கின்றன. இதில் மானுட எழுவாயும், பௌதிக உலகமும் ஒன்றோடொன்று கரைந்து வெளிப்படுகின்றன. அறிவியல் அறிவையும் இப்படி நுட்பமான செயற்பாங்கின் ஊடாகவே நாம் அணுக வேண்டும். இதைத்தான் இந்த நூலில் சுந்தர் சருக்கை செய்கிறார்.

ஒவ்வொரு கருத்தாக்கமும் அதற்கான வரலாற்றைக் கொண்டிருக்கிறது; அதற்கான அர்த்தபுலத்தைக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக Science, democracy, equality, liberty, fraternity, secularism போன்ற சொற்களுக்கு நிகரான சொற்கள் தமிழ், சம்ஸ்கிருதம் உட்பட எந்த இந்திய மொழிகளிலும் இல்லாததால், இந்தியச் சிந்தனைகள் இவை குறித்தெல்லாம் அக்கறை எதுவும் கொண்டிருக்கவில்லை என்ற முடிவுக்கு வர முடியுமா? Untouchability என்ற சொல்லுக்கு நிகரான சொல் இந்திய மொழிகளில் இல்லை என்பதால், சமூகத்தில் தீண்டாமை என்ற நடைமுறை இல்லையென்று ஆகிவிடுமா? ஆங்கிலக் கருத்தாக்க சொற்களுக்கு ஒத்து இந்திய மொழிகளில் சொற்கள் இல்லை என்பதால், இந்தக் கருத்தாக்கக்கள் நம் சிந்தனை மரபுகளில் இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. ஆங்கிலத்தில் உள்ள ஒரு கருத்தாக்கத்தின் அர்த்தப்புலத்தை நம் மொழியில் உள்ள அர்த்தப்புலத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, சொற்களை ஒப்பிட்டுப் பார்த்து அந்தக் கருத்தாக்கம் நம்மிடம் இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டியதில்லை. இது சாத்தியப்பட, நாம் கருத்தாக்கச் சொற்களை நேரடித்தன்மையிலாக மட்டுமே அணுகாமல், அதை உருவகரீதியாகவும் குறிபீட்டுரீதியாகவும் அணுக வேண்டியுள்ளது.

சொல்லப்போனால், சமூக அறிவியல், தத்துவம், அறிவியல், கலை–இலக்கியம் போன்ற துறைகள் கொண்டிருக்கும் கருத்தாக்கங்களுக்கு இப்படியான எளிமையான விளக்கத்தைக் கொடுக்கும் கையேடு நமக்கு மிகவும் அவசியமாகிறது. கருத்தாக்கச்  சொற்களுக்கு  தமிழில் வார்த்தைகளை உருவாக்குவது மிகவும் அவசியமென்றாலும், அது மட்டுமே போதுமானதாக இல்லை. ஒரு கருத்தாக்கச் சொல்லின் அர்த்தப்புலத்தை கொடுப்பதும் அவசியமாகிறது. ஆக, பலவிதமான கருத்தாக்கங்களை நம் சிந்தனையின் பகுதியாக உள்ளிணைத்துக்கொள்ள இப்படியான கையேடுகள் நமக்கு அவசியமாகின்றன.

ஆக, தொடங்கும் விதமாக நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான் : மிகச் சரியாக – அறிவியல் – என்றால் – என்ன? அறிவியல் என்று சொல்லும்போது மிகச் சரியாக நாம் எதைக் குறிக்கிறோம்? நம்மில் பெரும்பாலானோர், படிக்கும் பாடங்களின் பின்னணியிலிருந்துதான் அறிவியல் குறித்து அறிந்துகொள்கிறோம். பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களைத் தனித்தனியாக பயில்வதற்கு முன், அறிவியல் ஒரு பாடமாக நமக்குக் கற்றுத்தரப்படுகிறது.

இந்த புத்தகம் அறிவியலை வரையறுக்க முயல்கிறது. வெகுஜனக் கற்பனையில், அறிவியல் என்பது ஏரணம் (logic) பகுத்தறிவு, உண்மை, அறிவு, புத்திக்கூர்மை போன்ற கருத்தமைவுகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. இந்த புத்தகம் இந்த அனுமானங்களை மறுவாசிப்பு செய்ய முயல்கிறது – அதாவது, இவற்றையெல்லாம் அறிவியல் கொண்டிருக்கவில்லை என்று மறுக்காமல், மெய்யாக அறிவியல் என்பது எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது என்று காட்ட முயல்கிறது.

இந்தச் சிக்கலே, அறிவியல் குறித்து முன்வைக்கப்படும் எளிமையான வரையறை எதுவாக இருந்தாலும் அதை மறுதலிப்பதாக இருக்கிறது. முதல் இயல், ‘அறிவியல்’ என்ற சொல்லைப் பல்வேறு வழிகளில் நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்று விளக்க முயல்கிறது. பொதுச் சமூகத்தை பொறுத்தமட்டில் ‘அறிவியல்’ அறிவியலாளர்கள் ஆகிய இரண்டு சொற்களுமே ஒத்த பொருளைக் கொண்டிருப்பவையாக இருக்கின்றன. சொல்லப்போனால், அறிவியலாளர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் அறிவியல் என்றே பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆக, அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு நாம் அறிவியலாளர்கள் என்ன செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள் என்று நிச்சயமாக பார்க்க வேண்டியுள்ளது. இரண்டாவது இயல், அறிவியலாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று, அதாவது அன்றாடத்தன்மையிலும் என்ன செய்கிறார்கள் என்று விவரிக்க முயல்கிறது. தர்க்கரீதியானது அறிவியல் என்ற கருத்து மிகவும் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பார்வையே, அறிவியலாளர்கள் எல்லோரும் தர்க்கத்துக்கு உட்பட்டு – அதாவது, அவர்கள் அறிவியல் செய்யாதபோதும் – செயல்படுகிறார்கள் என்று கொண்டிருக்கும் பொதுவான நம்பிக்கைக்குக் கொண்டுவிடுகிறது. மூன்றாவது இயல், அறிவியலுக்கும் தர்க்கத்துக்கும் இடையேயான உறவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. இதைப் புரிந்துகொள்ள, முதலில் தர்க்கம் (logic) என்றால் என்னவென்று நாம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்த இயல், இந்திய தர்க்கம் உட்பட, உலகளாவிய தர்க்கம் குறித்த சில அடிப்படைகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அறிவியலின் இயல்பைப் புரிந்துகொள்ள இந்திய தர்க்கமுறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்க முடியும் என்றும் விளக்க முயல்கிறது.

அறிவியல் வேறு எந்தத் துறைகளைக் காட்டிலும் மெய்ம்மை (reality) என்ற உள்ளடக்கத்தோடு துடிப்புமிக்க ஈடுபாட்டைக் கொண்டிருக்கிறது. அறிவியல் அதன் கருவிகள் ஊடாகப் புதிய மெய்ம்மைகளைத் திறந்துகாட்டுகிறது.  நான்காவது இயல், அணுக்கள், எலக்ட்ரான்கள், குவார்க்குகள், மரபணுக்கள், டி.என்.ஏ.க்கள், பாலிமர்கள் , புரோட்டீன்கள் போன்ற பலவற்றையும் மெய்யாக இருக்கின்றன என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். அறிவியல் விவரிக்கும் மெய்ம்மை எவ்வளவு சிக்கலான ஒன்றாக இருக்கிறது. அறிவு, உண்மை மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை மெய்ம்மையே நிலைகொள்ளச் செய்கிறது. நாம் தார்மீக அறிவு, மத அறிவு, அன்றாட வாழ்வுக்கான அறிவு என்று பலவிதமான அறிவுகளைக் கொண்டிருக்கிறோம். அறிவியல் அறிவு என்பது பிரத்யேகமான ஒரு அறிவாகிறது. ஐந்தாவது இயல், அறிவியல் அறிவு என்ற கருத்தமைவை எடுத்துக்கொள்கிறது. அறிவியல்களில் கணிதவியல் ஏற்கும் பிரத்யேகப் பாத்திரம் குறித்து இந்த இயல் விவாதிக்கிறது.

ஆறாவது இயல் இந்த உள்ளடக்கத்தை, அறிவியலின் பல்-பண்பாட்டு மூலாதாரம் குறித்த கோரல் உட்பட, துருவியகழ்கிறது. இந்த இயல், அறிவியல் மற்றும் அறம் குறித்து நீண்ட விவாதத்தோடு முடிகிறது. கடைசியாக எட்டாவது இயல், அறிவியல் வெற்றிகளுக்கான காரணங்களையும் அதன் போதாமைகளையும் தொகுத்துக் கொடுக்கிறது.

இந்தப் புத்தகம், அறிவியலைத் தற்போக்குத்தனமாக அர்த்தப்படுத்தும் முறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது – இதன் உள்ளடக்கமும் இந்த வரிசையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது; (1) அறிவியல் குறித்த பொதுவான பார்வையை, குறிப்பாக தர்க்கம், மெய்ம்மை, அறிவு, மானுட எழுவாய் ஆகியவற்றுடன் அது கொண்டிருக்கும் உறவை விமர்சனப்பூர்வமாகப் புரிந்துகொள்வது (2) அறிவியலை மிகத் தெளிவாகவும் எளிமையான வகைமைகளாகவும் சுருக்குவதை அனுமதிக்க மறுக்கும் சிக்கலை அறிவியல் செயல்பாடுகள் எப்படி வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்குவது. இப்படிச் செய்வதன் ஊடாக ‘அறிவியல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ஒரு அறிவியலாளரோ, அறிவியல் வரலாற்றியலாளரோ, அறிவியல் சமூகவியலாளரோ பதில் சொல்லியிருக்கும் வழியில் (சுந்தர் சருக்கை) பதில் சொல்லவில்லை. ஆனாலும், அறிவியலின் இயல்பு குறித்து நாம் பல்வேறு வழிகளில் சிந்திப்பதற்கான வழியை இந்தப் புத்தகம் திறந்துவிடும்.

இது அறிமுகப் புத்தகம் என்பதால், இது கல்விப்புல பாணியில் எழுதுவதைக் கூடுமானவரை தவிர்க்கப்பட்டுள்ளது. முதல் வாசிப்பில் புரிந்துகொள்வதற்கு சிரமமான பகுதிகள் இங்குமங்கும் சில இருக்கலாம். வாசகர்கள் இந்தப் பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பின்னர் இந்தப் பகுதிகளுக்குத் திரும்பிவரலாம்.  இந்தப் புத்தகம், அறிவியலின் இயல்பு குறித்த அக்கறையுடைய மாணவர்களும் மற்றவர்களும் மற்றவர்களும் அதுகுறித்து தாங்கள் கொண்டிருக்கும் வெகுளித்தனமான அனுமானங்களைக் கவனமாகவும் ஆழமாகவும் விசாரணை செய்வதற்கு உந்துதல் கொடுக்கும். இந்தப் புத்தகம், அறிவியலாளர்கள் கவனத்தை ஈர்ப்பதோடு, அறிவியல் செயல்பாடுகளின் அடிப்படை இயல்புகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்குப் போதுமான கருவிகளைக் கொடுக்கும். இந்தப் புத்தகம் சமூக அறிவியல் மற்றும் மானுடத் துறைகளிலும், கலைத் துறைகளிலும் உள்ள மாணவர்களுக்கும், தொழில்முறையாக இருப்பவர்களுக்குமானது. இந்தப் புத்தகம், இயற்கை அறிவியல் நிறுவனத்தோடு இன்னும் பிரக்ஞைபூர்வமாகவும் தன்னம்பிக்கையோடும் இவர்கள் ஊடாடுவதற்கு வழிவகுக்கும்.

அறிவியலின் பலம் அதன் கற்பனாசக்தியில் உள்ளது; இந்த உலகம் எப்படியாக இருக்கிறது, இந்த அண்டம் எப்படியாக இருக்க வேண்டும் என்பன குறித்தெல்லாம் எண்ணிலடங்கா கதையாடல்களை உற்பத்தி செய்ய முயல்வதில் அதன் பலம் உள்ளது. ஆனால், அறிவியலின் இந்தப் பலத்தை நாம் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியுள்ளது. – இதை அறிவியலாளர்கள் செய்தால் மட்டுமே போதாது; குடிநபர்களும் செய்தாக வேண்டும், அறிவியல் என்பது ஏதோ மேற்கத்தியச் சிந்தனையின் விளைவானது மட்டுமல்ல என்றும் இந்தப் புத்தகம் முன்வைக்க முயல்கிறது.

அறிவு என்பது சமூகத்தால் உற்பத்தி செய்யப்படும் பண்டம். மேலும் இது, அதிகாரம் குறித்த கதையாடலோடு உள்ளார்ந்து இணைந்திருக்கிறது. நிறுவன ரீதியாக நன்கு நிறுவப்பட்டிருக்கும் கட்டமைப்பின் பகுதியாக இருக்கும் தனிமனிதக் சமுகங்களே அறிவை உற்பத்தி செய்கின்றன. அறிவு பண்பாட்டு ரீதியான இடையீட்டைக் கொண்டிருக்கும் ஒன்றாகவும் இருக்கிறது – அதாவது, ஒரு பண்பாட்டுக்கு எது அறிவாக அமைப்பாக்கம் பெறுகிறதோ அது வேறொரு பண்பாட்டுக்கு அறிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, பல பண்பாடுகளில் காணப்படும் உள்ளூர் மருத்துவ முறைமைகள். இந்த மருத்துவ முறைமைகளெல்லாம் உடலோடும் உடல்நலத்தோடும் தொடர்புடைய அறிவு முறைமைகளாக நாம் பார்ப்போம் என்றால், இவை நடைமுறையில் பயன்படுத்தும் கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும் பெருமளவு வேறுபட்டதாக இருக்கின்றன என்றே பொருள்.

நவீன உலகின் எல்லா மட்டங்களிலும் அறிவியல் என்ற கருத்து தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், அறிவியலின் இயல்பு, அதாவது உண்மையிலேயே அறிவியல் என்றால் என்ன என்பது பிடிபடாமல்தான் இருக்கிறது. பொதுவாக, அறிவியல் என்பது உண்மை, பகுத்தறிவு, புறவயத்தன்மை, அறிவு, மேதைமை போன்ற உள்ளடக்கங்களோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், இப்படியான நம்பிக்கைகளெல்லாம் உள்ளபடியே எந்த அளவுக்கு உண்மையானவை? ஆக, இந்தப் புத்தகம் அறிவியல் குறித்துத் தத்துவார்த்தரீதியாகச் சிந்திப்பதற்கான வழியை ஏற்படுத்தித் தருகிறது. அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான சில இந்தியச் சிந்தனைச் சட்டகங்களையும் அறிமுகப்படுத்துகிறது. அறிவியலைப் பின்னணியாகக் கொண்டு, தர்க்கம் முதல் அறம் வரை என விரிவான தளங்களைக் கையாள்கிறது. இவற்றோடு, முக்கியமான சில தத்துவக் கருத்தாக்கங்களுக்கும் அறிவியல் கருத்தாக்கங்களுக்கும் ஆசிரியர் (சுந்தர் சருக்கை) அளித்த எளிமையான விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன;  இது (What is Science, National Book Trust ஆங்கில பதிப்பில் இல்லாத) இந்த தமிழ்ப் பதிப்பின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

சுருக்கமாகச் சொன்னால், அறிவியலின் இயல்பு மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும், அறிவியலின் இலட்சியம் மீது பெரும் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இந்த நூல் உதவியாக இருக்கும். அறிவியலை அதன் சிக்கல்களோடும், அதன் பலம் மற்றும் பலவீனங்களோடும் புரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான புத்தகம் இது.

(…அறிவியல் என்றால் என்ன: ஒரு தத்துவார்த்த வாசிப்பு நூல் உள்ளடக்கத்திலிருந்தும், மேற்கோள்களின்  பகுதியையும் மாதிரியாக கொண்டு எழுதப்பட்ட அறிமுகக் கட்டுரை…)

கொள்ளு நதீம், ஆம்பூர்.

முந்தைய கட்டுரைபிரமோ உஷார்!
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி, ஈரோடு விழா -கடிதம்