திங்கள் மாலை
அன்புள்ள ஜெ.,
‘திங்கள் மாலை‘ பதிவில் ‘திங்கள் மாலை வெண்குடையான்‘ (படம்: கரும்பு, 1973) என்ற சிலப்பதிகாரக் கானல் வரிப்பாடலைப் பற்றி, ‘மனிதனால் இசையமைத்துக் கிடைக்கப்பெறும் பாடல்களில் மிகப் பழைய பாடலாக இது இருக்கலாம்‘ என்று எழுதியிருந்தேன். அது தவறு என்று நான் உணர்ந்தபோது பதிவு வந்துவிட்டிருந்தது. இதுவும் சிலப்பதிகாரப் பாடல்தான். ‘ஆய்ச்சியர் குரவை‘ யில் வரும் ‘வடவரையை மத்தாக்கி..’ எனத்தொடங்கும் பாடல். ஐ.நா சபையில் நடந்த கச்சேரியில் 1966 லேயே எம்.எஸ்.சுப்புலட்சுமி இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்.
இசையறிந்தோருக்கான இன்னொரு விரிவான பதிவு.
– என்.பைரவி, என்.மாலவி
சிறுவயதில் ‘மூவுலகும் ஈரடியான்…’ என்று என் அம்மா பாடிக்கொண்டிருந்ததைக் கேட்டுத்தான் இந்தப்பாடல் அறிமுகம். திருமாலின் அவதாரப் பெருமைகளைப் பாடுவதால் ஒரு வைணவப்பாடலாகவே மனதில் பதிந்துவிட்டது. திருமாலின் பெருஞ்செயல் ஒன்றைக் கூறும் முதல் அடி, அவருடைய வீழ்ச்சியையோ, தாழ்ச்சியையோ கூறும் அடுத்த அடி.’இவனா நீ?’ என்று ஒவ்வொரு பாடலிலும் வியக்கிறார் இளங்கோவடிகள். ராம,கிருஷ்ணாவதாரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றமும், தொன்மங்களும் இந்த ஒரு பாடலிலேயே கிடைத்து விடுகிறது. ஒரு சமணர் எழுதிய வைணவப்பாடல் போலத் தோன்றவில்லை. ‘பாந்தியன்‘ எனப்படும் பலகடவுள் வணங்குமுறையைக் கொண்டவரோ இளங்கோவடிகள் என்ற சந்தேகம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. எதனாலோ இந்தப் பாடல் கச்சேரிகளில் அதிகமாகப் பாடப்படுவதில்லை.
இறைவனின் புகழ் துய்க்கும் அங்க அவயங்களை வாழ்த்துவதும், அல்லவற்றைப் பழிப்பதுமான பாடல்கள் சைவத்திலுமுண்டு. இன்னும் ஒருபடி மேலாக ‘இப்படியெல்லாம் இன்பம் துய்ப்பதாக இருந்தால் மனிதப் பிறவி கூடப் பரவாயில்லை போலிருக்கிறதே?’ என்கிறார் அப்பர். இதிலுள்ள ‘பெரியவனை மாயவனை..’ பாடல் ‘குனித்த புருவமும்…’ என்ற அந்த அப்பர் தேவாரத்தை நினைவு படுத்துகிறது.
1.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
பொருள்:
வடமலையாம் மேருவை மத்தாக்கி,
வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு
அன்று கடலை கடைந்தவன், இன்று யசோதையின் சிறு கயிற்றால்
கட்டப்பட்டுக் கிடக்கிறாயே, என்ன விந்தை!
2.
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
பொருள்:
அமரரும் உன்னை தொழுது பசி போக்கிக் கொள்ள,
நீயோ உலகையே உண்ட வாயால்
வெண்ணைதனை களவு செய்து உண்டாயே!.
என்ன விந்தையோ, என்ன மாயமோ?
3.
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
பொருள்:
அமரர் தொழும் திருமால் உன் செங்கமல பாதத்தின்
இரண்டடியால் இருள் முடிய இப்பூவுலகை அளந்தாயே!
அதே பூவுலகில் பாண்டவர்க்கு, மடல் கொடுக்கும்
தூதனாகவும் இருந்தது விந்தைதானே!
4.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே
பொருள்:
மூவுலகை இரண்டடியால் நடந்தது குறைவென்று,
நிறை செய்ய, தம்பியோடு வனம் வழி நடந்தாயே!
செம்மையாகக் கட்டப்பட்ட அரணும் போரில் வீழச்செய்த
வீரன் உன் புகழ் கேளாத செவியும் செவியோ?
திருமால் உன் சீர் கேளாத செவியும் செவியோ?
5.
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் கனிவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே
பொருள்:
பெரியவனும் மாயவனுமாகிய திருமால் உன்னைக்
கையும், திருவாயும் கொண்ட கரியவன் உன்னைக்
காணாத கண்ணும் கண்ணோ?
கண்ணிமைத்துக் காண்பவர்கள் கண்ணும் கண்ணோ?
6.
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
தொடர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே!
அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய
கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும்,
துரியோதனாதியர்பால் பஞ்சபாண்டவர்க்குத் தூது நடந்தானை
போற்றாத நாவென்ன நாவே!
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்