நேற்றைய ஈரோடு நிகழ்வுக்கு நண்பர்கள் நாங்கள் வந்திருந்தோம்.நேர்த்தியான நிகழ்ச்சி ஏற்பாடுகள் மனதுக்கு நிறைவாக இருந்தது.
நிகழ்ச்சியை நெறிப்படுத்திய தம்பி மயங்கி விழுந்ததும் கிருஷ்ணன் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்ட லாவகமும் நிகழ்ச்சிக்கு தெளிவை தந்தது.
அ.க.பெருமாள் அவர்களின் விளிம்பு நிலை மக்களின் நிலை குறித்து பேசியதும் பத்மாவதிக்கு சில நுண்ணிய யோசனைகள் சொன்னதும் அருமை.
உங்கள் உரையில் தமிழ் விக்கி தொடங்க வேண்டிய அவசியமும் அதைத் தொடர்ந்த இடர்பாடுகளும் அதை வெற்றி கண்ட விதமும் தமிழ் செய்த நல்லூழ்..
பத்மாவதி ஏற்புரையில் அவரின் வெகுளியான பேச்சில் நரிக்குறவர்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கான ஆய்வுக்கு அவர் பட்ட சிரமங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.பத்மாவதி உங்களைப் பற்றி பேசும்போது உங்கள் புன்னகை ஏற்பும் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.
ஏராளமான தகவல்களோடும் மகிழ்வோடும் நற்சிந்தனைகளோடும் வீடடையும்போது அதிகாலை மணி 2.30.
நன்றி.
அன்புடன்
மூர்த்தி /விஸ்வநாதன்
வாழப்பாடி.
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதின் இன்னொரு வடிவம் போலவே தமிழ்விக்கி- தூரன் விருதும் அமைந்திருந்தது. அதேபோல பிரம்மாண்டமான கல்யாணமண்டபம். கீழே உணவுக்கூடம். மேலே விழா அரங்கு. நூறுபேருக்குமேல் தங்குவதற்கான ஏற்பாடுகள். ஐந்துவேளை உணவு. விரிவான எழுத்தாளர் – சந்திப்பு அரங்குகள்.
தமிழில் ஆய்வாளர்களுக்கு கல்வித்துறைக்கு வெளியே இடமே இல்லை என்பதுதான் நடைமுறை. நல்ல ஆய்வுகள்கூட வெளியே தெரியாது. அதேசமயம் ஜனரஞ்சகமாக யூடியூபில் சாதி, மத, இனக்காழ்ப்புகளைக் கொட்டி வரலாற்றாய்வு பண்பாட்டாய்வு என்றெல்லாம் பாவலா காட்டினால் புகழ்பெறலாம். ஆய்வாளர்களுக்கென்று இப்படி ஓர் அரங்கு அமைவது மிகமிக இன்றியமையாது. இந்த அரங்கு ஆய்வாளர்களுக்கு மட்டும் உரியதாக நீடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
மேடையிலும் அரங்கிலும் அ.கா.பெருமாள், கு.மகுடீஸ்வரன், லோகமாதேவி மூவருமே நன்றாகப்பேசினார்கள். கு.மகுடீஸ்வரன் கொங்குவட்டார ஆய்வாளர். முப்பதாண்டுகளாக எழுதி வருபவர். ஆனால் அவரைப் பற்றி நான் கேள்விப்படுவதே இப்போதுதான். நானும் இதே வட்டம்தான். எந்த இடத்திலும் எவரும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. எண்ணிப்பார்த்தால் இப்படி எத்தனைபேர் இருப்பார்கள் என்ற ஆச்சரியமே உருவாகிறது. நீங்கள் செய்துகொண்டிருப்பது பெரும் பணி. வாழ்க
செந்தில்ராஜ்
அன்புள்ள ஜெ.
நலம்தானே?
நான் தமிழ் சமூக ஊடகங்களை அவ்வப்போது பார்ப்பவன். கொஞ்சநாள் முன்னால் நிறையவே கவனித்துவந்தேன். முழுக்கமுழுக்க எதிர்மறைத்தன்மை. கசப்பு. எந்த இடத்திலும் வசைபாடுவதற்கும் ஏளனம் செய்வதற்கும்தான் முட்டிமோதி வருகிறார்கள். அதற்கு தமிழ்ப்பெருமை இனப்பெருமை என்று எதையாவது சொல்கிறார்கள். ஒரு விஷயத்தை வாசித்துப் புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றுபவர்களே குறைவு. வெறும் வெறுப்பு கக்குதல் மட்டும்தான்.
அப்படி வெறுப்பையே வாங்கிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் நீங்கள். அந்த வெறுப்பு வழியாகவே நானும் உங்களை அறிந்துகொண்டேன். அந்த வெறுப்பின் நடுவே நின்று இந்தளவுக்கு பாசிட்டிவான அதிர்வுகளைப் பரப்புகிறீர்கள். நண்பர்களைச் செயலாற்ற வைக்கிறீர்கள். நம்பிக்கையை நிலைநாட்டுகிறீர்கள். மகத்தான செயல்பாடு இது. என் வணக்கங்கள்.
ராஜேந்திரன் மகாலிங்கம்