அன்புள்ள ஜெயமோகன்,
அஜிதன் மைத்ரி நாவல் பற்றில் ஒரு பதிவில் நீங்கள் அஜிதன் Sree Sankara University, Kaladyஇல் இந்திய தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார் என்று சொல்லியிருந்தீர்கள்.அன்று தான் இந்தக் கல்லூரியை அறிந்து கொண்டேன். இங்கு போய் நான் தத்துவம் படிக்க முடியுமா? இது தொடர்பாக உங்களுக்கு கடிதம் எழுத நினைத்துக்கொண்டிருந்தேன். நாமக்கல் உரையில் தத்துவ வகுப்புகள் தொடங்குவதைப் பற்றிச் சொன்னீர்கள். இது எனக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன். வகுப்பு தொடங்கினால் என் பெயரை பதிவு செய்து கொள்ள முன்பதிவு கடிதம் எழுதுகிறேன்.
அன்புடன்
மோகன் நடராஜ்
***
அன்புள்ள மோகன்,
ஆம் அந்த திட்டம் உள்ளது. அனேகமாக செப்டெம்பரில் அறிவிப்பேன்.
நான் எண்ணுவது மூன்றுநாள் முகாம்கள் வழியாக ஒரு கல்வி. ஒரு முகாமில் ஆறு அமர்வுகள். அப்படி குறைந்தது ஐந்து முகாம்கள். முப்பது அமர்வுகளில் ஓர் அடிப்படை தெளிவை அளிக்கமுடியும். சுவாரசியமாகவும், தீவிரமாகவும் அமைக்கவேண்டும். வாசிப்பதற்கான பரிந்துரைகள் அளிக்கவேண்டும். முழுக்கவே தமிழில் அமையவேண்டும். அதற்கான தயாரிப்புகளில் இருக்கிறேன்.
இதை கட்டணத்துடனேயே இன்று ஏற்பாடு செய்யமுடியும். கட்டணம் கட்டும் நிலையில் இல்லாத இளைஞர்கள், மாணவர்களுக்கு வேறு எவரேனும் கட்டணத்தை நன்கொடையாக அளிக்கலாம். அதை அறிவிப்புடன் சேர்த்தே குறிப்பிடலாமென நினைக்கிறேன்.
இந்த வகுப்புகளின் இயல்புகள் என்னென்ன என்று இன்னும் வகுத்துக் கொள்ளவில்லை. புதியவாசகர்களின் சந்திப்புகளை முதலில் இப்படித்தான் ‘இயல்பாக’ வடிவமைத்தோம். ஆனால் மெல்லமெல்ல அவற்றுக்குரிய பேசுபொருட்களும், விவாதமுறையும் உருவாகி வந்தன. உண்மையில் விவாதம், புரிந்துகொள்ளுதல், தொகுத்துரைத்தல் ஆகியவற்றில் ஓர் அடிப்படைப் பயிற்சி இல்லாமல் எதையுமே பேசமுடியாது என்னும் தெளிவு அமைந்தது.
நம் சூழலில் தத்துவம், குறிப்பாக மெய்யியல் சார்ந்த எந்த அறிமுகமும் இன்றில்லை. அவற்றை நல்லுபதேசங்களாக எண்ணியிருப்பவர்கள் உண்டு. அவற்றை வெறுமே வரட்டு விவாதங்களாக எண்ணுபவர்கள் உண்டு. அன்றாடத்துடன் தொடர்பற்ற கேள்விகள் என எண்ணுபவர்கள் மிகப்பெரும்பான்மை. அவை நம் சிந்தனையின் அடிப்படைக் கட்டுமானங்களை அமைப்பவை என்பதைச் சொல்லிச் சொல்லி நிறுவ வேண்டிய தேவை உள்ளது. எங்கிருந்து தொடங்குவது, எப்படி முன்னெடுப்பது என்பது மெல்லமெல்லத்தான் பிடிபடும்.
மேலதிகச் சிக்கல் என்னவென்றால், தொடர்ச்சி. நம்மவர் ஆர்வத்துடன் ஒன்றை தொடங்கி உடனே கைவிடுபவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஆனால் கல்வி என்பது ‘அறிந்துகொள்ளுதல்’ அல்ல. ஒரு பென் டிரைவில் டவுன்லோட் செய்துகொள்வதுபோல நாம் நம்முள் ஏற்றிக்கொள்வது அல்ல. கல்வியில் எப்போதும் ஒரு பரிணாம மாற்றம் உள்ளது. அந்த மாற்றமே மெய்யான கல்வி.
ஏனென்றால் எந்த கல்வியும் நாம் ஏற்கனவே கற்றவற்றை மாற்றியமைக்கும். ஆகவே கல்வி என்பதே கல்வியழிதலும் அந்த இடத்தில் புதிய கல்வியை நிறுவுதலும்தான். அதற்கு புதியன கற்றலுக்கான ஆர்வமும், அறிந்தவற்றை கைவிட்டு முன்னகர்வதற்கான ஆணவமின்மையும் தேவை. அதற்கான உளநிலைகள் உருவாகாமல் தத்துவக் கல்வியை அடைய முடியாது. ஏனென்றால் நானறிந்தவரை தத்துவக் கல்வியே கல்விகளில் தீவிரமானது.
அவ்வாறு ஒரு அழிந்து உருவாகும் பரிணாமம் பல படிகளாக, மெல்லமெல்லவே நிகழ முடியும். அதற்கு ஒரு காலநீட்சி தேவை. கற்றலுடன் கற்பவரும் சேர்ந்து வளர்வதற்கான காலம் அது. தத்துவம் – மெய்யியல் சார்ந்த கல்வி என்பது ஒருவர் என்ன தெரிந்து வைத்திருக்கிறார் என்பதனால் அல்ல, அவர் எவ்வாறு சிந்திக்கிறார் என்பதைக்கொண்டு, அவர் எப்படி திகழ்கிறார் என்பதைக்கொண்டு மதிப்பிடப்படவேண்டியது.
ஆகவே பல படிகளாக, ஒரு குறிப்பிட்ட காலம் வரை இத்தகைய வகுப்புகளில் பங்கெடுப்பவர்களே உண்மையான கல்வியை அடைய முடியும். இதுவே யோகப்பயிற்சிகளுக்கும். (ஆனால் பெரும்பாலான பிரபல யோகப்பயிற்சி நிலையங்களில் இரண்டு நாளில் ஒருவரை யோகியாக ஆக்கமுடியும் என்று இன்று சொல்கிறார்கள். அண்மையில் ஒருவர் ஒரு மாதத்தில் அனைவரையும் ஞானியாக ஆக்கமுடியும் என்று விளம்பரம் செய்திருந்தார். அதைப்பற்றி இன்னொரு ஆன்மிகப்பயிற்சியாளரிடம் கேட்டேன். ‘காசை இழப்பதனால் ஒரு ஞானம் வரும்தானே?’ என அவர் பதில் சொன்னார்)
எத்தனைபேர் தொடர்வார்கள் என்பதும் கேள்வியே. ஆனால் முயலலாம் என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாவது இருக்கிறது என நிறுவுவோம்.
ஜெ