கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…

அன்புள்ள நண்பருக்கு…

………இவை உபதேசங்கள் அல்ல. எழுதி எழுதி கற்றுக்கொண்டவை. உங்களுக்குப் பயன்படலாம்.

முதலில் ஒரு பிரிவினையைச் செய்ய வேண்டும். கட்டுரை [Essay] ஆய்வுரை [Article].

கட்டுரைக்கு ஒரு கச்சிதமான வடிவம் தேவை. பக்க அளவு முக்கியம். ஆய்வுரை முற்றிலும் வேறுபட்டது. முக்கியமான வேறுபாடு இதுதான். கட்டுரைக்கு ஒரே ஒரு கோணம்தான் உண்டு. ஆய்வுரை பலகோணங்களில் ஒரு கருத்தை முன்வைப்பது

கட்டுரை ஏற்கனவே ஆராய்ந்து தெளிந்தவற்றை எடுத்துக்கூறும் தன்மை கொண்டது.ஆய்வுரை ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்து பார்க்கும் தன்மை கொண்டது. கட்டுரையில் விரிவான விளக்கங்களோ விவாதங்களோ நிகழ்த்த முடியாது. அதற்குரியது ஆய்வுரையே.

நவீனக் கட்டுரை வடிவத்தால் சிறுகதையைப்போன்றது.

அ பளீரென்ற தொடக்கம்

ஆ. பாம்பு ஊர்வது போல சரசரவென்ற போக்கு

இ. கவனத்தில் ஆழப்பதியும் ‘முத்தாய்ப்பு’ கொண்ட முடிவு

— என சிறுகதைக்குரிய மூன்று அடிப்படை இயல்புகளும் கட்டுரைக்கும் தேவை.

சிறந்தகட்டுரையின் அடிபப்டைக் குணம் இதுவே– அது வளர்த்தலோ திசை திரும்பலோ இல்லாமல் இருக்கும். ‘கச்சிதமான கட்டுரை’ என்ற வரி ‘சிறந்த கட்டுரை’ என்பதற்கு சமமானதே.

நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை.

1. கட்டுரை எதைப்பற்றியது என ஒரே ஒருவரியில் சொல்ல உங்களால் முடியவேண்டும். அதுவே அதன் மையம். அதாவது ‘கரு’

2. கட்டுரையில் முதல்வரியிலேயே அந்த கரு நேரடியாக வெளிப்படுவது நல்லது. அல்லது அந்தக் கருவை நோக்கி நேரடியாகச் செல்லும் ஒரு வழி அந்த முதல்வரியில் திறந்திருக்க வேண்டும்

3. அந்த மையக்கருவை நிறுவக்கூடிய விவாதங்களாக தொடர்ந்துவரும் வரிகள் வெளிபப்டவேண்டும். அதற்கான ஆதாரங்கள், அதை நிறுவும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அதை மறுக்கும் வாதங்களுக்கான பதில்கள் ஆகியவை.

4 கட்டுரையில் பேசப்படும் கருத்துக்கு ஆதாரம் காட்டும்போது வலிமையான ஒரு ஆதாரம் கொடுக்கப்பட்டால் போதும். ஒன்றுக்குமேல் ஆதாரங்களைக் கொடுக்கவேண்டிய தேவை இல்லை. அது கட்டுரையை சோர்வுற்றதாக ஆக்கும். பெரும்பாலும் ஒரு உதாரணத்தை நாம் சொல்லியதுமே அதேபோன்ற பல உதாரணங்கள் நம் நினைவுக்கு வரும். அவற்றை வரிசையாக சொல்லிச்செல்லும் உற்சாகம் ஏற்படும்.அது கட்டுப்படுத்தப்படவேண்டும்.

5 வரிசையாக ஆதாரங்கள் கொடுத்து ஒன்றை நிறுவுவதாக இருந்தால் கட்டுரையின் நோக்கமே அதுவாக இருக்கவேண்டும், வேறு விஷயமே கட்டுரையில் இருக்கக் கூடாது.

6 கட்டுரையில் ஒரு விஷயம் குறிப்பிடப்படும்போது அக்கட்டுரையின் விவாதத்துக்கு என்ன தேவையோ அதைமட்டுமே அவ்விஷயத்தில் இருந்து எடுத்து முன்வைக்கவேண்டும். சுவாரஸியமாக இருக்கிறதே என தொடர்பில்லாதனவற்றை சொல்ல முயலக்கூடாது. உதாரணம், முக அறுவை சிகிழ்ச்சை பற்றிய ஒரு கட்டுரையில் மைக்கேல் ஜாக்ஸனைப்பற்றி சொல்லவரும்போது அவரது சமீபத்திய இசைத்தட்டின் விற்பனை எத்தனை லட்சம் என்ற தகவல் தேவையில்லை

7 கட்டுரை ஒரே உடல் கொண்டதாக இருக்க வேண்டும். இரு தனி விஷயங்கள் இணைக்கப்பட்டதுபோல தோன்றவே கூடாது. ஒருவிஷயத்துக்கு ஒரு கட்டுரை என்பதே நல்லது

8 கட்டுரையில் முன்னுரை ,அல்லது பீடிகை இருந்தது என்றால் அது அக்கட்டுரையில் அளவில் எட்டில் ஒருபகுதிக்கும் குறைவாகவே இருக்கவேண்டும். எவ்வளவு சுருக்கமான பீடிகை இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. பீடிகை கண்டிப்பாக மையக்கருவை சுட்டவேண்டும்– நுட்பமாகவேனும்.

9. மையக்கருவிலிருந்து விலகி சில தகவல்களை அல்லது கருத்துக்களைச் சொல்வதாக இருந்தால் அவற்றை இடைவெட்டுகளாக ஒருவரியில் அல்லது இரண்டு வரியில் சொல்லிச் செல்வது நல்லது. அடைப்புக் குறிக்குள் சொல்வது, — போட்டுச் சொல்வது சிறப்பு.

10.கட்டுரைக்கு தகவல்கள் எப்போதும் அவசியம். ஆனால் எத்தனை முக்கியமான தகவலாக இருந்தாலும் அது கட்டுரையை வரட்சியானதாக ஆக்கும். ஆகவே தகவல்களை எப்படியெல்லாம் சுவாரசியமாக ஆக்க முடியுமோ அப்படியெல்லாம் சுவாரஸியமாக ஆக்கவேண்டும். தகவல்களை குட்டிநிகழ்ச்சிகளாக ஆக்கலாம். ஒன்றுடன் ஒன்று பிணைக்கலாம். சொல்லும் மொழியால் வித்தியாசப்படுத்திக் காட்டலாம். பட்டியல்கள் ஒரு கட்டுரைக்கு எப்போதுமே பெரும் பாரம்

11. ஒரு கட்டுரை முழுக்க ஒரே வகை மொழி இருக்கவேண்டும். விளையாட்டுத்தனமான ஒரு கட்டுரை திடீரென்று கோபம் கொள்வ§தோ சட்டென்று தீவிரமடைவதோ கூடாது. அடிப்படையில் இது என்ன மனநிலை [mood] உள்ள கட்டுரை என்ற தெளிவு அக்கட்டுரையில் இருக்கவேண்டும். நகைச்சுவையாக ஆரம்பித்து மெல்ல தீவிரமடையும் கட்டுரைகளும் தீவிரமாக ஆரம்பித்து வேடிக்கையாக ஆகும் கட்டுரைகளும் உண்டு. அப்போது அந்த மாறுதல் சீராக ஆசிரியரால் கொண்டு வரப்படவேண்டும். எது மைய உணர்ச்சியோ அதுவே பெரும்பாலான அளவுக்கு இருக்க வேண்டும். பாதிப்பாதி என்றெல்லாம் இருக்கக் கூடாது

12. மேற்கோள்களை முடிந்தவரை தவிர்ப்பதே கட்டுரைக்கு நல்லது. மேற்கோள் கொடுக்கும்போது வித்தியாசமாகவோ கவித்துவமாகவோ தீவிரமாகவோ வேடிக்கையாகவோ கூறப்பட்ட மேற்கோள்களை மட்டுமே ” … ” போட்டு அப்படியே கொடுக்க வேண்டும். அதாவது அந்த மேற்கோள் வாசகனை நின்று கவனிக்க வைப்பதாக இருக்க வேண்டும். எக்காரணத்தாலும் நீண்ட மேற்கோள்கள் ஒரு கட்டுரையில் வரக்கூடாது. ஒருபோதும் எல்லாருக்கும் தெரிந்த மேற்கோள்களை கொடுக்கக் கூடாது. பொதுவான சாதாரணமான கருத்துக்களை ஒரு முக்கிய பிரமுகர் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டுவதானால் அக்கருத்துக்களை சுருக்கி நம் சொற்களில் கொடுப்பதே நல்லது.

13. கட்டுரையில் வழக்கமான வரிகளையும் வளர்த்தல் வரிகளையும் தேடிக் கண்டடைந்து வெட்டித்தள்ள வேண்டும். எழுதும்போது சரியாகச்ச் சொல்லிவிட்டோமா என்ற ஐயத்தில் நாம் மேலும் ஒருவரி சொல்ல உந்தபப்டுவோம். அதை கட்டுபப்டுத்த வேண்டும். ”இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்’ போன்ற வரிகள் கூடவே கூடாது.

14. பிரபலமான சொற்றொடர்களையும் தேய்ந்த சொற்றொடர்களையும் [ஜார்கன், க்ளீஷே] முற்றிலும் தவிர்க்கவேண்டும். ‘திருடனைத் தேள்கொட்டியது போல’ போன்ற வரிகள் உதாரணம். ஆங்கிலத்தில் எழுதும்போது இது நிறையவே நமக்கு வரும். நமது ஆங்கிலக் கல்வி அத்தகையது. ‘ஸ்டெப்பிங் இன் அதர்ஸ் ஷ¥ஸ்’ என்றெல்லாம்…

15. ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்

*

இவற்றைப்பற்றி நீங்கள் யோசிக்கலாமென்று படுகிறது

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
அடுத்த கட்டுரைதமிழினி மாத இதழ்