நலம்தானே?
தமிழ்விக்கி – தூரன் விருதுவிழா சிறப்பாக நிகழ்ந்ததை அறிந்தேன். ஈரோட்டுக் காரரான தூரனைக் கௌரவிக்க ஈரோட்டில் இருந்து பெரும்பாலும் எவரும் வரவில்லை என்று எழுதியிருந்தீர்கள். அது ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் ஈரோட்டுக்காரன், இன்று வெளியூரில் வசிக்கிறேன்.
ஈரோட்டில் அவ்வாறான ஆர்வங்களேதும் இல்லை. ஈரோட்டின் பண்பாட்டுச்சுழல் வியாபாரம்தான். வியாபாரநகரத்திற்குரிய மனநிலைகளே அங்கே உள்ளன. மற்ற நகரங்கள்போல ஈரோட்டில் கல்விச்சூழல்கூட கிடையாது. கல்வியேகூட முதல்போட்டு லாபம் எடுக்கும் வியாபாரம்தான். ஒரு கூட்டத்திற்கு வருவதிலேயே விஐபிக்களை சந்திப்பது, பழக்கம் வைத்துக்கொள்வது என்று பல கணக்குகள் இருக்கும்.
வியாபாரம் நிகழும் ஊரின் மனநிலை எப்போதும் ஒருவகை பதற்றம், கணக்குபோட்டுப்பார்த்தல் இதெல்லாம்தான். களைப்பகற்றுவதற்காக அவர்கள் சிலசமயம் சில கேளிக்கைகளுக்கு வரலாம். ஆகவேதான் ஈரோட்டிலே நகைச்சுவைப் பட்டிமன்றம் மிகப்பிரபலம். அதற்கு சிலர் செல்வார்கள். மற்றபடி இங்கே எந்த ஒரு கலாச்சாரக் கவனமும் இல்லை. இருந்திருந்தால் நீங்கள் வந்து தூரன் பற்றி சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
விழா மிகச்சிறப்பாக நடைபெற்றதை காணமுடிகிறது. மேடையமைப்பு அழகாக உள்ளது. கரசூர் பத்மபாரதியின் பேச்சு உற்சாகமானதாக இருந்தது. தமிழில் நல்ல ஆய்வுகள் அறிவுத்துறையால் கவனிக்கப்படுவது தொடரவேண்டும்.
அருண் கார்த்திக்
அன்புள்ள ஜெ,
தமிழ் ஆய்வுத்துறைக்கும் இலக்கியத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாமலிருப்பதையும், அதன்விளைவாக சமூக -அரசியல் புரிதல்களேதும் இல்லாமல் நம்மவர்கள் மேலைநாட்டு எழுத்துக்களை காப்பியடிப்பதையும் உங்கள் உரை வழியாக உணரமுடிந்தது. உங்கள் பேச்சில் சொல்லாத விஷயம், சமீபத்தியபுனைவுகள் பல நெட் சீரியல்களை ஒட்டி எழுதப்பட்டவை. இந்த விருதுகள் வழியாக ஆய்வுகள் மேல் ஒரு வகை ஆர்வம் உருவானால் அது நல்லது.
கரசூர் பத்மபாரதியின் ஆய்வுகளை முன்னால் செல்லும் முதல்பறவை என்று உரையிலே குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த பறவையை தொடர்ந்து நம்முடைய ஆய்வுலகமும் எழுத்துலகமும் செல்லுமென்றால் நமக்கு அசலான ஓர் இலக்கிய சூழல் அமையும் என்று நினைக்கிறேன்.
ராஜ்குமார்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
கரசூர் பத்மபாரதியின் விருதுவிழா உற்சாகமாக நிகழ்ந்தது அறிந்து நிறைவு, மகிழ்ச்சி. விஷ்ணுபுரம் அமைப்பின் அறிந்த முகங்களை சபையில் காணமுடிந்தது.
அ.கா.பெருமாள், கு.மகுடீஸ்வரன் உரைகள் நேர்த்தியானவை. ஆய்வாளர்களின் உரைகள் உணர்ச்சிகரமாக இல்லாமல், போகிறபோக்கிலேயே வந்து விழும் ஏராளமான தகவல்களுடன் செறிவாக அமைந்திருக்கும் என்பதைக் காணமுடிந்தது.
இந்த விக்கி விருது அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் முனைவர் பட்ட ஆய்வேடுகளில் இருந்து சிறந்த இரண்டை தெரிவுசெய்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பரிசு (ஐம்பதாயிரம்) வழங்கலாம். அது அந்த ஆய்வேடு கவனிக்கப்படுவதற்கு வழியமைக்கும். அந்த ஆய்வேடு நூல்வடிவமாக அமையவேண்டியதில்லை. சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டின் நகலே போதுமானது.
அத்துடன் முறையான கல்விச்சார்பு இல்லாமல் சுதந்திரமாகச் செய்யப்படும் ஆய்வேடுகளையும் பரிசீலிக்கலாம். அவற்றுக்கும் விருது அளிக்கலாம். அவர்களிலும் ஆண்டுக்கு ஒருவருக்கு பரிசளிக்கலாம்.
நல்ல ஆய்வுகள் பெருகவேண்டும். இப்போதுதான் இலக்கியத்துறை ஆய்வுகளை கவனிக்க ஆரம்பித்திருப்பது நல்ல விஷயம்.
எம் .மகாலிங்கம்
தூரன் விருது விழா, 2022 – தொகுப்பு