பொன்மணி பதிப்பக வெளியீடாக 1998 ல் வெளிவந்த சோதிப்பிரகாசத்தின் ‘வாழ்க்கையின் கேள்விகள்’ [இரண்டாம் பதிப்பு] என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை. முதற்பிரசுரம் திண்ணை இணைய இதழ்
பகுதி ஒன்று : விவாதத்துக்கான முகாந்திரம்
[அ]
சோதிப்பிரகாசம் அவர்களின் இந்த நூலுக்கு நான் முன்னுரை எழுதுவது அவரை அறிந்த வாசகர்களுக்கு வியப்பாக இருக்காதென்றாலும் பொதுவான மார்க்ஸிய வாசகர்களுக்கு சற்று வியப்பும், கட்சிசார்ந்த மார்க்ஸியர்களுக்கு சிறு அதிர்ச்சியும் தரக்கூடும். காரணம் எனது விமரிசனங்கள் காரணமாக ஏற்கனவே இருந்து வந்த கோபமானது பின் தொடரும் நிழலின் குரலுக்கு பிற்பாடு வெறுப்பாகவே மாறிவிட்டிருக்கிறது. இவர்களில் சிலர் தவிர பிறர் அந்நூலைப் படித்தது இல்லை என்பது ரகசியமல்ல. அதை அறிவார்ந்த நேர்மையுடன் படிக்கும் ஒரு வாசகருக்கு அதனுடன் முரண்படவும் விவாதிக்கவும் ஏராளம் இருக்கலாமே ஒழிய, அதன் கலைத்தன்மையும் தீவிரமும் அவர் மனதை கவரும் என்றும் அதன் தரப்பை ஒரு முக்கியமான எதிர்தரப்பாகவே அவரால் காணமுடியுமென்றும் நான் தொடர்ந்து சொல்லி வந்துள்ளேன்.
நண்பர் சோதிப்பிரகாசம் அவர்கள் எனக்கு ‘பின் தொடரும் நிழலின் குரல்‘ நாவலின் வாசகராகவே அறிமுகமானார். பல விவாதக்கடிதங்களுக்கு பிறகு அவர் அந்நாவலுக்கு மிக விரிவான ஒரு விமரிசனத்தை [அவரது வார்த்தைகளில் விள்ளனத்தை] முன்வைத்தார். அது அவரது ‘ வரலாற்றின் முரண் இயக்கம் ‘என்ற முக்கியமான மார்க்ஸிய ஆய்வு நூலின் பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. அக்கட்டுரை அந்நாவலின் கருத்துத் தளத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது என்றாலும் அப்படி ஓர் ஆய்வு அப்படைப்புக்கு வெளிவந்தது ஒரு அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன்.இம்முன்னுரைக்காக சோதிப்பிரகாசம் என்னை அணுகியது அந்த விவாதத்தின் தொடர்ச்சியை அவர் விரும்புவதனால்தான் என்றும் ஊகிக்கிறேன்.
உண்மையில் அறிமுகமாகும்போது நான் சோதிப்பிரகாசத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்திருக்கவில்லை. தமிழ் நாட்டில் மார்க்ஸிய மூலநூல்களை அவற்றின் தத்துவப் பின்னணியுடன் விரிவாக கற்ற வெகு சிலரில் அவர் முக்கியமானவர் என்று பிறகுதான் நண்பர்கள் சொல்லி அறிந்தேன். போராட்ட வீறுமிக்க தொழிற்சங்கவாதியாகவும், கட்சி அமைப்பாளராகவும், பிறகு தீவிர இடதுசாரி [மா.லெ] இயக்கங்களின் உறுப்பினராக அடிப்படைப் புரட்சியாளராகவும், போராளியாகவும் அவருக்கு மிகத் தீவிரமான ஒரு இறந்தகாலம் உண்டு என்று பலர் கூறி தெரிந்து கொண்டேன். உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் அரசியல் சட்ட நிபுணராகவும் பணியாற்றும் இந்தக் காலத்திலும் கூட அவர் முதன்மையாக அடிப்படை மக்களுக்காகப் போராடும் ஒரு மார்க்ஸியச் செயலாளியே. அவரது நூல்களை குறித்து அச்சில் கருத்து சொல்ல தயங்கியமைக்கு என் தத்துவப் படிப்பு பற்றிய சிறு தன்னம்பிக்கைக் குறைவை அவரது எழுத்துக்கள் உருவாக்கியமையே காரணம். அத்தகைய தன்னம்பிக்கையின்மையை என்னில் உருவாக்கிய தமிழகத்து மார்க்ஸியர் மிகச்சிலரே.
சோதிப்பிரகாசம் அவர்களின் எழுத்தில் நான் முதலில் கவனித்து அவருக்கு எழுதியது ‘முரணியக்கம் ‘ [dialectics] என்ற சொல்லாட்சி பற்றியாகும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த ‘இயங்கியல்‘ என்ற தவறான மொழிபெயர்ப்பு பற்றி அவரது நண்பரும் மூன்னுரையாளருமான மார்க்ஸியர் சொ.கண்ணன் குறிப்பிட்டிருந்தார். 1986 வாக்கில் ‘நிகழ்‘ முதலிய இதழ்களில் மார்க்ஸியம் குறித்து சில எதிர்வினைகளை பதிவு செய்ய ஆரம்பித்த தொடக்க காலத்திலேயே இம்மொழிபெயர்ப்புப் பிழை பற்றி உணர்ந்து ‘முரண்நிலை இயங்கியல் போக்கு ‘ என்ற சொல்லை நான் உருவாக்கி பயன்படுத்தி வந்தேன். அதற்கு முன்பாக அச்சொல்லாட்சி பொதுவாக காணக்கிடைக்காததால் அது என் சொல்லாட்சி என்ற உணர்வும், பிற்பாடு என் ஆசானாக நான் எண்ணும் ஞானி முதலியோர் அச்சொல்லை பயன்படுத்தத் தொடங்கியமை குறித்து சிறு பெருமிதமும் கொண்டிருந்தேன். மேலும் கச்சிதமான சொல்லை முன்னரே சோதிப்பிரகாசம் கையாண்டிருக்கும் விபரம் எனக்கு அப்போது தெரியாது.
அவரது முன்னுரையொன்றில் சொ.கண்ணன் அவர்கள் சொல்லியிருப்பது போல அது எளிய மொழியாக்கப் பிரச்சினை அல்ல.மாறுபட்ட இரு போக்குகள் மோதி முயங்கி அவற்றின் சந்திப்புப் புள்ளிவழியாக நடக்கும் முன்னோக்கிய நகர்வு குறித்த இந்த தத்துவார்த்த உருவகமானது எப்படி ‘இயங்கியல் ‘என்று தட்டையாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது? அதற்கு காரணமாக அமைந்த மனநிலை என்ன? முரணியக்கத்துக்கு நேர் எதிரான மத/வழிபாட்டு மனநிலைதான் அது. அதாவது முரணியக்கமே ஒரே இயங்கியல் முறை என்ற பிடிவாதமான நம்பிக்கை அம்மொழிபெயர்ப்புக்கு பின்னால் உள்ளது. முரணியக்கத்தில் நம்பிக்கை உள்ள ஒருவரை பொறுத்தவரை முரணியக்கம் என்ற அந்த தத்துவ ஊகத்துக்கே நேர் எதிரான தத்துவ ஊகமும் உண்டு. அது இதற்கு இணையானது, எதிரானது. அதனுடனான மோதலும் முயக்கமுமே இத்தத்துவப் போக்கின் விவாதத் தளத்தை தீர்மானிக்க முடியும்.
சுழற்சிமுறை இயங்கியல்,[உதாரணம் பெளத்த இயங்கியல்] சமநிலை சார்ந்த இயங்கியல் [உதாரணம் சாங்கியம்] ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தித்தான் முரணியக்க இயங்கியலின் சிறப்புகள் குறித்தே பேச முடியும். முந்தைய இரண்டும் இங்கு வேரூன்றியவை. நம் ஆழ்மன இயக்கத்தையே தீர்மானிப்பவையாக ஆனவை. உதாரணமாக சுழற்சி முறை இயங்கியல் தான் விதி என்ற கருத்துக்கே ஆதாரம். சமநிலை சார்ந்த இயங்கியல் பார்வையே ஆயுர்வேதம் போல் நமது பல பெளதிக அறிவியல்களுக்கு ஆதாரம். இங்கு முரணியக்க இயங்கியல் வந்தபோது இங்குள்ள பிற இயங்கியல்களுடன் அது மிகத்தீவிரமான விவாதமொன்றை நடத்தி தன்னை நிறுவியிருக்கவேண்டும். அப்படியொரு தத்துவ விவாதமே இங்கு நிகழவில்லை. மாறாக ‘ மதம் துயரப்பட்ட மக்களுக்கு அபின் ‘ என்ற ஒற்றை வரியில் விவாதம் முடிவுக்கு வந்தது. இது ‘சத்திய வேதத்தை ‘ முன் வைக்கும் மதவாதியின் மனநிலையேயாகும்.
[ஆ]
சோதிப்பிரகாசத்தின் அணுகுமுறை முரணியக்க இயங்கியலை சார்ந்தது என்பதனாலேயே அவரது நூல்களில் முக்கியமானதாகவும் அவரது தத்துவ ஆய்வுகளுக்கு அடிப்படையானதாகவும் அமைந்த இந்நூலின் இரண்டாம் பதிப்புக்கு முன்னுரை எழுதும் படி என்னிடம் கோரியுள்ளார். ஆகவே என் பணி வரையறுக்கப்பட்டுவிட்டது. அவரது வேகத்தின் எதிர் விசையாக செயலாற்றுவதே அது. அதற்கு முன்பாக இங்கு சொல்ல வேண்டிய சில அடிப்படைகள் உண்டு.
1] என் கருத்துநிலைப்படுகள் எனது வாழ்க்கை மற்றும் வாசிப்பு சார்ந்தவையானாலும் நான் இங்கு முன்வைக்கும் வரையறைகள் தத்துவ நிலைப்பாடுகளல்ல. விவாதக்களத்துக்கு வெளியே எப்போதைக்குமாக கருத்துக்களை கோட்பாடுகளாக வகுத்துக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
2] இவை என் ஐயங்களும் மாற்றுநிலைகளும் மட்டுமே. எனக்கு இந்த நிமிடம் வரை வாழ்க்கையின் இயக்கப்போக்கு குறித்த உறுதியான தத்துவ நம்பிக்கை ஏதும் இல்லை. அதாவது சோதிபிரகாசத்தின் எதிர் முனையில் உறுதி கொண்டவனாக என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டாம். ஒரு எழுத்தாளனாக வாழ்க்கையின் முன்பு காணாத வண்ணங்களும் கோலங்களும் என்னை அற்புதத்திலாழ்த்தியவாறு என் முன் வந்தபடியே உள்ளன. இன்னும் சொல்லப்போனால் உலகமும் வாழ்க்கையும் வகுத்துவிட முடியாதபடி இருக்கும் வரைத்தான் எழுத்தாளனாக எனது பணி உள்ளது. அடிப்படைகள் வகுத்து முடிக்கப்பட்ட வாழ்க்கையைப்பற்றி எழுத்தாளனுக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. பிறகு தத்துவ வாதிக்கும் அதிகம் வேலையில்லை என்றே படுகிறது.
3] நான் சோதிப்பிரகாசத்துடன் விவாதிக்கும் போது ஒரு முக்கியமான முரண்பாடு ஏற்படுகிறது. பிறதுறை சார்ந்தவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் உரையாடலும் விவாதங்களும் நடக்கும் ஒரு சூழலுக்குள் சாதாரணமாக பழக்கமாக உள்ள சில முறைமைகள் தமிழில் இன்னமும் அறிமுகமாகவில்லை. இலக்கியவாதி எதைப்பற்றி பேசும் போதும் அது இலக்கியத்துடன் சந்திக்கும் தளத்தை முன்னிறுத்தியே பேச முடியும். அவனது ஆய்வு உபகரணங்களும் இலக்கியம் சார்ந்தவையே. அதாவது தகவல் திரட்டுதல்,தொகுத்தும் பகுத்தும் முடிவுகளுக்கு வருதல், தருக்க முறைமை சார்ந்து அவற்றை முன்வைத்தல் ஆகிய அறிவியக்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட முறைகளை அவன் கையாளமுடியாது. அது அவன் மன இயக்கத்துக்கே அன்னியமானது. அவன் கருத்துக்களை மனப்படிமங்களாகவும் ஆழ்மனப்படிமங்களாகவும் தான் உள்வாங்கி முன்வைக்கிறான்.
உதாரணமாக என்னை பொருத்தவரை நான் எந்த தத்துவ நூலை படித்தாலும் அதை மானசீகமாக உவமைகளாகவும் படிமங்களாகவும் மாற்றிக் கொள்வேன். அவற்றை நான் முன்வைக்கும்போதும் அவ்வடிவையே மேற்கொள்வேன். அது தத்துவத்தின் மரபான தனிமொழியாக [meta language] இருக்க முடியாது. [விட்ஜென்ஸ்டைனுக்கு பிறகு இந்தப்பிரிவைனையே பொருளிழந்து போய்விட்டது எனினும்] கருத்துக்களை முறைமையுடன் முன்வைப்பது எனக்குரிய இயல்பல்ல என உணர்கிறேன். நான் முன்வைப்பவை மனப்பதிவுகள். ஆகவே இரு வெவ்வேறு தளங்களை சார்ந்த நோக்குகள் இங்கு ஒன்றையொன்று பரிசீலிக்கின்றன என்று கொள்வதே சரியாகும். நூல்களையோ கொள்கைகளையோ சுட்டும்போதுகூட அவை சார்ந்த என் மனப்பதிவையே சொல்லமுடியும்.
ஒவ்வொரு துறையிலும் அத்துறைக்கு இன்றியமையாத ஓர் இடத்தை இலக்கியத்தால் நிரப்பமுடியும் என்ற நம்பிக்கையே என்னைப்பொறுத்தவரை இந்த விவாதத்துக்கு ஆதாரமாக அமையமுடியும். தமிழில் இத்தகைய விவாதங்கள் பகைமை போக்கு இல்லாமல் நடந்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் [நானறிந்தவரை பசுமைவாதிகளுக்கும் ஞானிக்கும் இடையே நடந்த விவாதங்கள் மட்டுமே விதிவிலக்கு தமிழில் இத்தகைய விவாதங்களின் போது வழக்கமாக கருத்துகூறவந்த இலக்கியவாதியை தங்கள் துறை சார்ந்த கருவிகளால் மண்டையில் போட்டு அமர வைக்கவே முயலப்பட்டுள்ளது. மார்க்ஸியர்களை பொருத்தவரை அவர்களுடைய விசுவாசம் மார்க்ஸியத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவன் கண்டிப்பாக அதை சற்றும் அறியாத மூடனாகவே இருக்கவெண்டும் என்ற மத நிலைபாட்டுக்கே இழுத்துச் சென்றிருப்பதை கடந்தகால மார்க்ஸிய விவாதங்களை கண்டால் அறியலாம்.முரண்பட்டு விவாதிக்க வருபவன் வர்க்க எதிரி, ஆகவே அவனை ஒழித்துக் கட்ட எந்த எல்லைவரைக்கும் போகலாம் என்பதே இங்கு மார்க்ஸியர்களின் போக்காக இருந்துவந்துள்ளது.
4] மார்க்ஸியத்தின் மீதான இவ்விமரிசனம் மார்க்ஸிய மூலநூல் மேலான விவாதமல்ல என்று சொல்ல வேண்டியுள்ளது. ‘ மூலதனம் ‘ [சோதிப்பிரகாசத்தின் மொழிபெயர்ப்பில் ‘முதல்‘] மீதான ஆராய்ச்சியில் இருந்தல்ல நம் சமகாலத்தில் மார்க்ஸிய அறிஞர்களால் என்ன சொல்லப்பட்டதோ, எவையெவை செயல்படுத்தப்பட்டதோ அவற்றின் அடிப்படையில் தான் இதை முன்வைக்க முடியும். காரணம் நான் மூலதனத்தை போதுமான அளவுக்கு படித்தது இல்லை. அதன் முக்கியமான சில பகுதிகள் என பி.கெ. பாலகிருஷ்ணன் சொன்ன பகுதிகள், காசர்கோட்டில் 5 வருடம் தபால்தந்தி ஊழியர் கம்யூனில் தங்கியிருந்தபோது மார்க்ஸிய வகுப்பில் கற்ற சில பகுதிகள் என என் வாசிப்பு மிகவும் எல்லைக்குட்பட்டது. மூலதனத்தை புரிந்து கொள்வது எனக்கு மிகவும் சிரமமாகவே இருந்தது. இப்போது சோதிப்பிரகாசத்தின் மொழிபெயர்ப்பில் ‘முதல்‘ படித்தபோதுகூட முழுக்க புரிந்தது என சொல்லமுடியாது. தியாகுவின் மொழிபெயர்ப்பினை படிக்கமுயன்றபோது பலபகுதிகளுக்கு விரிவான விளக்கங்கள் [குறிப்பாக அன்றைய ஐரோப்பிய பொருளாதார அமைப்பு மற்றும் தொழில்மூறைகள் குறித்து] இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது என்றே பட்டது. ஆனால் ஒன்று தெரிந்தது, இங்கு மார்க்ஸியம் குறித்து பேசியவர்கள், பேசுபவர்களில் உண்மையிலேயே மூலதனத்தை படித்தவர்கள் பத்து பதினைந்து பேருக்குள்தான் இருப்பார்கள்.
ஒரு எழுத்தாளனாக இன்று மூலதனத்தை பல வருட உழைப்பை மேற்கொண்டு பயில்வது எனக்கு கட்டுப்படியாகாது என்றே எண்ணுகிறேன். ஆகவே சோதிப்பிரகாசம் போன்றவர்களின் சுருக்கங்களையும் விளக்கங்களையும் நம்புவதே ஒரே வழி.எனக்கு எங்கல்சின் நூல்கள் மேலும் சுவாரசியமானவையாக இருந்தன. குறிப்பாக ‘குடும்பம் தனிச்சொத்து சமூகம்‘ என் அடிப்படைச் சிந்தனையை வடிவைத்த ஓரிரு நூல்களுள் ஒன்று. ராதுகா பதிப்பக வெளியீடுகளான மார்க்ஸ் எங்கல்ஸ் தொகைநூல்களில் தத்துவ விவாதம் மற்றும் மதம் சம்பந்தமானவற்றை கூர்ந்து படித்ததுண்டு. அன்றைய தொழிற்சங்க நண்பர்களுடன் விரிவாக விவாதித்ததுமுண்டு. [திடாரென கடந்த பத்தாண்டுகளாக தொழிற்சங்க அரசியலுக்கு தத்துவமோ சித்தாந்தமோ முற்றிலும் தேவையில்லாமல் ஆகியுள்ளது.அதற்கேற்ப ஒரு புது தலைமுறையும் உருவாகியுள்ளது] இந்த விவாதத்தை சோதிப்பிரகாசத்தின் இந்நூல் சார்ந்தே பெரிதும் நடத்த விழைகிறேன்.
இக்கருத்துக்களை இவற்றின் அடிப்படையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவேண்டுமென கோருகிறேன்
[இ]
இவ்விவாதத்தின் முக்கியமான எல்லையை நான் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இக்கருத்துக்களை நான் முன்பே பலமுறை எழுதியுள்ள போதிலும் கூட என்னைப்பற்றி கட்சி விசுவாசிகள் உருவாக்கும் சித்திரத்தையே கணிசமான வாசகர்களும் கொண்டுள்ளனர். ஆகவே ஒரு வாக்குமூலம் போல இதை சொல்லவேண்டிய அவசியம் உள்ளது. ஐரோப்பிய அறிவொளி இயக்கமே மானுட குலத்தின் இன்றைய சிந்தனை எழுச்சியின் காரணம் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அதன் அடிப்படையாக அமைந்த கிரேக்க சிந்தனை மரபுக்கு சமானமானதோ ஒருபடி மேலானதோ ஆன ஒரு பெரும் மரபு நமக்கும் இருந்தது.ஆனால் கடந்த நாநூறு வருடங்களாக அது வளர்ச்சியற்ற உறைநிலையில்தான் இருந்தது. கடைசி தத்துவ எழுச்சி அத்வைதமே. பிறகு தத்துவ தளத்தில் நீண்டகால தேக்கம். தேங்கும்போது தத்துவம் நிறுவனங்களாக சடங்காசாரங்களாக மாறி வெறும் அதிகாரமாக மாறிவிடுகிறது.
அதேசமயம் வரலாற்றின் பற்பல காரணிகளால் ஐரோப்பிய அறிவொளி எழுச்சி தொடர்ச்சியான ஒரு வளர்ச்சியை இருநூறு வருடங்களாக அடைந்தது. அதற்கு முக்கியக் காரணம் அங்கிருந்த சிந்தனைகளுக்குள்ளும் சிந்தைப்போக்குகளுக்கு உள்ளேயும் தீவிரமான முரண்கள் தொடர்ந்து செயல்பட்டன என்பதே. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், பெளத்த சமண மதங்கள் அழிந்தவுடனே, கருத்தியல் இயக்கத்தின் ஒரு பக்கம் முற்றிலும் இல்லாமல் ஆயிற்று. ஆகவே அடிப்படை விவாதமே இல்லாமலாயிற்று. அத்துடன் இன்னொன்றும் ஐரோப்பாவில் நடந்தது. கலைகளும் தத்துவமும் மிக ஆக்கபூர்வமான ஓர் உறவை மேற்கொண்டு ஒன்றையொன்று விரிவாக்கம் செய்தன. அது ஒருபோதும் இங்கு நடக்கவில்லை. ஐரோப்பிய தத்துவ எழுச்சியின் உச்சம் மார்க்ஸியமேயாகும். புறவயமான மெய்காண்முறை என்ற அளவிலும், ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கான அறிவார்ந்த ஆயுதம் என்ற அளவிலும் மார்க்ஸியம் இன்றும் முதன்மையான தத்துவம் என்பதே என் எண்ணம்.தனிவாழ்வில் நான் கடந்த பதினாறு ஆண்டுகளாக மார்க்ஸிய அடிப்படை கொண்ட தொழிற்சங்கத்தின் ஊழியனே.
மார்க்ஸியத்தின் மீதான என் விமரிசனங்கள் இரு வகைப்பட்டவை. ஒன்று அவை நடைமுறைப்படுத்தப்படும் விதத்தின் மீதான எதிர்வினைகள். இவை என் சமகால வாழ்க்கைமேலும், வரலாற்றின்மேலும் நான் கொண்டுள்ள உண்ர்வு ரீதியான ஈடுபாட்டின் விளைவுகள். இரண்டு மார்க்ஸியத்தின் தத்துவம் சார்ந்து நான் உணரும் போதாமைகள். இவற்றை ஒரு இலக்கியவாதியாக என் எழுத்துமூலம் நான் கண்டடைகிறேன். அத்தத்துவத்தை நானறிந்து உணர்ந்த வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது அறிபவை இவை.
மார்க்ஸிய நடைமுறைகள் சார்ந்த என் எதிர்வினைகளுக்குக் கூட இரு தளங்கள் உண்டு.கடந்த பல வருடங்களாக நான் கூர்ந்து அவதானித்துவரும் தொழிற்சங்க அரசியல் சார்ந்தது முதல் தளம். அத்துடன் இங்குள்ள நடைமுறை அரசியல். இன்னொன்று, என் வாசிப்பும் மூலம் நான் அடையும் வரலாற்று புரிதல் மூலம் உருவாவது. ருஷ்யாவும் சீனாவும் இரு முக்கிய முன்னுதாரணங்கள். ஸ்டாலினின் கொசாக்குக் களையெடுப்பும், மாவோவின் கலாச்சாரப் புரட்சியும்,போல்பாட்டின் இனப்படுகொலையும் மார்க்ஸியத்தின் பேரால் நடைபெற்றவை. அவற்றுடன் மார்க்ஸியத்துக்கு சற்றும் தொடர்பில்லை என்று இப்போது வாதிடப்படுகிறது. அதை ஏற்க என்னால் முடியவில்லை. மார்க்ஸியம் திரிபுபடுத்தப்பட்டே அவ்வழிவுகள் நிகழ்த்தப்பட்டன என க்ஷ சோதிப்பிரகாசமும் சொல்கிறார். அது ஓர் எல்லைவரை உண்மையென நானும் அறிவேன். ஆயினும் மார்க்ஸியத்தின் தர்க்க அமைப்பில் உள்ள சில அடிப்படைக்கூறுகளே அத்திரிபுகளுக்கு அடிப்படை வகுத்துத் தந்தன. உதாரணமாக பிரக்ஞை பெற்ற தொழிலாளர்களின் [Proletarians] மேலாதிக்கம் என்ற கருத்தே கம்யூனிஸ்டு நாடுகளில் கட்சியின் சர்வாதிகாரத்துக்கும் அரசாங்கப் பயங்கரவாதத்துக்கும் அடிப்படை நியாயமாக மாற்றப்பட்டது. அப்படி பலவிஷயங்களை சுட்டிக்காட்டலாம்.
ஆகவே மார்க்ஸியம் இந்த மானுட அவலங்களுக்கு தார்மீக பொறுப்பு ஏற்றே ஆகவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அத்துடன் சமீப காலம் வரை உலகம் முழுக்க உள்ள மார்க்ஸியர் சோவியத்நாட்டின் பேரழிவுகளை மறைத்தவர்கள், நியாயப்படுத்தியவர்கள் எனும்போது ; இப்போது காலம் சற்று பின்னகர்ந்துவிட்டது என்று பட்டதும் அப்படி என்னதான் நடந்தது சோவியத் ருஷ்யாவில், எல்லாமே மிகைபடுத்தப்பட்டவை என்றெல்லாம் சவப்பெட்டிக்கு வெள்ளையடிக்க முயல்கிறார்கள் எனும்போது ; இதை வலியுறுத்தியே ஆகவேண்டியுள்ளது. வரலாறு தெரிந்த ஒருவன் மாபெரும் கனவுகள் குறித்தும், பெரும் இலட்சியவாதத் திட்டங்கள் குறித்தும் மிகக் கவனமாகவே இருக்க வேண்டும். வரலாற்றில் பெரும் மானுடஅழிவுகள் பெரும் கனவுகளாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்நூற்றாண்டில் நடந்தவை மார்க்ஸியத்தின் அழிவுகளல்ல என்று கொண்டால் கூட அப்படி பேரழிவுகளுக்கு மறைமுகமாகவேனும் அது வழிவகுக்கக் கூடுமென்ற வரலாற்று சாட்சியத்தை சான்றை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. ஐம்பது வருடக்காலம் மார்க்ஸியத்தின் பேரால் நடத்தப்பட்ட மானுடப்பேரழிவுகளை மூர்க்கமாக மறைத்தவர்களே மார்க்ஸியர்களில் பெரும்பாலோர். இப்போது எல்லாம் வெட்டவெளிச்சமாக மேஜைமுன் கிடக்கும்போது மார்க்ஸியத்தின் அடிப்படைகள் குறித்த எந்த விவாதத்திலும் அவற்றை கணக்கிலெடுத்தே ஆகவேண்டும். அவற்றை பொருட்படுத்தாமல் சென்ற நூற்றாண்டில் மார்க்ஸிய தத்துவம் எப்படி பேசப்பட்டதோ அப்படி இப்போதும் தூய தாளில் ஆரம்பிப்போம் என்று சொல்வது ஒரு சுய ஏமாற்று மட்டுமே.
மார்க்ஸியத்தின் அறவியல் என்ன என்ற வினா மிக முக்கியமாக மார்க்ஸியர்களுக்கிடையே உருவாகி வரவேண்டுமென்று நான் எதிர்பார்த்தேன். சோவியத் ருஷ்யாவின் சரிவல்ல பிரச்சினை. அது நம்மை நமக்கு காட்டித்தந்தது. உரிய முறையில் பெரும் கனவுகளால் நியாயப்படுத்தப்பட்டால் நாம் எந்த அநீதியையும் ஏற்போம், எதையும் செய்வோம் என்று நிரூபிக்கப்பட்டது. விழுந்தது ருஷ்யாவா, கம்யூனிசமா, முரணியக்கப் பொருள்முதல்வாதமா என்பதல்ல பிரச்சினை. கருத்தியலை எந்த எல்லை வரை நம்பலாம் என்பதே. அது கறாரான தர்க்கத்துடன் இருப்பதே அதை நம்பபேற்க காரணமாகிவிடுமா என்பதே. எதுவரை நம் அறிவையும், தர்க்கபுத்தியையும் கொண்டு நம் செயல்களை வகுக்கலாம் என்பதே. நமக்கு உரிய நியாயங்கள் இருந்தால் நாம் எதையும் செய்யலாமா என்பதே. அந்த நியாயங்கள் திடாரென தவறாக ஆகுமென்றால் நமது செயல்களின் பொறுப்பை யார் ஏற்பது என்பதே.
இந்த நூற்றாண்டின் பெரும்பாலான புரட்சிகள், குறிப்பாக தேசிய இனப்போராட்டங்கள் அடிப்படையில் மார்க்ஸியத்தின் போராட்ட மனநிலையையும், தர்க்கங்களையும் கடன் பெற்றவை என்பதைக் காணலாம். அவற்றில் கணிசமானவை எல்லா அடிப்படை அறங்களையும் மீறிச்சென்று பெரும் அழிவுகளை உருவாக்கின எனும்போது இந்த வினா மார்க்ஸியம் பற்றிய ஒரு தத்துவ அலசல் மட்டுமல்ல, இனிவரும் காலத்துக்கும் மிக அவசியமான ஒன்றாகும். என் ”பின் தொடரும் நிழலின் குரல்” இவ்வினாவையே எழுப்புகிறது — கருத்தியலுக்கும் அறவியலுக்கும் உள்ள உறவு என்ன? எல்லா கருத்தியல்களுக்கும் பொதுவான அறம் உண்டா? இல்லை, ஒவ்வொரு கருத்தியலும் தன் தர்க்கத்தின் அடிப்படையில் தனக்கென அறவியல்களை உருவாக்கிக் கொள்ளலாமா?அப்படியெனில் அது அறவியலே அல்ல, தத்துவத்தின் செயல்திட்டம் மட்டும் தானே? தமிழில் என் நாவலை முன்வைத்து அதன் மீது உருவான விவாதங்கள் மிக மேலோட்டமானவை. கணிசமானவை வெறும் வசைகள். அது ஏமாற்றமும் அளிக்கவில்லை, அவர்களிடம் அதற்குமேல் எதிர்பார்ப்பதும் தவறு. சோவியத் ருஷ்யா என்ற கனவு ஐம்பது வருடம் அதிதீவிரமாக முன்வைக்கப்பட்ட இங்கு அதன் வீழ்ச்சி சார்ந்து நூறு பக்கமளவுக்கு கூட விவாதம் நடக்கவில்லை என்பது நாம் அறிந்ததே.
மார்க்ஸிய நடைமுறையின் சிக்கல்களுக்கு நாம் வெளியே தேடவேண்டியதில்லை. சோதிப்பிரகாசம் கட்சியில் இருந்தவர், தொழிற்சங்க அரசியலை அறிந்தவர். ஒரு பெரும் இலட்சியவாதம் நடைமுறையில் எப்படி வெறும் தந்திரங்களாக குறுகிவிட்டது என்று அவர் அறிவார். குசேலர் போன்ற ஒரு தலைவர் எப்படி வெளியே துரத்தப்பட்டார், எப்படி மூர்க்கமான அவதூறுமூலம் ஒழித்துக்கட்டப்பட்டார் என்று அவரால் பிற எவரை விடவும் கூறமுடியும். நாற்பது ஐம்பது வருடங்கள் கட்சிக்காக வாழ்க்கையை அளித்து தனக்கென ஏதும் அடையாத தலைவர்கள் — சாத்துண்ணி மாஸ்டர் முதல் கெ.ஆர்.கெளரியம்மா வரை — எப்படி துரத்தியடிக்கப்பட்டார்கள் எப்படி அவதூறு செய்யப்பட்டார்கள் என்று கேரள அரசியலில் தொடர்ந்து கண்டு வந்தவன் நான். ஆனால் அதுவல்ல பிரச்சினை. அவர்கள் அனைவரையும் விட தியாகத்திலும் அறிவிலும் மூத்த இ.எம்.எஸ் அவர்களை ஒழிக்கும் பணியை செய்தார் என்பதே.
சோவியத் ருஷ்யாவில் நடந்ததே இங்கு ஒவ்வொரு தொழிற்சங்க கிளையிலும் நடைபெறுகிறது என்பதை நாம் அறிவோம். [பின் தொடரும் நிழலின் குரலில் அதை காட்டியுள்ளேன்] இங்கு அழித்தொழிப்புக்கு கொலை பயன்படுத்தப்படுவதில்லை என்பதே வித்தியாசம்.அவற்றையெல்லாம் தனி மனித இயல்புகள், தத்துவத்தின் பிரச்சினைகள் அல்ல என்று சொல்லிவிடலாம். முதல் வினா அத்தகைய தனிமனித குணம் சார்ந்த திரிபுகளை மாற்ற, தடுக்க மார்க்ஸியத்திடம் என்ன வழிமுறை உள்ளது என்பதே. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதானா அதன் போராட்ட அடிப்படைகள், அதிகாரம் குறித்த வழிகாட்டல்கள், எதிர்கால சமூகம் குறித்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன? அப்படி இல்லையென்றால் தத்துவரீதியாக எத்தனை மகத்துவங்கள் இருப்பினும் அவற்றை இப்பலவீனங்கள் அடித்துக் கொண்டு போய்விடுமல்லவா என்பதே.
இந்த முன்னுரை சோதிப்பிரகாசம் அவர்களின் நூல் குறித்தது. ஆகவே அந்நூலின் எல்லையை மீறிச்சென்று பேசுதல் உசிதமல்ல. ஆயினும் மார்க்ஸியம் மீது நான் கொண்டுள்ள விமரிசன நிலைப்பாடுகள் அனைத்துக்கும் பின்புலமாக இந்த சமகால அனுபவத்தளமும் உள்ளது என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
பகுதி இரண்டு : வாழ்க்கையின் விளக்கங்கள்
[அ]
சோதிப்பிரகாசத்தின் இந்த நூலின் முக்கியமான சிறப்பியல்புகளின் முதலாவது பொதுவாக இங்கு மார்க்ஸிய விவாதங்கள் நடத்தப்பட்ட தத்துவார்த்த மொழிநடையிலோ அல்லது துண்டுப்பிரசுர நடையிலோ எழுதப்படாமல் சாத்தியமான அளவுக்கு எளிய, நேரடியான மொழியில் எழுதபட்டுள்ளது என்பது. மார்க்ஸியம் மேற்கத்திய தத்துவ மரபின் உச்சப்புள்ளி என்பதனால் அதை தமிழில் எழுத ஏராளமான தடைகள் உண்டு. கலைச்சொற்களின் தமிழாக்கம் முதல் பிரச்சினை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பல தமிழாக்கங்கள் தவறான அர்த்தங்களை அளிப்பவை. இயங்கியல் ஏற்கனவே சொல்லப்பட்ட உதாரணம். இன்னொரு குறிப்பிடத்தக்க உதாரணம் நேர்காட்சிவாதம் [positivism மற்றும் empiricism இரண்டுக்கும் இச்சொல் மாறி மாறி பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் சரியான கலைச்சொல் புறவயத் தர்க்கவாதம்]
தத்துவ விவாதத்துக்கு உரிய வரையறைத்தன்மை கொண்ட சொற்றொடர்களை ஆக்குவது அடுத்த பிரச்சினை.கூட்டுச்சொற்றொடர்களில் மட்டுமே பன்முகத்தன்மை கொண்ட ஒரு வரையறையை அளிக்க முடியும்.தமிழில் உள்ள கறாரான எழுவாய் பயனிலை அமைப்பு காரணமாக கூட்டுச்சொற்றொடர்களை அமைக்கும் போது அவற்றை மானசீகமாக அவிழ்த்து சிறு சொற்றொடர்களாக மாற்றி மீண்டும் கோத்துத்தான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. மூன்றாவதும் முக்கியமானதுமான பிரச்சினை விவாதத்தை நமது சூழலுக்கு மாற்றி அளிப்பது. மார்க்ஸியத்தின் முக்கியவிவாதங்கள் நமக்கு முற்றிலும் அன்னியமான ஐரோப்பியச் சூழலில் நடந்தவை/நடப்பவை. அச்சூழலை நாம் முழுக்க அறிந்து கொண்டபின்பு அவ்விவாதத்தை புரிந்துகொள்வது என்பதெல்லாம் எளியவிஷயமல்ல. அவ்விவாதத்தின் அடிப்படை கொள்கைகளை நம் சூழலின் அனுபவ அலகுகளுக்கு மறு ஆக்கம் செய்யாமல் அவற்றை இங்கு நாம் புரிந்துகொள்ள முடியாது. மார்க்ஸிய விவாதத்தை பொறுத்தவரை இங்கு சிலரே அப்பிரக்ஞையுடன் செயல்பட்டுள்ளனர்.
சோதிப்பிரகாசம் இந்நூலில் கலைச்சொற்களை மூல அர்த்தத்தின் அழுத்தங்கள் கெடாமல் மறு ஆக்கம் செய்து பயன் படுத்துகிறார்.பல கலைச்சொல்லாக்கங்கள் முன்னோடியானவை என்று படுகிறது. உதாரணமாக அயன்மைப்பாடு [estrangement] உண்மம் [actual] உணர்மை [consciousness] நியமம் [standard] நிகழ்மை[fact] ஆகியவற்றை சொல்லலாம். ஆனால் இவரது கலைச்சொற்களுள் கருத்துகுழப்பம் உருவாக்கும் ஒன்றும் என் கவனத்தில் வந்தது. ‘காரணம் ‘ என்ற சொல்லை reason என்ற சொல்லின் தமிழ் வடிவமாக சோதிபிரகாசம் பயன்படுத்துகிறார். ஆனால் அச்சொல் இந்திய தத்துவ மரபில் மிக விரிவான அளவில், பலவகை உள்விரிவுகளோடு பயன்படுத்தப்பட்டு வந்த ஒன்று. [காரணம் காரியம் இரண்டுக்குமான உறவு இந்திய சிந்தனை மரபுப்படி ஒரு தத்துவத்தின் பேசுபொருட்களில் முக்கியமானதாகும்] இந்திய வாசகனுக்கு காரணம் என்ற சொல்லானது முற்றிலும் வேறான பொருளை அளிக்கும். அவனைப் பொறுத்தவரை காரணம் என்பது ஒரு விஷயத்தின் தருக்கபூர்வ விளக்கமல்ல, ஒரு விஷயத்தின் இயல்புகளை தீர்மானிக்கும் அடிப்படைப் பின்னணியாகும். காரண அறிவு என்று கொண்டால் இந்த பிரச்சினையை தாண்டலாம்.
இந்நூலானது ஒரு தத்துவ வகுப்பில் நேரடியாக விளக்கும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே தத்துவத்துக்கு உரிய கறாரான மொழியில் அல்லாமல் சற்று நெகிழ்வான பேச்சுப் பாணியில் எழுதப்பட்டுள்ளது. அதன் சாதக அம்சம் சரளமான ஓட்டமும் கருத்துக்களின் தெளிவும் ஆகும். ஆனால் அடிப்படையான இடங்களில் அளிக்கப்படும் சில வரையறைகள் ஒற்றைப்படையானவையாக மிதமிஞ்சிய எளிமை கொண்டவையாக இருக்கின்றன என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்நூலின் முக்கியமான அம்சம் இது யாருக்கு தமிழ் சூழலில் மார்க்ஸியம் மீது ஆர்வம் ஏற்படுமோ அவனை முன்னிலைப்படுத்தி பேசுகிறது. கல்விக்குபிறகு தன் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு சமூகத்தை எதிர்கொண்டு அதன் கறாரான பொருளாதார இயங்குவிதிகளை அறிந்து ஆழமான முரண்பாடும் மனக்குழப்பமும் அடைந்து தத்தளிக்கும் இளைஞன் என்ற சந்தப்பம் அனேகமாக இங்கு எல்லாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கும். அவனிடம் பேசும்போது சோதிப்பிரகாசம் பேசப்படும் அனைத்து விஷயங்களையும் எளிதாகச் சமகாலச்சூழலுக்கு கொண்டு வந்துவிடுகிறார்.
இரண்டாவதாக சோதிப்பிரகாசம் இவ்விவாதத்தை இதுவரை இங்கு நடந்துவந்த தத்துவத் தேடல்களின் இயல்பான அடுத்தகட்ட வளர்ச்சி போக்காக உருவகித்துக் கொள்வதை கூறவேண்டும். இந்திய/தமிழ்ச் சூழலில் பொதுவாக தத்துவ விவாதங்கள் மதம் சார்ந்தே நடந்துள்ளன. சொல்லப்போனால் இங்கு மதம் தத்துவம் இரண்டையும் கூர்ந்த அவதானிப்பின் மூலமே பிரித்து அறிய முடியும்.மேற்பரப்பில் தெரிவது வழிபாட்டு முறைகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள். இவற்றுக்கான மெய்யியல் அடிப்படைகள் அடுத்தபடியாக. அவற்றின் தத்துவ உள்ளடக்கம் இறுதியாக. இந்தியச் சூழலில் மதம் சார்ந்த அனைத்தையும் பழங்கால வழிபாடுகள் மற்றும் முடநம்பிக்கைகளாகக் கண்டு நிராகரித்த மார்க்ஸியர்களே அதிகம். சிலர் அவற்றின் சமூகவியல் உள்ளடக்கத்தை கணக்கில் கொண்டுள்ளனர். மிகச்சிலரே அவற்றின் தத்துவப்பெறுமானத்தை பொருட்படுத்தியவர்கள்.
என் வாசிப்பில் கெ.தாமோதரன் முக்கியமானவர். என் மனத்தில் இந்தியத்தத்துவ மரபு குறித்த அடிப்படை வரைபடத்தை உருவாக்க அவரது நூலான இந்திய சிந்தனை பெரும்பங்காற்றியுள்ளது. அவரால் உருவாக்கப்பட்ட முரணியக்கம் சார்ந்த பார்வையின் குறைபாடுகளை நித்ய சைதன்ய யதி யின் நேரடித்தொடர்பு மூலமே நிரப்பிக் கொண்டேன். இ.எம்.எஸ், டி டி கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாய ஆகியோரின் பங்களிப்பும் இத்தளத்தில் முக்கியமானது. [எஸ்.ஆர்.டாங்கே, பி.ராமமூர்த்தி, ராகுல சாங்கிருத்தியாயன் ஆகியோரின் அணுகுமுறை தத்துவார்த்தமானதே அல்ல. வெற்று இயந்திரவாதப் பார்வையின் அடிப்படையில் தத்துவத்தை அணுகும் குறுக்கல்போக்குகள் அவை] தமிழில் ஞானியின் பார்வை இவ்வகையில் முன்னோடி என்றே குறிப்பிடத்தக்கது. அது குறித்த கடுமையான எதிர்க்கருத்து எனக்கு இருப்பினும் கூட அவரது அணுகுமுறை முக்கியமான ஒன்றெனவே எண்ணுகிறேன். சோதிப்பிரகாசம் இந்நூலிலும் அவரது அடுத்த நூலான ‘ மனத்தின் விடுதலை ‘ யிலும் இந்திய தத்துவத் தேடல்களின் காலத்துக்கேற்ற வளர்ச்சிப்போக்காகவும், அவற்றின் சரிவுகளை நிரப்புவதாகவுமே மார்க்ஸியத்தை உருவகித்துள்ளார்.
[ஆ]
சோதிப்பிரகாசத்தின் இந்நூல் மார்க்ஸியத்தின் தத்துவமையம் குறித்து விளக்கும் அடிப்படை நூலாகும். அதாவது முரணியக்க இயங்கியல் அடிப்படையில் உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளவும் அதன் வழியாக சமூகம் இயங்கும் அடித்தளத்தை காரணகாரிய அடிப்படையில் விளக்கிக் காட்டவும் முற்படும் நூல். ஏற்கனவே இதே தளத்தை சேர்ந்த சில நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ராடுகா பதிப்பக வெளியீடாக வந்த ‘ இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்‘ என்ற நூல் அதன் எளிமை மற்றும் முழுமையான பின்னணி விளக்கம் காரணமாக முக்கியமானது என்பது என் எண்ணம். அந்நூலுக்கும் இதற்கும் இடையேயான வேறுபாடு முதல் சில பக்கங்களிலேயே தெளிவாகும். அந்நூல் தத்துவ உலகில்,குறிப்பாக மேலை தத்துவ உலகில் காலாகாலமாக நடந்துவரும் தத்துவப்போரை குறித்து பேசி அதன் தொடர்ச்சியாக மார்க்ஸியத்தை முன்வைத்து அதன் தர்க்க ரீதியான அணுகுமுறையை முன்வைக்கிறது. ஆனால் இந்நூல் முதல் பக்கத்திலேயே இந்திய,தமிழ் சூழலின் நாம் எதிர் கொள்ள நேரும் நடைமுறை சவால்களின் அடிப்படையென்ன என்ற வினாவுடன் தொடங்குகிறது.அதை விளக்க மட்டுமே தொடர்ந்து முயல்கிறது. இரண்டாம் பகுதியில் அந்த அடிப்படையில் அகவயமான மன /கலாச்சார இயக்கங்களையும் விளக்க முயல்கிறது.
சமூகத்தில் தனக்கென ஓர் இடம் வேண்டும் என்று விரும்பும் இளைஞன் சிந்திப்பவனாக இருப்பின் சமூகம் என்றால் என்ன,எனக்கும் அதற்கும் அதற்குமான உறவு என்ன என்று வினவுவான். அவ்வினாவுக்கு பதிலாக மார்க்ஸிய மூலநூல முன்வைக்கும் விரிவான விளக்கத்தை எளிமையாக முன்வைக்கிறார் சோதிப்பிரகாசம். விலங்குகளில் இருந்து மனிதன் வேறுபடுவது அவனால் உற்பத்தி நடவடிகையில் ஈடுபட முடிவதனால்தான். அந்த உற்பத்தி நடவடிக்கையே அவனது எல்லா சிறப்புகளுக்கும் அடிப்படையாகும். அதிலிருந்தே அவனது சமூகம் கலாச்சாரம் எல்லாம் உருவாகிவருகின்றன. இந்த புள்ளியில் இருந்து உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவை கிளைத்து வரும் சித்திரத்தை சோதிப்பிரகாசம் அளிக்கிறார். இவற்றின் வளர்ச்சிப்போக்கில் மதிப்பு, பணம், விலை போன்றவையும் இறுதியாக ஆதாயமும் உருவாகிவரும் சித்திரத்தை தொடரும் பக்கங்கள் அளிக்கின்றன
மார்க்ஸிய அடிப்படைகளைப் பயிலும் போது மிக முக்கியமாக ஏற்படும் ஐயம் ஒன்று உண்டு.பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றவர்கள் அதை அறிந்திருப்பார்கள். பொருளின் மெய்யான மதிப்பு என்பது அதன் மீது செலவிடப்பட்ட உழைப்பின், உழைப்பு நேரத்தின் மதிப்பே என்று முதலில் கேட்கும்போது அது ஒரு அபத்தமான தத்துவார்த்தக் கூற்றாக பெரும்பாலோருக்குப்படும். பெரும்பாலோர் மதிப்பு என்பது அப்பொருளின் நுகர்வுத்தகைமை மூலம் உருவாவது என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். அடுத்தபடியாக பலர் அப்பொருளின் கிராக்கி மூலமே மதிப்பு உருவாவதாக எண்ணியிருப்பார்கள். ஆகவே பயிற்சிவகுப்புகளில் கணிசமான நேரம் இதை விளக்கச் செலவிடப்படுவது வாடிக்கை. [அடுத்தபடியாக ஐயத்தை கிளப்புவது பாட்டாளிகளுக்கு வர்க்க உணர்வை ஊட்டுவது நடுத்தர வர்க்கமான புரலட்டேரியன்களே என்ற கருத்து. இந்தியச்சூழலில் கணிசமான தொழிலாளர்களுக்கு மத்திய வர்க்கம் மீது ஆழமான மனக்கசப்பு உண்டு என்பது ரகசியமல்ல] இந்நூலில் மதிப்பு உழைப்பிற்கும் உழைப்பு நேரத்துக்கும் சமானமான பதிலீடாக உருவாகிவருவதன் சித்திரத்தை சோதிப்பிரகாசம் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். இதை விளக்க முனையும் போது கணிசமான தோழர்கள் மிகப்பருண்மையாக, எளிய அன்றாட உதாரணங்கள் மூலம் விவரிக்க முற்பட்டு அக்கருத்தின் மீது ஆழமான ஐயத்தை ஏற்படுத்திவிடுவதைக் கண்டிருக்கிறேன். சோதிப்பிரகாசம் உழைப்புநேரம் மதிப்பை தீர்மானிப்பது நேரடியாக அல்ல என்று விளக்கி, அது கருத்துருவிலேயே உள்ளது என்று கூறுகிறார்.
உழைப்பு நேரம் என்பது கருத்துவயமான ஓர் அளவையே அன்றி பருமையான ஓர் அளவை நியமம் அல்ல. இந்த அளவை மணிக்கணக்குகளில் அல்லாமல் அளவுமுறையான சமன்மையினை மனநிறைவாகக் காட்டுவதில் உண்மமான வெளிப்பாட்டினை காண்கிறது. [வா.கே : பக்கம் – 94]
-இவ்விளக்கம் இக்கருத்து பற்றிய பொதுவான குழப்பங்களுக்கு விடையளிப்பது மட்டுமல்ல அடுத்த படியாக சோதிப்பிரகாசம் முன்வைக்கும் மதிப்பு/பணம் என்ற முரண்பாட்டை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்கான ஒரு வழிகாட்டலும் கூட. மிகச்சிக்கலான உள்ளியக்கம் கொண்ட பெரும் அமைப்புகளை பற்றி பேசும் போது அவற்றை எளிமைப்படுத்தி அடிப்படைச் சலனங்களை மட்டும் கணக்கில் கொண்டு விவாதிக்கிறோம். ஆனால் அவ்விவாத முடிவுகளை உடனடியாக விரிவுபடுத்தி சிக்கலான முறையில் புரிந்துகொள்ள நாம் முயலவேண்டும்.
இந்நூலை ஓர் அறிமுகநூல் என்ற தளத்திலிருந்து தத்துவ ஆய்வுநூல் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்வது இதை தொடர்ந்து சோதிப்பிரகாசம் மதிப்பு/பணம் ஆகிய இரு கருத்துருக்களுக்கும் இடையேயான உறவை விளக்கும் இடமாகும்.
”…… எனவே பணம் என்பது சரக்குகளின் கைமாற்று விகிதத்தினை வெளிப்படுத்துகின்ற வடிவம் மட்டும் அல்ல, அளவுமுறையான சீர்கேடுகளை மூடி மறைக்கின்ற வடிவமும் ஆகும். எனினும் பணத்தின் வடிவத்தில் மட்டுமே மதிப்பு வெளிப்பட முடிகிறது ” [வா.கே : பக்கம் 95]
இன்றைய பொருளியலின் முக்கிய ஆய்வுத்தளங்களில் ஒன்று பணத்துக்கும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகளுக்கும் இடையேயான உறவு. இன்றைய சந்தைப் பொருளாதார அமைப்பில் பணம் பெரும்பாலும் தவறான சித்திரத்தை அளிப்பதாக, மூடிமறைக்க உதவும் அமைப்பாகவே உள்ளது. பணவீக்கம் அலையடிக்கும் இந்தியாவில் அது எந்தச் சாமானியனுக்கும் தெரியும். யாருமே இங்கு ‘பணத்தை ‘ சேமிப்பதில்லை.
” மதிப்பு என்பது சமுதாய உற்பத்தி உறவுகளின் கருத்து வயமான விதி என்றால் பணம் என்பது இவ்வுறவுகளின் பருமையானவிதி. ஆனால் இவ்விதியோ விதியின்மையாக வெளிப்படுகிறது. அதாவது மனிதர்களின் கருத்துவயமான கரணியம் கரணியமற்றதாக வெளிப்படுகிறது ”[வா.கே:பக்கம் 95]
மனித குலம் வரலாற்றின் மூலம் படிப்படியாக வளர்த்தெடுத்த தர்க்கபூர்வ அமைப்புகளில் முக்கியமானது பொருளுக்கு சமூகப்பொதுவான மதிப்பை கற்பிதம் செய்துகொண்டதும் அதன் மூலம் உற்பத்தியை ஒரு பிரம்மாண்டமான கூட்டுச் செயல்பாடாக மாற்றிக் கொண்டதுமாகும். அந்த தர்க்கத்தின் புறவயமான அடையாளமான பணம் மானுட மனம் உருவகித்த ஆகப்பெரிய குறியீடு. ஆனால் அந்த குறியீடு அதன் பின்னணிதர்க்கத்தை மீறி,முரண்பட்டு முன்னகர்ந்தது மானுட வரலாற்றின் முக்கியமான முரண்பாடுகளில் ஒன்று. இந்த முரண்பாடு மார்க்ஸின் காலகட்டத்திலேயே விரிவாக உருக் கொண்டுவிட்டதுதான். ஆனால் இன்று அது மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. பங்குச் சந்தை ஆட்டங்கள் மூலம் பணமதிப்பு கணந்தோறும் ஏறியிறங்கும், அது ஒவ்வொருவருடைய தலையெழுத்தையும் தீர்மானிக்கும், இக்காலகட்டத்தில் இப்பிரச்சினை வெறும் தத்துவப் பொருளாதாரச் சிக்கல் மட்டுமல்ல. சோதிப்பிரகாசம் இந்நூலில் இந்த விசித்திரமான முரண்பாட்டை நமது சிந்தனையையும் கற்பனையையும் தூண்டிவிடுமளவுக்கு கூர்மையாக சொல்கிறார். பணம் விதியின்மை ஆக இருப்பினும் கூட அதுவே சமூக இயக்கத்தின் அடிப்படையாக இருந்தாக வேண்டியுள்ளது என்கிறார் சோதிப்பிரகாசம்.எப்போது பணத்தின் இந்த விதியின்மை அதற்குள் ஊடாடி நிற்கிற கருத்துவடிவமான விதியை,அதாவது உழைப்புநேர மதிப்பை, உடைக்கிற அளவுக்கு போகின்ற போது மட்டுமே சமூகமோதல்கள் உருவாகின்றன என்கிறார்.
என் வழக்கப்படி இதை இப்படி படிமமாக மாற்றி கொள்கிறேன். கண்ணுக்குபுலனாகாத ஒரு காந்தமையத்தை சுற்றிப் பறக்கும் காந்தவலு ஏற்றப்பட்ட இரும்புத்துகள்கள் போன்றவை மதிப்பும் பணமும்..நாம் காண்பது காந்தத்துகள்களின் கட்டற்ற தன்னிச்சையான இயக்கத்தை. ஆனால் ஒவ்வொரு துகளுக்கும் அக்காந்தமையத்துக்கும் இடையேயான இழுவை விலக்கல் விசைகளின் சமரசப்புள்ளி வழியாகவே அவை நகர்கின்றன. ஒட்டுமொத்தமாக உருவாவது ஓர் விதியின்மை. ஆனால் மையக்காந்தத்தின் விதியை அவை மீறுமென்றால் இந்த இயக்கம் நிலைகுலையும். பல்வேறு வகையில் நம்மை தூண்டி சமூக அமைப்பின் உள்ளார்ந்த முரணியக்கம் பற்றி யோசிக்கச் செய்கின்றன இப்பக்கங்கள். பிற்பாடு இவ்விளக்கத்தை மேலும் பலதளங்களுக்கென சோதிப்பிரகாசம் விரித்தெடுப்பார் என்று எண்ணுகிறேன்.
தொடர்ந்து விலை, ஆதாயம் ஆகியவற்றின் வழியாக பணம் தனக்குரிய இயக்கமுறையை உருவாக்கிக் கொள்ளும் விதம் குறித்து கறாரான மொழியில் சோதிப்பிரகாசம் விளக்குகிறார். மார்க்சிய வகுப்புகளில் ஆதாயம் பற்றி நமக்கு அளிக்கப்படும் சித்திரம் மிக எளிமையானது.அது உழைப்பாளிகளின் மீது முதலாளிவர்க்கம் நடத்தும் சுரண்டலின் பணமதிப்பு என்றே நமக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
”..பிறர் சரக்குகளை அவற்றிற்கு ‘உரிய ‘விலையில் வாங்கி தமது சரக்குகளை அவற்றிற்கு ‘உரிய ‘ விலையில் விற்பவர் முதலாளி.. ” [வா.கே பக்கம் 110]….. ” தன் பயன் மதிப்பில் இருந்து தனது மதிப்பினையும் விட கூடுதலான மதிப்பினை படைக்கின்ற அந்த மாயச்சரக்கு எது ? ” [வா.கே.பக்கம் 111]
என்று வேறு ஒரு கோணத்தை சோதிப்பிரகாசம் அறிமுகம் செய்கிறார். அதை விரிவான உதாரணங்கள் மூலம் விளக்கிவிட்டு
”…. ஆதாயத்தின் அந்தரங்கம் உழைப்பளர்களின் உழைப்பு ஆற்றலில் அடங்கியுள்ளது. உழைப்பாற்றலின் பயன்மதிப்புக்கும் அதன் மதிப்புக்கும் இடையேஉள்ள வேறுபாட்டில், அதாவது உழைப்பாற்றலின் மதிப்புக்கும் அதன் பயனால் விளைகின்ற சரக்குகளின் மதிப்பிற்கும் இடையேயான வேறுபாட்டில் அது ஒளிந்து கிடக்கிறது… ” [வா.கே:பக்கம் 133]
என்று வரையறை செய்கிறார். அந்த மாயச்சரக்கின் மீதான கட்டுப்பாடே மூலதனத்தை ஆதயக்குட்டி போட வைக்கிறது, அந்தக் கட்டுப்பாடை அடைவதே மூலதனத்தின் அதிகாரம் என்று சொல்கிறார். மூலதனத்துக்கும் ஆதயத்துக்கும் இடையேயான இந்த உறவினை விரிவாகவே சித்தரிக்கிறார் அதாவது சுரண்டல் என்பதை சிலரின் பேராசையின் விளைவான நேரடியான நடவடிக்கையாக அல்ல, மாறாக மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பு உருவாக்கும் ஓர் இயல்பான பொருளியல் நிலைமையாகவே சோதிப்பிரகாசம் காட்டுகிறார் என்று படுகிறது. இந்நூலின் அசலான சிந்தனைப்பகுதிகளில் ஆதாயம் குறித்த இந்த விரிவான ஆய்வுப்பார்வையும் முக்கியமானது.
தொடர்ந்து சோதிப்பிரகாசம் முதலின் பல்வேறு வகையான இயக்கப்போக்குகளை விளக்கி செல்கிறார். முதலின் இயங்குமுறை சமூக அமைப்புக்களாகவும் எண்ணப்போக்குகளாகவும் நம்பிக்கைகளாகவும் மாறிவரும் சித்திரத்தை அளிக்கிறார்.இந்த நீட்சியில் பொதுவாக சோதிப்பிரகாசத்தின் அணுகுமுறை மற்ற மார்க்ஸிய அணுகுமுறைகளுடன் மாறுபடுவது முக்கியமாக ஒரு இடத்தில் என்பதைக் காணலாம். மார்க்ஸியர் பொதுவாக மேற்கட்டுமானம் என்று சொல்லும் கருத்தியல்,சமூக, உளவியல் அமைப்புகளை பொருளியல் கட்டுமானமாகிய அடித்தளத்தின் மீது எழுப்ப பட்டவையாகக் கருதும் போது கூட அவற்றை மறைமுகமான பாதிப்புப் போக்குகளாகவே காண்கிறார்கள். அண்டோனியோ கிராம்ஷிக்குப் பிறகு மேற்கட்டுமானத்தின் மீது அடித்தளத்தின் உறவு நேரடியானதோ இணையானதோ அல்ல என்று சொல்லும் போக்கும் வலுப்பெற்றுள்ளது. ஆனால் சோதிப்பிரகாசத்தின் பார்வை முற்றிலும் மார்க்ஸியத்தின் செவ்வியல் பார்வை சார்ந்தது. ஒருவகையான பொருளியல் குறுக்கல்வாதம் என்று கூட அதை சொல்லிவிடலாம்.
உதாரணமாக இன்றைய முதலாண்மை அமைப்பு எப்படி ஒவ்வொரு தனிமனிதனையும் அன்னியப்படுத்துகிறது என்பதை மதிப்பு, விலை, கூலி ஆகியவற்றுகிடையேயான முரண்பாட்டின் நீட்சியாகவே சோதிப்பிரகாசம் விளக்கிச் செல்கிறார். உற்பத்தி நடவடிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு அதன் பலன்களை முழுமையாக அடையும் நிலையிலேயே அவனால் தன் ஆளுமையை முழுமைப்படுத்திக் கொள்ள முடியும். அவனுக்கு இயற்கை விதித்துள்ள கட்டுகளில் இருந்து விடுதலை அடையமுடியும். ஆனால் முதலாண்மை அமைப்பு அவனை அவன் உழைப்பிலிருந்து அன்னியப்படுத்துகிறது. ஆகவே அவன் மதத்திலும் இலக்கியத்திலும் போலியான முழுமையையும், விடுதலையையும் காண முயல்கிறான்.மனிதனின் ‘ கயமை ‘ கள், மனித மனத்தின் எதிற்மறை இயக்கங்கள் போன்றவற்றுக்கான காரணங்களை முதலாண்மை உற்பத்திச் சமூகத்தின் அமைப்பில் தேடுவதே ஏற்புடையதாக இருக்கும் என்று சோதிப்பிரகாசம் இந்நூலில் வாதிடுகிறார்.தன் அமைப்பை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு முதலாண்மை அமைப்பு உருவாக்கியுள்ள குடும்பம், தொழிற்சங்கம், அரசு ஆகியவற்றை இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் சோதிப்பிரகாசம் விளக்குகிறார். தனியுடைமையை கைமாற்றம் செய்யும் பொருட்டும், உற்பத்தி மற்றும் வினியோகத்தின் அடிப்படை அலகாக அமையும் பொருட்டும் உருவான ஓர் சமூக ஏற்பாடுதான் குடும்பம் என்று எங்கல்ஸ் கூறும் கருத்தை பெரும்பாலும் சோதிப்பிரகாசமும் கூறுகிறார்.
அரசு குறித்து சோதிப்பிரகாசம் சொல்லும் இடம் செவ்வியல் மார்க்சியத்தின் அடிப்படையிலானது என்றாலும் சில முக்கியமான வேறுபாடுகள் காரணமாக கூர்ந்து கவனிக்கத்தக்கது. அரசு என்பது அதிகாரத்தை கையாளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கருவி என்ற கருத்தே நமக்கு மார்க்ஸிய வகுப்புகளில் கிடைக்கும் முதல் பாடமாகும். சிலசமயம் அது சமரசங்களிலும் ஈடுபடும். எதிர்ப்புகள் இல்லாத போது சுரண்டல் சார்ந்த நிர்வாக நடைமுறைகளை செயல்படுத்தும். அடுத்த கட்டமாக கிராம்ஷி யின் அரசு சார்ந்த கருத்துக்கள் இங்கு அறிமுகம் செய்யப்பட்டன. அரசு என்பது ஒரு குறியீட்டு அமைப்பு மட்டுமே என்று சொல்லப்பட்டது. அதிகாரம் ‘கருத்தியல் மேலாதிக்கம் ‘ [hegemony] சார்ந்தது. அது குடிமைச் சமூகத்தில் [civil society] பாலில் நெய் போல கலந்துள்ளது. அதிலிருந்து திரண்டு வருவதே அரசியல் சமூகம் [political society] அந்த அரசியல் சமூகத்தின் நிர்வாகக் கருவியே அரசு. இது கிராம்ஷி முன்வைத்த சித்திரம். மார்க்ஸியத்தில் இந்த முப்பது வருடங்களாக நடந்து வரும் அரசு, சமூக அதிகாரம் குறித்த விவாதங்களெல்லாம் கிராம்ஷியையே அடிப்படையாக கொண்டு முன்னகர்கின்றன என்பது என் புரிதல்.
சோதிப்பிரகாசம் கிராம்ஷியை எவ்வகையிலாவது பொருட்படுத்தியுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது அரசு குறித்த கொள்கை கிராம்ஷியின் கருத்துக்களை வேறு ஒரு வகையில் நெருங்கி வருகிறது. அரசு என்பது சிவில் சமூகத்தின் ஒப்புதல் மீது கட்டப்பட்டது என்ற கிராம்ஷியின் கூற்றுக்கும் அரசு அமைப்பு என்பது சமூகத்தினால் ஏற்கப்பட்ட மதிப்பு விதியின் பிரதிநிதி அல்லது புறவய வடிவம் என்ற சோதிப்பிரகாசத்தின் கூற்றுக்கும் நடுவே முக்கியமான ஒற்றுமை உண்டு. இரண்டுக்கும் நடுவேயுள்ள தூரமானது ஆழமாக மார்க்ஸியர்களால் விவாதித்து விரிவாக்கக்கப்படத்தக்கது. ஆயினும் பொதுவாக சோதிப்பிரகாசத்தின் அணுகுமுறை மார்க்ஸியத்தின் ஐரோப்பியவிரிவாக்கங்களைப் பற்றியோ, அல்லது அடிக்குறிப்புகளைப்பற்றியோ அதிகம் கவலைப்படாமல் மார்க்சிய மூலதத்துவத்தை தமிழ் சமூகத்தின் மரபிலும் அன்றாடவாழ்க்கையிலும் விளைவித்துப் பார்ப்பதாகும்.அது ஒரு வகையில் சரிதான். என் எளிய வாசிப்பிற்கு பட்டவரை ஐரோப்பிய மார்க்ஸிய ஆய்வுகளில் கணிசமானவை ஒருவகை கல்வித்துறை சார்ந்த புலமைப்பயிற்சிகள்.
‘கல்வித்துறை மார்க்ஸியம் ! ‘ [academic Marxism] என்று நித்யா மிகுந்த ஏளனத்துடன் சொல்வார். ” உண்மையான மனிதாபிமானமும் அடிப்படையில் புரட்சி நோக்கமும் உள்ள எந்த தத்துவம் மீதும் மகாபண்டிதர்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்துவார்கள்.அதன் ஒவ்வொரு நிலைபாட்டையும் மிகச்சிக்கலான தத்துவப்பிரச்சினையாக ஆக்குவார்கள். விளைவாக மெல்ல அது தன் உடலின் பாரத்தால் சற்றும் அசையமுடியாத அளவுக்கு ‘வளர்ச்சி ‘ அடைந்துவிடும் ” — நித்யா சொன்னார்.இங்கு நாம் பல மேலைக்கொள்கைகளை நமது தாழ்வுணர்ச்சி மற்றும் அகங்காரம் காரணமாகத்தான் உடனுக்குடன் இறக்குமதி செய்கிறோமா என்பது யோசிக்கத்தக்கது. நம் சிந்தனைகள் வெறுமே மொழிபெயர்ப்பாக ஆகாமலிருக்க சோதிப்பிரகாசத்தின் நிலைபாடு உகந்ததே. ஆயினும் புதிய வினாக்கள் எழும்போது அதன்மீதான தேடல் புதிய சிந்தனைகளையும் கணக்கில் கொண்டாக வேண்டும்.
சோதிப்பிரகாசம் அரசாங்கத்தையும் அவர் ஏற்கனவே முன்வைத்த மதிப்பு விதி கொள்கையை அரசு என்பதை விளக்குவதிலும் செயல்படுத்துகிறார். அரசு என்பது ஒரு கருத்து வடிவம் என்றும், அது சமூகத்தில் உள்ள மதிப்புவிதியின் உருவகமே என்றும் வரையறை செய்கிறார்.
”…முதலின் உருவகமாக முதலாளிகளும் உழைப்பாற்றலின் உருவகமாக உழைப்பாளர்களும் விளங்குவதுபோல மதிப்பு ஆற்றலின் உருவகமாக அரசு விளங்குகிறது.. ” [வா.கே.பக்கம் 248]
மார்க்ஸியர்களின் வழக்கமான சித்தரிப்புக்கு பிரச்சினையாக இருப்பது அரசாங்கத்தின் பொதுநலக்[welfare] கண்ணோட்டம்தான். சிறிதளவாவது பொதுநலப் பார்வை இல்லாத அரசு என்பது எங்குமில்லை. அரசு வகிக்கும் இந்த ஆக்கபூர்வபங்களிப்பை மார்க்ஸிய சட்டகத்துக்கு உள்ளே நின்று விளக்க சோதிப்பிரகாசத்தின் இந்த அணுகுமுறையால் முடிந்துள்ளது. அரசு என்பது [கையில் குண்டாந்தடி ஏந்தியபடி] சமரசம் செய்யும் அமைப்பு என்ற நவீன கருத்துக்கும் ஒரு வகையில் ஒத்துப்போகிறது சோதிப்பிரகாசத்தின் இவ்வணுகுமுறை. அரசு என்பது மையமான மதிப்புவிதியின் பிரதிநிதியும் பாதுகாவலனும் ஆகையால் அதன்மீதான தக்குதலும் போராட்டமுமே முதல் மீதான எதிர்ப்பாக ஆக முடியும் என்று சோதிப்பிரகாசம் சொல்கிறார். அப்படியானால் ஒரு வற்கப்போராட்டம் என்பது சமூகத்தால் வேறுவழியின்றி ஏற்கப்பட்ட விலை -மதிப்பு விகிதத்தை அகற்றிவிட்டு உண்மையான விலை – மதிப்பு விகிதத்தை உருவாக்குவதுதான் போலும். அதாவது அப்போது மதிப்புக்கும் விலைக்கும் இடையே வேறுபாடு இருக்காது. ஆகவே தான் சோதிப்பிரகாசம்
”…மனித விடுதலை பற்றிய நமது விவாதம் உற்பத்தியுறவுகளை பற்றிய விவாதத்தில் இருந்து மட்டுமே தொடக்கம் பெறுதல் வேண்டும்… ” [வா.கே. பக்கம் 222]
என்று தன் நிலைப்பாட்டை உறுதியாக சொல்கிறார். கிட்டத்தட்ட இந்நூலின் முத்தாய்ப்பாக
”….மனித விடுதலை உழைப்பாளர் வருக்கத்தின் விடுதலையில் மட்டுமே அடங்கிக் கிடக்கிறது.. ” [வா.கெ பக்கம் 233]
என்று கூறி முடிக்கிறார்.
சோதிப்பிரகாசத்தின் இந்த சிறு நூலின் முக்கியத்துவம் மார்க்ஸிய அடிப்படைகளை விளக்கியபடி தொடங்கி இறுதியில் இங்குள்ள விவாதக்களனில் இருந்தே அசலான சில அடிப்படைக் கருத்துக்களை அடைந்திருப்பதேயாகும். இன்றுவரை இங்கு மார்க்ஸிய விவாதம் என்றாலே மேற்கோள்களும் அவற்றை இணைப்பதற்கான மொழியாட்டமும்தான் என்றே இருந்துவந்தது.ஏன்,தமிழில் தத்துவசிந்தனை சார்ந்த விவாதம் என்றாலே மேற்கோள்பொறுக்குவதுதான் என்ற நிலையே இன்றும் உள்ளது.யாருடைய மேற்கோள் ஆகப்புதியது, யாருக்கு அதிக மேற்கோள் தெரியும் என்பதே பலசமயம் இங்கு விவாதம். [பாட்டுக்குப் பாட்டு] இத்தகைய சூழலில்கொரு புதிய கருத்து அல்லது விளக்கம் நம்மிலிருந்து எழுவது மிகவும் முக்கியத்துவம் உடையதாகும்.
பகுதி மூன்று : விளக்கங்களுக்கு அப்பால்
[அ]
இந்த நூலைப்பற்றி என் கருத்தை கூறுவதற்கு முன்பு உடனடியாக ஏற்படும் பிரச்சினை ஒன்று உண்டு. ஒரு மார்க்ஸியராக சோதிப்பிரகாசம் இலக்கியத்தை பொய்யான முழுமையுணர்வை அளிக்கும் ஓர் அமைப்பாகவே அடையாளம் காண்கிறார். ஒரு வகையான போதைப்பொருளாக. நானோ இலக்கியவாதியாகவே கருத்து சொல்லமுற்படுகிறேன். சோதிப்பிரகாசத்தின் கருத்து தருக்கம் சார்ந்த குறுக்கல் வாதம் என்பதில் ஐயமில்லை. பெரும்பாலான மார்க்ஸியர்கள் உள்ளூர நம்புவது இதையே என்றாலும் அவர்கள் அதை வெளியே சொல்வதில்லை, காரணம் சொல்வதற்கான விளக்கம் அவர்களிடமில்லை. சோதிப்பிரகாசம் இன்றைய முதலாண்மை உற்பத்தி முறையால் அயன்மைப்படுத்தப்பட்ட மனிதர்களுக்கு கலையும் மதமும் அளிக்கும் ‘மாய்மை விடுதலை ‘ குறித்து ஹெகலையும் மார்க்ஸையும் முன்வைத்து விரிவாகவே பேசுகிறார். அவரது பார்வையில் இலக்கியம் ‘பொதுப்புத்தி ‘ [common sense] மற்றும் எளிய பகுத்தறிவு ஆகியவற்றின் விளைவேயாகும். கரணிய [reason] அடிப்படையுள்ள சிந்தனைமுறையே முதிர்ச்சியுள்ளதும் உண்மையை புறவயமாக அறிய உதவுவதுமாகும். ஆகவே இலக்கியப்படைப்புகளுக்கு கேளிக்கை என்பதற்குமேல் உபயோக மதிப்பு ஏதுமில்லை என்று பலதளங்களில் வாதிடுகிறார்.
இந்த அணுகுமுறை கடந்த ஐம்பது வருட காலத்தில் முக்கியமான படைப்பிலக்கியவாதிகளால் விரிவாகவே மறுக்கப்பட்டுவிட்ட ஒன்று என்பதை சோதிப்பிரகாசம் அறியாமல் இருப்பது வருந்தத்தக்கது.
‘ முதலாளித்துவ ‘ எழுத்தாளர்கள் மட்டுமல்ல மார்க்ஸிய எழுத்தாளர்களும் கூட இக்கருத்தை திட்டவட்டமாக மறுத்து விளக்கங்களை வழங்கியுள்ளனர். சோதிப்பிரகாசம் கூறுவதுபோல கரணிய அடிப்படையுள்ள விளக்கம் தேவை என்றால் ஹால்லிடே முதல் டி.சசூர் வரையிலான மொழியியலாளர் அவ்விளக்கத்தை அளித்துள்ளனர். [சொல் புதிது முதல் இதழில் நவீன மொழியியல் ஓர் அறிமுகம் என்ற கட்டுரையில் சுருக்கமான சித்திரம் உள்ளது] சமகால ஐரோப்பிய சிந்தனைகளுக்கு முன் வாசலை சாத்திக் கொண்டது எப்படி சோதிப்பிரகாசத்தை சுயமாக சிந்திக்க வைத்ததோ அதே அம்சமே அவரது சிந்தனைகளுக்கு இறுக்கமான எல்லைகளை உருவாக்கி சில நம்பிக்கைகளை மூடநம்பிக்கை [taboo] வரை இட்டுச் சென்றுள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.
உண்மையில் இன்று தமிழில் படைப்பிலக்கியத்துக்கு அதீத முக்கியத்துவம் தந்து மற்ற சிந்தனை போக்குகளை, முற்றாக நிராகரிக்கும் போக்கே பல எழுத்தாளர்களிடம் உள்ளது. ”தத்துவம் செத்துவிட்டது” என்ற குரலை இங்கு அடிக்கடி நாம் கேட்க முடிகிறது. அதன் மறுபக்கமாக சோதிப்பிரகாசம் ”இலக்கியம் ஒரு விளையாட்டுப் பொம்மைதான்” என்கிறார்.இருதரப்புமே குறுக்கல் போக்கு உடையவை. இருதரப்புமே மறுதரப்பை உரிய முறையில் அறிந்து கொள்ள முற்படாமல் நிராகரிப்பவை. உலகமெங்கும் முக்கியமான சிந்தனையாளர்களுக்கு [அது மார்க்ஸ், ஃப்ராய்ட், ஐன்ஸ்டான் யாராக இருந்தாலும்] இலக்கியத்துடனும், இலக்கியவாதிகளுக்கு தத்துவத்துடனும் ஆழமான உறவு இருந்ததும் இருந்து வருவதும்தான் உணமை. இரு தரப்பும் நுட்பமாக கொடுக்கல் வாங்கல் மூலம் ஒன்றையொன்று நிரப்பிக் கொள்வதே நடந்துவருகிறது.
சோதிப்பிரகாசத்தின் இலக்கியம் குறித்த கண்ணோட்டத்துக்கு விரிவான பதிலைக் கூற இங்கு சந்தர்ப்பமில்லை. ஆனால் அவரது பார்வையின் ஊனங்களை முழுக்க இலக்கியம் குறித்த அவரது கண்ணோட்டம் அடையாளம் காட்டுகிறது என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். மிக விரிவாக,கடந்த ஐம்பது வருடக்கால சிந்தனைகள் பலவற்றை முன்வைத்து இது குறித்து பேசவேண்டும். இங்கு சுருக்கமாக சில குறிப்புகளை மட்டுமே முன் வைக்கலாமென எண்ணுகிறேன். சரியான விவாதம் இந்த தரப்புகளை விரிவாக ஆய்வுசெய்வதன் மூலமே நடக்க முடியும்
சோதிப்பிரகாசம் தன் நூலின் முதல் சில பக்கங்களிலெயே காரணம்[reason] மற்றும் கரணியம் [rationality] ஆகியவை குறித்து பேச ஆரம்பித்துவிடுகிறார். இவற்றை மறுக்க முடியாத, பொதுவான,புறவயமான மானுட இயல்புகள் போல குறிப்பிடுகிறார். மனிதனில் சமூக வளர்ச்சியின் மூலம் படிப்படியாக உருவாகி வந்த உண்மையறியும் உறுப்புகள் போலவே இவற்றை நிறணயித்துக் கொள்கிறார். அதாவது பரிணாமம் மூலம் மனிதனின் கரம் எப்படி உருவாகி வந்ததோ அதைப்போல உருவாகிவந்தவையே அவையும் என்கிறார். இதை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியும் ?
காரண அறிவும் சரி, கரணியமும் சரி மானுடனின் மெய்யறி முறைகளில் முக்கியமானவை என்பதையோ, மானுட வளர்ச்சியில் அவை பெரும் பங்காற்றியுள்ளன என்பதையும் யாருமே மறுத்துவிட முடியாது. [தமிழில் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் ‘இன்பத்தின் வெற்றி ‘ என்ற நூல் குறிப்பாக வசிப்புக்கு உரியது] அதி தீவிர ஆன்மீகவாதிகளும், மேற்கின் கலகக்காரர்களும் சமூகப் புறநிலையாளர்களான சில அதி தீவிர பின் நவீனத்துவர்களும் மட்டுமே அவ்வாறு அவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாகவே காரண அறிவு/கரணியம் என்ற கருதுகோள்கள் எந்த தத்துவ விவாதச் சூழலில் உருவாயினவோ அந்தச் சூழலிலேயே அவற்றுக்கு எதிரான கருத்துக்களும், அவற்றின் மீதான ஐயங்களும் மிக விரிவான அளவில் முன்வைக்கப்பட்டு விட்டன.அவ்விவாதங்களை கணக்கில் கொள்ளாமல் காரண அறிவு /கரணியம் போன்ற கருதுகோள்களை அப்படியே கடன்வாங்கி பயன்படுத்துவதுதான் அறிவுலக மூடநம்பிக்கை.
சோதிப்பிரகாசத்தின் நூல் ‘ நான் ‘, ‘எனது அறிவு ‘ போன்ற சொற்களை தொடர்ந்து முன்வைத்தபடி தொடங்குகிறது. இந்த ‘நான் ‘ ஐ அவர் புறவயமான ஒரு இருப்பு போலவே வகுத்துச் செல்கிறார். இங்கு பேசப்படும் ‘நான் ‘ ன் வரையறையானது மேற்கே ஆளுமை தனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு தத்துவார்த்த உருவகம் என்பதை இவ்விவாதத்தில் முக்கியமாக கவனிக்கவேண்டும். பின் நவீனத்துவ கால சமூகவியலாளரான மிஷேல் ஃபூக்கோ தனிமனிதன் என்ற கருத்துருவம் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட தத்துவ மோசடி என்று சொல்கிறார். [பிரேம் ரமேஷ் எழுதிய சிதைவுகளின் ஒழுங்கமைவு என்ற தத்துவ நூல் கரணியம், தனிமனிதத்துவம் ஆகிவை பின் நவ் ஈன சூழலில் சிதைந்து போவது குறித்த பலவகையான சித்திரங்களை முன்வைக்கிறது அதைப்பற்றி விவாதிக்கவில்லை. ஆனால் சோதிப்பிரகாசம் கருதுவதுபோல விவாதத்துக்கே அப்பாற்பட்ட புறவய கருத்துக்கள் அல்ல அவை
. இப்போது நாம் காரணஅறிவு என்றும் கரணியம் என்றும் சொல்பவை உண்மையில் 17 ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் உருவான தத்துவ மறுமலர்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்ட தத்துவ உருவகங்கள் மட்டுமே. சாக்ரடாஸ் அரிஸ்டாடில் காலம் முதல் புறவயமான தருக்கத்துக்கான முயற்சி இருந்து வந்துள்ளது, அது மானுடனின் அறிவார்ந்த தேடலின் அடிப்படைக் கேள்வி. ஆனாலும் நாம் இன்று சொல்லும் அடையாளங்களுடன் காரண அறிவும், கரணியமும் முன்னிறுத்தப்பட்டது ஐரோப்பிய தத்துவ மறுமலர்ச்சியின் போதுதான். அதன் வரலாற்று, சமூகவியல் பின்புலம் குறித்தெல்லாம் நாம் அறிவோம். நம்பிக்கையை, விசுவாசத்தை அடிப்படையான மானுட இயல்பாக முன்னிறுத்திய கிறித்தவ மரபுக்கு எதிரான உத்வேகம் என்பது ஐரோப்பிய தத்துவ மறுமலர்ச்சியின் முக்கியக் கூறாகும். மனிதனின் தனி அடையாளங்களுக்கு எதிராக மத நிறுவனங்களின் கருத்தியல் செயல்பட்ட அக்கால கட்டத்தில் மறுமலர்ச்சியடைந்த தத்துவமானது தனிமனிதன், தனி மனம், தனி பிரக்ஞை,பகுத்தறிவு ஆகியவற்றை முன்னிறுத்தும் போக்கு கொண்டிருந்தது. மேற்கை நூறு வருடம் ஆட்கொண்டிருந்த ஆளுமைத்தனித்துவம் [free will problem] குறித்த விவாதங்களுடன் நேரடியான தொடர்பு உடையது இது சோதிப்பிரகாசத்தின் ‘நான் ‘ ன் வரையறையானது மேற்கே ஆளுமைதனித்துவ வாதிகளால் உருவாக்கப்பட்டது கவனிக்கவேண்டும்.
மார்க்ஸியம் அந்த ஐரோப்பிய தத்துவ மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் உச்ச பட்ச விளைவு என்ற முறையில் அது காரண அறிவையும் கரணியத்தையும் முன்னிறுத்துவது இயல்பானதுதான்.ஆனால் அதன் பின்பு அவற்றின்மீது உருவாகி வந்த முக்கியமான விமரிசனங்களைக்கூட கணக்கில் கொள்ளாமல் அதை ஒரு நம்பிக்கை போல ஏற்பது அந்த கரணியத்துகே ஏற்புடையதாக இருக்காது. மனிதனின் அறிதல்முறைகளில், கருத்துருவாக்கங்களில் காரண அறிவுக்கு அப்பால் வேறு பல முறைகளும் செயல்படுகின்றன என்று இப்போது சிந்திக்கத்தெரிந்த பெரும்பாலோர் ஒப்புக் கொள்வார்கள். சிக்மண்ட் ஃப்ராய்ட் ஆழ்மனத்தை [நனவிலி/ unconscious] காரண அறிவுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு பேரியக்கமாகவே முன்வைத்தார். பேரா.யுங் அதன் மானுடப்பொதுவான இயக்கத்தையும் அவ்வியக்கத்தின் அடிப்படை அலகாக உள்ள ஆழ்படிமங்களையும் [தொல்படிமங்கள்./archetypes] முன்வைத்தார். அதன் பிறகு மொழியின் குறியீட்டுப் பின்புலம் [ஆழ் மொழி/.langue] குறித்த கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அதன் பின்பு மிகச்சமீப காலமாக மானுட அறிவுகளுக்கும் நரம்பமைப்புகளுக்கும் இடையேயான உறவு மிகுந்த முக்கியத்துவத்துடன் விவாதிக்கப்படுகிறது.
இந்த சிந்தனை முறைகளுடன் மார்க்ஸிய அதிகார அமைப்புகளுக்கு உள்ள உறவும் வரலாற்று ரீதியாக கூர்ந்து நோக்கத்தக்கது. ஃப்ராய்டியம் நீண்ட காலம் மார்க்ஸியர்களால் மிக மூர்க்கமாக எதிர்க்கப்பட்டது. உளவியலே கூட கம்யூனிச அரசுகளால் நிராகரிக்கப்பட்டது.தத்துவத்தின் ஒரு தரப்பு என்ற நிலையில் இருந்து விலகி மேற்கத்திய அறிவியங்கியலின் விதிகளின் அடிப்படையில் அது தனி அறிவுத்துறையாக ஆன பிறகு வேறுவழியின்றி மார்க்ஸியர் அதை ஏற்றனர். சோவியத் ருஷ்யா எப்படி மொழியியலாளார்களை வேட்டையாடியது என நாம் அறிவோம். பல மொழியியலாளர்கள் அதற்குள் ஸ்டாலினிய ருஷ்யாவால் வன்முறைக்கருவியாக வளர்க்கப்பட்டிருந்த ஃப்ராய்டிய உளப்பகுப்பு முறைகளை பயன் படுத்தி சித்திரவதை செய்யப்பட்டனர் என்பதை ஒரு வரலாற்று முரண்பாடு என்றே சொல்லவேண்டும். நரம்பியல் இந்த நிமிடம் வரை மார்க்ஸியர்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது, அதற்கு அறிவியலை அற அடிப்படைகளில் ஐயப்படும் மரபுவாதிகளின் வாதகதிகள் மார்க்ஸியர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நூற்றாண்டின் முக்கிய அறிவியல் கருதுகோள்கள் பல, உதாரணமாக, சிறப்பு சார்புக் கொள்கை [Special relativity theory] நுண்ணலகு இயற்பியல் [Quantum physics] முதலியவை மார்க்ஸிய முரணியக்க இயங்கியலுக்கு ஒத்துப்போகவில்லை என்று கருதப்பட்டமையால் சோவியத் அரசாங்கம் அவற்றை எதிர்த்து வாதிடும்படி தன் இயற்பியல் அறிஞர்களை பணித்தது. [சொல் புதிது முதல் இதழில் நித்ய சைதன்ய யதி இவ்விவாதம் பற்றி எழுதியுள்ளார்] ஆக, வரலாறு திரும்பியது, அவ்வளவுதான். ரோமுக்கு பதில் மாஸ்கோ என. ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்ட தத்துவ நிலைப்பாடுக்கு ஏற்ப புதிய சிந்தனைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த எண்ணிய மத மனநிலையே மார்க்ஸியர்களிலும் காணக்கிடைக்கிறது. அது ஸ்டாலினில் வன்முறையின் வடிவம் கொண்டது. சோதிப்பிரகாசம் போன்றவர்களில் மூடநம்பிக்கையின் உக்கிரத்துடன் வீற்றிருக்கிறது.
இலக்கியம் சோதிப்பிரகாசம் கூறுவதுபோல பொதுப்படையான பகுத்தறிவின் குத்துமதிப்பான அறிதல்முறை மட்டும்தானா? இலக்கியப்படைப்புகளை ஓரளவேனும் அறிந்து உள்ளே சென்ற எவரும் அப்படி சொல்ல தயங்குவார்கள் என்றே நான் எண்ணுகிறேன். எப்போது இலக்கியம் குறித்த பேச்சு தொடங்குகிறதோ அப்போதே அதில் தொழில்படும் காரண அறிதலுக்கு அப்பாற்பட்ட பிரம்மாண்டம் குறித்த பேச்சும் உருவாகிவிட்டிருக்கிறது என்பதைக்காணலாம். பாற்கடலை பூனை நக்கிக் குடித்துவிட எண்ணுவதுபோல ஆசையால் அறையலுற்றேன் என கம்பன் சொல்லுவது ஒரு வகையில் அந்த பிரம்மாண்டத்தையே. சிவபெருமான் சேக்கிழாருக்கு ‘உலகெலாம் ‘என அடியெடுத்து தந்த கதையை ஒவ்வொரு படைப்பாளியும் இன்று ஒப்புக் கொள்ளுவான், ஒவ்வொருவரும் தங்களுக்கும் உள்ளுறையும் ‘சிவம் ‘ஒன்று அடியெடுத்துக் கொடுப்பதை அறிந்திருப்பார்கள். அதன் சன்னிதியில் காத்து தவம் கிடப்பதே தாங்கள் செய்யக்கூடியதாக இருப்பதை அவர்கள் அறிவார்கள். நவீன இலக்கிய விமரிசனம் அதை நனவில் அல்லது ஆழ்மனம் எனலாம். இலக்கியப்படைப்பு என்பது ‘ நனவிலிக்குள் ஓர் ஊடுருவல் ‘ [a raid into unconscious] என்று இன்றைய விமரிசனம் சொல்லும். இலக்கியத்தின் சவாலே அங்குதான் உள்ளது அன்றி சோதிப்பிரகாசம் சொல்வதுபோல பகுத்தறிவையும் பொதுப்புத்தியையும் பயன்படுத்தி வார்த்து தள்ளுவதில் அல்ல.
எந்த அம்சம் ஓர் இலக்கியப்படைப்பின் தரத்தை,முக்கியத்துவத்தை ஒப்பீட்டளவில் தீர்மானிக்கிறது? சோதிப்பிரகாசம் கூறுவதன்படி பார்த்தால் எதில் பொதுப்புத்தி அதிக அளவுக்கு செயல்பட்டிருக்கிறதோ அதுதான். கடந்த பலவருடங்களில் நான் கேட்க நேர்ந்த இலக்கியம் பற்றிய மிக அபத்தமான கூற்று இதுதான். இலக்கியவாதிகளை கட்டாய உழைப்புமுகாமுக்கும் மனநோய்விடுதிக்கும் அனுப்பிய சோவியத்/சீனக் கமிசார்கள் இதைச் சொல்லியிருக்கக் கூடும். மானுடகுல வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒன்று தெரியும். கரணியம் சார்ந்த சிந்தனைகள் தொடர்ந்து வளர்ச்சி அடைகின்றன ஆகவே எந்த சிந்தனையும் குறிப்பிட்டகாலம் கழிந்ததும் ஒவ்வாததாக, பழையதாக மாறிவிடுகிறது. ஆனால் இலக்கியப் படைப்புகள் மானுடகுலத்தின் துவக்ககாலம் முதல் இன்றுவரை அப்படியே அதே முக்கியத்துவத்துடன் இருந்துவருகின்றன. ‘கலை வளர்வதில்லை, அது பேசும் பொருள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது ‘ [எலியட். படைப்பும் தனித்திறனும். தமிழில் முரளி அரூபனின் மொழிபெயர்ப்பில் டி.எஸ்.எலியட் கட்டுரைகள் என்ற நூல்] காரணம் கலையிலக்கியங்கள் மனித ஆழ்மனத்தை முன்வைப்பவை. ஆழ்மனத்தின் வண்ணங்கள் மாறும் வடிவம் மாறுவதில்லை. மகாபாரதத்தையும், மார்க்யூஸின் நூறாண்டுத் தனிமையையும் ஒப்பிட்டு பார்க்கும் ஒருவருக்கு கலையிலக்கியங்கள் சந்தர்ப்பசூழல் கூறுமுறை ஆகியவற்றையே மாற்றிக் கொள்கின்றன என்பது புலனாகும். ஆழ்மனக்கட்டமைப்பு ஏன் எப்படி நாகரீகத்தின் தொடக்க காலம் முதல் இன்று வரை மாறாமலிருக்கிறது, அதன் வெளிப்பாடு மட்டும் எப்படி தொடர்ந்து மாறுகிறது என்பதற்கு ‘கரணிய ‘ விளக்கம் தேடவேண்டுமென்றால் சி.ஜி.யுங்கின் ஆழ்படிம விளக்கங்களுக்கு போகவேண்டும். குறிப்பாக படிக அமைப்பு உதாரணம் தந்து அவர் பேசும் சந்தர்ப்பம் [தொல்படிமங்கள் பற்றிய யுங்கின் இவ்விளக்கம் சொல் புதிது இதழ் 3 ல் பிரசுரமாகியுள்ளது]
இதை எந்த இலக்கிய ரசிகனும் வேறு ஒரு வகையில் அறிந்திருப்பான்.இலக்கியப்படைப்பு அவனது பகுத்தறிவுடனோ,அவனது காரண அறிவுடனோ உரையாடுவதில்லை.அது அவனது நனவிலி நோக்கியே பேச முற்படுகிறது. எழுத்தாளனின் நனவிலியிலிருந்து வாசகனின் நனவிலி நோக்கி மொழியின் மூலம் கட்டப்பட்ட ஒரு தொடர்புக்கம்பி இலக்கியம். இலக்கியப் படைப்புகளை படிப்பதற்கான பயிற்சி என்பது தன் நனவிலியை அந்த மொழிக் கட்டுமானம் நோக்கி முழுமையாக திருப்பி கொள்ளும் பயிற்சியே. இலக்கியப்படைப்பை நோக்கி,சோதிப்பிரகாசம் போல, தங்கள் காரண அறிவை திருப்பி வைப்பவர்கள் அலைவரிசைமானி இல்லாமல் தொலைக்காட்சி பார்க்கமுற்படுபவர்கள்தான். தன் நூலில் சோதிப்பிரகாசம் அறியாமை மட்டுமே அளிக்கும் ஆழமான தனம்பிக்கையுடன் ‘தொலைக்காட்சி என்பது வெறும் வண்ணப்புள்ளிகளின் அலைகள் மட்டுமே,அதை மூடர்கள் பார்க்கிறார்கள் ‘ என்று மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக வரையறுக்கிறார்.
நனவிலி குறித்த விரிவான விளக்கங்களுக்கு போக இங்கு இடமில்லை. ஆனால் மானுட மனம் அவன் அறியாத வேறு ஒரு தளத்தில் அவனையும் இணைத்துக் கொள்ளும் பெரும் பிரவாகமாக இயங்குகிறது என்ற அறிதல் எல்லா கலாச்சாரங்களிலும் ஏதோ ஒரு வகையில் இருந்துள்ளது.இந்தியமரபு ஏழு பெரும் அடுக்குகளாக மனத்தைஉருவகித்தது. ஏழாவது தளத்தில் மனம் பிரபஞ்சப் பேரியக்கத்துடன் ஒன்றாக தன்னைக் கரைத்துக் கொள்கிறது என அது உணர்ந்தது.அது ஒரு இலட்சிய உருவகம் என்று சொல்ல சிலர் முயலலலாம்,மேற்கத்திய அறிவியங்கியலின் சொற்களுக்குள் மட்டுமே அறிவு பிடிபடமுடியுமென்ற நம்பிக்கை உடையவர்கள் அவர்கள். ஆனால் மானுட மனம் அதன் அறியப்படாத ஆழத்தில் மானுடப்பொதுவான, காலாதீதமான ஒரு செயற்தளத்தை கொண்டிருக்கிறது என்பதை குறைந்தபட்சம் இன்று மேற்கத்திய அறிவியங்கியலை பயன்படுத்தியே சொல்ல முடியும். இன்று காரண அறிவே கூட அந்த பெரும் அமைப்பின் ஒரு பகுதியாக மட்டுமே இயங்க முடியுமெனச் சொல்லும் உளவியலாளர்களும் அறிவியலாளர்களுமே அதிகம். எந்த அறிவியல் முறைகளை காரண அறிவின், கரணியத்தின் உச்ச பட்ச சாதனையாக சோதிப்பிரகாசம் கூறுகிறாரோ அந்த அறிவியலின் மேதைகள் காரண அறிவின் முதன்மையை ஏற்கிறார்களா, அதன் மூலம் தங்கள் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததாக சொல்கிறார்களா என்பதை சோதிப்பிரகாசம் ஆராயவேண்டும்.
எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் காரண அறிவின் கறாரான விதிகளின்படி படிகளில் ஏறிச்சென்று கடைசியில் தொடச் சாத்தியமாது அல்ல. அப்படி எந்தக் கண்டுபிடிப்பும் இதுவரை நடந்தது இல்லை. ஒரு அறிவியல் கண்டுபிடிப்பின் மொத்த ஆய்வும் அக்கண்டுபிடிப்பை மனம் நிகழ்த்தும் உச்சகட்ட மனப்பாய்ச்சலுக்கான முகாந்தரம் அமைக்கமட்டுமே பயன்படுகின்றன எனறுகூட அறிவியலாளர் கூறியுள்ளனர். இப்படி உருவகிக்கலாம். அகப்பிரபஞ்சத்தின் இரு புள்ளிகளை இணைக்கும் மின்னல் பாய்ச்சல் அது. புறஉலகின் பிரதிபலிப்புப் பெருக்கமாக உள்ள நனவிலியின் குறியீட்டுப்பேரமைப்பில் நிகழும் ஒரு இணைப்பு தான் ஊகம் [hypothesis]. பிறகு முறைமைகள் மூலம் அது புறவயப்படுத்தப்பட்டு வாறிவியல் கொள்கைகளாகிறது. [அறிவியலாளர் நண்பர் வெ வெங்கட்ராமன் சமீபத்தில் கனடாவில் அவரை நான் சந்தித்தபோது சொன்னார், அவரை பொறுத்தவரை இயற்பியலில் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவதும் ஒரு கவிதை எழுதுவதும் ஒரே வகையான செயல்பாடாகவே உள்ளது, இயற்பியல் தொழில்நுட்பமெனும் மொழியில் உள்ளது அவ்வளவுதான் என்று. அது வியப்பூட்டுவது அல்ல என்றாலும் அப்போது ஒரு பெரும் மனக்கிளர்ச்சியை என்னில் உருவாக்கியது] அறியும் ஒவ்வொன்றையும் தன் போக்கில் தொகுத்துக் கொண்டபடி, மாற்றியமைத்தபடி, சாராம்சப்படுத்தியபடி இயங்கும் அந்தப் பிரம்மாண்டத்தின் இருப்பை அது தன்னை வெளிப்படுத்திய பிறகே நாம் அறியமுடியும். அதன் இயங்குமுறை குறித்து இன்றுவரை நவீன உளவியல் புறவயமான விதிகள் எதையும் உருவாக்கவுமில்லை.
நனவிலி குறித்த கருத்தாக்கங்களின் மறைமுக நீட்சியாகவும்,வேறு ஒரு கோணத்தில் விவாத எதிர்தரப்பாகவும் மொழியியல் சார்ந்த கருத்துக்கள் ஐம்பது வருடஙகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.அது குறித்த விரிவான விளக்கங்களுக்கு இங்கு இடமில்லை. ஆனால் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் வாழ்க்கையின் மூலம் மானுடமனம் காரண அறிவை மட்டும் வளர்த்துக் கொள்ளுவது இல்லை, அதைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமான ஒரு குறியீட்டு அமைப்பையும் அது உருவாக்கிக் கொள்கிறது என்பது. அதன் இயங்குமுறை காரண அறிவுக்கு எட்டாததும் அதன் விதிகளுக்கு பொருந்தாதுமாகும். மொழியின் ஒலிக்குறிப்பான்களுக்கு அர்த்தம்தரும் பின்புலமாக அதுவே உள்ளது. அத்தனை சிந்தனைகளும் கற்பனைகளும் அதற்குள்ளேயே நிகழ்கின்றன. அது கணம்தோறும் மாறிக் கொண்டிருக்கக் கூடிய,ஒவ்வொரு செயல்பாடுமூலமும் வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒன்று. மரம் குறித்த காரண அறிவு மனிதனுக்கு கிடைத்த பெரும் கருவிதான் என்பதை மறுக்கமுடியாது. மரம் என்ற ஆழ்படிமம் அதைவிடப்பிரம்மாண்டமானது, ஒருவேளை அவனது பிரபஞ்ச உருவகமே அதையொட்டி அமையலாம்
துரதிருஷ்டவசமாக சோதிப்பிரகாசத்தின் அணுகுமுறையானது அத்தகைய படிம ஆக்கமே காரண அறிவு கூர்மைப்படாதபோது உருவாக்கபட்ட ஒரு பொத்தாம் பொதுவான புரிதல் மட்டுமே என்ற அளவில் உள்ளது. உதாரணமாக கடவுளை மனிதன் தந்தையாக உருவகித்த விதம் பற்றி அவர் தன் ‘மனத்தின் விடுதலை ‘ நூலில் சொல்லும் இடத்தை கூறலாம். அவர் கூறுவது போல உண்மையை கரணிய முறையில் அறிய முடியாமல் வெறும் கற்பனைகளை வைத்து ஆவலை திருப்தி செய்துகொண்டமையின் விளைவுகளல்ல அவை. மாறாக அறிந்தவற்றை குறியீடுகளாக ஆக்கி அறியாதவை குறித்த ஊகங்களை நிகழ்த்தும் மானுடமன இயக்கத்தின் அடிப்படை இயல்பின் விளைவுகள். இன்று அறிவியல் நிகழ்த்தும் ஊகங்கள் கூட
அப்படி மனிதமனம் செய்யும் ஊகங்களின் விரிவாக்கங்களே இன்று பிரபஞ்சம் குறித்து மனிதன் அறிந்தவை எல்லாமே அவன் மனம் இப்படி ஊகங்களை நிகழ்த்த அடிப்படையாக கொண்டுள்ள அகமனத்தின் குறியீட்டு அமைப்பின் விதிகளுக்கு உள்ளே வருபவையே. ஆண்பெண் உறவிலிருந்து மனித மனம் கற்பிதம் செய்து கொண்டதே முரணியக்க இயங்கியல் என்று சொல்ல முடியும். மொத்த மார்க்ஸிய தத்துவத்தையுமே இயந்திரங்களின் அமைப்பில் சமூகத்தையும் பிரபஞ்சத்தையும் காணமுயன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு மனித மனத்தின் குறியீட்டுச் சாத்தியப்பாடுகளை மட்டும் வைத்து விளக்கிவிட முடியும்.
இரு நூல்களை இது குறித்த விரிவான விவாதத்துக்காக சுட்ட முடியும். ஒன்று கார்ல் பாப்பரின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தருக்கம் [The Logic Of Scientific Discoveries. இதன் ஒரு முன்னுரைபகுதி சொல்புதிதில் வெளியாகியுள்ளது] இன்னொன்று குளோட் லெவி ஸ்டாரிஸின் ‘பண்படா மனம் ‘ [Primitive Mind] இவ்விரு நூல்களையும் சேர்த்து யோசிக்கும்போது மானுட மனத்தின் அறிதலில் உள்ள எல்லையும் வடிவமும் புலப்படுவது மிக முக்கியமானது. மானுட மனம் முதலில் ஊகங்களை உருவாக்குகிறது. அவை ‘ நிரூபண ‘ முறைமையை அடையும் போதுதான் கண்டுபிடிப்புகள் ஆகின்றன.அத்தனை ஊகங்களும் மானுட மனத்தின் கற்பனையின் எல்லைக்கு உட்பட்டவையே. மானுட மனத்தின் கற்பனை அது இதுகாறும் உருவாக்கிக் கொண்டுள்ள குறியீடுகளின் தொகைக்கு உள்ளேயே நிகழமுடியும். மனம் வாழ்க்கையை,பிரபஞ்சத்தை பல்லாயிரம் லட்சம் விதங்களில் ‘சொல்லிப் பார்த்த படியே ‘ உள்ளது. எத்தனை விதமாக சொல்ல முடியும், எந்த எல்லை வரை சொல்ல முடியும் என்பதே உண்மையான பிரச்சினை எனலாம். ”தத்துவப்பிரச்சினை என்று ஒன்று இல்லை.இருப்பது மொழியின் பிரச்சினை மட்டுமே ” என்ற விட்ஜென்ஸ்டானின் பிரபலமான கூற்று மொழியியலாளர்களின் மூலசூத்திரமாவது இப்படித்தான். இந்த குறியீட்டுப் பிரவாகமே அனைத்துச் சிந்தனைக்கும் ஆதாரப் பின்னணி என்ற வகையில் முன்பு சொன்னது போல ஒரு கவிதையும் ஓர் அறிவியல் கண்டுபிடிப்பும் அடிப்படையில் ஒன்றே என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மொழியின் அடிப்படையில் மனத்தை வகுத்தறிய முயன்ற ழாக் லக்கான் மனம் என்பதை ஒரு குறியீட்டு ஆட்டமாக விளக்குவதும் இவ்வடிப்படையிலேயே.
இவ்வாறு மொழியியலாளர் அனைத்து அறிவுத்துறைகளையும் விவரணைக்கூற்றுகள் [narration] என்ற அடிப்படையில் விளக்கவும் தொகுக்கவும் முடியும் என்று சொல்கிறார்கள். **14 அதாவது எல்லா கருத்தியல்களும் கொள்கைகளும் குறிப்பிட்ட நோக்கம் கொண்ட சொல்லல்கள்/விவரணைகள் மட்டுமே.வரலாறே கூட ஒரு விவரணைதான். நிகழ்காலத் தேவைக்கும் எதிர்காலக் கனவுக்கும் ஏற்ற வகையில் தரவுகள் [datas] தொகுக்கப்பட்டு சாராம்சப்படுத்தப்படுவதையே நாம் வரலாறு என்று சொல்கிறோம். நிகழ்காலத்துப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் பொருட்டு தரவுகளை ஒழுங்கமைத்து உருவாக்கும் விவரணை விளக்கங்களை நாம் அறிவியல்/தத்துவக் கொள்கைகள் என்கிறோம். மொழியியல் சார்ந்த அணுகுமுறைகள் குறித்த விரிவான விவாதத்துக்கு நான் போகவில்லை, ஆனால் காரண அறிவு,கரணியம் ஆகியவற்றுக்கு மனித சிந்தனையில் உள்ள இடம் இரண்டாம் பட்சமானதே என ஆழமாக வலியுறுத்தும் ஒரு தரப்பு அது என்றும், அது அறிவியங்கியலின் தருக்கத்தை பயன்படுத்தியே விரிவாக முன்வைக்கப்பட்ட நிலையில் அதை அறியமுற்படாமல் நிராகரிப்பது கரணிய முறைக்கே எதிரானது என்றும் மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
சமீபகாலமாக நவீன நரம்பியல் உருவாக்கும் வினாக்கள் காரண அறிவின், கரணியத்தின் அடிப்படைகளை அசைப்பதைப் பற்றி சொல்லவேண்டும். முந்தைய இரு அறிவுத்துறைகளை விட மேலும் நிரூபணத் தன்மை கொண்ட துறை இது. மனிதனின் அறிதலின் அடிப்படைகளை புறவய பொருண்மை தளத்திலிருந்து விலக்கி நரம்புக் கட்டமைப்பின் இயல்புகளை வைத்து விளக்கிவிட முயல்கிறது நரம்பியல் என்று சொல்லலாம். உதாரணமாக ‘நிறம் ‘ என்பது பிரபஞ்சத்தின் ஒரு பொருண்மை இயல்பு அல்ல அது ஒரு நரம்புணர்வு மட்டுமே என்கிறது நரம்பியல் [சொல் புதிது இரண்டாம் இதழில் ஆலிவர் சாக்ஸ் நிறக்குருடாக மாறிய ஓர் ஓவியனை முன்வைத்து இதை விவரிக்கும் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது]. மொழியின் அடிப்படைக் கட்டுமானம் சமூகப் பொதுஒப்பந்தம் மற்றும் பழக்கம் மூலம் உருவாவது அல்ல அது மூளையின் நரம்புக் கட்டுமானத்தால் தீர்மானிக்கப்படுவது என்பது என நரம்பியல் வாதிடுகிறது. [பிரபலமான சாம்ஸ்கி பியாகெட் விவாதம் இது குறித்தது,இது குறித்த எளிய சித்திரம் ஒன்று சொல் புதிது முதல் இதழில் அளிக்கப்பட்டிருந்தது.]
மனித மனம் அனுபவங்களில் இருந்து உருவாக்கிக் கொள்ளும் குறியீட்டு இயக்கத்தில் அவனது நரம்புகளின் பங்களிப்பு என்ன என்ற வினா மிக முக்கியமானதாகிறது. மனிதன் உலகை அறிதல், கருத்துருவங்களை உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியவற்றில் பிற அனைத்தையும் விட அவன் மூளையின் நரம்பு அமைப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் என வாதிடப்படலாம். மூளையின் பெளதிகமான சாத்தியங்களும் எல்லைகளும் மனிதனின் கலாச்சாரம் சிந்தனை அனைத்துக்கும் எல்லையாக அமையலாம்.உதாரணமாக மூளை இரு பகுதிகளின் இணைப்பாக, அதில் ஒரு பகுதி கற்பனை மற்றும் மொழித்திறனுக்குரியதாகவும் மறுபகுதி கணித்தல் மற்றும் திட்டமிடலுக்குரியதாகவும், இருப்பதனால்தான் உலகநாகரீகத்தின் இன்றைய அமைப்பில் சிந்தனையும் கலையும் இரு ஓட்டங்களாக உள்ளனவா? வரலாற்றில் தொடர்ந்து அவற்றுக்கிடையே மோதல் நடைபெற்றதா?வரலாற்றையே அந்தக் கோணத்தில் விளக்கக் கூட ஒருவர் முற்படலாம். நவீன மரபணுவியல் இந்த தளத்தில் மேலும் விளக்கங்களையும் வினாக்களையும் அளிக்கும் போது சித்திரம் மேலும் முழுமையடையும். எறும்பின் புற்றின் வடிவம் அதன் மரபணுவில், அதன் மூளையின் நரம்பமைப்பு முறையில் உள்ளது; அதன் கரணியத்தில் காரண அறிவில் அல்ல. மானுடச்சிந்தனையும்,கருத்தியல்களும், சமூக அமைப்பும் எல்லாம் அப்படித்தான் என்று சொல்லும் இடம் நோக்கியா செல்கிறது மூளைநரம்பியல் என்ற வியப்பு ஏற்படுகிறது.
காரண அறிவை நிராகரிக்க, குறைத்து மதிப்பிட நான் முயல்வதாக எண்ணம் எழுந்துவிடக்கூடாது. மேற்குறிப்பிட்ட மூன்று சிந்தனைப் போக்குகளிலும் குறுக்கல்போக்கு வலுவாக உள்ளது என்றே எனக்கு படுகிறது. உளவியல் குறுக்கல்போக்கின் தீவிர நிலைப்பாடுகள் நவீனத்துவ சிந்தனையிலும், மொழியியல் குறுக்கல் போக்கின் தீவிரநிலைப்பாடுகள் பின்நவீனத்துவ சிந்தனையிலும் மேலோங்கியுள்ளதை நாம் வாசித்திருப்போம். காரண அறிவும் கரணியமும் மனிதனின் பிரக்ஞை சார்ந்தவை. நனவிலியோ குறியீட்டுப்பேரியக்கமோ அவை எத்தனை பிரம்மாண்டமானவையாக இருப்பினும் அருவமானவை. அவை வெளிப்பாடு கொள்ளவேண்டிய களம், அவை அள்ளப்படவேண்டிய பாத்திரம் காரண அறிவால் தான் தீர்மானிக்கப்படுகிறது. காரண அறிவும் கரணியமும் மனிதனின் மனஇயக்கத்தின் புறஎல்லைக்கோடாக இருக்காதவரை அவனது பிற அறிவுகள் அத்துமீறிப்போகலாம், பயனற்று சிதறியழியலாம். இப்படி சொல்லலாம், மனிதன் வாழும் நிதரிசன உலகின் தேவைகளுக்கு மிக நெருக்கமாக உள்ளவை காரண அறிவும் கரணியமுமே. அவை புறவய யதார்த்த உலகின் அனுபவங்களை மட்டுமே கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டவை. ஆகவே ஒரு கருத்தோ கொள்கையோ காரண அறிவுடன் கொள்ளும் உறவின் மூலமே அன்றாட பயன்பாட்டுக்குரியதாக ஆகிறது. அறிவு எத்தகையதாக இருப்பினும் அதன் அன்றாடப் பயன் மதிப்பு என்ன என்ற கேள்வி முக்கியமான ஒன்றுதான். காரண அறிவும் கரணியமுமே மனிதனின் அறிவின் உச்சம் பிற அனைத்துமே பயனற்ற மனமயக்கங்கள் என்ற சோதிப்பிரகாசத்தின் அணுகுமுறை இன்றைய அறிவுச் சூழலில்
அவரது கரணியத்துகே ஒத்துவராத மூடநம்பிக்கை மட்டுமே என்று வலியுறுத்த மட்டுமெ விரும்புகிறேன்.
[ஆ]
மார்க்ஸியம் குறித்த பேச்சுகளில் எல்லாம் அது ஒரு அறிவியல் சித்தாந்தம் என்ற வரி வந்தபடியே இருப்பதைக் காணமுடிகிறது.சோதிப்பிரகாசம் தன் நூலிலும் அந்த தோரணையையே மேற்கொள்கிறார் அறிவியல் என்று இங்கு அவர் உத்தேசிப்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மனப்பிம்பத்தை. புறவயமானதும், அனைவருக்கும் பொதுவானதும், திட்டவட்டமாக நிரூபிக்க முடிவதும், பயன்பாடாக மாற்றிக் கொள்ளப்படத்தக்கதும் ஆன ஒன்று என்ற பொருளில். கடந்த அரை நூற்றாண்டில் இந்த மனப்பிம்பம் மீது விடுக்கப்பட்ட விமரிசனக்களை அவர் கணக்கில் கொள்ளவில்லை. இன்று அறிவியல் சித்தாந்தம் என்பது ஒரு குறிப்பிட்ட பேசுதளத்துக்குள் அதன் பொது விதிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச புறவயத்தன்மையை அடைந்த ஒன்று என்று மட்டுமே உத்தேசிக்கப்படுகிறது. அதாவது நிரூபணம் என்பது வரையறைக்குட்பட்டே சாத்தியம். ஆகவே அறிவியலின் ‘உண்மைகள்‘ கூட வரையறைக்குட் பட்டவையேயாகும். பொருளியலில் நிரூபிக்கப்பட்ட ஒரு கொள்கைக்கு சமூகவியலில் மதிப்பே இல்லாமல் போய்விடக்கூடும். குறிப்பாக பல மேலாண்மைக் கொள்கைகள் சமூகவியல் பார்வையில் அபத்தமானவை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்ற பேச்சுக்கு இப்போது எந்தவிதமான பொருளும் இல்லை. ஒரு துறைக்குள் முற்றிலும் தர்க்கபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பொய் என்பது முற்றிலும் சாத்தியமே. கடந்த பத்துவருடங்களில் அப்படி பொருளாதாரம், சமூக அறிவியல் தளங்களில் பல கொள்கைகள் ஏகாதிபத்திய அதிகார சக்திகளால் ‘ நிரூபிக்க ‘ப்பட்டுள்ளன.
இவ்வடிப்படையில்தான் பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் பலர் அறிவியல் நோக்கு என்பது ஒருவகை கருத்தியல் அதிகாரப் பிரயோகம் மட்டுமே என்று வரையறுக்கத் தலைப்பட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அறிவியல் என்பதே சுரண்டலுக்கான ‘உண்மை‘களை சமைக்கும் ஆயுதமாக ஏகாதிபத்திய சக்திகளால் பயன்படுத்தப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். உலகமயமாக்க சுரண்டலுக்கு எதிராக உலகமெங்கும் நடைபெறும் போராட்டங்களில் முன்வைக்கப்படும் மாற்று வழிமுறைகள் அடிப்படையில் இந்த அறிவியல் நோக்கை நிராகரிப்பதாகவே உள்ளன. மிக முக்கியமான உதாரணம் ஓமியோபதி. அலோபதியின் அறிவியல் அடிப்படை ஓமியோபதியை எளிதில் நிராகரித்துவிடும். ஆனால் சந்தைப்படுத்தப்பட்ட அலோபதியின் சுரண்டலுக்கு எதிரான பயனுள்ள எதிர்ப்புமுறையாக அது உலகம் முழுக்க இருந்து வந்துள்ளது. அறிவியல் என்பதற்கு மார்க்ஸியம் தோன்றிய காலகட்டத்தில் இருந்த பொருளல்ல இன்று உள்ளது.அன்று அது ஒரு விடுதலை சக்தி, இன்று அது சுரண்டலின் ஆயுதம். அறிவியல் நோக்கு என்பதற்கு இன்று ஒரே பொருள்தான், அந்த சித்தாந்தம் மேற்கத்திய அறிவியங்கியலின் முறைமைப்படி கூறப்பட்டுள்ளது ; அதற்கு வரையறுக்கப்பட்ட ஒரு பேசு தளத்தில் அதன் விதிகளின் படி செயல்படும் தர்க்க அமைப்பு உள்ளது.இந்த நூலில் சோதிப்பிரகாசம் முன்வைக்கும் அத்தனை தருக்கங்களுக்கும் அவ்வளவுதான் மதிப்பு.
அப்படியானால் எப்படி அறிவியல் சித்தாந்தத்தையும் வெறும் ஊகத்தையும் வேறுபடுத்துவது ? ஒரு ஊகம் [hypothesis] அறிவியல் சித்தாந்தமாக கருதப்படுவது எந்நிலையிலும் நிபந்தனைக்கு உட்பட்டுதான்.ஒரு வினாவுக்கு சாத்தியமான சிறந்த விளக்கமாக இருக்கும் போதுகூட ஓர் ஊகம் அறிவியல் விளக்கமாக கருதப்படலாம், பெருஞ்சிக்கல் சித்தாந்தம் போல. அல்லது பொதுவான முறைமை [methodology] ஒன்றின்படி அது முன்வைக்கப்படிருக்கையில் அதை அறிவியல் சித்தாந்தமாக கருதலாம். இவ்விரு அடிப்படைகளின்படி மார்க்சியத்தை ஓர் எல்லைக்குட்பட்டு ஓர் அறிவியல் கொள்கையாக எடுத்துக் கொள்ளலாம்தான். ஆனால் மிக முக்கியமான தடை ஒன்று சொல்லப்படவேண்டும். ஓர் அறிவியல் கொள்கை தன்னை தானே பொய்ப்பிக்க ஓயாது முயன்றபடியுள்ளது என்று சொல்லலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது தனக்கு எதிரான தரவுகளை கணக்கில் கொள்கிறது. அதன் அடிப்படையில் தன்னை மறிபரிசீலனை செய்கிறது, மாற்றியமைக்கிறது, தேவைப்பட்டால் முற்றிலும் நிராகரித்துக் கொள்ளவும் தயாராக உள்ளது. ஒரு நம்பிக்கையாக, உணர்வுப் பிடிப்பாக தன்னை மாற்றிக் கொள்ளும் போக்கு உள்ள ஒன்று ஒருபோதும் அறிவியல் கொள்கை அல்ல.
மார்க்சியம் முன்வைக்கப்பட்டு இப்போது ஒரு நூற்றாண்டு தாண்டிவிட்டது. உலகின் பற்பல நாடுகளில் அதை செயல்படுத்தும் பலதரப்பட்ட முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் இந்த நிமிடம் வரை தன்னை பொய்ப்பிக்கும் சோதனைக்கு மார்க்ஸியம் ஆளானதாக வரலாறு இல்லை. நிறுவனமாக்கப்பட்ட எந்த தத்துவத்தரப்பையும்போல அதிகாரத்தை உற்பத்தி செய்யவும், அவ்வதிகாரத்தை மற்ற தளங்களுக்கு பரவலாக்கும் துணைக்கருத்தியல்களை உற்பத்தி செய்யவும் தான் அதுவும் முயன்றுள்ளது.அதை பொய்ப்பிக்கும் மாற்றுத் தரப்புகளுக்கு எதிராக வன்முறையை அனைத்து ரீதியிலும் தொடுத்துவிட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக ஒரு நூற்றாண்டு அவகாசம் கிடைத்த போதும்கூட இந்த கொள்கையால் எந்த ஒரு இடத்திலும், ஒரு சிறு மாதிரி நிலத்தில் கூட, எவ்வகையிலும் அது குறிப்பிடும் சமூக மாற்றங்களை உருவாக்க முடியவில்லை. ஒரு கொள்கையின் சிறு பகுதி நடைமுறைக்கு சாத்தியமாகியிருந்து பிற பகுதிகள் அப்படி எதிர்பார்க்கத்தக்கதாக இருக்கும்போதுகூட அதை ஒரு அறிவியல் கொள்கையாக கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் மார்க்ஸியத்தின் எந்த பகுதியும் நடைமுறையில் எப்போதும் நிரூபிக்கப்பட்டதில்லை. அப்படி நிரூபிக்கப்பட்ட நாடுகள் என சில நாடுகள் சுட்டப்பட்டு கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டதுண்டு, அதிகபட்சம் 30 வருடங்கள் கூட அப்பொய்கள் தாக்குபிடித்தது இல்லை. அந்நாடுகளின் பட்டியலில் போல்பாட்டின் கம்போடியாவும் உண்டு எனும்போது இந்த பொய்யின் குரூரம் வெளிப்படும். ஓர் அறிவியல் கொள்கை இவ்வாறு அரை நூற்றாண்டுக்காலம் அப்பட்டமான பொய்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்குமா? தன்னை பொய்ப்பித்தல் சோதனைக்கு உள்ளாக்குவதற்கும் இதற்கும் இடையே எத்தனை வேறுபாடு!
அனைத்து கோணங்களிலும் மார்க்ஸியம் ஒரு செமிட்டிக் மதம் என்பதைக் காணலாம். மூலநூல் [canon] முதல்போதகர். ‘இழப்பதற்கேதுமில்லை சங்கிலிகளைத்தவிர” போன்ற கனவும் கவித்துவமும் நிரம்பிய வரிகள், வாக்களிக்கப்பட்ட பூமி, நம்பிக்கைகள், உணர்ச்சிவேகங்கள்…. மதங்களுக்கு மானுட விடுதலை சார்ந்த கனவு உண்டு. அவற்றின் ஆரம்ப கட்டங்களிலேனும் அவை மானுடத்தை முன்னகர்த்தும் கருத்தியல்களாக செயல்பட்டதும் உண்டு. மனித சிந்தனைக்கு அவற்றின் பங்களிப்பு முக்கியமானதே. மார்க்ஸியம் தொழிற்புரட்சி உருவாக்கிய புதிய மதம். மார்க்சியத்தின் சரிவுகள் பிழைகள் குறித்த எந்த விமரிசனத்துக்கும் வரக்கூடிய தயார்நிலை பதில் ‘ மூல தத்துவம் உன்னதமானது, தவறாக ஆக சாத்தியமே இல்லாதது, நிரூபிக்கப்பட்ட அறிவியல் உணமை.அதை நடைமுறைப்படுத்தியவர்கள் தவறானவர்கள்,நடைமுறைப்படுத்திய விதமும் தவறானது ” என்பது தான்.யோசித்துபார்த்தால் எந்த மத நம்பிக்கையாளனும் தன் மதத்தின் மூலநூல் பற்றி இதைத்தான் சொல்வான் என்று காணலாம். ‘இறக்கி அருளப்பட்டது ‘ என்ற சொல்லாட்சி ‘அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது ‘ என்று மாறியுள்ளது அவ்வளவுதான்.
இந்த நூலில் சோதிப்பிரகாசம் சொல்லும் விலை, மதிப்பு போன்ற கொள்கைகளின் தத்துவ மதிப்பு என்னவானாலும் அவற்றை இன்றுள்ள சமூகப் பொருளாதார தளத்தில் எவ்வகையிலும் நேரிடையாக பயன்படுத்த முடியாது என நான் உறுதியாகவே கூற முடியும். பயன்படுத்த ஆரம்பித்த உடனே எண்ணற்ற தளங்களால் அக்கொள்கைகள் தடைபடுத்தப்படும். திசை திருப்பப்படும். தனிமனித ஆழ்மனம் முதல் சந்தை இயக்கத்தின் செயல்விதிகள் வரை அவற்றை எதிர்கொள்ளும் சக்திகள் பல. இவை ஒவ்வொன்றும் செயல்படவில்லை என்று வைத்துக் கொள்ளும் ஒரு கற்பனைத் தளத்தில் மட்டும் நிகழ்பவை சோதிப்பிரகாசத்தின் விதிகள். இது இந்த நூறு வருடங்களில் மீண்டும் மீண்டும் நடைமுறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. மூர்க்கமாக அவை நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் உருவான அழிவுகளே ஸ்டாலினும் மாவோவும் போல்பாட்டும் நிகழ்த்தியவை. அப்படி நடைமுறையில் நிரூபிக்கப்படும் ஒவ்வொரு முறையும் அது நடைமுறைப்படுத்தப்பட்டதன் பிழை எனச்சொல்லி மூல விதிகளுக்கு ஆவேசமாக திரும்பி வரும் மனநிலையையே மதநம்பிக்கை என்கிறேன்.
இந்த நவீன மதத்திலிருந்து மிக முக்கியமான ஓர் அம்சத்தை இன்றைய நமது தேவைக்காக நாம் அடையாளம் கண்டு பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. அதை மார்க்ஸியத்தின் மெய்யியல் எனலாம். இன்றைய அறிவியல், வரலாற்றாய்வு தளங்களில் செயல்படுவோர் ஒன்றை பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. நவீனத்துவகால அறிவியல் வழிபாட்டுக்கு பிறகு மனித மனம் கண்டடைந்த முக்கியமான ஞானம் அது. தரவுகள் மூலம் புறவயமாக இயல்பாகவே உருவாகிவரும் கொள்கையோ கருத்தோ ஏதுமில்லை. அக்கொள்கையை உருவாக்கும் தேடல்தான் முக்கியமானது. எந்த தேவைக்காக இந்த கொள்கை உருவாக்கப்படுகிறது என்ற கேள்விக்கான விடை. அந்த தேடலை உருவாக்குவது மெய்யியலே. மார்க்சியத்தின் அரசியல் செயல்திட்டத்தை விடவும், அதன் பொருளியல் விளக்கங்களை விடவும் முக்கியமானது அதன் மெய்யியலே. எஸ் என் நாகராஜனின் ‘மார்க்சியம் விடுதலையின் இலக்கணம் ‘ என்ற நூல் தமிழில் மார்க்ஸிய மெய்யியலை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட முக்கியமான நூல் என எண்ணுகிறேன்.
மானுட விடுதலையை தனிமனித மேம்பாட்டிலும், இயற்கையுடனான முழுமையான ஒத்திசைவிலும், சமூகக் கூறுகளுக்கு இடையேயான ஒருமையிலும் எல்லாம் தேடிய மானுடத்தேடல் வந்தடைந்த முக்கியமான புள்ளி மார்க்ஸிய மெய்யியல். பகிர்வில் சமத்துவத்தில் விடுதலையைக் காணும் அம்மெய்யியலுக்கு இன்று முக்கியமான இடம் உண்டு. ஆனால் அது முழுமையானதோ இறுதியானதோ அல்ல என்றே நான் எண்ணுகிறேன். குறிப்பாக மனிதனை இயற்கையை ஆள்பவனாக, நுகர்பவனாக உருவகிக்கும் அதன் அணுகுமுறைக்கு எதிர்கால உலகில் இடமிருக்காது. இயற்கையுடனான சாத்தியமான ஒத்திசைவு குறித்து மனித இனம் கவலைப்பட ஆரம்பித்துள்ள காலம் இது. மார்க்ஸியத்தின் கண்ணோட்டம் தொழிற்புரட்சியின் துவக்க காலத்தை சேர்ந்தது என்றால் இன்றைய பார்வை அதன் இறுதிக் காலகட்டத்தை சேர்ந்தது. இன்று தேவையாக உள்ள மெய்யியல் மனிதனை தனிமனமாகவும் சமூக உறுப்பாகவும் உழைப்பு சக்தியாகவும் இயற்கையின் துளியாகவும் ஒரே சமயம் உருவகிக்க முயலும் ஓர் இணைப்பாகவே இருக்க முடியும்.
[இ]
அப்படியானால் இன்று மார்க்சியத்தின் பெறுமானம் என்ன? எந்த வகையில் சோதிப்பிரகாசத்தின் இந்நூலை நான் முக்கியமானதாகக் காண்கிறேன்?மார்க்ஸியம் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்தையும் ஊடுருவியுள்ள பொருளியல் அடிப்படையை அடையாளம் காட்டும் சித்தாந்தம் என்ற முறையில் மிக முக்கியமானது. அந்தப் பொருளியல் அடிப்படையை அடையாளம் காண்பதென்பது நம் மீது ஏவப்படும் பொருளியல் அதிகாரத்தை இனம் காண, அதை அறிவார்ந்த முறையில் எதிர்க்க மிக அவசியமான ஒன்றாகும். சுரண்டல் உலகளாவிய பேரமைப்பாக வளர்ந்துள்ள இன்று, உச்சத்திறன் கொண்ட ஊடகங்கள் மூலம் அதற்குரிய கருத்தியல்கள் நம் மீது திணிக்கப்பட்டு நமது வாழ்க்கையின் எல்லா தளங்களும் தீர்மானிக்கப்படும் இன்று மார்க்சியம் மிக வல்லமை வாய்ந்தகோர் ஆயுதமாகும். அந்த அளவில் அதை மேலும் வளர்த்து எடுக்கவேண்டிய அவசியம் இன்று உள்ளது. சோதிப்பிரகாசத்தின் இந்நூல் அவ்வகையில் முக்கியமான பங்களிப்பு ஆற்றியுள்ளது.
என் வரையில் நான் இப்படி கூற முற்படுவேன். மார்க்ஸியம் என்பது இன்று ஓர் கருத்துருவகம் மட்டுமே. சமூக இயக்கத்தையும் வரலாற்றையும் பொருளியல் அடிப்படையை முன்னிறுத்திப் புரிந்துகொள்வதற்கு மிக உகந்த கருத்தியல் உபகரணம் அது. அதை ஒரு வகை கூறுமுறை [narration] என்றாலும் எனக்கு எதிர்ப்பு இல்லை. அந்த உபகரணத்தை தேவைக்கும் தருணத்துக்கும் ஏற்ப நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அது பயன்படுத்தப்படும் தளங்களில் வரும் சவால்களை அந்த தளத்தில் அது எதிர்கொள்ளலாம். உதாரணமாக மார்க்ஸிய அழகியலை கூறலாம். சுரண்டலுக்கான உபகரணங்களாக கலையும் இலக்கியமும் பயன்படுத்தப்படும் களங்களில் அவற்றின் உட்கிடக்கையாக உள்ள பொருளியல்கூறுகளை வெளிக்கொணரவும் எதிர்கொள்ளவும் மார்க்ஸிய ஆய்வுமுறைகள் இலக்கியத்திலும் கலையிலும் பயன்படுத்தப்படும்போது உருவாவது அது.அதற்கு முக்கியமான பங்களிப்பு உள்ளது. பொருளியல் ரீதியான சுரண்டல்க்கு எதிராக, சமத்துவத்துக்காக நடக்கும் போராட்டத்தின் அடிப்படை தேவையாக ஒவ்வொன்றிலும் உள்ள பொருளியல் உட்கிடக்கையை அறிய விளக்க மார்க்ஸியம் ஒரு முக்கியமான கருவி. அந்த பார்வையை அப்படியே கலையிலொ, அறவியலிலோ மூர்க்கமாக பிரயோகிக்கும்போது அது அழிவுதரும் ஆயுதம்.
ஆனால் காரண அறிவும் கரணியமும் தான் மானுட அறிவின் ஒரே வழிகள் என்பதும், மார்க்ஸியமே வாழ்க்கையின் அனைத்து தளங்களையும் காரண கரணிய முறைப்படி விளக்கும் ஒரே அடிப்படை தத்துவம் என்பதிலும், அது நிரூபிக்கப்பட்ட ஓர் அறிவியல் சித்தாந்தம் என்பதிலும் நான் முற்றாக மாறுபடுகிறேன். எந்த ஒரு கொள்கையும், தத்துவமும் வாழ்க்கையை முற்றாக விளக்கிவிடும் என நான் எண்ணவில்லை.மேலும் அந்தக் கூற்று கருத்தியல்சார்ந்த அதிகாரத்துக்கும் வன்முறைக்கும்தான் இட்டு செல்லும் என்றே கருதுகிறேன். சென்ற காலங்களில் மார்க்ஸியம் சார்ந்து நடந்த வன்முறைகளுக்கும் பேரழிவுகளுக்கும் காரணம் அவ்வாறு அது விளக்கப்பட்டமையே. ஒரு கருத்தியலாக சுரண்டலுக்கு எதிரான வலிமை மிக்க ஆயுதமாக விளங்கும் மார்க்ஸியம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வரலாற்றையும் வகுக்கும், மாற்றியமைக்கும் மெய்யியலாக மாற்றப்படும்போது மிக ஆபத்தான குறுக்கல்வாதமாக மாறிவிடுகிறது. அதிகாரம் பெற்ற குறுக்கல்வாதங்களே உலகில் எப்போதும் பேரழிவுகளுக்கு காரணமாக ஆகிவிட்டிருக்கின்றன.
உலகை மாற்றி வடிவமைக்கும் பொறுப்பில் இருந்து மார்க்ஸிய சித்தாந்த்த்தை கருணைகூர்ந்து விடுவித்து விடும்படி சோதிப்பிரகாசம் போன்ற சம்பிரதாய மார்க்ஸிய அறிஞர்களிடம் மன்றாடிக் கேட்கவேண்டிய நிலையில் நம்மைப்போன்ற சாமானியர் இருக்கிறோம். இந்து, இஸ்லாமிய, கிறித்தவ மதவாதிகளிடம் காலாகாலமாக நாம் முன்வைத்துவரும் அதே மன்றாடல். வரலாற்றின் துளிகளாக இருக்கும் நாம் இத்தகைய சித்தாந்த அறிஞர்களின் மூளைத்திறனுக்கு விலையாக ஏகப்பட்ட ரத்தத்தை அளித்தாகிவிட்டது. எத்தனை பிரம்மாண்டமானதாக இருந்தாலும் ஒரு கணிப்பொறியின் உதவியுடன் ஒரு காட்டையோ, மொழியையோ மொத்தமாக மாற்றி வடிவமைத்து விடமுடியாது. அது அக்காட்டையும் மொழியையும் முழுமையாக அழிப்பதில்தான் கொண்டு சேர்க்கும் என ‘அறிவியல்பூர்வ‘மாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. கணிப்பொறியின் ஆற்றல் அக்காட்டை அல்லது மொழியை செம்மைப்படுத்துவதில் பயன்படுத்திக் கொள்வதில் முக்கியமான பங்காற்ற முடியும். அறிந்தும் அறியாமலும் உள்ள எண்ணற்ற உட்போக்குகளால் இயங்குபவை காடு போன்ற உயிரியல் அமைப்புகள், மொழி போன்ற கருத்துருவ அமைப்புகள்.அவற்றில் நமக்குச் சாதகமான ஒரு சக்தியாக நாம் கணிப்பொறியை பயன்படுத்திக் கொள்ளலாம் அவ்வளவுதான். அவற்றின் பயன் எல்லைக்குட்பட்டதே. கணிப்பொறிபோல மார்க்ஸியமும் ஒரு கருவிமட்டுமே.
பொருளியல்மைய அணுகுமுறையான மார்க்ஸியத்துக்கு அப்பால் அதன் சித்தாந்தக் கட்டுமானத்தால் விளக்கிவிட முடியாதபடி எத்தனையோ சமூக, உளவியல், மெய்யியல் இயக்கங்கள் உள்ளன. அவையும் சேர்ந்துதான் சமூக இயக்கமும், மானுட வாழ்க்கையும், சிந்தனைகளும் உருவாகியுள்ளன. அவற்றின் பல்வேறு தளங்களை விளக்க முயலும் பலதரப்பட்ட கொள்கைகளும் தரிசனக்களும் மானுட மனத்தால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒட்டுமொத்தமாகவே வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்த நமது புரிதல் அமைகிறது. அவற்றில் ஒன்றே மார்க்ஸியம், ஒரு தளத்தை மட்டும் முன்னிறுத்தி ஒரு கோணத்தை விளக்கமுயல்வது அது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று உறவுள்ளவை. ஒன்றையொன்று தீர்மானிப்பவை. உதாரணமாக இந்த ஐம்பது வருடங்களில் பொதுமெய்யியலிலும், மொழியியலிலும் எல்லாம் உருவான பெரும் மற்றங்களுக்கு சார்புக் கொள்கையுடன் நேரடி உறவுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு சிந்தனைகளுக்கும் இயந்திரவியலுக்கும் உள்ள உறவும் பெரிதும் பேசப்பட்டுள்ளது. அதே சமயம் இவை ஒவ்வொன்றும் வாழ்க்கை சார்ந்த ஒவ்வொரு மெய்மையையே முன்வைக்கின்றன. இக்கொள்கைகள் தரிசனங்கள் அனைத்தும் சந்தித்துக் கொள்ளும் பொதுத்தளம், சோதனைக்களம் நமது அன்றாட வாழ்க்கை தான். அங்கு மேலான பயனை அளிப்பது எது என்பதே இறுதியில் ஒவ்வொன்றின் மதிப்பை இறுதியாக தீர்மானிப்பதாக அமையும்.
[மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 21, 2002]