குடவாயில் பாலசுப்ரமணியம், கோவை புத்தகக் கண்காட்சி

விஷ்ணுபுரம் பதிப்பகம்


விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழ் விக்கி

கோவையில் புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் அரங்கு (எண் 255)  போடப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் பதிப்பகம் தொடங்கப்பட்டபின் இதுவே முதல் புத்தகக் கண்காட்சி அரங்கு. ஆகவே நண்பர்களுக்கு உற்சாகம். நான் செல்வதா வேண்டாமா என குழம்பிக்கொண்டிருந்தேன். குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் செய்தி வந்தது. நான் பேசமுடியுமா என நண்பர் நடராஜன் கேட்டுக்கொண்டார். கோவை பயணத்துக்கான முடிவை எடுத்தேன்.

அதற்கு முன் சென்னையில் ‘இரவுபகலாக’ முட்டிமோதி பேட்டிகள் அளித்துக்கொண்டிருந்தேன். என் ஆங்கிலநூல் வெளியாகிறது. அறம் கதைகளின் ஆங்கிலவடிவம். பிரியம்வதா மொழியாக்கம் செய்து ஜக்கர்நாட் பதிப்பகம் இந்தியாவிலும் தென்னாசியநாடுகளிலும் வெளியிடுகிறது. அதற்கு கிட்டத்தட்ட சினிமா மாதிரியே பேட்டிகள். அதில் உச்சம் கமல்ஹாசனுடனான உரையாடல். அதன் சுருக்கப்பட்ட வடிவம் காணொலியாகவும் வெளியாகியது.

என்னை பேட்டி எடுத்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். ஒருவர் கேட்டார், ’உங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் பெண்களாக இருக்கிறார்கள், ஏன்?’. நான் சொன்னேன் ‘என்னிடம் பெண்களுக்காக பரிந்துபேசும் குரல் இல்லை. பெண்களுக்காக ஒரு சலுகையும் காட்டுவதில்லை. எவரிடமும் எதிர்பார்ப்பதுபோல அவர்களின் உச்சகட்ட வெளிப்பாட்டையே எதிர்பார்க்கிறேன். அறிவுத்திறனும் அதற்கான ஆணவமும் கொண்ட பெண்களுக்கு என்னுடைய இந்த இயல்பு பிடித்திருக்கிறது’

அத்துடன் பொன்னியின்செல்வன் பேட்டிகள். பொன்னியின் செல்வனை வடக்கே ஒரு குழு ‘தமிழ்ப்பெருமிதம்’ பேசும் படைப்பு என எடுத்துக்கொண்டு அதை மட்டம்தட்ட ஆரம்பித்துவிட்டது. சோழர்கள் ஒன்றும் நல்லவர்கள் அல்ல என்று ஒரு நீண்ட கட்டுரை வாசித்தேன். எழுதியவர் வரலாற்றாசிரியர் அல்ல. ஆனால் இன்று வரலாற்றாசிரியர் அல்லாதவர்கள் வரலாற்றை பொதுவாசிப்புக்காக எழுதுவது ஒரு மோஸ்தர். அந்நூல்கள் அதிகம் விற்கின்றன. ஆகவே மேலும் மேலும் பாதிவெந்த எழுத்தாளர்கள் உள்ளே வருகிறார்கள்.

வரலாற்றெழுத்தின் அடிப்படைகளை அறியாமல், வெறுமே தரவுகளை வெவ்வேறு நூல்களில் இருந்து எடுத்துக்கொண்டு, சமகாலத்தில் எது எடுபடுமோ அந்தப்பார்வையை கொண்டு பொதுப்புத்தித்தனமாக எழுதப்படுபவை இந்நூல்கள். அதே தரம் கொண்ட வாசகர்களுக்குச்  ‘சரிதானே?’ என்னும் எண்ணத்தையும் அளிக்கின்றன.

அந்த கட்டுரையாளர் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் இவை. சோழர்கள் குறுநிலமன்னர்களை ஒடுக்கினர். (அவர் ஆதாரமாகச் சொல்வது பொன்னர்சங்கர் கதைப்பாடல்) சோழர்கள் செல்வத்தை மையத்தில் குவித்தனர். சோழர்காலத்தில் வரிவசூல் கூடுதலாக இருந்தது… இப்படிச் சில. இதைவிடக் கடுமையான பல குற்றச்சாட்டுக்களை கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்கள் பற்றி எழுதி அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. இந்த நவயுக வரலாற்றாசிரியர் அங்கே இன்னும் வந்துசேரவில்லை.

சமீரன் நூல் வெளியீடு

சோழர்கள் என்றல்ல, எந்த ஒரு பேரரசும் குறுநில அரசுகளை அடக்கி, எதிர்ப்பவர்களை ஒடுக்கியே உருவாக முடியும். பேரரசுகள் உருவாகியிருக்கலாகாது என்று அறிவுள்ள எவரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் நாம் வரலாற்றை மாற்றமுடியாது. அப்படித்தான் வரலாறு வளர்ந்து வந்துள்ளது. அது நிலவுடைமைச் சமூகத்தின் பரிணாம நெறி. பேரரசுகள் சிற்றரசுகளை அழிப்பது உலகமெங்கும் உள்ளது. ஆனால் சோழர்காலகட்டத்தில் அச்சிற்றரசுகள் ஒருவகையான கூட்டமைப்பாக சோழப்பேரரசுக்குள்ளேயே நீடித்தன. பொன்னியின்செல்வன் வாசகர்களுக்கே கடம்பூர், பழுவூர், கொடும்பாளூர் என எத்தனை சிற்றரசர்கள் சோழப்பேரரசுக்குள் இருந்தனர் என்றும் அவர்கள் எத்தனை அதிகாரம் கொண்டிருந்தனர் என்றும் தெரியும்.

சோழர்கள் கொங்குப் பகுதியில் அவர்களை எதிர்த்தவர்களை அழித்திருக்கலாம். ஆனால் மறுபக்கம் உண்டு. கொங்குப் பகுதியிலுள்ள எல்லா நிலப்பிரபுக்களும் சோழர்களால் உருவாக்கப்பட்டவர்கள். சோழர்கால குலப்பட்டங்கள் கொண்டவர்கள். அழிவும் ஆக்கமும் சேர்ந்ததே வரலாறு. அதை அந்த பாதிவேக்காட்டு வரலாற்றுக் கட்டுரையாளருக்கு எவர் சொல்லிப்புரியவைக்க முடியும்?

சோழர்களின் வரிவசூல் மிக அதிகம். ஏனென்றால் அவர்கள் நிலைப்படை என்னும் நிலையான பெரிய ராணுவத்தை வைத்திருந்தனர். அதற்கான செலவும் மிகுதி. அந்த நிலைப்படை இருந்தமையால்தான் முந்நூறாண்டுக்காலம் தமிழகத்தில் அன்னியப்படையெடுப்பு இல்லாத அமைதி நிலவியது. தமிழகம் சூறையாடப்படாமல் மூன்றுநூற்றாண்டுக்காலம் வாழமுடிந்தது. அந்த நிலைப்படை போரில்லா காலங்களில் ஏரிகளை வெட்டியது. அந்த ஏரிகளில் ஒன்றே மாபெரும் ஏரியான வீராணம். அந்த ஏரிகளால்தான் இன்றும் நாம் சோறு சாப்பிடுகிறோம்.

பெருநிதிக் குவிப்பு இல்லாமல் பேரரசுகள் இல்லை. பேரரசுகள் இல்லையேல் பெரிய திட்டங்களும், உள்நாட்டு அமைதியும் இல்லை. இதுவே வரலாறு. சோழர்கள் பெரு அது நிதிக்குவிப்பைச் செய்தமையால்தான் காவிரி பல ஆறுகளாக பிரிக்கப்பட்டது. பலஆயிரம் ஏரிகள் வெட்டப்பட்டன. வேளாண்மை பலமடங்காகியது. சோழர்களின் ஏரிகளே தமிழகத்தின் முதன்மைப்பெருஞ்செல்வம்

மீண்டும் மீண்டும் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. சினிமா ‘பிரமோஷன்’ தான். ஆனால் கூடவே ஓர் அறிவுப்பணியும்தான். குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கான விருது வழங்கும் உரையிலும் இதை இறுதியில் தனியாகச் சொன்னேன். (உரை வெளியாகுமென நினைக்கிறேன்)

குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களை முதன்முறையாகப் பார்க்கிறேன். நீண்டநாட்களாகத் தெரிந்தவர் போலிருந்தார். ஏனென்றால் அவரை வாசிக்க ஆரம்பித்து இருபதாண்டுகள் ஆகிறது. தஞ்சை வரலாறு எனக்கு எப்போதும் ஆர்வமுள்ள துறை. ஆனால் குமரிமாவட்டத்தவருக்கு சோழர்கள்மேல் கொஞ்சம் கசப்பு உண்டு. காரணம் அவர்கள் எங்கள் மேல் படைகொண்டு வந்து முந்நூறாண்டுகள் அடக்கி ஆண்டவர்கள்.

அக்காழ்ப்பு இல்லாதவர் அ.கா.பெருமாள்தான். கே.கே.பிள்ளையின் ‘கடுப்பு’ ஊரறிந்தது. அ.கா.பெருமாள் குமரிமாவட்ட ஏரிகள் பற்றிய ஓர் ஆய்வை நிகழ்த்தியபோதுதான் குமரிமாவட்டத்தின் நஞ்சைநிலவளம் சோழர்களின் கொடை என தெரிந்துகொண்டார். அந்த நல்லெண்ணம் எனக்கும் அவரிடமிருந்து கிடைத்தது.

விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் அரங்கில் இரண்டு மாலைநேரங்கள் இருந்தேன். ஏராளமான வாசகர்கள் வந்து நூல்களை வாங்கினர். நிறைவூட்டும் விற்பனை என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் பொதுவாக கோவை புத்தகக் கண்காட்சிக்கு வருகையாளர் குறைவு. கோவையை ஒட்டிய சிறுநகர்களில் போதிய விளம்பரங்கள் செய்யப்பட்டிருக்கவேண்டும். புத்தகக் கண்காட்சிகள் வெல்வது பெருநகர்களின் வருகையாளர்களால் அல்ல, அணுக்கநகர்களில் இருந்து வருபவர்களால்தான்.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தவர்களில் முக்கியமானவர் கோவை ஆட்சியர் சமீரன். உற்சாகமான இளைஞர். கோவை புத்தகக் கண்காட்சிக்கு மிகுந்த ஆதரவு அளித்தவர். பி.பத்மராஜன் பிறந்த முதுகுளம் என்னும் ஊரில் பிறந்தவர். இளமையில் பத்மராஜனின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதியிருக்கிறார். அதன்பின் முதுகுளம் ராகவன் பிள்ளை என்னும் தொடக்ககால நாடகாசிரியர் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். முதுகுளம் ராகவன் பிள்ளை மலையாளத்தின் முதல் பேசும்படமான பாலன் படத்தின் திரைக்கதையாசிரியர். இந்நூல்கள் விஜயா பதிப்பகத்தால் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளன.

எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்த்ரி அரங்கு உள்ளது. அங்கே சென்று அவரை பார்த்தேன். அரங்கு முழுக்க நூல்கள். தொடர்ந்து பில்போட்டுக்கொண்டு அவர் பையன் பிஸியாக இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.ராமகிருஷ்ன்ணனின் எல்லா நூல்களுமே அந்த அரங்கில் இருக்கின்றன. மேடைக்கு சென்றுகொண்டிருந்தார். ஆகவே ஓரிரு சொற்களே பேசமுடிந்தது. ஸீரோ டிகிரி அரங்கில் காயத்ரியும் ராம்ஜியும் இருந்தனர். அவர்களின் அரங்கில் அருண்மொழி சார்பில் கொஞ்சநேரம் அமர்ந்திருந்தேன்.

உற்சாகமான மூன்று நாட்கள். நான் தங்கியிருந்த ஃபார்ச்சூன் சூட்ஸுக்கு நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். இரவுபகலாக இலக்கியம், வேடிக்கை என வழக்கமான கொண்டாட்டத்துடன் இருந்தோம். திங்களன்று காலை சென்னை சில்க்ஸ் உரிமையாளர் வினாயகம் அவர்களின் இல்லத்திற்கு காலையுணவுக்குச் சென்றேன். இயக்காகோ சுப்ரமணியம், நடராஜன் இருவரும் வந்திருந்தனர். ’பாரதி’ ஞானராஜசேகரன் வந்திருந்தார்.

கோவையில் இருந்து திருவனந்தபுரம். ஒருநாள் நாகர்கோயில். மறுபடியும் சென்னை. அங்கிருந்து நேராக மதுரை. அங்கிருந்து மீண்டும் ஒரு பயணம். நடுவே திரைக்கதைகள் இரண்டு. தமிழ்விக்கி பணிகள். பொழுதை நாம் உணராமலிருக்கும் வாழ்வே நன்று.

முந்தைய கட்டுரைStories of the True : கடிதம்
அடுத்த கட்டுரைசுனில் கிருஷ்ணனின் காந்திய நூல்கள்