தங்கள் எழுத்துக்கள் இந்து மரபை புரிந்துகொள்ள எந்தளவு உதவிகரமாக இருந்ததோ, அதேயளவு கிருஸ்துவத்தையும், இயேசு கிருஸ்துவையும் நெருங்கி உணர உதவியுள்ளன.
சிலுவையின் பெயரால் புத்தகமும், ஓலைச்சிலுவை, கொதி போன்ற கதைகளும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. குறிப்பாக, பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் “உயிர்தெழுதல்” கதையை எத்தனைமுறை முயன்றாலும், கண்கலங்காமல் படிக்க முடிந்ததில்லை. அதில் இடம்பெற்ற இயேசுவின் கருணைமிகு வார்த்தைகளும், அவர் மீது குழந்தைகள் மாறிமாறி பொழியும் அன்பும், நடைபெறும் உரையாடல்களும் மனதை நெகிழ செய்பவை. (வாய்ப்பிருந்தால் அந்த கதையை மட்டும் ஒரு சிறிய புத்தகமாக போடலாம். குமரித்துறைவி எப்படி மங்கலம் மட்டும் கொண்ட ஒன்றோ, அதேபோல் “உயிர்தெழுதல்” பூரண அன்பையும், கருணையையும் மட்டுமே கருவாக கொண்டது.)
சில நாட்களுக்கு முன்னால் திடீரென ஓர் எண்ணம் எழுந்தது. பாரபாஸ் போல பைபிளில் வரும் ஒரு சிறிய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, தாங்கள் புனைவு ஏதும் எழுதியுள்ளீர்களா என்று.
தங்கள் தளத்தில் தேடியதில் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக தங்களிடமே கேட்டு, கடிதம் ஒன்றை எழுதலாம் என இருந்தேன். ஆனால், தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு, கடைசியில் அந்த எண்ணம் கைவிடப்படும் நிலையை எட்டியிருந்தது.
இந்நிலையில், இன்று ஒரு கடிதத்திற்கான பதிலில் போகிறப்போக்கில் ‘வெறும்முள்’ என்ற சிறுகதை பற்றி தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி என்னதான் உள்ளது என்ற ஆர்வத்தில் அந்த கதையை படித்தேன். ஆச்சரியம். ஏசுவின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியையொட்டி எழுதப்பட்ட கதை அது. இதுபோன்ற ஒரு கதையை எழுதியுள்ளீர்களா என்று கேட்டுத்தான், தங்களுக்கு கடிதம் எழுத எண்ணியிருந்தேன்.
இந்த தற்செயல் நிகழ்வை தங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. ஆகவே, இக்கடிதம்.
கடைசியாக ஒன்று. ‘வெறும்முள்’ கதை அத்தனை நன்றாக இருந்தது. இயேசுவின் வாழ்க்கையை மையமாககொண்ட மேலும் பல சிறுகதைகளை தாங்கள் எழுத வேண்டும் என உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாவல் ஒன்றையே எழுதுவீர்கள் என்றால், அது எங்கள் பாக்கியம். பாரபாஸ் போன்று தமிழில் இருந்து ஏதேனும் நாவல்கள் எழுதப்பட்டுள்ளனவா?. இருந்தால் கூறவும்.
நன்றி,
ஆனந்த குமார் தங்கவேல்.
அன்புள்ள ஆனந்த்
பைபிள் பின்னணியில் தமிழில் நாவல் என ஏதும் எழுதப்படவில்லை. தமிழில் பைபிளைக் கதைப்புலமாக வைத்து என்னைத் தவிர எவரும் கதைகள் எழுதியிருப்பதாகவும் தெரியவில்லை. என் பைபிள் கதைகளை ஒரு நூலாக ஆக்கலாமென்னும் எண்ணம் உள்ளது.
ஜெ