சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் – தேசிய விருதுகள்

வெளியான நாள்முதல் உலகமெங்கும் வெவ்வேறு திரைவிழாக்களில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் விருதுகளைப் பெற்று வருகிறது. இம்முறை தேசிய விருதுகள். வசந்த் சாய் பாராட்டுக்குரியவர். என் கதை ஒன்றும் அதிலுள்ளது, தேவகிச்சித்தியின் டைரி. வசந்த் சாய்க்கு நன்றி.

சிவரஞ்சனி அசோகமித்திரன் கதைகளைப் போல எளிமையானது. அன்றாடம் சார்ந்தது. நேரடியானது என்று தோற்றமளிப்பது. இது குறியீடு, இது படிமம் என்று சொல்லிக்கொள்ளாதது. உதாரணமாக, பரிசுபெற்ற ஆதவன் கதையில் அந்தப் பெண் ஒரு பேருந்துக்குப் பின்னால் ஓடுகிறாள். அவள் ஓடுவது எதைத் துரத்தி? இழந்தவற்றையா? சென்றமைந்த இளமையையா? ஒருபோதும் திரும்பாத கன்னிப்பருவத்தையா? ஆனால் ஒருமுறையாவது அவள் அதை பிடித்துவிட்டாள்

திருவனந்தபுரம் திரைவிழாவில் அந்தக் காட்சியில் அரங்கில் எழுந்த கைத்தட்டலை நினைவுகூர்கிறேன். ஓர் ஆக்‌ஷன் ஹீரோவின் கிளைமாக்ஸ் சண்டைக்கு நிகரான கைத்தட்டல். அது அந்த அரங்கில் இருந்த பெரும்பான்மையினரான பெண்களிடமிருந்து வந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு விட்டுவிட்டவற்றைத் துரத்திச் சென்றுகொண்டிருப்பவர்கள்.

தமிழில் சிவரஞ்சனியும்… விமர்சகர்களால் பெரிய அளவில் பேசப்படவில்லை. இங்கே எல்லாம் வெளிப்படையாக இருக்கவேண்டியிருக்கிறது. தேசிய அளவில் அது கவனிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது.

முந்தைய கட்டுரைநாமக்கல் உரை, ஒரு நாள்
அடுத்த கட்டுரைநீர்ச்சுடர் வருகை