திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் குரு பூர்ணிமா வாழ்த்துச் செய்தி கண்டேன். வேதத்தை முதன்மையாக கொள்ளும் அத்வைத தரப்பை சேர்ந்த நீங்கள் அதை அனுசரிப்பதில் பழுது இல்லை. அதேநேரம் ஆகமத்தரப்பினரான சைவசித்தாந்த மரபை பெரிதும் பின்பற்றும் தமிழகத்தில் இதற்கான தேவை என்ன? இந்துக்களே ஆயினும் தங்கள் மரபிலில்லாத வியாசரை வழிபட்டு போற்ற வேண்டிய தேவை தமிழ்ச்சமூகத்திற்கு ஏன்? வேதாந்தஸ்மார்த்தம் ஒட்டுமொத்த இந்து மரபின் மீது நிகழ்த்தும் மூர்க்கமான ஆதிக்கத்திற்கு தங்கள் சொந்த மரபுகளை துறந்து மற்ற தரப்பினர் பணிய வேண்டுமா? இந்துத்துவ அரசியலின் ஒற்றை பண்பாட்டு மேலாதிக்கத்தை கூர்தீட்டுவதற்கன்றி தமிழ்ச்சமூகத்தில் இதன் தேவை என்ன? ஏற்கனவே பல ஆகமப்படியான சிவாலயங்களில் ஆகம நியதிகளுக்கு புறம்பாக சேக்கிழார் உள்ளிட்ட நாயன்மார்கள் வேதாந்தியான ஆதிசங்கரராக முலாம் பூசப்படுவதும் புதிதாக நிறுவப்பட்டுவதுமான அநீதிகள் ஸ்மார்த்தர்களால் நிகழ்த்தப் படுகிறது. இப்படி தமிழ் மரபிலில்லாத பல வைதிக பண்பாட்டு கூறுகளை நைச்சியமாக முன் வைப்பது இந்து தொகை மரபின் பண்பாட்டு பண்மைத்துவத்தை காவு கேட்பதல்லவா? இந்துத்துவக் அரசியலின் பண்பாட்டு திரிபல்லாமல் இதற்கு வேறென்ன பொருள்?
அன்புடன்,
இரா. முருகானந்தம்.
***
அன்புள்ள முருகானந்தம்,
உங்களுக்கு மெய்யாகவே மெய்யியலிலிலும் ஆன்மிகத்திலும் ஆர்வமிருந்து, அறிந்துகொள்ளும் விழைவும் இருந்திருந்தால் மிகவிரிவாக வரலாற்றுச்சித்திரத்துடன் இதற்கு பதில் அளித்திருப்பேன். இந்த கடிதத்தில் உள்ளது எளிமையான அரசியல்காழ்ப்பும் அதன் விளைவான முன்முடிவும். அதனுடன் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் கேட்டிருக்கும் வினா இந்த தொனியில், இந்த கோணத்தில் பேசப்படவேண்டியது அல்ல.
இந்துத்துவர்கள் ஒருபக்கம் இந்துமதத்தை நாலந்தர அரசியல்கொள்கையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் மிகக்கடுமையாக எதிர்ப்பதற்கான காரணமே இதைப்போல அரசியல்காழ்ப்புகளை மறுபக்கம் உருவாக்கி மொத்த ஆன்மிகமும் அரசியல் பூசலாக திரிபடையும் என்னும் எண்ணம்தான். அதுவே நிகழ்கிறது.
நான் மெய்யியலில் ஆர்வம் கொண்ட ஒரு சிறுவட்டத்தையாவது விதைநெல் போல சேர்த்து எதிர்காலத்துக்காக வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஆகவே இந்துத்துவர்- எதிர் இந்துத்துவர் இருவருமே என் முன் இல்லை என கொள்கிறேன்
ஜெ
***