தூரன் விருது விழா, 2022

தூரன் விருது விழா 2022 – தொகுப்பு

மலையில் இருந்து நேராக விழாவுக்கு வந்தேன். 8 ஆகஸ்ட் 2022 முதல் 13 ஆகஸ்ட் 2022 வரை அந்தியூரில் மலையில் என்னுடன் 16 பேர் தங்கியிருந்தனர். ஆறுநாட்கள் இடைவிடாத இலக்கிய, தத்துவ, வரலாற்று விவாதம். நான் எண்ணியிருந்தது வெறும் உடன்தங்குதல். என் வேலையை செய்யவேண்டும். காலை மாலை நடையின்போது சிலரை உடன் அழைத்துச்செல்லவேண்டும் என்பது என் திட்டம். ஆனால் நடைமுறையில் காலை ஆறரைக்குக் கண் விழிக்கையிலேயே ஆர்வம் மிக்க கும்பல் குளித்து ஆடையணிந்து காத்திருந்தது. இரவு பத்துமணிக்குத்தான் பேச்சு ஓய்ந்தது. நான் என்னை ஒரு சில்வண்டு போல ஓசையிட்டபடியே இருப்பவனாக உணர்ந்தேன்.

13 மதியம் ஈரோடு வந்துவிட்டேன். முதல்நாள் அரங்குக்கு முன் ஒரு தூக்கம் போட வாய்த்தது. அதன்பின் இரண்டு இரவுகளும் இரவு ஒரு மணிக்கு தூங்கி காலை ஆறுமணிக்கு எழுந்தேன்.

13ம்ம தேதி மாலை முதல் அரங்கு மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர் மலேசிய இலக்கிய சூழலையும் போராட்ட சூழலையும் தமிழ் இலக்கிய சூழல் எவ்வண்ணம் செல்வாக்கு செலுத்தி முன்நடத்துகிறது என்று சொன்னார். கரசூர் பத்மபாரதி தன் ஆய்வுகளினூடாக நீதியின் குரலை அடித்தளம் வரை எடுத்து செல்வதை பாராட்டினார்.

14 காலையில் அருகே வெள்ளோடு பறவைச் சரணாலயத்துக்கு ஒரு நடை சென்று வந்தோம். காலை 10 மணிக்கு சரியாக நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. முதல் அரங்கு அ.கா.பெருமாள் அவர்களுடன். நாட்டாரியல் சார்ந்து கேள்விகள் எழுந்து வந்தபடியே இருந்தன. பொதுவாக நாட்டாரியல் நாம் எண்ணுவதை விட மிகுதியாக நம் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டுள்ளது. குலதெய்வங்கள், அன்றாட ஆசாரங்கள், நம்பிக்கைகள் என எல்லாமே அதன் ஆய்வெல்லைக்குள் வருகின்றன.

அ.கா.பெருமாள் இறுதியாக நாட்டார் விளையாட்டுக்கள், நாட்டார் தெய்வங்கள், நாட்டார் நம்பிக்கைகள் சார்ந்து இன்னும் பதிவுசெய்ய எவ்வளவு எஞ்சியுள்ளது என்று சொல்லி முடித்தார். நாட்டாரியலில் கொள்கையுருவாக்கம் செய்ய நீண்ட ஆய்வுப்பின்னணி தேவை. ஆனால் தரவுகளைப் பதிவுசெய்ய கொஞ்சம் முயற்சியும் நேர்மையும் மட்டும் இருந்தாலே போதுமானது. அது ஒரு வேண்டுகோள். நாட்டாரியல் பதிவுகளை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைச்சூழல் சார்ந்து பதிவுசெய்தாகவேண்டும். அப்போதுதான் அவை முழுமையாகப் பதிவாகும். இந்த காலகட்டம் கடந்தால் நாட்டாரியல் பெரும்பாலும் அழிந்துவிட்டிருக்க வாய்ப்புண்டு.

பேராசிரியர் லோகமாதேவியின் அரங்கு முற்றிலும் புதிய ஓர் உலகுக்குள் செல்வதற்கான திறப்பு. தாவரவியலில் புகழ்பெற்ற ஆய்வாளரான லோகமாதேவி வெறும் கல்வியாளர் அல்ல. தாவர உலகை பண்பாட்டுடனும் அன்றாடத்துடனும் இணைத்துப் புரிந்துகொண்டவர். தன் அறிதலை விரிவாக முன்வைக்கத் தெரிந்தவர். சுவாரசியமாக உரையாட அவர் எதையும் செய்யவில்லை. ஆனால் செய்திகள், கருத்துக்கள் ஆகியவையே ஒரு கணம்கூட உளம்விலக முடியாத ஈர்ப்பை அளித்தன. ஒவ்வொருவருக்கும் கேட்க ஏதோ ஒன்று இருந்தது. ‘தாவரக்குருடு’ என்னும் கருத்து பற்றிச் சொன்னார். நம் சூழலில் உள்ள தாவரங்களைப் பற்றி ஏதும் அறியாமல் இருக்கும் நிலை அது.

மதியத்துக்கு மேல் பேராசிரியர் கு.மகுடீஸ்வரன் கொங்கு வரலாற்றாய்வில் முப்பதாண்டுகளாக அறியப்படும் ஆளுமை. கொங்கு வரலாற்றின் முதன்மையான ஆளுமைகளைப் பற்றிச் சொன்னார். வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் போன்ற தொடக்ககாலப் பதிப்பாசிரியர்கள் எவ்வண்ணம் அறியப்படாமலாயினர், அவரிடமிருந்து சுவடிகள் பெற்றுக்கொண்ட உ.வே.சாமிநாதையர் போன்றவர்கள் எப்படி அவர்களை மறைக்கும் திருவுருக்களாக ஆனார்கள் என்று எந்த உணர்ச்சிக்கலவையும் இல்லாமல் தகவல்களாகவே சொல்லிக்கொண்டு சென்றார். கொங்கு வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுப் பயணமாக அமைந்த உரை.

இறுதி அமர்வு கரசூர் பத்மபாரதி. அவருக்கு எந்த மேடைத்தயக்கமும் இல்லை. ஆசிரியை, மேடைப்பேச்சாளர், கூடவே சிறுமிக்குரிய துடிப்பும் உற்சாகமும் கொண்ட ஆளுமை. தன் ஆய்வுகளுக்கான பின்னணி, அவற்றை உருவாக்க எடுத்துக்கொண்ட உழைப்பு என வேடிக்கையும் செய்திகளுமாகச் சொல்லிக்கொண்டே சென்றார். கரசூர் பத்மபாரதியின் ஆய்வுத்திறனின் அடிப்படை அவர் மிக இயல்பாக மனிதர்களுடன் கலந்துரையாடத் தொடங்குவது என்று தோன்றியது. நரிக்குறவர்கள், திருநங்கையர் அனைவருமே அவருக்கு அக்காக்கள் அல்லது அவரை அக்கா என அழைப்பவர்கள் என்பது அவரது பேச்சினூடாக வெளிவந்துகொண்டிருந்தது.

அரங்குகள் அனைத்திலும் நூற்றைம்பதுபேருக்குமேல் கலந்துகொண்டனர். ஒவ்வொரு அரங்குக்கு முன்னரும் நண்பர் சோமசுந்தரம் பெரியசாமித் தூரனின் கீர்த்தனை ஒன்றை பாடினார்.  அது தூரனின் இருப்பை அரங்கில் உணரச்செய்தது. தூரனின் பேரன் செல்வமுத்துக்குமார் வந்து விழாவில் கலந்துகொண்டார். ஆரூரன், தாமரைக்கண்ணன், ஆனந்த்குமார், கடலூர் சீனு ஆகியோர் தொகுத்துரைத்தனர்.

மாலையில் விழா. சுவாமி பிரம்மானந்தர், அ.கா.பெருமாள், கு.மகுடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு கரசூர் பத்மபாரதியை வாழ்த்தினர். நிறைவான சுருக்கமான உரைகள். இரண்டு மணிநேரத்தில் விழா முடிவுற்றது. எங்கள் எல்லா விழாக்களையும் போல, பார்வையாளர்களை கருத்தில்கொண்ட விழா. அவர்களுக்கு கற்பிப்பதும் நிறைவூட்டுவதுமே நோக்கமாகக் கொண்ட நிகழ்வு.

இந்த விழாவை ஒருங்கிணைத்தவர்கள் ஈரோட்டு நண்பர்கள். நான் வழக்கம்போல வந்து கலந்துகொண்டதுடன் சரி. ஈரோடு கிருஷ்ணன், பிரபு, மணவாளன், பாரி, சிவா, சந்திரசேகரன், ஜி.எஸ்.எஸ்.வி ஆகியோரின் பலநாள் உழைப்பில் உருவான விழா இது. வழக்கறிஞர் செந்தில் இலசமாக அளித்த கல்யாணமண்டபத்தில் விழா நடைபெற்றது. இருநண்பர்கள் அளித்த நிதிக்கொடையில் நடைபெற்ற இவ்விழா பார்ப்பவர்களுக்கு மிக பெரிய ஒரு நிகழ்வு. இருநூறுபேர் ஐந்துவேளை உண்டு, தங்கி பங்கெடுத்தனர். இன்னொரு அமைப்பு நடத்தினால் ஆகும் செலவில் மூன்றிலொரு பங்கு செலவில் நடைபெற்ற விழா. எங்கள் கொள்கையே மிகக்குறைவான செலவில் நிகழ்ச்சிகளை நடத்துவதுதான்.

விழாவுக்கு பின் இரவில் நீண்டநேரம் ஒரு வெடிச்சிரிப்பு அரங்கு வழக்கம்போல. அது எங்கள் வெற்றிக்கொண்டாட்டமும் கூட. கூடவே அடுத்த நிகழ்வு பற்றிய ஆலோசனையும். கிருஷ்ணன் ஒரு கேள்வி கேட்டார். தொடர்ச்சியாக ஏராளமான நிகழ்வுகளை நடத்துகிறோமா? மதுரையில் அபி நிகழ்வு முடித்ததுமே இவ்விழா. இதோ இன்னொரு விழா வரவிருக்கிறது. நம் நண்பர்கள் விழாக்களுக்கு வந்து சலித்துப்போய் வராமலாகிவிடுவார்களா? இருக்கலாம். ஆனால் செய்யவேண்டியதைச் செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான் நம் வேலை. நாம் வாசகர்களை நம்புவோம். இதுவரை அந்நம்பிக்கை நம்மை கைவிட்டதில்லை.

தூரன் விருது விழா 2022 – தொகுப்பு

முந்தைய கட்டுரைஐசக் ஹென்றி ஹக்கர்
அடுத்த கட்டுரைஎழுத்தாளனின் பிம்பம், கடிதம்