எம் கே தியாகராஜ பாகவதர்- கடிதம்

எம் கே தியாகராஜ பாகவதர். தமிழ் விக்கி

என் திருமணத்திற்குப் பின் இந்த இருபத்தைந்து வருடங்களாக என்னுடைய புகுந்த வீட்டில் தினம்தோறும் சொல்லப்படும் பெயர் பாகவதர். என்னுடைய பெரிய மாமனார் (அவர் இறக்கும் வரை கூட்டுக்குடும்பம்தான்). பாகவதர் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மேல் சொல்ல முடியாத ஒரு பாசம். மிகப் பெரிய சட்டமிட்ட அவருடைய புகைப்படங்கள் வீட்டில் உண்டு. எம். ஜி ஆர் அவர்கள் புதிய கட்சி தொடங்கிய போது அவருடன் நெருக்கமாய் இருந்த என்னுடைய பெரிய மாமனார் முதன் முதலில் புதிய கட்சியின் கூட்டம் திருச்சியில் நடத்தியபோது கலையரங்கம் என்ற பெயர் கொண்ட அரங்கத்தை தியாக ராஜ பாகவதர் மன்றம் என்று பெயர் மாற்ற பிரயாசைப்பட்டார். இந்தத்தகவலை கேள்விப்பட்டு பாகவதரின் மனைவியும், மகனும் எங்கள் வீட்டை விசாரித்து வந்து எங்கள் மாமனாரை பார்த்திருக்கிறார்கள். அதன் பிறகு குடும்ப நண்பர்களாகவே ஆகிவிட்டனர். பாகவதரின் மகள் ஒருவர் என் மாமியாரின் பள்ளித்தோழி.

“கான்மியான் மேட்டுத்தெரு” அரசு ஆவணங்களில்தான் அந்தப் பெயர். ஆனால் எங்களுக்கு அது பாகவதர் சத்துதான் இப்போது வரைக்கும். அந்தத் தெருவை தாண்டித்தான் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் ஜெபமாலை மாதா கோவிலுக்கு செல்வோம். அந்தத் தெருவில் இருந்த வீடு வேறொருவர் கையில் இருந்தது. அதை எங்கள் மாமனார் உதவியுடன் மீட்டு விற்பனை செய்து கடன் அடைத்திருக்கிறார்கள். பாகவதரின் ஒரே மகன் ஆனால் அவர் தன் மகனை விஷம் போல் வெறுத்திருக்கிறார். மகன் அவ்வளவு அழகு அல்ல. நிறமும் கறுப்பு. அவருடைய எல்லா வீழ்ச்சிக்கும் தன் மகன்தான் காரணம் என்று நம்பி அதை தன் மகனின் மனதிலும் விதைத்திருக்கிறார். எப்போதுமே அவருடைய மகன் தலை குனிந்தேதான் இருப்பாராம்.

சமஸ்தானங்களில் பாடும்போது அருமணி கற்கள் கொண்ட தட்டை அப்படியே அவர் தலைமீது கவிழ்ப்பார்களாம். அவர் வீடு வந்து படுத்துத்தூங்கி எழும்போது படுக்கையில் வைரகற்கள் இருக்குமாம். அதை எடுத்து பத்திரம் பண்ணி வைக்கக்கூட எனக்கு அப்போது தெரியவில்லை என்று அவருடைய மனைவி அழுவார்கள் என்று சொல்வார்கள். பாகவதரின் சொந்தக் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி இருந்திருக்கிறார்கள். ஆனால் அவருடைய பணம் மற்ற சொத்துக்கள் எல்லாம் பிற யாரோ அனுபவித்து இருக்கிறார்கள். தமிழ் விக்கியின் இந்தக்  கட்டுரையை வீட்டில் வாசித்துக் காட்டினேன். அன்று முழுவதும் ஒரே பாகவதர் கதைதான்.

டெய்ஸி.

முந்தைய கட்டுரைஅர்ஜுனனும் கர்ணனும்
அடுத்த கட்டுரைசாரு, சமஸ் வாழ்த்து