கவிஞர் அபி ’80 என்ற திட்டம் உருவானதும் அது மதுரையில் நிகழ வேண்டும் என்ற திட்டமும் உடன் சேர்ந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்தன. ஆனால் இப்போது யோசிக்கும் போது அபிக்கான ஒரு நிகழ்வு மதுரையில் நிகழ்வதே சரியெனப்படுகிறது. அபி தேனியில் பிறந்து வளர்ந்தாலும், மதுரையை அணுகி அறிந்தவர். அபி கண்ட பசுமையான மதுரையின் நினைவுகள் அவர் பேசி நான் கேட்டிருக்கிறேன். மதுரையில் உள்ள தல்லாகுளம், சொக்கிக்குளம் போன்ற குளங்கள் இப்போது எஞ்சியிருப்பது அவர் மனச்சித்திரம் வழியாக தான். மதுரையிலிருந்து மேலூர் வரை ஒவ்வொரு தெருவாக மனதில் இருந்து வழி சொல்பவர். அவரின் எண்பது மதுரையில் நிகழ்ந்தது ஓர் நற்சகுணம்.
ஒரு இலக்கிய விழா ஜெயமோகன் வந்தவுடன் தொடங்கிவிடுகிறது. அதிகாலை ஐந்தரை மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸில் ஜெயமோகன் வந்திறங்கினார். சிறப்பு விருந்தினராக பேச அழைத்திருந்த பைஸ் காதிரி அதே நேரத்தில் பேருந்தில் வந்தார். நானும், அருளும் பைஸ் காதிரியை அழைக்க மாட்டுதாவணி சென்றோம். கிருபாவும், மணவாளனும் ஜெயமோகனை அழைக்க ரயில் நிலையம் சென்றனர்.
எல்லோரும் தங்குவதற்கு ரவி டாக்டர் ராயல் சர்வீஸ் அப்பார்மெண்டில் அறை ஏற்பாடு செய்திருந்தார். நானும் அருளும் பைஸ் காதிரியை அறையில் ஓய்வெடுக்க விட்டு திரும்பினோம். ஜெயமோகன் மதுரை வந்தால் விரும்பி அருந்தும் விசாலம் காபி கடையில் ஒரு சிறிய இலக்கிய அரட்டை தொடங்கியிருந்தது. நாங்கள் இணைந்துக் கொண்டோம். ஜெயமோகன் பாண்டிசேரி அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருந்தார். கரசூர் பத்மபாரதி பாண்டிசேரி விழாவிற்கு வந்தது பற்றியும் ரமேஷ் பிரேதன் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். அறைக்கு சென்றும் பேச்சு தொடர்ந்தது, ஆறு மணிக்கு ரவி டாக்டர் இணைந்து கொண்டார். ஏழு மணிக்கு விக்னேஷ் ஹரிஹரன் சென்னையிலிருந்து ”அந்தர கவி” தொகுப்பை எடுத்துக் கொண்டு வந்தான்.
அபி எண்பது விழாவிற்கான மலர் எனச் சொல்லி கட்டுரை கேட்டதும் உடன் எழுதி தந்தவர் மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவக்குமார். அவர் தொடர்ந்து தொலைபேசியில் அபியின் அறுபது நிகழ்வு இறுதி நேரத்தில் நடக்காமல் போனது பற்றி எச்சரித்தார். அபியின் எண்பது விழாவின் நாளை அதிகம் எதிர்பார்த்திருந்தது அவரே கொரோனா காரணமாக அவரால் மதுரைக்கு பயணம் செய்ய இயலவில்லை.
இந்த மலரில் ரமீஸ் பிலாலி, இலங்கை கவிஞர் மின்ஹா, பேராசிரியர் பாக்கியவதி, க. பஞ்சாங்கம், ஜெயமோகன், பாவண்ணன், சாம்ராஜ், சுனில் கிருஷ்ணன், விக்னேஷ் ஹரிஹரன், ரம்யா எனப் பலத் தரப்பட்ட கட்டுரையில் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அபியின் ஆளுமை குறித்து அவரது மூத்த மகன் அஷ்ரப் அலி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை மலரில் உள்ளது. அபியின் நேர்காணல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அந்நேர்காணலில் அபி தன் கவிதையிலிருந்து பறந்து சங்ககாலம், இளங்கோவடிகள், கம்பன், நவீன இலக்கியம் என தன் தனி வாசிப்பனுபவத்தில் இருந்து எழும் பதிவுகளையும், விமர்சனங்களையும் பதிவு செய்கிறார்.
தேவதேவனின் ரயில் ஏழரை மணிக்கு வந்தது. நானும், அருளும் அவரை அழைத்து வந்தோம். தொடர்ந்து அதியமான், அக்ஷயா என நண்பர்கள் வந்தனர். பத்து மணிக்கு மற்றொரு சிறப்பு விருந்தினர் நிஷா மன்சூர் வந்தார். காலை உணவிற்கு பின் விடுதியில் கூட்டம் நிறைந்தது. ஜெயமோகன், தேவதேவன் என ராயல் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் ஒரு கூட்டம் நிகழ, அபியின் நண்பர் சீனிவாசன், திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜா சந்திரசேகர், ஜி.ஆர்.பி என்றழைக்கப்படும் ஜி.ஆர். பாலகிருஷ்ணன் என மறுபுறம் அபியின் வீட்டில் ஒரு கூடுகை நிகழ்ந்தது.
அபி விழா என்று சொன்னதும் அருண்மொழி அம்மா விழாவிற்கு வரத் தயாராகி விட்டார். நாகர்கோவிலில் இருந்து காரில் அம்மா, அஜி, சைதன்யா வந்தனர். மதிய உணவிற்கு பின் சுசித்ரா, நிக்கிதா, பரிதி என ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். மதுரையில் இலக்கிய கூடுகைகளுக்கு கூட்டம் வருமா என சந்தேகம் இருந்தது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் இதே வார இறுதியில் சென்னை, கோவை, பாண்டிசேரி, காரைக்குடி என நான்கு இடங்களில் முக்கிய இலக்கிய கூடுகைகள். கோவை புத்தக கண்காட்சியின் இறுதிநாள் வேறு. ஆனால் காலையிலிருந்து வந்த கூட்டம் அந்த பயத்தை போக்கியது.
நானும், நிக்கிதாவும் சிறப்பு விருந்தினர் ந.ஜயபாஸ்கரனை அழைக்க காரில் சென்றோம். மண்டபத்திற்கான வழியை அவரே டிரைவரிடம் சொல்லி எங்களை அழைத்துச் சென்றார். இருவரும் ஜயபாஸ்கரனை முதல்முறை சந்திக்கிறோம்.
ஜெயமோகன் அபி எண்பதைப் பற்றிய திட்டத்தை சொன்னதும் கொள்ளு நதீம் தொடர்பு கொண்டார். அபி மேல் பக்தி மனப்பான்மை கொண்ட வாசகர். இவ்விழாவிற்காக தொடர்ந்து ஒரு வருடம் அபியின் மாணவர்கள், வாசகர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் கட்டுரை கேட்டு வாங்க உதவியவர் நதீம். விழாவன்று அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் மதுரைக்கு அவரால் வர இயலவில்லை. அவரின் நண்பர் வாகிதியார் சீர்மை பதிப்பகம் சார்பாக வந்திருந்தார். அரங்கில் சீர்மை பதிப்பகம், தன்னறம் பதிப்பகம் புத்தக காட்சி வைத்திருந்தனர். விஷ்ணுபுரம் பதிப்பகம் சார்பில் மதுரை ஜெயம் புக் செண்டர் வந்திருந்தனர்.
விழா தொடங்கும் போது அரங்கில் நூறு பேருக்கு மேல் வந்திருந்தனர் என்பது ஆச்சரியமாக இருந்தது. மதுரையில் ஒரு இலக்கிய கூடுகைக்கு இத்தனை கூட்டம் வருவது இதுவே முதல்முறை என திருச்செந்தாழை சொன்னார். ஸ்டாலின் ராஜாங்கம், இளங்கோவன் முத்தையா என மதுரையின் முகங்கள் அனைவரும் விழாவில் இருந்தனர். கவிஞர் சமயவேலும், எழுத்தாளர் முருகேச பாண்டியனும் சென்னையில் இருந்ததால் விழாவில் பங்குகொள்ள இயலவில்லை. இருவரும் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.
நிக்கிதா விழாவை ஒருங்கிணைத்தாள். வடஇந்தியக் குடும்பப் பின்னணி, ஆங்கிலக் கல்வி காரணமாக அவள் பேச்சில் தமிழ் உச்சரிப்பில் வடமொழி நெடி அடிக்கும் ஒரு சொல்லை முழுமையாக உச்சரிக்க சிரமப்படுவாள். மேடையில் பேசும் போது அது ஒரு இயல்பான தனி நடையாக மாறியிருந்தது.
விக்னேஷ் ஹரிஹரனின் கவிதை வாசிப்போடு விழா தொடங்கியது. தொடர்ந்து “அந்தர கவி” தொகுப்பை சுரேஷ்குமார் இந்திரஜித் வெளியிட அபியின் நண்பரும் மாணவருமான சீனிவாசன் பெற்றுக் கொண்டார். ஜி.ஆர்.பி அபியின் என்ற ஒன்று தொகுப்பு குறித்து எழுதிய “ஆழங்களின் அனுபவம்” விமர்சனக் கட்டுரை நூலை அபி வெளியிட ஜெயமோகன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் உரையாற்றியவர்கள் ஒவ்வொருவரும் அபியின் கவிதையின் ஒவ்வொரு இயல்புகளை தொட்டு பேசினர். பைஸ் காதிரி அபியின் ஆளுமை குறித்துப் பேசினார். சுசித்ரா அபியின் கவிதை சங்ககால பாடல்களைச் சென்று தொடும் புள்ளியை விளக்கி பேசினார். ஜயபாஸ்கரன், நிஷா மன்சூர், ஜெயமோகன் மூவரும் அபியின் வெவ்வேறு கவிதைகளைத் தொட்டு அதிலிருந்து அபியின் ஆளுமையை பற்றி பேசினர். ஜெயமோகன் உரையில் அபியின் மாலை கவிதை அவர் வாழ்வில் எப்படி பரிணமித்தது, இப்போது என்ன பொருள் கொள்கிறது என்பதை தொட்டு பேசினார்.
அபியின் ஏற்புரை பேராசிரியருக்கான நேர்த்தியும், கவிஞனுக்கான எள்ளலும் கலந்த பேச்சாக அமைந்தது. அபியின் வீட்டிலிருந்து மகள், மருமகள், பேரன், பேத்திகள் வந்திருந்தனர். நிக்கிதாவின் நன்றியுரையுடன் விழா முடிந்தது. இரவு உணவின் போதும் அபியை சுற்றி அவரது நண்பர்கள், புதிய வாசகர்கள் என இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்தனர். இரவுணவுடன் விழா முடிந்தது, மழை விடாமல் பெய்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராக கிளம்பிய பின்னர் அபி குடும்பத்துடன் இறுதியாக கிளம்பினார்.
நான், கிருபா, அஜி, சைதன்யா, மணவாளன், அருள், நிக்கிதா, பரிதி, மதார் என ஒரு கூட்டம் ஜெயமோகன், தேவதேவன் இருவரையும் இரயில் ஏற்றிவிட்டு மதுரையை சுற்றி வந்தோம். வீடு திரும்பி தூங்கும் போது மணி ஒன்னரையை கடந்திருந்தது. தூக்க பிடிக்க எனக்கு நேரம் எடுத்தது. முந்தைய நாள் இரவு முழுதும் தூங்கவில்லை. நான் ஜெயமோகன் விழா நாட்களில் தூங்காமல் இரவு இரண்டு, மூன்று மணி வரை பேசிக் கொண்டிருப்பதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். முதல்முறை அந்த மனநிலையை உணர்ந்தேன். விழாவை பற்றிய பயம் இல்லை. வேலைகள் இல்லை. அவை அனைத்தையும் தாண்டிய ஒன்று, அவ்விழாவில் நாம் இருப்பதன் மனநிலை அது.
மறுநாள் அபியை நான், அருள், மணவாளன் மூவரும் சென்றோம். மாலை நான்கு மணி நேரம் அபி பேச நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். அபியை பற்றிய பொதுவான பிம்பம் என்பது அவர் அதிகம் பேசமாட்டார், தனிமையை விரும்புபவர் என்பது தான். ஆனால் நான் பார்த்த அபி விடாமல் உரையாடுபவர். உடல்நிலை சரியில்லாத நாட்களில் கூட அதிக பேச முடியாது எனச் சொல்லி இரண்டு, மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார். அன்றும் அவ்வண்ணமே திருக்குறளின் கவிதையியல் குறித்து பேசினார். ஒவ்வொரு குறளாக எடுத்துக்காட்டி அதிலுள்ள கவிதை நுணுக்கங்களை விளக்கினார். அவர் சொன்ன “யானை பிழைத்த வேல்” குறள் அன்று முழுவதும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மணவாளனும் அதையே சொன்னார். நான் அவரை திருக்குறள் கவிதையியல் குறித்து எழுதும்படி சொன்னேன். அவர் அது எழுதும் திட்டத்தை முன்னரே தொடங்கி அது நிகழாமல் போனதைப் பற்றிச் சொன்னார். ”இனி மீண்டும் எழுத முயற்சிக்கலாம்” என்றார். தமிழ் விக்கி பணிகள் பற்றி கேட்டறிந்தார்.
விழாவை பற்றி ஒரிரு வார்த்தைகள் கேட்டறிந்ததோடு சரி அதற்கு பின் அதை பற்றிய பேச்சு அவரிடம் வரவில்லை எங்களையும் பேச அனுமதிக்கவில்லை. விழா மனநிலையில் இருந்து அவர் வெளியே வந்திருந்தார் எனத் தெரிந்தது. மாலை மழை வருவதற்கு முன் கிளம்பலாம் என விடைபெற்ற போது மென்மழை தொடங்கியிருந்தது. மழை தூரலின் தொடக்கத்தில் அவரிடம் விடைபெற்றுச் சென்றோம். வழக்கம் போல் தன் அறையிலிருந்து வெளியே வந்து மாடியிலிருந்து நாங்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இவ்விழாவிற்கு அருள், மணவாளன் இருவரின் உழைப்பும் முக்கியமானது. அருள் ஒரு வாரமாக மதுரையில் அழைந்து திரிந்து பணிகளைச் செய்தார். விழாவிற்கு முந்தைய நாள் மழையில் சிக்கி ஆறு மணிநேரம் போராடி சால்வை வாங்கி வந்தார். அருள், மணவாளன், நிக்கிதா, பரிதி, மதார், கிருபா என இவ்விழா முழுக்க முழுக்க இளைஞர்களின் செயலூக்கத்தோடு நிகழ்ந்தது. குவிஸ் செந்தில், மீனாம்பிகை அக்கா, சுனில் கிருஷ்ணன் மூவரின் ஆலோசனையும் முக்கியமானது. எந்த ஒரு சிறு சந்தேகத்திற்கும் மூவரும் உதவினர். குறிப்பாக மலருக்கான கட்டுரை கேட்கும் போது சுனில் கிருஷ்ணனின் வழிகாட்டல் இன்றியமையாதது. அவரிடம் உள்ள பொறுக்கும் குணம் ஒரு செயலை விடாமல் செய்து முடிப்பதற்கு இன்றியமையாதது. அதனையே எனக்கும் சொல்லித் தந்தார்.
ஒரு மாலை நிகழ்ந்த விழா எனக்கு மட்டும் இரண்டு நாட்களுக்கு மேல் நீண்டு சென்றது. அபியின் வீட்டிலிருந்து வீடு திரும்பும் போது முதல்முறை ஜெயமோகனுடன் சென்று அபியை பார்த்ததை நினைத்துக் கொண்டேன். அப்போது திருக்குரான் பணியில் மூழ்கியிருந்தார். மூன்று வருடங்களாக உடல்நிலை சரியில்லாத நாட்களில் கூட தன் முனைப்போடு ஒரு செயலைச் செய்துக் கொண்டிருப்பவராக அபி இருந்திருக்கிறார். இப்போது திருக்குறள் கவிதையியல் பற்றிய எண்ணத்தைச் சொன்னார். எண்பது வயதில் இத்தனை செயலூக்கத்துடன் இருப்பது கவிஞனின் இயல்பு என நினைத்துக் கொண்டேன்.
நன்றி,
நவின். ஜி.எஸ்.எஸ்.வி.