பெண்ணியத்துக்கு எதிரான ஜெயமோகன் சொற்களில் இருந்து ஒரு பெண்ணிய இதழா என்று குமுறி ஓர் ஆவேசமான கடிதம். பொதுவாக ஆவேசமாகப் பேசினால் பொய்யுணர்வுகள் உண்மையாகிவிடுமென்ற நம்பிக்கை நம்மிடையே வலுவாக உள்ளது. நாம் நூல்களில் இருந்து எதையும் கற்பதில்லை, பொதுவான மேடையுரைகளில் இருந்தே கற்கிறோம் என்பதே காரணம்.
ஒன்று, நான் பெண்ணியத்திற்கோ அல்லது வேறெந்த இயத்துக்கோ எதிரி அல்ல. பெண்ணியம் ஒரு விடுதலைச் சிந்தனை என்பதே என் எண்ணம். ஆனால் எழுத்தில் அப்படி ஓர் நிலைபாடு எடுப்பது கலைப்படைப்பு கொள்ளவேண்டிய அகவயத்தன்மை, தன்னிச்சையாக விரியும் தன்மை, தன்னைத்தானே கண்டுகொள்ளும் தன்மை ஆகியவற்றை இல்லாமலாக்கிவிடும் என்பது மட்டுமே என் கருத்து. அறிவு வகுத்த பாதையில் செல்வது அல்ல கலை. சூழல் உருவாக்கும் பார்வையை எதிரொளிப்பதல்ல இலக்கியம். அவ்வளவுதான்.
பெண்ணின் ஆற்றல் வெளிப்படுவது பெண்ணியக் கூச்சலின்போது என நான் நம்பவில்லை. தனக்குச் சூழலும் தன் இயல்பும் வகுத்த எல்லைகளை தாண்டிச்செல்பவரே ஆற்றல் கொண்டவர். ஆணானாலும் பெண்ணானாலும். அத்தகைய அத்தனை பெண்களையும், ஒருவர் விடாமல், அடையாளப்படுத்தி முன்னிறுத்துபவனாகவே இதுவரை இருந்து வந்துள்ளேன். கரசூர் பத்மபாரதி வரை.
நீலி இதழில் அப்படிப்பட்ட ஆளுமை ஒருவரின் பேட்டி வெளிவந்துள்ளது. மதுமஞ்சரி கிராமப்புற கிணறு சீரமைப்பு இயக்கத்தை தொடங்கி முன்னெடுக்கும் ஆளுமை. நம்முடன் வாழும் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனின் அடுத்தடுத்த தலைமுறை தொடர்ச்சியை நான் அவரில் பார்க்கிறேன். பல ஆண்டுகளாக எனக்கு அணுக்கமான மதுவை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அணைக்காமல் இருக்க முடியவில்லை. என்னை அவர் அப்பா என அழைக்கும்போது உருவாகும் பெருமிதம் ஆணாக இருப்பதன் பேரின்பங்களில் ஒன்று.