பலநாட்களுக்கு முன் pleasure க்கும், joy க்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.Pleasure, joy இரண்டும் கொடுப்பது இன்பம் மற்றும் நிறைவு. பிளசரின் இன்பம் அக்கணத்தோடு நின்றுவிடுவது.ஜாயின் இன்பம் நினைக்க நினைக்க வளரக்கூடியது. நல்ல பசியெடுத்தபின் சாப்பிடுகிறோம். அவ்வுளவு இன்பத்தையும் நிறைவையும் தரும். அதை நினைக்கும்போது அதே இன்பம் கிடைக்குமா? அச்செயலை மீண்டும் செய்ய வேண்டும். என் நண்பன் ஒரு டாக்ஸி ஓட்டுநர். ஒரு சமயம் வெளியூர் சென்றிருந்த பயணத்தில் சாப்பிடாமல் நகரத்தை கடந்துவிட்டான். அது ஒரு காட்டுப்பாதை. இவனுக்கும், காரில் பயணித்த பயணிக்கும் நன்றாக பசியெடுத்துவிட்டது. எதோ நம்பிக்கையில் தேடிப் பார்த்ததில் ஒரு ஹோட்டலை கண்டுள்ளனர். அன்று சாப்பிட்ட சாதாரண உணவின் இன்பத்தை இருமுறை என்னிடம் வியந்து கூறிவிட்டான்.பின் அதே ஹோட்டலில் மறுபடியும் சாப்பிட்டது அவனுக்கு இன்பத்தை தரவில்லை.பசி, நம்பிக்கை, நம்பிக்கை மெய்த்து கிடைத்த அந்த ஹோட்டல் உணவு முதல் முறை இன்பத்தைக் கொடுத்தது. அது அனுபவமாக, அறிதலாக அவனுள் பதிந்துவிட்டது. அறிதலை நினைக்கும்போது அந்த இன்பமும் கூட வந்துவிடுகிறது. அன்று அவனுக்கு கிடைத்தது திருவின் அருள்.
அந்த திருவின் அருளைப் பெறத்தானே மனிதர்கள் முயல்கிறார்கள். கலைகள் அப்படித்தானே பிறந்தது.காமக்கலை, எழுத்துக்கலை, சிற்பக்கலை, சினிமாக்கலை, ஓவியக்கலை, சமையல்கலை அந்த திருவின் அருளை உருவாக்கும் மனிதன் முயற்சிகள்.அது அனைவருக்கும் அமைவதில்லை. அதை உருவாக்கும் சாத்தியங்களின் வல்லமை அமைந்தவர்கள் கலைஞர்கள். அந்த வல்லமைக்காக அவர்கள் போற்றப்படுகிறார்கள். அதை மிச்சமின்றி கொடுத்தவர்கள் காலத்தை வென்று பீடத்தில் அமைகிறார்கள்.
நாணுக்குட்டன் சமையல் கலை தெரிந்தவர்.அனந்தன் அப்பா அறிதல்கலை தெரிந்தவர்.பெருவட்டரும் அறிதல்கலை தெரிந்தவர்.காலை நிகழ்வது கலைக்காக. ஒரு கலை மற்றொரு கலையை அறிந்துகொள்கிறது.நாணுக்குட்டன் ஏன் பத்துபேர் வந்து பாராட்ட வேண்டுமென்று நினைக்கவில்லை? ஏன் ஒருத்தர் வந்து சொன்னால் போதுமென்று நினைத்தார்? ஒரு உதாரணம் மூலம் சொல்லமுடியும். அந்த நாணுக்குட்டன் போல் நானும் இருந்துள்ளேன்.2017இல் என்னுடைய கம்பெனியில் ஒரு தொழில்நுட்ப கூட்டம் நடத்தினார்கள்.எங்கள் மென்பொருள் தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் மற்ற கம்பெனி நபர்களை அழைத்திருந்தார்கள்.பலவகை தொழில்நுட்ப கருத்தரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்த அமைப்பில் நான் சேரவில்லை. ஒரு கட்டத்தில் இந்த கருத்தரங்குக்கு எதாவது செய்யவேண்டுமென்று விழைவு வந்தது.
நான் உருவாக்கியது Technical Art wall.எங்கள் தொழில்நுட்பத்தின் சிறு சிறு அலகுகளை வரைந்து ஒரு சுவரை உருவாக்குவது.எனக்கு வரைய தெரியாது. நான் மற்றும் இன்னொருவர் தொழில்நுட்பங்களை கற்பனைகளாக மாற்றி விளக்க, வரையும் திறன் கொண்ட மூன்று பேர் அதை ஓவியங்களாக மாற்றினார்கள்.அந்த ஓவியங்களை சுவற்றில் ஒட்டிவிட்டு நான் எண்ணிக்கொண்டது எது ஒருத்தர் நெஞ்சில் நின்றால் போதும். அந்த விழாவுக்கு 150பேர் வந்திருந்தார்கள். அன்று நேரடியாக ஒருவரும் எண்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஒருத்தர் மட்டும் என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுத்தார். அன்று மாலை எங்கள் தொழில்நுட்ப முகநூல் குழுமத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து பாராட்டியிருந்தார். நாணுக்குட்டன் உணர்ந்ததை,நிறைந்ததை அன்று அந்த பாராட்டைப் பார்த்த நொடி நான்உணர்ந்தேன்.
சமையல்காரர் நாணுக்குட்டன், தஞ்சாவூரு இசைக்கலைஞர்கள் மற்றும் பந்தல்காரர் வாகையடி அனந்தன்நாடார் இவர்கள் வெளிப்பாட்டுக் கலைஞர்கள். அனந்தன் அப்பாவும், பெருவட்டரும் அறிதல்கலைஞர்கள்.இருவகையினரும் சேரும்போது கலை முழுமையடைகிறது.
அன்புடன்
மோகன் நடராஜ்