கமல், கடிதம்

Watch | Part 2: Actor Kamal Haasan in conversation with writer Jeyamohan (in English) on democracy and the role of fiction
Stories of the True : Translated from the Tamil by Priyamvada
கமல் உரையாடல், இரண்டாம் பகுதி பற்றி…
Stories of the True : Translated from the Tamil by Priyamvada    

இனிய ஜெயம்

கமல் உரையாடல் பதிவு கண்டேன். அது சார்ந்த பொது வெளி சமூக ஊடக அரட்டைகளை முன்னெடுத்தவர்கள் மூவர். முதல் வகை உலக ஜினிமா dvd புரட்சி வழியே உருவாகி, நாயகன் படம் காட் பாதர் காப்பி மச்சி என்று துவங்கி அவ்வாறே இன்றுவரை திரிந்துகொண்டிருக்கும் வகையறா, இரண்டாம் வகை இலக்கியம் சினிமா இசை கிரிக்கெட் அரசியல் எல்லாம் தனக்கு புரிந்த வகையில் முகநூல் திண்ணையில் பேசிக்கொண்டிருக்கும் ஐம்பது அறுபது தொட்ட பழைய நினைப்புடா பேராண்டி கோஷ்டி, மூன்றாம் வகை கமல் இன் அரசியல் பிரவேசம் மற்றும் ஜெயமோகன் கருத்துக்களால் சீண்டப்பட்டவர்கள்

இன்றைய சூழலில் இந்த மூன்றுமே பொருட்படுத்தத் தக்க வகை அல்ல என்றாலும், இந்த 2022 இல் 25 வயது போல நிற்கும் கலை இலக்கிய ஆர்வம் கொண்ட இளம் தலைமுறையில் உள்ள ஒரு சிலரை மேற்கொண்ட மூன்று வகை உளரல்களும் சற்றே தடம் மாற்றக் கூடும். அந்த சிலருக்காக சிலவற்றை மீண்டும் மீண்டும் பேசியாக வேண்டும்.

முதலாவதாக கமலின் அரசியல் ஈடுபாடு. அது நேற்று பெய்த dvd யால் இன்று முளைத்த உலக ஜினிமா ரசிகன் போன்றதல்ல. அவர் முன்னர் மையம் என்று ஒரு பத்திரிகை நடத்தி இருக்கிறார். அதில் கமல் எழுதிய சமூக அரசியல் பதிவுகள் எல்லாமே மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை. இன்று அவை வாசிக்க கிடைப்பதில்லை. கிடைத்தால் அன்றைய கமலின் தீவிரம் திகைக்க வைக்கும் ஒன்றாக இருப்பதை காண முடியும். அன்றுவஅங்கே துவங்கிய கமல் தான், நேற்று அரசியலின் பொருட்டு கடலூர் ரசாயான கழிவுகளை வந்து நேரடியாக பார்ப்பவராக இருக்கிறாரே அன்றி இன்றைய பம்மாத்து அரசியல்வாதியர்களில் ஒருவராக அல்ல.

அதே போல சினிமாவும். இன்றுவரை தமிழில் கலைப் பட ஓடையின் வறட்சிக்கு அங்கே இங்கே சுற்றி கமலை கை காட்டி விடுபவர்கள் அறியாத ஒன்று, வங்கம் போலவோ, கேரளம் போலவோ ஒருதீவு கலாச்சாரசூழலில் நிற்கும் நிலம் அல்ல தமிழ் நிலம். அங்குள்ள பண்பாட்டு போதம், பொது கல்வி இவற்றின் ஆழம் தமிழ் நிலம் போல மேம்போக்கான ஒன்று அல்ல. வரலாறு நெடுக வந்து சங்கமித்துக்கொண்டே இருக்கும் பல்வேறு மொழி பேசும் வண்ணமயமான குமுகங்களின் தொகையால் நிறைந்த தமிழ் நிலத்தின் கலாச்சார சிக்கல்களின் ஒரு பகுதியே தமிழில் கலை சினிமாவின் வறுமை

இதில் கமல் மீதான எதிர்பார்ப்பும் விமர்சனமும் பதினாறு வயதினிலே, அவள் அப்படித்தான் போன்ற படங்களில் அவரது பங்களிப்பு வழியே உருவானது. அந்த பங்களிப்புகளை அவர் அளித்ததற்கு, அவ்விதம் அவரை வடிவமைத்ததற்கு மலையாள திரை உலகுக்கு பெரும் பங்கு உண்டு. இந்தப் பாதையில் உலகம் நோக்கிய நல்ல தமிழ் சினிமா என்று வருகையில் அதற்கு செல்ல, கமல் முன்னால் இருந்தது இரண்டு பாதை ஒன்று ஐரோபிய சினிமா உடையது மற்றது ஹாலிவுட் உடையது. இந்த இரண்டு பாதையில் எதில் பயணிப்பது என்ற கமலின் ஊசலாட்டம் அவரது ராஜபார்வை படத்தின் அழகியலில் துலக்கமாகவே தெரியும். அந்த குழப்பத்தை கமல் மூன்றாம் பிறையின் வெற்றிக்குப் பிறகே கடந்தார். நல்ல தமிழ் படம் வழியே ரூபாய்க்கு பதிலாக டாலரில் சம்பாதிக்க முடிவு செய்து அதற்கு தன்னை தகுதி படுத்திக் கொண்டார். அன்றைய விக்ரம் வணிக ரீதியாக அப்படியே உலகு தழுவிய அன்றைய ஜேம்ஸ் பாண்ட் கதைதான். நாயகன் படம் அன்றைய அமெரிக்க நல்ல படம் ஜானரில் வந்த காட் பாதர் போன்றதுநவீன தமிழ் சினிமாவின் முதல்  சர்வதேச திரைப்படம் பேசும் படம் சார்லி சாப்ளினின் நல்ல படம் வகையிலானது. இதன் தொடர்ச்சியே தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய படங்களில் ஒன்றான ஹே ராம் வரை கமல் வசம் தொடர்வது

கமல் தேர்வு செய்த இந்த பாதைக்கான அனைத்தையும் முன்னர் எவரும் செய்து வைக்க வில்லை. அனைத்தையும் கமலேதான் செய்து கொள்ள வேண்டும். அந்த முயற்சிகளைதான் புரிந்து கொள்ளாமல் கமலின் டாமினேஷன் என்று அதை வகைப்படுத்துகிறோம். அவரது இந்த பாதைக்கு வாகான எழுத்தாளர் சுஜாதா முதல் பெரும்பாலானோரை  கமல் தயங்காமல் சென்று கண்டு அவர்களை சினிமாவுக்கு கொண்டு வந்தது வரலாறு.

இலக்கியம் என்று வருகையில். சுரா முதல் அமி தொட்டு நீல பத்மநாபன் முதல் கிரா வரை அவர்களின் குறிப்பிட்ட ஆக்கங்களை வாசித்து, நடிகராக அன்றி அவர்களின் வாசகன் என்றே அவர்களை சென்று சந்தித்திருக்கிறார் கமல். நானறிந்த கிரா உட்பட பலருக்கு புரவலர் என நின்று பொருளாதார பங்களிப்பும் செய்திருக்கிறார். பழைய இலக்கிய இதழ் ஒன்றில் அன்றைய இலக்கிய கூட்டம்  ஒன்றில் பார்வையாளர் வரிசையில் கமல் அமர்ந்திருக்கிறார். சுப மங்களா தொகுப்பில் பல இலக்கிய நிகழ்வுகளுக்கு கமல் முன் நின்றிருப்பது ஆவணம் கண்டிருக்கிறது. கமல் தனக்கான பெரிய விழா ஒன்றை, அதில் நாயகனாக எழுத்தாளர் ஜெயகாந்தனை அமர வைத்தார். அன்று அந்த மேடையில் ஜெயகாந்தன் மட்டுமே இருந்தார். கமல் உட்பட பிற அனைவரும் கீழே நின்றிருந்தனர்.  (அன்றைய விழாவில் நிகழ்ந்த உருக்கமான உணர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று அறம் வரிசை கதைகளில் வர வேண்டிய அளவு தீவிரம் கொண்டது).

மொழி அழகும் வடிவ அழகும் கொண்ட, ஜெயகாந்தன் 33 சதம், ஞானக்கூத்தன் 33 சதம் கமல் 33 சதம் என்று அமைந்த சில நல்ல கவிதைகளை கமல் எழுதி இருக்கிறார். அதே சமயம் கலைஞனாக தான் யார் என்றும் தனது களம் எது என்றும் தெளிந்த விவேகம் கொண்டவர்தமிழில் என்றேனும் திரைக்கதைகள் தனித்த இலக்கிய வகைமை என வளருமேயானால், அவற்றில் சிறந்த முன்னோடி என்று எழுந்து வரும் முதல் ஐந்து பிரதிகளில் முதல் இரண்டு இடத்தை கமலின் ஹே ராம், மற்றும் தேவர் மகன் திரைக்கதை புத்தகங்கள் பிடிக்கும்.

70 கள் துவங்கி இந்த 2020 வரை கடந்த அரை நூற்றாண்டாக கமல் இவ்விதம்தான் இருக்கிறார். மூன்று நிமிட போத்திஸ் விளம்பரத்தில் நடிக்க கமல் வாங்கிய சம்பளம் ஒரு கோடி என்று கொள்வோம். முடக்கம் முடிந்து புத்தக சந்தை மீண்டும் துவங்கியபோது, அதன் புத்துயிர்ப்புக்கு நிகழ்ந்த பல பங்களிப்புகளில் கமல் உடையதும் ஒன்று. தினம் ஒன்று என மூன்று நிமிட காணொளி வழியே 10 நூல்களை தமிழ் பொது மனதுக்கு அறிமுகம் செய்தார். பிக் பாஸ் வழியே 20 நூல்கள். ஆக முப்பது கோடி பெருமானம் கொண்ட ஒன்றை, தனது புகழ் வட்டத்தின் வழியே, இலக்கியத்தின் பொருட்டு கமல் நல்கி இருக்கிறார். அந்த புரவலருக்கு மேற் சொன்ன மூன்று வகையினர் பதிலுக்கு செய்திருப்பது என்ன? விமர்சனம் எனும் பெயரில் தங்கள் அற்பதனங்களை அவர் மேல் கொண்டு சூட்டியதுதான். கமல் இப்படி செய்திருக்கிறார் என்பது எப்படி அவரது வரலாறோ, அதே அளவு நாம் அவர் மேல் சென்று நாம் சூட்டும் அற்பத்தனங்கள் எதுவோ அதுவே நமது வரலாறு. கலை இலக்கிய தாகம் கொண்ட இளம் மனங்கள் இத்தகு அற்பத்தனங்களில் விழாதிருக்கட்டும். அவர்கள் அறியட்டும். கமல் நமது பெருமிதம்.

கடலூர் சீனு

Stories of the True- ஒரு பேட்டி

Over 300 books, 2 rebirths later, iconic Tamil author Jeyamohan says translations are strange


https://tamil.wiki/wiki/Jeyamohan

முந்தைய கட்டுரைஎழுத்தாளனின் பிம்பம், கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி- தூரன் விருதுவிழா – கடிதம்