க.நா.சு காணொளி அரங்கு, அமெரிக்கா – யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். ஆகஸ்ட் 6, 2022, க.நா.சு. உரையாடல் அரங்கு நிகழ்வில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு இனிதே நடந்தேறியது. அன்று வெவ்வேறு உரையாடல்கள் / நிகழ்வுகள் இருந்ததால், வழக்கத்துக்கு மாறாக எண்ணிக்கையில் குறைவான நேயர்கள் வந்ததுபோல் ஒரு தோற்றம் இருந்தது. zoom-ல் தெரிந்த எழுத்தாளர்கள் நண்பர்கள் சுனீல் கிருஷ்ணன், சுஷில் குமார், KP வினோத், லோகமாதேவி, ரம்யா என ஒவ்வொருவரும் வணக்கம் சொல்ல, நலம் விசாரிக்க, நிகழ்வு களை கட்டியது. யுவன் அவர்களும் பத்து நிமிடம் முன்னரே வந்துவிட்டார். இணையத்தின் வழியாக காப்பியோ டீயோ கொடுக்கமளவு இன்னும் தொழில் நுட்பம் வளரவில்லையாதலால், புன்னகையையும் வணக்கங்களையும் பரிமாறிக்கொண்டோம்.

ஒருங்கமைப்பாளர், ஜாஜா, ஊரடங்கு காலத்தில் நாம் ஒருங்கிணைத்த இணைய நிகழ்வுகளை நினைவு கூறி, அதன் வழியாக நாம் அந்தக்காலத்தை இனிதே கடந்து வந்ததையும், தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான க.நா.சு-வின் நினைவாக உரையாடலை மீண்டும் துவக்கும் முக்கியவத்தை எடுத்துச் சொல்லி நிகழ்வை துவக்கிவைத்தார். விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார், கபிலரின் ‘வேரல் வேலி’ பாடி இலக்கிய கூட்டத்திற்கான மன நிலையை ஏற்படுத்திக்கொடுத்தார். ராஜன் சோமசுந்தரம் , இசையமைத்து ஜெயஸ்ரீ பாடி சந்தம் இசைத்தொகுப்பில் வெளி வந்த பாடல்தான் என்றாலும், இதை மேலும் சில மாற்றங்களை செய்து பாடியதால், நாங்கள் அதில் ஒரு புதுமை இருந்ததை உணர்ந்தோம். யுவனும், மகிழ்ந்து விஷ்ணுப்ரியாவை பாராட்டினார்.

நான் , கரட்டுப்பட்டி கிருஷ்ணனாக, கொஞ்சம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகள், கொஞ்சம் எப்படி யுவனின் படைப்புகள் எனக்கு அணுக்கமாயின என்று ஒரு உரையாடினேன் (ஊசலாடினேன்?). விஸ்வநாதன் மகாலிங்கம், யுவன் அவர்களின் நீர்ப்பறவைகளின் தியானத்தை முன் வைத்து சிறு உரையாற்றினார். பத்துக்கதைகள் உள்ள அந்தப் புத்தகத்தில், அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் போல 37 கதைகள் என்று வாசகனாக அவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அவரது உரை, யுவனின் கதைகளை வாசிக்காத வாசகர்களுக்கு புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் வகையில் அமைந்தது. ப்ளாக் வைத்துக்கொள்ளாத யுவன் அவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்று தனது background screen-ல் நீர்ப்பறவைகளின் தியானம் நூல் வாங்க QR code வைத்திருந்தார்.

யுவனுடன், நிகழ்வுக்கு முன்னர் பேசிய உரையாடல்களில் அமெரிக்காவில் இருக்கும் நீங்கள் எல்லோரும் எப்படி என் புத்தகம் வாங்குவீர்கள் என்று கேட்டார். அமேசான் தான், அதில் யுவன் என்று தேடினால் இரண்டு பக்கங்களுக்கு புத்தகங்கள் வருகிறது. ஸ்டார் பக்ஸ் காப்பியைவிட நூல்கள் மலிச்சம்தான், நண்பர்கள் வாங்கிபடிப்பார்கள் என்றேன். “அமேசானில் பெயரற்ற யாத்ரீகன் கிடைக்கிறதா?” என்றார். எங்கள் ஊர் பெட்டிக்கடைக்காரரைப் போல அதுதான் இல்லை என்றேன். ஆனால், அதையும் படித்து , வேணு தயாநிதி பேசுவதற்கு தயாராக வந்திருந்தார். ‘கவிதை என்றால் என்ன?’ என்று கேட்கும் சூழ் நிலை இன்னும் உள்ளது என்பதாலோ என்னவோ, வேணு ஜென் கவிதைகள் பற்றி சிறு விளக்கத்துடன் ஆரம்பித்து, யுவன் மொழியாக்கம் செய்த சீன / ஜப்பானியக் கவிதைகளை வாசித்து, நிலவின் வெளிச்சத்தை மட்டும் விட்டுச் செல்லும் திருடனை அறிமுகப்படுத்தினார்.

இதற்கு அப்புறம் கேள்வி பதில் நேரம். யுவனிடம் கடிவாளத்தை கொடுத்தபிறகு உரையாடல் நிற்குமா என்ன? ஒவ்வொரு கேள்விக்கும் சிரிக்க சிந்திக்க என்ற பாணியில் அவர் பதில் இருக்க, நேரம் போவதே தெரியாமல் நிகழ்வு நடந்தது. வாசகர்களும் சரி, யுவனும் சரி நிகழ்வை மேலும் இரண்டு மணி நேரங்கள் தொடர்ந்திருந்தாலும் கலகலப்பாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டு சென்றிருப்பார்கள். நம் நிகழ்வுகளில் நேரத்திற்கு கொடுக்கும் கட்டுப்பாட்டை எடுத்துச் சொல்லி அரை மனதுடன் நிறைவு செய்தோம்.

நிகழ்வு முடிந்து , இங்கெ அங்கே என்று மட்டும் திருத்தங்கள் செய்து அன்று இரவே vishnupuramUSA தளத்தில் முழு உரையாடலும் கிடைக்கும்படி செய்துவிட்டோம்.
அ. முத்துலிங்கம் அவர்கள் நிகழ்வுக்கு வரமுடியவில்லை என்பதால், நிகழ்வின் நிரலை அனுப்பி வைத்திருந்தேன். முழு நிகழ்வையும் பார்த்துவிட்டு, யுவன் அவர்களின் மனம் திறந்த பதில்களையும், மொழியாக்கங்கள் குறித்த யுவனின் அனுபுவப்பூர்வமான தெளிவான பார்வையையும் பாராட்டி பதில் எழுதியிருந்தார்.

க.நா.சு உரையாடல் அரங்கில் இணையவழி உரையாடல் தடங்களின்றி நடைபெற பின்னணியில், நண்பர்கள் ஸ்கந்த நாராயணன் , பிரகாசம் உதவி செய்தார்கள். எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கும், உங்களின் வழி நடத்தலுக்கும் நன்றி.

அன்புடன்,
சௌந்தர்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா

[email protected]

முந்தைய கட்டுரைஒளி நின்ற கோணங்கள்- தாமரைக்கண்ணன்
அடுத்த கட்டுரைதெரியாமல் தொட்ட வீணை