மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6

பண்டைய கோயில்களை கூட்டுக்குடும்பமாகப் பார்த்துச்செல்பவர்களைக் கவனித்தால் சிற்பங்களுக்கு முன்னால் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் வேடிக்கையாக இருக்கும். குடும்பத்தலைவர்கள் விசித்திரமான கடுகடுப்புடன் விலகிச்செல்வார்கள். பெண்கள் அவசர அவசரமாக குழந்தைகளை ஏதாவது சொல்லி அதட்டுவார்கள்.  இளம்பெண்கள் கழுத்தை இறுக்கமாக வைத்துக்கொள்வார்கள். அழகர்கோயில் கோபுரச்சிற்பத்தின் முன்னாலிருந்து குழந்தைகளை அதிவேகமாக ‘பத்தி’க் கொண்டுசெல்லும் அப்பா அம்மாக்களை ஆர்வத்துடன் கவனித்திருக்கிறேன்.

என் வாசகர் ஒருவர் சஞ்சலத்துடன் ‘மத்தகம்’ ‘ஊமைச்செந்நாய்’ இரு கதைகளையும் அஜிதன் வாசித்தானா என்று கேட்டிருந்தார். ‘ஏன், யானை பற்றிய கதை என்றால் அவன் முதலியே வாசித்துவிடுவானே” என்றேன். அவருக்கு ஒரு மௌனம். பின்னர் ”பையன்களுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியான கதை இல்லையோ?” என்றார். நான் அதைவிட நேரடியாகவே பல விஷயங்களை அவனிடம் பேசுவதுண்டு என்றேன். அவர் மேலும் ஆழ்ந்த அமைதியை அடைந்தார்.

”நான் ஒன்றும் பாலியல் கதை எழுதவில்லை. மனித வாழ்க்கையின் வதைகளையும் சஞ்சலங்களையும்தான் எழுதுகிறேன். இந்தவயதில் இதைவிட அதிகமான பாலியல் விஷயங்களை அஜிதன் அவன் நண்பர்களிடம் பேசியிருப்பான். ஆகவே இது அவனுக்கு அதிர்ச்சியான விஷயமாக ஒன்றும் இருக்காது…”என்றேன்.

நம்முடைய பொதுப்புத்தியில் ஒரு பெரிய அகழி உள்ளது. இந்த அகழி கிடத்தட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. அதற்கு முந்தைய பொதுசமூகச் சிந்தனைப்போக்கை இப்போது நம்மால் ஊகிக்க முடிவதில்லை. பதினாறாம் நூற்றாண்டு பரதநாட்டியப் பாடல்களை இப்போது பாடி அபிநயம் பிடித்தால் கலாச்சாரக் காவலர்கள் அரங்கைக் கொளுத்துவார்கள்.அந்தக்காலத்தில் அப்பாடல்கள் பெரும் திருவிழாக்களில் பாடி நடிக்கப்பட்டிருந்தன.  அரையர் சேவை பார்க்கப்போயிருந்தபோது ‘நப்பின்னை கொங்கைமேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா’ என்ற  ஆண்டாளின் வரிக்கு அந்த அரையர்  அபிநயம்பிடித்தபோதே மாமிகள் சங்கடபப்ட்டதைக் கண்டேன்.

பாலுணர்வு மீது குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் இருந்த காலகட்டம் ஒன்று நமக்கிருந்தது.அது வாழ்க்கையின் இன்றியமையாத அடிப்படையாகக் கருதப்பட்டது. அத்துடன் தொன்மையான வேளாண்சமூகமான நம்மிடம் பாலுறவுக்கு மேலும் ஆழமான அர்த்தங்கள் இருந்தன. பாலுறவு என்பது பிறப்புக்கு ஆதாரமான சக்திகளின் முயக்கத்தின் தருணம் என்ற புரிதல் நம் மதத்தையும் சடங்குகளையும் ஆள்வதைக் கவனிக்கலாம். இயற்கையில் ஒவ்வொரு கணமும் பிறப்பு நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு கணமும் பாலுறவும் நடந்துகொண்டிருக்கிறது.

இடைவிடாத பிறப்பின் மூலமே இயற்கை பிரபஞ்சப்பெரும் சக்தியான மரணத்தை எதிர்கொள்கிறது. ஆகவே பாலுறவு என்பது நோய், முதுமை, அழிவு அனைத்துக்கும் எதிரான ஒரு செயல்பாடு. ஆகவே பாலுறவை பண்டைய மனம் கொண்டாடியது. வளம் என்பதும் வாழ்வு என்பதும் பாலுறவுடன் தொடர்புடையனவாகவே கருதப்பட்டன. இயற்கையின் வளம் மிக்க தோற்றத்தை காமத்தோற்றம் [ரதி·பாவம்] என்றே மகாபாரதம் சொல்கிறது. பூக்கள் , வசந்தம், வண்ணங்கள், நறுமணங்கள், இளமை, அழகு , கொண்டாட்டம் எல்லாமே பாலுறவுடன் இணைத்தே பார்க்கப்பட்டன.

தொன்மையான வேளாண்சமூகங்களில் ‘விருஷ்டி’ சடங்குகள் என்று சிலவகை ஆசாரங்கள் இருந்தன. அறுவடைக்குப்பின் அந்த நிலத்தில் பாலுறவுக் களியாட்டங்களை நிகழ்த்துவதுதான் அது. கூட்டான பாலியல்க் கொண்டாட்டங்கள் கூட நிகழ்ந்திருந்தன. அதன் சாயல்களை நாம் சங்ககாலத்து புதுப்புனலாட்டம், இந்திரவிழா கொண்டாட்டம் போன்றவற்றில் காணலாம். பின்னர் அவை ஆசாரங்களாக மாற்றம் பெற்றன. அதற்கு துறவை வலியுறுத்திய சமண,பௌத்த மதங்கள் முக்கியமான காரணங்கள்.

பின்னர் பக்தி இயக்கம் எழுச்சி கொண்டபோது பெரும் திருவிழாக்களின் ஒரு பகுதியாக அந்தக் களியாட்டங்கள் இருந்தன. தேர்ச்சிற்பங்களில் உள்ள பாலுறவுச்சித்தரிப்புகள் அதன் ஆதாரங்கள்தான். சமீபகாலம்வரைக்கூட பூரி ஜகன்னாதர் ஆலயத்திருவிழாவில் பாலியல் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்பட்டன. ஹோலி அத்தகைய வசந்தகால பாலியல் கொண்டாட்டத் திருவிழாவின் ஒரு வடிவமே. இன்றும் வடகிழக்கு பழங்குடிகளில் பலர் அக்கொண்டாட்டங்களை நிகழ்த்திவருகிறார்கள்.

நம் காவியங்களைப் பார்க்கும்போது வாழ்வு சிறந்திருந்தது என்று சொல்ல வருமிடங்களில் எல்லாம் காமம் சிறந்திருந்தது என்று சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். சமண ,பௌத்த ஞானியரால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை போன்ற காப்பியங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக சீவகசிந்தாமணி காமத்தைக் கொண்டாடும் ஒரு காப்பியம்.

ஒரு சமணர் அக்காப்பியத்தை எழுதியது பற்றி பலவகையான ஊகங்களும் கதைகளும் உள்ளன. எளிமையான விளக்கம் இதுதான், இக்காப்பியங்கள் அன்று பொதுசாபையில் வாசிக்கப்பட்டன. குறிப்பாக இரு பருவங்களில். நான்கு மாசம் நீளும் மழைக்காலத்திலும் நடவு தொடங்கும் இளவேனில் காலத்திலும். மழைக்காலம் என்பது பழங்காலத்தில் மரணத்தின் காலம்.நோயும் பட்டினியும் ஆட்சி செய்யும் பருவம். அப்போது மரணத்துக்கு எதிரான வாழ்க்கையின் அறைகூவலாக இந்தக் காமச்சித்தரிப்புகள் வாசிக்கப்பட்டன. இவற்றை வாசிக்கும்  இடத்தில் நோயும் மரணமும் அண்டாது என்று நம்பபப்ட்டது

அதேபோல வயல்வேலைகள் தொடங்கும் நாட்களில் இந்நூல்கள் வாசிக்கப்படுவது நிலவளம் பெருகச்செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது. சமீபகாலம் வரைக்கூட குமரிமாவட்டத்தில் ராமாயண மகாபாரதத்தில்  காமச்சித்தரிப்பு கொண்ட பகுதிகளை மட்டும் சாவடிகள் படிக்கும் வழக்கம் இருந்தது. ஆகவே அந்த வழக்கத்தை ஒட்டி அந்நோக்கத்தை நிறைவேற்ற உருவானதே சீவகசிந்தாமணி. சீவகசிந்தாமணியை சமணர்கள் கூடி விழாவாக வாசித்ததை உ.வே.சா. பதிவுசெய்கிறார்.  குருத்து தென்னை ஓலையும் பூக்களும் மாந்தளிர்களும் தோரணம்கட்டி ஒரு ‘வளச்’ சடங்காகவே அந்த வாசிப்பு நிகழ்ந்தது என்கிறார்.

ஆகவேதான் வளம் என்று எங்கே சொல்லப்படுகிறதோ அங்கே உடனடியாக காமச்சித்தரிப்பு வந்துவிடுகிறது நம் காப்பியங்களில். சொல்லப்போனால் நிலவளம் செல்வ வளம் இரண்டும் காமம் சார்ந்த உவமைகள் வழியாகவே சொல்லப்படுகின்றம்ன. இதில் காளிதாசனும் கம்பனும் அதன் உச்சத்தையே தொடுகிறார்கள். காமம் என்பது ஒரு சமூகம் உயிர்ததும்பப் பொலிந்துகொண்டிருக்கிறது என்பதற்கான சான்று.

நம் ஆலயங்களில் காமச்சித்தரிப்புகள் நிறைந்திருப்பதற்குக் காரணம் இதுவே. அதிலும் குறிப்பாக கோயில்கலில் உள்ள வசந்த மண்டபம், பலி மண்டபம் போன்றவற்றில் காமச்சிற்பங்கள் நிறையவே காணப்படும். மலர்மரங்களும் தேவர்களும் வனயட்சிகளும் காதலர்களுடன் இணைந்து காணப்படுகிறார்கள். மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ சிற்பங்களும், ஆந்திராவில் ராமப்பா கோயில் முகமண்டபச்சிற்பங்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மெல்ல மெல்ல நம் பண்பாட்டில் விக்டோரிய ஒழுக்கவியல் புகுத்தப்பட்டது. விக்டோரிய ஒழுக்கவியல் என்று பொதுவாகச்சொல்லப்படும் மனநிலையை வரலாற்று ரீதியாக இவ்வாறு விளக்கலாம். கிட்டத்தட்ட இந்து மரபில் உள்ளதுபோன்ற இயற்கைவழிபாட்டு மனநிலையே ஐரோப்பிய பாகன் மதங்களில் நிலவியது. வளச்சடங்குகள்[விருஷ்டியாசாரங்கள்] அவர்களிலும் பலவகையில் இருந்தன. அவற்றுக்கு எதிரான சக்தியாக ஆபிரஹாமிய மதமான கிறித்தவம் அங்கே பரவியது.

கிறித்தவத்தின் அடிப்படைக் கருதுகோளில் ஒன்று ‘ஆதிபாவம்’ என்பது. மனிதர்களை இறைவன் காமம் இல்லாத தூயவர்களாகப் படைத்தார் என்றும் அவர்கள் இறைவனால் விலக்கப்பட்ட கனியை உண்டு காமம் என்ற பாவ உணர்வை அடைந்தார்கள் என்றும் சொன்னது அது. காமத்தை ஒரு பெரும்பாவமாகப் பார்க்கும் நோக்கு கிறித்தவம் மூலம் ஐரோப்பாவில் வேரூன்றியது. காமத்தைக் கோண்டாடிய கிரேக்க ரோம பண்பாட்டுக்கூறுகளும் பிற பாகன் பண்பாட்டு அம்சங்களும் கடுமையாக ஒடுக்கி ஒழிக்கப்பட்டன.

பின்னர் கிறித்தவத்துக்குள் கடுமையான புலன்மறுப்பு கொண்ட பலவகையான இயக்கங்கள் உருவாயின. அவற்றின் மேலாதிக்கம் நிலவிய மத்திய காலகட்டம் என்பது ஒழுக்கம் என்பது ஒரு ரத்தவெறி கொண்ட தெய்வமாக மக்களை வேட்டையாடிய காலம் என்று சொல்லலாம். ஆனால் இக்காலகட்டத்தில் பாகன் பண்பாட்டின் பல கூறுகளை கிறித்தவமரபு உள்வாங்கிக் கொண்டது. காரணம் அவை ஆசாரங்களாகவும் கலைகளாகவும் மக்களிடையே வேரூன்றியிருந்தன. அவ்வாறு உள்வாங்கிக்கொள்வதன் மூலமே கிறித்தவம் ஐரோப்பாவெங்கும் முழுமையாக பரவ முடிந்தது.

கிறித்தவ மைய அதிகார அமைப்புக்கு எதிராக உருவான எதிர்ப்புக் கிறித்தவம் [புரட்டஸ்டாண்ட்] ஒரு தூய்மைவாத கிறித்தவ இயக்கம் எனலாம். கிறித்தவ மைய அமைப்புக்குள் இருந்த பல்வேறு ஆசாரங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றை அது பகுத்தறிவு நோக்கில் எதிர்த்தது. கிறித்தவ மையநூல் சார்ந்து கிறித்தவத்தை தூய்மையாக நிலைநாட்டவேண்டும் என வாதிட்டது. ஆகவே மையகிறித்தவத்தைவிட அது அதீத ஒழுக்கநோக்கு கொண்டதாக ஆகியது. விகோரிய ஒழுக்கவியல் என்பது இந்த தூய்மைவாத கிறித்தவத்தின் ஒழுக்கவியலே.

இந்தியாவுக்கு வந்த வெள்ளைய பாதிரிமார்களே ஆரம்பத்தில் விக்டோரிய ஒழுக்கவியலை அடிப்படையாகக் கொண்டு இந்திய சமூகத்தை மதிப்பிட்டவர்கள் என்பதை அவர்களின் எழுத்துக்களின் வழியாகக் காணலாம். அதன்பின் அவர்கள் மூலம் ஆங்கிலக் கல்வி கற்ற நம்முடைய மறுமலர்ச்சி முன்னோடிகள் அதே ஒழுக்கவியலை ஏற்றுக்கொண்டார்கள். மிகச்சிறந்த உதாரணம் காந்தி. அவரால்; இந்தியச் சிற்பக்கலையை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ராஜாராம் மோகன் ராய், விவேகானந்தர், அரவிந்தர் போன்ற அனைத்து இந்திய மறுமலர்ச்சி நாயகர்களும் விக்டோரிய ஒழுக்கவியலையே.

அவர்கள்தான் நாம் இன்று காணும் அந்த அகழியை உருவாக்கியவர்கள். மெல்ல மெல்ல நம்முடைய இயல்பான நோக்கு நம்மிலிருந்து விலகிச்சென்றது. நம் முன்னோர்கள் உருவாக்கிய சிலைகள் முன் நாம் குடும்பத்துடன் செல்ல முடியாத நிலை இவ்வாறு உருவானதேயாகும்.

நம் காவிய இலக்கணத்தில் நிலவளம், நீர்வளம், நகர்வளம் பாடுவதென்பது ஒரு கட்டாயமாகச் சொல்லப்படுகிறது. கம்பனைப்போன்ற ஒரு வர்ணனைக்கவிஞன் அத்தகைய வாய்ப்புகளை ஒருபோதும் தவறவிடுவதில்லை.

பால காண்டத்தில் அயோத்தி நீர்வளத்தைப் பாடுகிறான் கம்பன்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத்திருமங்கைதன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

மேனியெங்கும் நீறு அணிந்த கடவுளின் செந்நிறம் கொண்ட மேகங்கள் செல்வழியெல்லாம் அழகுறச்செய்து சென்று கடல் நீரை உண்டு அகில்குழம்பு அணிந்த முலைகொண்ட திருமகளை மார்பிலணிந்தவனின் கருநிறம் கொண்டு மீண்டன.

நீர்வளத்துக்கு ஆதாரமாக உள்ள சக்திகளான வானையும் கடலையும் பாடவேண்டும். ஆனால் அப்பாடலை இயல்பாக இரு பெரும் இறைவர்களைப்பற்றிய பாடலாகவும் மாற்றிக்கொள்கிறான் கம்பன்.  சிவனின் செந்நிறம் கொண்ட மேகம் நீர் உண்டு திருமாலின் கருநிறம் கொண்டது.  சந்தனத்தை தன் மார்பிலணிந்த திருமகளைத் தன் மார்பிலணிந்த பெருமாள் என்று சொல்லும் நயம் கம்பனுக்கே உரியது. கடலை உண்ட கருமேகத்தை அம்மையை மேனியிலணிந்த திருமாலாகச் சொல்வது இன்னொரு நுண்மை.

பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே

மேகங்கள் செறிந்து மலைமேல் பரந்த காட்சி நமது இறைவனின் மாமன் சூரியக் கதிர்களால் வெம்மை கொண்டான் அவனை நம் மழைச்சரங்களால் குளிர்விப்போம் என இவ்வுலகத்துக் கடல் எழுந்து சென்றது போலிருந்தது. மலைமகளை பெற்று சிவனுக்கு அளித்தவன் இமயன் என்பதனால் அவன் சிவனுக்கு மாமன்.

புள்ளி மால் வரை பொன் எனல் நோக்கி வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும்
வள்ளியோரின் வழங்கின மேகமே

ஓங்கி நுனிசேரும் பெரிய மலை பொன்னிறமாகச் சுடர்வதைக் கண்டு மகிழ்ந்த வானவர்கள் வானுக்கும் மலைக்குமான இடைவெளியை வெள்ளி விழுதுகளால் நிறைத்தது போல மழைத்தாரைகளை வீழ்த்தினர். தன்னுள் உள்ள அனைத்தையும் எண்ணி எண்ணி எடுத்து வழங்கும் வள்ளல்களைப்போல மேகங்கள் பொழிந்தன. இறைவனில் இருந்து மெல்ல வானவரும், அடுத்து வானவருக்கு இணையான வள்ளல்களும் பாடல்பெறுகிறார்கள்.

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனுநெறி
போன தண்குடை வேந்தன் புகழென
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன தழைத்தது நீத்தமே

தன்மானம் பேணி அறம் பிறழாது மனுநெறியில் நடந்து ஆட்சிசெய்யும்  குளிர்ந்த கொற்றக்குடை கொண்ட மன்னனின் புகழைப்போலவும் ஞானம் மேலோங்கிய நான்மறையவருக்கு அளித்த கொடை போலவும் நீர் பெருகிக் கொண்டே இருந்தது. வள்ளல்களுக்கு அடுத்து வரைமுறை வழிவாத மன்னன். அவனுக்கு அடுத்து நூல்நெறி நிற்கும் மறையோர்.

தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்
நிலை நிலாது இறை நின்றது போலவே
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே

தலையும் உடலும் கால்களும் தழுவி அங்கும் நிலைகொள்ளாது  நழுவிச்செல்லும் தன்மையாலும் மலையில் உள்ள எல்லாவற்றையும் கவர்ந்துகொண்டு பிரிந்தோடிச் செல்வதாலும் அந்த நதிநீர் விலைமாதரை ஒத்தது.

இவ்வரிசையில் எப்படி விலைமாதர் வந்தனர் என்ற வியப்பு வாசகர்களுக்கு ஏற்படும். பொதுவாக தமிழாசிரியர்கள் இது கம்பனுக்கே உரிய பெண்ணாசையின் விளைவு என்று விளக்குவதும் உண்டு. ஆனால் கம்பனின் இந்த வைப்புமுறை மிகத்தொன்மையான ஒரு மதிப்பீட்டைச் சார்ந்திருக்கிறது. இது வளத்தின் சித்தரிப்பு. காமமும் விலைமாதரும் வளத்தின் பகுதிகள்.

இந்த வைப்பு வரிசையில் கம்பன் அடுத்து குடித்து நிலைகெட்ட களிமகனைச் சித்தரிக்கிறான். அதன்பின்னர் போரையும் வெற்றியையும் சித்தரிக்கிறான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே அக்கால மனத்தில் ஒரு சிறந்த சமூகத்தின் உறுப்புகளாக இருந்தன இவை என்று கொள்ளமுடியும்.

இவ்வரிகளை நாம் இன்று வாசிக்கும்போது விலைமகளைப்பற்றிய ஒரு கண்டனத்துடன் , இழிவுடன் வாசிக்கிறோம். ஆனால் கம்பராமாயணத்தில் அந்த இழிவை நாம் காணமுடியாது. காமம் இயல்பான ஒரு கொண்டாட்டமாக கருதப்பட்டமையால் காமமகள் அதனுடன் தொடர்புடைய ஒரு மங்கலச்சின்னமாகவே மதிப்பிடப்பட்டாள். விலைமகளிர் இல்லாமல் எந்த ஒரு மங்கலமும் முழுமைபெறாது என்ற நிலை சமீப காலம்வரை இருந்தது. திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் முதன்முதலில் பேருந்து வந்தபோது அதில் சுசீந்திரம் கோயில் தாசிகளை ஏற்றி வெள்ளோட்டம் விட் மன்னர் ஆணையிடார் என்று அ.கா.பெருமாள் அவரது தென்குமரியின்கதை  என்ற வரலாற்று நூலில் சொல்கிறார். இன்றும் விலைமகள் எதிரே வருவதே மிகச்சிறந்த சகுனம் என்று நம்பப்படுகிறது.

இப்பாடலிலும் விலைமகள் மாந்தளிர்போல, மலர்கள் போல, அகிற்புகை போல, சந்தனப்பூச்சு போல, பொன்னகை போல, நிறைகுடம் போல ஒரு மங்கலப்பொருளாகவே வருகிறாள். நிலமகளின் அழகும் வளமும் அவள் வான் மீது கொண்ட காமத்தின் விளைவுகள் என நம்பிய ஒரு சமூகத்தின் வெளிப்பாடு அது.

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைநான் கடவுள், புதிய விமரிசனங்கள்